திருமலை ஆசிரியைகளின் இடமாற்றம் உடனடியாக ரத்துச்செய்யப்பட வேண்டும். முஸ்லிம் அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?


-வை எல் எஸ் ஹமீட்-
சண்முகா தேசியப்பாடசாலையின் ஒருநாள் ஆர்ப்பாட்டம் குறித்த ஆசிரியர்களுக்கு உடன்
இடமாற்றத்தை வழங்க வைத்திருக்கிறது. அரச யந்திரம் அவ்வளவு வேகமாக செயற்பட்டிருக்கின்றது. குறித்த பாடசாலை ஒரு தேசிய பாடசாலை என்பதால் இடமாற்ற அதிகாரம் மத்திய கல்வி அமைச்சிற்குரியது. அவசரத்தேவைகளுக்காக மாகாண கல்விப் பணிப்பாளர் இடமாற்றத்தை வழங்க முடியும். ஆனால் அது மத்திய கல்வி அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

கிடைக்கின்ற தகவல்களின்படி மாகாண கல்விப் பணிப்பாளரின் உத்தரவுப்படியே தற்போது இடமாற்றம் வழங்கப்படுகிறது. மத்திய கல்வி அமைச்சு அதனை உறுதிப்படுத்த வேண்டும். மாகாண கல்விப்பணிப்பாளர் யாருடைய உத்தரவின்பேரில் அல்லது அழுத்தத்தின் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கின்றார்; என்பது தெரியவில்லை. ஏதோவொரு பலமான சக்தி இதன்பின்னால் செயற்பட்டிருக்கலாம்; என்பது நிராகரிக்கக் கூடியதல்ல. அவ்வாறு ஒரு சக்தி செயற்பட்டிருந்தால் அதனை அடையாளம்காண முடியுமென்றால் இதன் பின்னால் உள்ள திட்டத்தின் ஆழ, அகலத்தை அளவிடுவது சற்று இலகுவாகலாம்.

இந்த இடமாற்றம் எந்த பாடசாலைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது; என்ற தகவல் இதனை எழுதும்வரை அறிய முடியவில்லை. அது ஒரு முஸ்லிம் பாடசாலையாயின் குறித்த ஆசிரியைகள் ஆறுதலடைவார்கள். ஆனால் இங்குள்ள பிரச்சினை முஸ்லிம் பாடசாலையா? இந்துப்பாடசாலையா? என்பதல்ல. என்ன காரணத்திற்காக இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது; என்பதுதான் முக்கியமானது.

அபாயா ஏன் அணிகிறார்கள்?
—————————————
இலங்கை முஸ்லிம்களின் குறிப்பாக வட-கிழக்கு முஸ்லிம்களின் தாய்வழி தமிழ் பரம்பரையாகும். எனவே தமிழ் கலாச்சாரத்தில் இஸ்லாத்திற்கு முரண்படாத விசயங்களை பின்பற்றுவதை நமது தந்தைவழி முன்னோர் தடுக்கவில்லை. இதனால் பல தமிழ் கலாச்சார பாரம்பரியங்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் இருந்தன. பல இன்று மருவி விட்டபோதும் சில இன்னும் இருக்கின்றன.

உதாரணமாக, மோதிரம் போடுதல், கூறை கொண்டுசெல்லல், சீதனம், தாலி, வட்டா மாற்றுதல், எண்ணை மாற்றுதல், தென்னம்பிள்ளை பாளை போட்டால் விழா எடுத்தல்; வசதி படைத்த குடும்பத்தினர் மாப்பிள்ளை பெண் வீட்டை நெருங்கும்போது வீதியில் வெள்ளை விரித்து மாப்பிள்ளையை அழைத்து வரல் இவ்வாறு அடுக்கிக் கொண்டு செல்லலாம். இவற்றில் பல வழக்கொழிந்து விட்டன. இந்த வரிசையில்தான் சாரி அணிதல் கலாச்சாரமும் இருந்து வந்தது. இன்னும் இருக்கின்றது.

அன்றைய காலம், நவீன நாகரீகங்கள் கிராமங்களை எட்டிப்பார்க்காத காலம். கல்வி, குறிப்பாக பெண் கல்வி அதன் அடிமட்ட நிலையில் இருந்த காலம். பெண்களின் நடமாட்டம் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருந்த காலம். மாமியார் வீட்டுக்கு செல்வதாக இருந்தாலும் பகல் தூங்கச்சென்று இரவு உலாவரும் வேளையில் நிலா வொளியில் கொண்டவன் ஐம்பது அடி முன்னே நடக்க நாணத்தின் நயனங்கள் தன்னை சிறைகொள்ள, தன்னுடன் வயதான பாட்டியை அல்லது உறவுக்காற குழந்தை ஒன்றை அழைத்துக்கொண்டு தயங்கித்தித் தயங்கி பின்னே மனைவி நடந்தசென்ற காலமது.

அந்தக்காலத்தில் சாரி ஒரு பெண்ணுக்கு போதுமானதாக இருந்தது. இன்று காலம் மாறிவிட்டது. கணவனின் அருகே வீதியில் நடந்துசெல்ல தயங்கியவள் இன்று எத்தனையோ அந்நிய ஆடவர்களுடன் இரண்டறக்கலக்க வேண்டியநிலை. அது கல்விக்கூடமாக இருக்கலாம், வேலைசெய்யும் அலுவலகமாக இருக்கலாம். பயணம் செய்யும் பேரூந்தாக இருக்கலாம்.

இது அந்தப் பெண்ணின் குற்றமல்ல. நாம் இன்று வாழும் உலகமது. காலம் மாறலாம். காலத்தின் கோலம் மாறலாம். கலிமாச் சொன்ன பெண்ணின் கண்ணியம் மாறாது. அன்று வீடே உலகமென வாழ்ந்தவளுக்கு சாரி போதுமானதாக இருந்தது. இன்று உலகமே வீடாக மாறிய உலகில் தன் கண்ணிம் காக்க அதிகௌரவமான ஆடை தேவைப்படுகிறது.

அந்நிய ஆடவன்முன் தன்னை முழுமையாக மறை என்கிறது; அவள் கொண்ட மார்க்கம். அதற்காக அவள் தேர்ந்தெடுத்த ஆடைதான் “ அபாயா”. அது அரேபிய உடையாக இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். அவள் அபாயா உடுப்பது அராபியப் பெண் உடுத்தாள் என்பதற்காக அல்ல. அவள் உடுத்தும் அபாயாவை அராபியப் பெண்ணும் உடுக்கிறாள்; என்பதற்காக அவள் என்ன செய்ய முடியும்.

இன்று மேற்கத்தைய நாடுகளில் வாழும் முஸ்லிம் பெண்களும் அபாயாதான் அதிகமாக உடுக்கிறார்கள். அராபிய உடை என்பதற்காக அல்ல; அதி பாதுகாப்பான உடை என்பதற்காக.

இந்த உடை உங்கள் கண்களை உறுத்துவதேன்? நாகரீகம் என்ற போர்வையில் ஆடைகுறைப்புச் செய்து அலங்கோலமாய் அரிவையர் திரியும் உலகில் நாகரீகத்தின் வளர்ச்சி என் நாயனின் கட்டளையை தீண்ட முடியாது என்று, முழுமையாக தன்னை மறைத்து முழுமதியாய் வரும் என் சகோதரியின் கோலம் உன் கண்களை உறுத்துவதேன்?

கண்ணியம்காக்க உடுத்த ஆடையை குற்றம் என்று இடமாற்றம் வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று இது அனுமதிக்கப்பட்டால் நாளை ஒவ்வொரு பாடசாலையாக இது தொடரும். இன்று ஆசிரியைகளில் கைவைக்க அனுமதித்தால் நாளை அது மாணவிகளைத் தொடரும். அந்நிய மதப்பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்துவரக் கூடாதென்பர். அதன்பின் நீளக்காற்சட்டை கூடாதென்பர்.

ஒன்றில் அரசு ஒரு கொள்கைத் தீர்மானமெடுக்கட்டும், “ முஸ்லிம் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரிய, ஆசிரியைகளும் தமிழ் பாடசாலைகளில் தமிழ் ஆசிரிய, ஆசிரியைகளும் மாத்திரமே கற்பிக்க வேண்டுமென்று. இது ஏற்படுத்தப்போகின்ற நடைமுறைப் பிரச்சினைகளுக்கும் அரசு தீர்வைக் கூறட்டும். அல்லது அவரவர் கலாச்சார ஆடைகள் அணிவதில் அடுத்தவர் மூக்கை நுழைக்கக்கூடாது;என்று சுற்றுநிருபம் அனுப்பட்டும்.

ஆடை சுதந்திரம் தொடர்பாக ஏற்கனவே உயர்நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட உத்தரவு முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எடுக்க வேண்டும்.

இது ஒரு பாடாசாலை நிகழ்வு என எடுக்க வேண்டாம். இதை அனுமதித்தால் இது ஒரு தொடர் சங்கிலியாக மாறும். உரிமைக்காக போராடுவதாக தேர்தல் மேடைகளில் கூறினால் போதாது. எம் மார்க்கம் கூறிய ஒழுக்கமான ஆடை என்பது எமது பிரதான உரிமை. அதை விட்டுக்கொடுக்க முடியாது.
திருமலை ஆசிரியைகளின் இடமாற்றம் உடனடியாக ரத்துச்செய்யப்பட வேண்டும். முஸ்லிம் அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? திருமலை ஆசிரியைகளின் இடமாற்றம் உடனடியாக ரத்துச்செய்யப்பட வேண்டும். முஸ்லிம் அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? Reviewed by Madawala News on April 27, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.