மூன்று வீடுகளை அடித்து நொறுக்கிய ரவுடிக் கும்பல். (படங்கள்)


தென்மராட்சி மட்டுவில் மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் நேற்று (22) இரவு தொடக்கம் இன்று (23) அதிகாலை வரை கிராம சேவகரின் வீடு உட்பட்ட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக் கும்பல் பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

நேற்று இரவு 11 மணியளவில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள மட்டுவில் வளர்மதி பகுதியில் வசிக்கும் உடுவில் பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம சேவகரின் வீட்டுக்குள் வாள் மற்றும் கோடரி போன்ற ஆயுதங்களுடன் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

இத் தாக்குதல் தொடர்பாக நேற்று இரவு உடனடியாகவே கிராம சேவகரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் இன்று மதியம் 12 மணி வரைக்கும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தரவில்லை. இதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோருக்கு கிராம சேவகர் சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

உடனடியாக கிராம சேவகரின் வீட்டுக்குச் சென்ற மாகாணசபை உறுப்பினர் நிலைமைகளை பார்வையிட்டதுடன் தென்மராட்சி பகுதிக்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை நேரடியாக சந்தித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார். இதையடுத்து உடனடியாக சம்பவ இடங்களுக்குச் சென்ற சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

ரவுடிக்கும்பலின் அட்டகாசங்கள் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது நேற்று இரவு 11 மணியளவில் கிராம சேவகரின் வீட்டுக் கேற்றினை கொடரியால் கொத்திப் பிரித்து வீட்டு வளவுக்குள் நுழைந்தவர்கள் யன்னல் கண்ணாடிகளை உடைத்ததோடு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

பின்னர் அதிகாலை 5 மணியளவில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக கட்டுக்காணி ஒழுங்கையில் உள்ள வீட்டுக் கேற்றினையும் கொடரியால் பிரித்து உள்நுழைந்து வீட்டுக் கதவினையும் கொத்தி வீட்டுக்குள் நுழைந்து தொலைக்காட்சிப் பெட்டி உட்பட்ட பெறுமதியான வீட்டுத்தளபாடங்கையும் அடித்து நொறுக்கியதோடு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கி விட்டுச் செல்லும் போது வீட்டின் மீது பெற்றோர் குண்டினையும் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதனால் சமையலறையில் தீப்பிடித்துள்ளது. இதன் பின்னர் அதிகாலை 5.30 மணிக்கு மீண்டும் மட்டுவில் வளர்மதி பகுதிக்குச் சென்ற அக்குழு கிராம சேவகரின் அயல் வீட்டுக்குள்ளும் நுழைந்து அதேபோன்றே சொத்துக்களை அடித்து நொறுக்கி களேபரத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இம்மூன்று தாக்குதல் சம்பவங்களையும் ஒரு குழுவே மேற்கொண்டிருக்கின்றது என தெரிவிக்கும் சாவகச்சேரி பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை இன்று காலை கைது செய்ததுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று வீடுகளை அடித்து நொறுக்கிய ரவுடிக் கும்பல். (படங்கள்) மூன்று வீடுகளை அடித்து நொறுக்கிய ரவுடிக் கும்பல். (படங்கள்) Reviewed by Madawala News on April 23, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.