ஜனாதிபதியிடம் பெறமுடியாத தீர்வை சரத்பொன்சேகாவிடம் பெறமுடியுமா ?




வில்பத்து சரணாலயம் சம்பந்தமாக விசாரணை நடத்தி தீர்வை பெற்றுத்தாருங்கள் என்று அமைச்சர் சரத்பொன்சேகா அவர்களிடம், அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் வேண்டுகோள் வைத்ததை ஊடகங்கள் ஊடாக அறிந்து கொண்டோம்.

கடந்த ஆண்டு ரஷ்ய பயணத்துக்கு மத்தியிலே வில்பத்து சரணாலயகாடுகளாக,வில்பத்து  சரணாலயத்துக்கு வடக்கே உள்ள மாவில்லு, வெப்பல், மரிச்சிக்கட்டி, விலாத்திக்குளம், பெரியமுரிப்பு ஆகிய பிரதேசங்களை வனபாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் '3ஏ' பிரிவின் கீழ் "மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனம்"என பிரகடனப்படுத்துவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்ரி அவர்கள் கையொப்பம் இட்டிருந்தார். 

இந்த விடயமானது அந்தப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது, அந்த மக்களின் மீழ் குடியேற்றத்துக்காக போராடிவரும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களுக்கும் பெரும் பேரிடியாகவே அமைந்திருந்தது. இந்தப்பகுதியில் பரம்பரையாக வாழ்ந்துவரும் முஸ்லிம்களின் காணிகள் இந்த வர்த்தமானிமூலம் இல்லாமல் ஆக்கிவிட்டதாககூறி அந்த மக்கள் மிகவேதனைப்பட்ட அதேநேரம், இந்த செயல்பாடுகள்  எங்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்துவிட்டதாக அமைச்சர் ரிசாட் அவர்களும்  இந்த வர்த்தமானியில் கையொப்பமிட்ட ஜனாதிபதி மைத்ரி அவர்களிடம் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான்  மரிச்சிக்கட்டி மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக தொடர் போராட்டத்தை அறிவித்து போராடிவந்தார்கள். 

இந்தப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரான அசாத்சாலி,அமைச்சர் பைசர் முஸ்தபா அதனோடு சேர்ந்து ரிசாட் பதியுதீன் போன்றவர்களும், அந்த மக்களுக்கு தீர்வைப் பெற்றுத்தருவதாக கூறி,அந்த மக்களின் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்திருந்தார்கள்.(அதன் பின் அவர்கள் எங்கே சென்றார்கள் என்பது இதுவரை தெரியாது).

இந்த நிலையில்தான் அமைச்சர் ரிசாட் பதியுதீன்  அவர்களின் வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி மைத்ரி அவர்கள் இது சம்பந்தமாக விசாரணை செய்து அறிக்கை சமர்க்குமாறு ஒரு விசாரணை குழுவை அமைத்திருந்தார்.

அந்த விசாரணைக்குழுவின் அறிக்கை தற்போது ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறியக்கூடியதாகவும் உள்ளது. இந்த நிலையில் அந்த அறிக்கையின் முடிவை பகிரங்கப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்ரியிடம் இதுவரை யாரும் கோரியதாகவும் காணக்கிடைக்கவில்லை. 

இந்த விசாரணை அறிக்கை வெளிவந்தால் வில்பத்து சரணாலய காட்டின் உண்மைநிலை வெளிச்சத்துக்கு வரலாம்.அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்புக்களும் இருக்கின்றன.அப்படிப்பட்ட விசாரணை அறிக்கையை வெளியே கொண்டுவருவதற்கு முயற்சிக்காமல்,புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர் சரத்பொன்சேகாவிடம் விசாரணை நடத்தி தீர்வை பெற்றுத்தாருங்கள் என்று, பொறுப்புவாய்ந்த அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்கள் கோரிக்கை வைப்பதை மிகவும் வேடிக்கையான  விடயமாகவே பார்க்கவேண்டியுள்ளது. 

ஜனாதிபதி மைத்ரி அவர்களின் மூலம் கிடைக்காத தீர்வு புதிய அமைச்சர் சரத் பொன்சேகா மூலம் கிடைத்துவிடும் என்று நினைப்பது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகவே பார்க்கவேண்டியுள்ளது.ஏற்கனவே விசாரித்து முடிக்கப்பட்ட விசாரணைக்கு பதில் கிடைக்காத நிலையில், மீண்டும் விசாரணை நடத்தி தீர்வை பெற்றுத்தாருங்கள் என்று அமைச்சரிடம் கேட்பது காலத்தையும் நேரத்தையும் கடத்தும் செயல்பாடாகவும் அமையலாம்.

அமைச்சர் சரத் பொன்சேகாவும் கடமைக்கு நானும் குழு அமைத்து விசாரிக்கின்றேன் என்றுகூறி, அதற்கும் பலஆண்டுகள் எடுத்துக்கொள்வதென்பது மரிச்சிக்கட்டியில் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் செயல்பாடாகவே பார்க்கப்படும்.

ஆகவே இந்தப்பிரச்சினையின் முக்கிய புள்ளியானவர் ஜனாதிபதி மைத்திரி அவர்கள்தான், அவர்களிடம் பேசிப்பெறமுடியாத தீர்வு வேறு யார் மூலமாகவோ நிறைவேறும் என்று நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதை குறிப்பிட்ட தரப்பினர் புரிந்து கொண்டு நடப்பார்களா என்பது கேள்விக்குறியே..!

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை..
ஜனாதிபதியிடம் பெறமுடியாத தீர்வை சரத்பொன்சேகாவிடம் பெறமுடியுமா ?  ஜனாதிபதியிடம் பெறமுடியாத தீர்வை சரத்பொன்சேகாவிடம் பெறமுடியுமா ? Reviewed by Madawala News on May 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.