பொத்துவில் புகையிரதத்தைக் காண்பது எப்போது ?


( பிர்தௌஸ் அகமட் )
உங்களுக்கு விக்கிரமாதித்தன் கதை தெரியும்...அதாவது வேதாளம் மீண்டும்
மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் கதை.    

 
சாப விமோசனத்திற்காக மரத்தில் தொங்கும் வேதாளத்தை விக்ரமாதித்த மன்னன்  கீழே இறக்குவதாகவும் ஆனாலும் அது கூறும் புதிர்க் கதைகளுக்கு மன்னன் சரியான பதில்களைக் கூறிவிடுவதால் வேதாளம் தன்னை விடுவித்துக்கொண்டு மீண்டும் முருங்கை மரத்திலேயே ஏறிவிடுவதாகவும் சொல்கிறது அந்தக் கதை.                          

                                      
இப்போது எதற்கு அந்தக் கதை என்று கேட்கத் தோன்றுகிறதா?.


மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் அந்தக் கதை போன்றதுதான் மட்டக்களப்பு ரயில் பாதையின் தென்கிழக்கிற்கான விஸ்தரிப்பும்.


இந்த விஸ்தரிப்புக் கதை சில காலம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும். திடீரென தடாலடியாக உயிர்பெற்று பலராலும் விறுவிறுப்பாகப் பிரஸ்தாபிக்கப்படும். கல்முனை வரை, பொத்துவில் வரை, அக்கரைப்பற்று வரை சில வேளைகளில் காரைதீவு வரை என நிறையவே கூறப்படும். பின்னர் மிக அமைதியாக மீண்டும் உறங்கு நிலைக்கு  சென்று விடும்.


                                                                                                             
உண்மையில் தனது பயணத்தை மட்டக்களப்புடன் நிறுத்திக் கொண்ட கிழக்கிற்கான ரயில் பாதையின் திட்டமிடப்பட்ட இறுதி இலக்கு எது என்பது உங்களுக்குத் தெரியுமா ?. நிந்தவூர் என்பது அனேகமானோர்க்கு தெரியாத ஒரு விடயம். .


எது எப்படியோ இவ்விஸ்தரிப்பு விடயம்  மறந்து போய் விடாமல்  இடையிடையேயாவது  உயிர் கொடுத்து வாழ வைக்கும் அந்த நல்லுள்ளம் கொண்ட பத்திரிகையாளர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும்.
இத்திட்டம் சுமார் 100 வருடங்களை நெருங்குகிறது. 1920 ஆம் ஆண்டளவில் கிழக்கிற்கான ரயில் சேவை நிந்தவூர் வரை எனத் திட்டமிடப்பட்டிருந்தாலும் ஆட்சியிலிருந்த ஆங்கிலேயர்களின் "தமது வருமானத்தற்கே முதலிடம்" என்ற  கொள்கைக்கு இதனால் பயனில்லை  என்பதனால் மட்டக்களப்புடன் நிறுத்தப்பட்டுவிட்டது.


ஆரம்பம் முதலே மட்டக்களப்பு ரயில் சேவை நட்டத்தில் இயங்கியதால் இத்திட்டத்திற்காக முன்னின்று உழைத்தவர்களுள் ஒருவரான அப்போதைய சட்டசபைப் பிரதிநிதி கௌரவ ஈ.ஆர். தம்பிமுத்து அவர்கள் ஒரு விசாரணையை எதிர்நோக்க வேண்டியிருந்தது.


சிறந்த சட்டவாதியான அவர் தங்களது முன்மொழிவின் பிரகாரம் சனத்தொகை கூடிய செழிப்பான தென்கிழக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள நிந்தவூர் வரை பாதை அமைக்கப்பட்டிருந்தால் எவ்வாறு  இலாபம் ஈட்டப்பட்டிருக்கும் என்பதை ஆதாரத்துடனும், புள்ளிவிபரத்துடனும் நிரூபித்தமையால் அவ்வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டது வரலாறு.                                                                                              


 மிக அண்மையிலும் இவ்விடயம் சம்பந்தமாக ஒரு சலசலப்பு ஏற்பட்டது.அது அடங்கிப் போய் விட்ட நிலையில் தற்போது மீண்டும் புதிய நம்பிக்கை ஊட்டும் செய்தியொன்று கிடைக்கின்றது.


அதுதான் அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்துள்ள வேண்டுகோள்.


முன்னர் இரு சந்தர்ப்பங்களில் இவ்விடயம் மிகத் தீவிரமடைந்துள்ளது.
ஒன்று, 1978 ஆம் வருட முற்பகுதியில் அப்போதைய போக்குவரத்து அமைச்சரான எம்.எச். முகம்மது அவர்களின் கிழக்கு விஜயத்தின்போது.
அப்போது மட்டக்களப்பு ரயில் பாதை கல்முனை வரை நீடிக்கப்படுமென வாக்குறுதி அளிக்கப்பட்டு அது உறுதியாக நம்பப்பட்டிருந்தும் எதுவுமே நடைபெறவில்லை.


அடுத்தது 1992ம் ஆண்டு முதல் முன்னாள் அமைச்சர் கௌரவ ஏ.ஆர்.எம்.மன்சுர் அவர்கள் மேற்கொண்ட தீவிர முயற்சி.
அவர் இது விடயமாக  ஈரான் நாட்டிற்கு சென்றதும் அங்கிருந்து 1993ல் இலங்கைக்கு வந்த குழுவினரால் பாதை கூட அடையாளம் காணப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.


நம்பிக்கையின் உச்சிக்கே சென்றுவிட்ட இப் பிரதேச மக்கள் வாயைப் பிளந்து காத்துக் கொண்டிருக்க 1994  ஆட்சி மாற்றத்துடன் அனைத்தும் அடங்கிப் போய் விட்டன.


தமது அரசியல் அஜென்டாவுக்குள் வராவிட்டால் மக்கள் நலம் என்பதெல்லாம் மூன்றாம் பட்சமே என்பதுதான் நவீன அரசியல் சித்தாந்தமோ?.


தன்னந்தனியாக மீண்டும் களம் இறங்கிய மனம் தளராத அமைச்சர் மன்சூர் அவர்கள்  2012,2014ம் ஆண்டுகளில் ஜனாதிபதிக்கு கடிதங்கள் அனுப்பியதோடு நின்றுவிடாமல் ரயில்வே பொது முகாமையாளரை நேரில் சந்தித்தும் தீவிரம் காட்டினார்.


கல்முனை என்ன, கல்லடி வரை கூட ரயிலைக்  காணாமலே அவரும் இறையடி சேர்ந்து விட்டார்.


பின்னர் 2015ல்  கல்முனை மாநகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு என்ன நடந்தது என்பதும் தெரியவில்லை.


1928யில் மட்டக்களப்பிற்கு புகையிரதம் வந்ததன் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் புகையிரத சேவையின் தேவைக்கான எவ்வளவோ விடயங்கள் அதிகரித்துவிட்டன. கல்லோயா திட்டத்தில் இம்மாவட்டம் பெரும் நெற்களஞ்சியமானது முதல்  தென்கிழக்குப் பல்கலைக் கழக உருவாக்கம் வரை எல்லா விடயங்களும் பலராலும் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டப்பட்டுவிட்டன.


இந்த விடயத்தில் புத்தி ஜீவிகள் முதல் சாதாரண பொது மக்கள் வரை அனைவராலும்   முன் வைக்கப்படும் பாரிய  கேள்வி ஒன்று உள்ளது.
ஏன் அதிகாரத்திலுள்ளவர்கள் இந்த ரயில் பாதை விஸ்தரிப்பு விடயத்தில் அக்கறை காட்டுவதில்லை ?


இதையும் ஒருமுறை கேளுங்கள்.


"எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒருமித்த குரல் கொடுத்தால் எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி பெற முடியும்.


இந்த ரயில் பாதை இதுவரை போடப்படவில்லை என்றால் அதற்கு இப்பகுதியின் எம்.பிக்களின் முயற்சியின்மையே காரணம் எனறுதான் கூற வேண்டும்.


எம்.பிக்களாகிய நீங்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து ஏன் இதுவரை காலமும் மட்டக்களப்பில் இருந்து கல்முனை வரை ரயில் பாதையைக்  கொண்டு செல்லவில்லை ?".


இது நாற்பது வருடங்களுக்கு முன்னர்  1978 மார்ச் மாதம் மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்தபோது தம்மைச்  சந்திக்க வந்த எம்.பிக்களிடம் அப்போதைய கல்வி அமைச்சர் டாக்டர்.நிஸ்ஸங்க விஜேரத்ன அவர்கள் எழுப்பிய கேள்வி.

என்னதொரு ஆச்சரியம் பாருங்கள்.

நாற்பது வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் இன்னும்  பதில் கிடைக்காத  இந்தக் கேள்வி இன்றைக்கு கூட கனகச்சிதமாகப் பொருந்துகின்றதே !.
அமைச்சரின் இந்த கேள்விக்கு எப்போது பதில் கிடைக்கும், பொத்துவில் எப்போது புகையிரதத்தைக் காணும் என நாமும் ஆவலுடன் காத்திருப்போம்.

பொத்துவில் புகையிரதத்தைக் காண்பது எப்போது ? பொத்துவில் புகையிரதத்தைக் காண்பது எப்போது ? Reviewed by Madawala News on September 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.