ஒரு பிரதி அமைச்சும் இருவேறு இனங்களும்



ஒரு கதை சொல்வார்கள்! அதாவது, இலங்கையில் அளுத்கம கலவரம் நடைபெற்று முடிந்த பிறகு
சுவிட்சர்லாந்து அமைச்சர் ஒருவர் கொழும்பு வந்திருந்தார். அவர் இலங்கையின் நீதி அமைச்சருடன் பேசிக் கொண்டிருக்கும் போது இலங்கை அமைச்சர் சுவிட்சர்லாந்து  அமைச்சரிடம் நீங்கள் என்ன துறைக்கு அமைச்சராக இருக்கின்றீர்கள் என்று கேட்டாராம். ஆப்போது அவர் கடலியல் வளங்கள் அமைச்சர் என்று சொல்லியிருக்கின்றார்.

உடனே இலங்கை அமைச்சர் ஆச்சரியப்பட்டவராக, உங்கள் நாட்டில்தான் கடலே இல்லையே, பிறகு நீங்கள் எப்படி அவ்வாறான ஒரு அமைச்சராக பதவி வகிக்க முடியும் என்று. அதற்கு சுவிட்சர்லாந்து  அமைச்சர் சொன்னாராம் - உங்கள் நாட்டிலும்தான் நீதியே இல்லை. நீங்கள் நீதி அமைச்சராக பதவி வகிக்கவில்லையா அதுபோலத்தான் இதுவும் என்று!

இவ்வாறான ஒரு சம்பாசணை உண்மையாகவே நடந்ததா என்பதில் ஊர்ஜிதமில்லை என்றாலும், இலங்கையில் 'பெயருக்கு' அமைச்சுக்களும், பொருத்தமற்ற அமைச்சுக்களும் வழங்கும் நடைமுறையை இது குழுஉக்குறிகளால் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. இந்தத் தொடரில் மிகப் பிந்திய சம்பவமாகவே பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு இந்து மதவிவகார பிரதியமைச்சு வழங்கப்பட்ட விவகாரத்தை நோக்க வேண்டியிருக்கின்றது.

சுமகாலத்தில், சிறுபான்மைச் சமூகங்கள் என்றும் ஒரு ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்றும் சொல்லிக் கொண்டு தமக்கிடையேயான பகைகளை மறந்து, மீண்டும் பழைய உறவை புதுப்பித்து இனநல்லிணக்கத்திற்கு வர வேண்டும் என சொல்லிக் கொள்கின்ற தமிழ் முஸ்லிம் இனக் குழுமங்கள் இன்னுமின்னும் இனநல்லுறவுக்கு எதிரான காரியங்களையே தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கின்றன என்பதற்கும், அடிப்படையில் தமிழர்களும் முஸ்லிம்களும் சிறுபான்மையினர் என்றாலும் இன, மத, கலாசார அடிப்படையில் தனித்துவ அடையாளங்களைக் கொண்டவர்கள் என்பதையும் பிரதியமைச்சர் மஸ்தான் மீதான விமர்சனங்களும் எதிர் வினைகளும் உணர்த்தி நிற்பதாக தெரிகின்றது.

அரசின் தீர்மானம்
நல்லாட்சி என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்கின்ற இன்றைய அரசாங்கமானது கட்;டம் கட்டமாக அமைச்சு, பிரதியமைச்சு, இராஜாங்க  பதவிகளை வழங்கி வருகின்றது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுதந்திரக் கட்சியி;ன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு மீள்குடியேற்றம்;, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இந்து கலசார பிரதியமைச்சு வழங்கப்பட்டது. இதையடுத்து இவ்விவகாரம் பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்தது.

இந்து விவகார அமைச்சு முஸ்லிம் ஒருவருக்கு எவ்வாறு வழங்கப்பட்டது என்று தமிழ் மக்கள் கேள்வி எழுப்பியதுடன், உடனடியாக இந்த பிரதியமைச்சுப் பிரிவ மஸ்தானிடம் இருந்து மீளப் பெறப்பட வேண்டும் என்று தமிழ் தரப்பில் இருந்து கடுமையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, அமைச்சர் மனோ கணேசன், மாகாண சபை உறுப்பினர் சிவஜிலிங்கம், யோகேஸ்வரன் எம்.பி., வடிவேல் சுரேஸ் எம்.பி. எனப் பல தமிழ் அரசியல்வாதிகள் இந்நியமனத்திற்கு எதிரான தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
அதுமட்டுமன்றி யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் முன்னாலும், கொழும்பிலும், மட்டக்களப்பிலும் திட்டமிட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்தப் பின்னணியில் பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தனக்கு வழங்கப்பட்ட இந்து மத விவகாரம் என்ற துறையை இராஜினாமாச் செய்து மீள ஒப்படைத்துள்ளார். ஆனால் அதற்கிடையில் எவ்வளவோ நடந்து விட்டது.

முதல் முறையல்ல
இலங்கையில் பொருத்தமற்றவர்களுக்கு அமைச்சு, பிரதியமைச்சு, எம்.பி. பதவிகள் வழங்கப்படுவது இது முதல் முறையும் இல்லை. கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை. சாதாரணமாக ஒரு பிரதேச சபை உறுப்பினராக நியமிக்கக் கூட தகுதியற்ற எத்தனையோ பேரை சிறுபான்மைச் சமூகங்கள் இன்று அரசியல்வாதிகளாக ஆக்கியிருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. அதுமட்டுமன்றி, 92 சதவீதம் எழுத்தறிவுள்ள நாட்டின் மீவுயர் சபையான பாராளுமன்றத்தில் இருக்கின்ற பெரும் எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் உயர்தரம் சித்தியடையாதவர்களும் அடிப்படைத் தகுதிகள் அற்றவர்களும் ஆவர் என்பதே நமது நிதர்சனமாகவும் இருக்கின்றது.

ஒரு அமைச்சர், பிரதியமைச்சர் நியமிக்கப்படும் போது அவருக்கு அந்த விடயதானத்தில் உள்ளார்ந்த அறிவு இருப்பதே சிறந்தது என்றாலும் கூட இலங்கையில் நடைமுறையில் அவ்வாறான அபூர்வங்கள் நிகழ்வதில்லை. மீன்பிடி அமைச்சராக நியமிக்கப்படுபவர் ஒரு மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவோ, விவசாய அமைச்சராக வருபவர் ஒரு கைதேர்ந்த விவசாயியாகவோ இருப்பதில்லை. கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட பலர் கல்வி நிர்வாக சேவை அதிகாரியாக இருந்ததாகவும் பதிவுகளில்லை.

இதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் கட்டளைத் தளபதியோ அல்லது சுகாதார அமைச்சராக இருந்தவர் வைத்தியரோ அல்லர். இப்போது சுகாதார பிரதியமைச்சராக இருப்பவர் வைத்தியரோ, விளையாட்டுத் துறை அமைச்சர் நாட்டிற்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த விளையாட்டு வீரனோ அல்ல. கல்முனை அபிவிருத்தி பற்றிய கனவோடு இருந்த எச்.எம்.எம்.ஹரீஸிற்கு கண்டி அபிவிருத்தி பிரதியமைச்சு வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு அபிவிருத்திக்கு ஒரு அமைச்சே கிடையாது.

முன்னொரு காலத்தில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் படுகொலைகளுக்கு காரணமாகவிருந்தவர் எனக் கருதப்படும் கருணா அம்மான் எனப்படும் வி. முரளிதரனுக்கு சில காலத்திற்கு முன்னர் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சு கொடுக்கப்பட்டிருந்தது. தமிழ் மக்களால் துரோகியாக நோக்கப்படும் அவர் அதற்கு முன்னர் மீள்குடியேற்ற பிரதியமைச்சராக பதவி வகித்தார். ஆனால் முஸ்லிம்களோ தமிழர்களோ அல்லது சிங்களவர்களோ இந்த நியமனங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதாக நினைவில்லை.
ஏனென்றால், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதையும் ஒரு அமைச்சு என்பது அமைச்சரால் மட்டும் இயங்குவதல்ல மாறாக அங்கிருக்கும் அதிகாரிகளும் அதனை இயக்குகின்றார்கள் என்பதையும் சிறுபான்மை மக்கள் புரிந்து வைத்திருந்தார்கள். ஆனால், காதர் மஸ்தான் விடயத்தில் இந்தப் புரிதல் இல்லாமல் போய்விட்டதாக கருதும்படியாயிற்று.

இனம் முக்கியமல்ல
உண்மையில், எந்த இனத்தைச் சேர்ந்தவர் அமைச்சராக இருந்தாலும் அவர் இன, மத பாகுபாடுகளுக்கு அப்பால் நின்று தனக்கு வழங்கப்பட்ட கடமையை நிறைவேற்றுவாராக இருந்தால் அவரை ஏற்றுக் கொள்ள முடியும்.  தமிழர் ஒருவர் முஸ்லிம் கலாசார அமைச்சராகவும் முஸ்லிம் ஒருவர் தமிழ் மத விவகார பிரதியமைச்சராகவும் கடமையாற்றுவதற்கு எந்தத் தடையுமில்லை. அத்துடன், அந்தந்த மதத்தை சேர்ந்தவரே குறிப்பிட்ட இனக்குழுமத்தைச் சேர்ந்த மக்களின் விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்று எழுதப்பட்ட சட்டம் எதுவும் கிடையாது.

ஆனால், நிஜத்தில் (மஸ்தான் எப்படிப்பட்டவர் எனக் கூற முடியாவிட்டாலும்) பொதுவாக இலங்கையில் அவ்வாறு இன, மத, பிராந்திய பேதங்களுக்கு அப்பால் நின்று சேவையாற்றுகின்ற அரசியல்வாதிகள் மூன்று இனங்களிலும் மிகவும் அரிது என்பதே நமது பட்டறிவாகும். அத்துடன், வாழ்க்கையின் எல்லா விடயங்களையும் அரசியல் கோணத்தில், இன – மத அடிப்படையிலான கண்ணாடிகளை அணிந்து கொண்டு நோக்குகின்ற ஒரு பிற்போக்குத்தனமான கலாசாரம் பொதுவாகவே எல்லா மட்டங்களிலும் ஊட்டி வளர்க்கப்பட்டுள்ளது. அதற்கு மிகப் பிந்திய உதாரணம் காதர் மஸ்தானின் நியமனத்திற்கு எதிரான எதிர்ப்பலை எனலாம்.

நியாயமான கோரிக்கை
ஆனால், இவற்றையெல்லாம் கடந்து தமிழ் மக்களின் கோரிக்கையில் நூ}று சதவீத நியாயம் இருப்பதை யாராலும் மறுக்கவே முடியாது. ஏனெனில் மதம், கலாசார அலுவல்கள் அமைச்சு என்பது மீன்பிடி, விவசாய, விளையாட்டுத் துறை அமைச்சுக்களைப் போல பத்தோடு பதினொன்று அல்ல. மதம் என்பது விஷேடமானது. முஸ்லிம் கலாசார அமைச்சர் அல்லது பிரதியமைச்சர் என்றால் அவருக்கு இஸ்லாம் தெரிந்திருக்க வேண்டும். அதுபோல இந்து மத விவகாரம் என்றால் இந்து மதத்தின் அடிப்படைகள் அதன் உள்ளார்ந்த கோட்பாடுகள் தெரிந்திருக்க வேண்டும். அப்படியிருந்தாலேயே அவரால் சிறப்பாக செயற்பட முடியும் என்பதே யதார்த்தமாகும்.
முஸ்லிம் சமய விவகார அமைச்சு சில காலம் இருக்கவே இல்லை. சிங்கள அமைச்சர் ஒருவரின் கீழேயே இவ்விவகாரங்கள் எல்லாம் கையாளப்பட்டன. ஆனால் அதற்காக முஸ்லிம்கள் கொதித்தெழவில்லை. முஸ்லிம் கலாசார அமைச்சராக தற்போது எம்.எச்.ஏ.ஹலீம் பதவி வகிக்கின்ற போதும், அதன் பிரதியமைச்சராக துலிப் விஜேசேகர இரு வருடங்கள் பதவி வகித்தார். அப்போது முஸ்லிம் ஒருவரே இப்பதவியை வகிக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. ஆனால் ஒன்று, முஸ்லிம்கள் பொறுத்துக் கொண்டார்கள் என்பதற்காக தமிழர்கள் சகித்துக் கொள்ள வேண்டும் என்று யாரும் கட்டளையிட முடியாது.

அந்த வகையில் நோக்கினால், காதர் மஸ்தானை இந்து மத விவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு தமிழ் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் எதிர்ப்பு தெரிவித்ததும், அவரிடம் இருந்து அதை மீளப் பெற்று தமிழர் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்ததும் சரியானதே. ஆனால், சொல்கின்ற விடயம் சரியாக இருந்தாலும் அதைச் சொல்கின்ற விதம் பிழையாகி விடக் கூடாது என்று சொல்வார்கள். மஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்த விடயத்தில் அது நடந்து விட்டதாகவே தோன்றுகின்றது.

மாட்டிக்கொண்ட மஸ்தான்
இந்த பிரதியமைச்சை மஸ்தானிடம் இருந்து மீளப் பெறுவதே நல்லது என்று முஸ்லிம்களே அபிப்பிராயப்பட்டனர். கணிசமான தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற ஒருவரான மஸ்தானிடம் இந்தப் பதவி இருந்தால் பரவாயில்லை என்று நினைத்த தமிழர்களும் இருக்கின்றனர். அதுமட்டுமன்றி, இந்து மத விவகார அமைச்சராக, பிரதியமைச்சராக தமிழர்கள் பதவி வகித்ததால் எதை சாதித்திருக்கின்றார்கள்? வடக்கில் விகாரைகள் வைப்பதை தடுக்கவோ அல்லது வேறுபாடுகளை இல்லாதொழிக்கவோ முடிந்திருக்கின்றதா என்று கேள்வி கேட்ட தமிழ் முற்போக்காளர்களும் நம்மிடையே உள்ளனர்.

உண்மையில், டி.எம்.சுவாமிநாதன் அமைச்சராக பதவி வகிக்கின்ற அமைச்சின் பிரதியமைச்சுப் பொறுப்பே மஸ்தானுக்கு வழங்கப்பட்டது என்பதை தமிழ் சகோதரர்கள் கவனிக்க வேண்டும். அதாவது மூலஅமைச்சின் விடயதானங்கள் எதுவாக இருந்ததோ அவையே மஸ்தானின் பிரதியமைச்சுக்கும் உரித்தாகின. காதர் மஸ்தான் ஒற்றைக்காலில் நின்று இந்த அமைச்சைப் பெறவும் இல்லை. அது கிடைத்ததை அவர் விரும்பவும் இல்லை. அந்த அமைச்சை வைத்து இந்து மத விவகாரத்தை பிழையாக கையாளவும் இல்லை.

ஆனால், இந்து மத விவகாரத்தை முஸ்லிம் ஒருவர் சரியாக கையாள மாட்டார் என்ற அனுமானத்;தையும், தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்கையையும் யாரும் கொச்சைப்படுத்தவோ தட்டிக்கழிக்கவே முடியாது. ஆனால், தமிழ்-முஸ்லிம் உறவை வளர்க்க வேண்டுமென அவாவி நிற்கின்ற காலப்பகுதியில் இவ்விடயத்தை தமிழ் தேசியம் இன்னும் நாசுக்காக கையாண்டிருக்க வேண்டும். மஸ்தானுக்கு எதிரான விமர்சனங்கள் இன்னும் பக்குவமாக முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே என்பதே நடுநிலைவாதிகளின் நிலைப்பாடாகும்.

மோசமான விமர்சனம்
மஸ்தானுக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டதையடுத்து சமூக வலைத்தளங்களில் மிக மோசமான விதத்தில் விமர்சிக்கப்பட்டதையும், பிரதியமைச்சர் மஸ்தான் மீதான காட்டம் வெளிப்பட்ட விதத்தையும் கண்டு முஸ்லிம்கள் மட்டுமல்ல தமிழர்களும் முகம்சுழித்தனர். எனவே இவ்வாறான கட்டுங்கடங்காத விமர்சனங்களை தவிர்த்திருக்க வேண்டும் என்பதுடன் கொழும்பிலும் மட்டக்களப்பிலும் யாழிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தாமலேயே, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன் எம்.பி. போன்றோர் காதோடு காது வைத்தாற் போல் இதில் மாற்றத்தை செய்திருக்க முடியும்.
இத்தனை பெரிய விவகாரமாக இதனை ஊதிப் பெருப்பித்திருக்கவோ அல்லது காதர் மஸ்தானையும் அதனூடாக இன்னுமொரு சகோதர இனத்தையும் மனம் புண்படும்படி விமர்சனங்களை முன்வைத்திருக்கவோ தேவையில்லை. அத்துடன் இந்நியமன விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன் மற்றும் சுரேஷ் வடிவேல் உள்ளிட்டோர் கூறியிருக்கின்ற கருத்துக்கள், மற்றும் 'விடயமறிந்த பௌத்தர் ஒருவரையாவது நியமித்திருக்கலாம்' என்ற தொனியிலான நிலைப்பாடுகள் முஸ்லிம்களுக்கு மனக்கிலேசத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

உறவு முக்கியம்
விமர்சனங்களை முன்வைப்போர், இவ்விடத்தில் தமிழ் முஸ்லிம் உறவின் தொன்மை பற்றி சிந்திக்க வேண்டும். ஒரு சிறிய விடயத்திற்காக இரு சமூகங்கள் மனக் கசப்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. குறிப்பாக, முஸ்லிம்களை தமிழ் தேசியம் 'இஸ்லாமிய தமிழர்கள்' என்றே வகைப்படுத்தி வருகின்றது. பிட்டும் தேய்காய்ப்பூவும் போல இருக்கின்ற சமூகங்கள் என்றும், அண்ணன் தம்பி உறவு என்றும் உறவாடல்கள் நிறையவே இருக்கின்றன.

அத்துடன் இரு இனங்களும் இணைந்தே இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற வேண்டும் என்றும் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழ் தலைமைகள் தொடர்ந்து கோரி வருகின்றன. எனவே, ஒரு பிரதியமைச்சர் நியமனத்தை இரு சமூகங்களுக்கும் இடையிலான உறவில் கீறல் விழுவதற்கு காரணமாக்கியிருக்கத் தேவையில்லை.

முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாதம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில், கடந்த சில நாட்களாக அபாயா, மாடு அறுத்தல் தொடர்பான எதிர்ப்பலைகள் தமிழ் சமூகத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தரப்பால் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று மஸ்தானின் விடயம் ஊதிப் பெருப்பிக்கப்பட்டதும் இதே ஒழுங்கிலான ஒரு நிகழ்வாக இருக்க வாய்ப்புள்ளது.

'இந் நியமனத்தை, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பகையை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையாக நான் இதனைப் பார்;க்கின்றேன்' என்று, முஸ்லிம் அரசியல்வாதிகள் பலரைப் புடம்போட்ட கட்சியான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனாதிராஜா கூறியிருக்கின்றார். அது உண்மையாகவே இருக்கலாம். ஆனால், அந்த பிரதியமைச்சின் பணிகளை மஸ்தான் பொறுப்பேற்கும் முன்னமே, தேவையற்ற இன, மத அடிப்படையிலான கருத்துக்களால் கிட்டத்தட்ட எது நடக்கக்க கூடாது என்று நினைத்தோமோ அது நடந்து விட்டது என்றுதான் தெரிகின்றது. இதுதான் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று இக் கட்டுரை கூற வருகின்றது.

அரசாங்கம் விஞ்ஞான அடிப்படையிலோ நல்லிணக்க அடிப்படையிலோ பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானை இந்து மத விவகாரங்களுக்கும் பொறுப்பான பிரதியமைச்சராக நியமித்தது. அதற்கு எதிரான எதிர்ப்பலைகளை தொடர்ந்து இப்பதவியில் தான் இருப்பது நல்லதல்ல என்று உணர்ந்து மஸ்தானே தானாக விரும்பி அப்பதவியை கடந்த வியாழக்கிழமை மீள ஒப்படைத்தும் விட்டார். எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது.
ஆனால், நியமனத்திற்கும் இராஜினாமாவுக்கும் இடைப்பட்ட கடந்த சில நாட்களாக முன்வைக்கப்பட்ட இன, மத அடிப்படையிலான கருத்துக்களாலும், பிற்போக்குத்தனமான விமர்சனங்களாலும் எத்தனையோ வருடங்களாக கட்டிக்காத்த தமிழ்-முஸ்லிம் இன உறவில் ஏற்பட்டிருக்கின்ற ஒரு கசப்பான மனப்பதிவு நீங்குவதற்கு இன்னும் நீண்டகாலம் எடுக்கலாம்.

வேறென்ன சொல்ல முடியும்!?
- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 17.06.2018)
ஒரு பிரதி அமைச்சும் இருவேறு இனங்களும்  ஒரு பிரதி அமைச்சும் இருவேறு இனங்களும் Reviewed by Madawala News on June 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.