மஹிந்த 10 வருடங்களில் பெற்ற கடனை விட நல்லரசாங்கம் 3 வருடங்களில் பெற்ற கடன் அதிகம் ; வாசு ..



தேசிய அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டு இன்றுடன்  மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது.


இதுவரை காலமும் அரசாங்கம் கடந்த அரசாங்கம் முன்னெடுத்த அபிவிருத்தி பணிகளையே பூர்த்தி செய்துள்ளது . புதிதாக எவ்வித அபிவிருத்திக்களையும் செயற்படுத்தவில்லை" என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற  உறுப்பினர் வாசுதேவ நானயக்கார தெரிவித்தார்.   
கடந்த அரசாங்கத்தை குற்றஞ்சாட்டியே மூன்று வருடங்கள் கடந்தோடிவிட்டது. மிகுதியாக உள்ள  காலத்திலும் இந் நிலைமையே தொடரும்.  எவ்விதமான வேலைத்திட்டங்களும்  இன்றி செயற்படுவதால் மக்களே தொடர்ந்து பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவார்கள்  என தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
"முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 2015ஆம் ஆண்டு இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலில் கபடதனமாக வீழ்த்தி, நல்லாட்சி என்ற பெயரில் அரசாங்கம் ஆட்சியமைத்தது. பெயரளவில் மாத்திரமே நல்லாட்சி பேணப்படுகின்றது. மாறாக சர்வாதிகார போக்கே  இடம் பெறுகின்றது.  காலம் காலமாக ஜனநாயக ரீதியில் பெறப்பட்டு வந்த விடயங்கள் யாவும் கடந்த மூன்று வருட காலமாக போராட்டம்,  அழுத்தம் போன்றவற்றின் ஊடாகவே பெற முடிந்துள்ளது.
ஒரு நாட்டில் காலத்திற்கு காலம் தேர்தல் இடம் பெற வேண்டும் என்பது மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வழிமுறையாக காணப்படுகின்றது . ஜனநாயக கோட்பாடு தொடர்பில் பேசும் தேசிய அரசாங்கத்தின் பார்வையில் தேர்தல் பிற்போடப்படுவது மக்களின் உரிமையினை மீறுவதாக தென்படவில்லை.  எதிர்வரும் ஜனவரி மாதம் மாகாண சபை தேர்தல் இடம் பெறுவது சாத்தியமற்றது. ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் தற்போதைய நோக்கமாக காணப்படுகின்றது.
மூன்று வருடத்தை நிறைவு செய்துள்ள அரசாங்கம் இது வரையில் எவ் விதமான முறையான அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுக்கவில்லை.  கடந்த அரசாங்கம்  முன்னெடுத்த அனைத்து பாரிய அபிவிருத்திகளையே  இந்த அரசாங்கம் முழுமைப்படுத்தியுள்ளது. ஆட்சி பொருப்பினை ஏற்கும் போது பாரிய கடன்கள் மாத்திரமே காணப்பட்டது என்று  பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகின்றார்.
கடந்த அரசாங்கம் பாரிய கடன்களை பெறுவதற்கான தேவைகள் அன்று காணப்பட்டது.  குறுகிய காலக்கட்டத்தில் 30வருட காலமாக இடம் பெற்ற யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்   துரிதமாக  அபிவிருத்தி செய்யப்பட்டன.  2004ஆம்  ஆண்டு இடம் பெற்ற சுனாமி தாக்கத்தினால் பாரிய  இழப்புக்கள் நேரிட்டது . இதற்காக பெருமளிவிலான நிதி ஒதுக்கப்பட்டதோடு  மக்களும் மீள் குடியமர்த்தப்பட்டனர்.
இவ்வாறான சம்பவங்கள் ஏதாவது தேசிய அரசாங்கத்தின் மூன்று வருட கால ஆட்சியில் இடம் பெற்றதா? 10வருட கால ஆட்சியில்  மஹிந்த பெற்ற வெளிநாட்டு கடன்களை விட இன்று  தேசிய அரசாங்கம் மூன்று வருட ஆட்சியில் அரச கடன்களை அதிகமாக பெற்றுள்ளது.  மக்களின்  மீதான வரிச்சுமை அதிகரிக்கும் போதெல்லாம் கடந்த அரசாங்கத்தின் கடன்களையே கேடயமாக பயன்படுத்தியது. 
ஆட்சி மாற்றத்தை  ஏற்படுத்த  2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி மக்களுக்கு பாரிய  வாக்குறுதிகளை  வழங்கியது. ஆனால்  இதுவரை காலமும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஏதும் முழுமைப்படுத்தப்படவில்லை . பொய்யான வாக்குறுதிகளின் மத்தியிலே இன்று மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சினைக்கும்,  போராட்டங்களுக்கும் மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.
தொழிற்சங்கத்தினரது கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் போராட்டங்கள்  தோற்றம் பெறுகின்றனர். நாளை என்ன போராட்டம் இடம் பெறுமோ? என்ற அச்சத்திலே மக்கள் தொழிலுக்கு புறப்படுகின்றனர். இதுவா நல்லாட்சி இந் நிலைமை இரண்டு வருட காலத்திற்கு தொடரும்." என்றார்.


மஹிந்த 10 வருடங்களில் பெற்ற கடனை விட நல்லரசாங்கம் 3 வருடங்களில் பெற்ற கடன் அதிகம் ; வாசு .. மஹிந்த 10 வருடங்களில் பெற்ற கடனை விட நல்லரசாங்கம் 3 வருடங்களில் பெற்ற கடன் அதிகம் ; வாசு .. Reviewed by Madawala News on August 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.