காத்தான்குடி வர்த்தகர் முபாறக்கின் மரணத்தில் தொடரும் மர்மம். ( இன்று வரையான விசாரணைகள் மற்றும் வாக்குமூலங்களின் அப்டேட்)


-எம்.எஸ்.எம்.நூர்தீன்-
நாட்டின் பல பகுதிகளிலும் முஸ் லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பரவிக் கொண்டிருந்த
பதற்றமானதொரு சூழலில்தான் காத்தான்குடியின் இளம் வர்த்தகர் ஏ.எல்.எம்.முபாறக் (வயது 35) காணமால்போன செய்தி அனை வரின் கவனத்தையும் ஈர்த்தது.

இது கொழும்பில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வர்த்தகர் சியாமை பலருக்கும் நினைவுபடுத்தியது.


இந் நிலையில்தான் மறுநாள் அவரது சடலம் மட்டக்களப்பு வாவியிலிருந்து மீட்கப்பட்ட தகவல் வந்ததும் எல்லோரும் அதிர்ந்து போயினர்.

அனைவரோடும் மிக அன்பாகவும் பண்பாகவும் பழகுகின்ற வர்த்தகத்தின் முன்னேற்றம் கண்டு கொண்டிருந்த ஒரு இளம் வர்த் தகருக்கு நடந்தது என்ன எனும் கேள்வி எல்லோர் மனதையும் ஆட்கொண்டது.

ஆக இது கொலையா அல்லது தற்கொ லையா எனும் மர்மம் இன்றும் நீடிக்கவே செய்கிறது.


நடந்தது என்ன?

 காத்தான்குடியில் கடந்த சனிக்கிழமையன்று மாலை காணாமல் போய் ஞாயிற்றுக்கிழமையன்று மட்டக்களப்பு வாவியில் சடலமாக மீட்கப்பட்ட பாதணி தொழிற்சாலையொன்றின் உரிமையாளரான புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதி மனேஜர் லேனைச் சேர்ந்த ஏ.எல்.எம்.முபாறக் (வயது 35) என்பவரது மரணம் தொடர்பில் பலரும் பல்வேறுபட்ட கருத்தாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்,


கடந்த சனிக்கிழமை (10.3.2018) மாலை, காத்தான்குடி மட்டக்களப்பு எல்லை வீதியான முதியோர் இல்ல வீதியிலுள்ள இவரது பாதணி தொழிற் சாலையிலிருந்து நடந்து சென்று அந்த வீதியிலுள்ள தேனீர்க் கடையொன்றில் தேனீர் அருந்தி விட்டு மீண்டும் காத்தான்குடி முதியோர் இல்ல வீதி வழியாக நடந்து காத்தான்குடி பிரதான வீதியை நோக்கிச் சென்றுள்ளார்.

இந்த சந்தர்ப்பத் திலேயே இவர் காணாமல் போயுள்ளார்.

இவரது கையடக்கத் தொலைபேசி  அன்று மாலை 7.30 மணிக்கு பிறகு இயங்கவில்லையெனவும் கூறப்படுகின் றது.

இவரது மனைவி மற்றும் உறவினர்கள் நண்பர்கள் பலரும் இவருடைய கையடக்க தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ள முயன்ற போதும் அது செயற்படவில்லை .

மறு நாள் ஞாயிற்றுக்கிழமை இவர் காணாமல் போயுள்ளார் என்ற செய்தி அவரது குடும்ப உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அவரது தொழில்சார்புடைய வர்கள் என பலருக்கும் எட்டுகின்றது.

இதையடுத்து இவரைக் காணவில்லையென காத்தான்குடி பொலிஸ் நிலை யத்திலும் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் காத்தான்குடி பொலிசார் விசாரணையை ஆரம்பித்து வர்த்தகர் முபாரக்கை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதற்கு மேலதிகமாக இவரது குடும்ப உறவினர்கள், நண்பர்கள் என பலரும் இவரை பல இடங்களிலும் தேடினர்.

இவரது மனைவியிடம், குடும்ப உறவினர்களிடம் வாக்கு மூலங்களை பொலிசார் பதிவு செய்து கொண்டனர்.


இவரது கார் இவரது பாதணி தொழிற் சாலைக்குள் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது.

இவர் சனிக்கிழமையன்று மாலை அவரது தொழிற்சாலையிலிருந்து வெளி யேறியது, பின்னர் தேனீர்க் கடைக்கு வந்து தேனீர் அருந்துவது, அதன் பின்னர் அங்கிருந்து முதியோர் இல்ல வீதி வழியாக பிரதான வீதிக்கு செல்லும்
வீடியோ சி.சி.ரி.வி.காணொலியில் பதிவாகியிருப்பதாக கூறப்படுகின்றது.

 தொலைபேசியில் உரையாடிய படியே இவர் இந்த வீதியினால் நடந்து சென்ற தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இவரை சனிக்கிழமை பூராகவும் தேடிக் கொண்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று மாலை மட்டக் களப்பு வாவியில் சடலமாக மீட்கப்பட் டுள்ளார்.


இவரின் சடலம் வாவியிலிருந்து கரைக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அங்கு சென்ற அவரது குடும்ப உறவினர்களும் அவரது நண்பர்களும் இவரை அடையாளம் கண்டனர்.

பின்னர் அங்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

அவரது காற்சட்டையினுள்ளிருந்து சொற்ப பணம் மற்றும் அவரது கைட யக்க தொலைபேசி என்பனவும் மீட்கப் பட்டன.  பின்னர் இங்கு வருகை தந்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் எம்.ஐ.றிஸ்வி விசாரணைகளை மேற் கொண்டதுடன் ஜனாஸா  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று பிரேத பரிசோத னையை மேற்கொள்ளுமாறும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.


இதற்கமைய ஜனாஸா  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டு திங்கட்கி ழமை காலை பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் சட்ட வைத்திய அதிகா ரியினால் பிரேதபரிசோதனை மேற் கொள்ளப்பட்டதன் பின்னர் ஜனாஸாஉறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வீட்டுக்கு கொண்டு செல்லப் பட்டு அங்கிருந்து புதிய காத்தான்குடி பரீட் நகர் பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆப்பள்ளிவாயலின் மேட்டு நில மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் இவர் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

பிரேத பரிசோதனையின் அறிக்கை மற்றும் இவரது உடலின் சில மாதிரிகள் கொழும்புக்கு பரிசோதனைக்கு அனுப் பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


வர்த்தகர் முபாரக்கின் இந்த மரணம் தொடர்பில் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க முடியாது என அவருக்கு நெருக் கமானவர்கள் குறிப்பிடுகின்றனர். இவ ரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். மரணத்தில் பாரிய சந்தேகம் இருப்பதாகவும் அவரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.


இவரின் மரணத்தில் சந்தேகம் இருக்கின்றது என அவருடைய குடும்ப உறவினர்கள் பொலிசாரிடம் முறையிட் டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான தடயங்களோ அல்லது சான்றுகளோ விசாரணைகளில் இருந்து இதுவரை கண்டறியப்படவில்லை என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.


இவருக்கு மன அழுத்தம் இருந்த தாகவும் கடன்கள் அதிகமாக இருந்த தாகவும் இதனால் இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும்
சிலர் கருதுகின்றனர்.


இவர் தனது காரை தொழிற்சாலையில் நிறுத்தி விட்டு காருக்குள் தனது மணி பேர்ஸ் மற்றும் கார் திறப்பு என்பவற்றை வைத்து விட்டு நடந்து சென்றுள்ளதா னது இவர் தற்கொலை செய்து கொள்வ தற்கான தயார் நிலையிலேயே சென் றுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.


இவர் காணாமல் போன சனிக்கிழமையன்று இவரது மனைவி, பிள்ளைகளை காரில் ஏற்றிக் கொண்டு சுற்றியதாகவும் அவரது தொழிற்சாலையின் மின் இணைப்பு தொடர்பாக அவரது தொழில் பங்காளர் சிஹார்தீன் என்பவரை அவரது காரில் ஏற்றிக் கொண்டு சென்றதாகவும் இதன் போது அவரது முகத்தில் எந்தவொரு சலனமோ வழமைக்கு மாற்றமான அடையாளங்களோ காணப் படவில்லை எனவும் அவர் மன அழுத் தமுடையவராக காணப்படவில்லை எனவும் கூறுகின்றனர்.


வழமையான முக பாவனையே அவரிடம் காணப்பட் டதாகவும் குறிப்பிடுகின்றனர்.

காணாமல் போன அன்றைய தினம் தொழிற்சாலைக்கு சென்று வழமை போன்றே நடந்து கொண்டார். எந்தொரு வித்தியாசமும் அவரிடம் இருக்க வில்லை என அவரது தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

தனக்கு ஏதாவது பிரச்சினைகள் உள்ளனவா அல்லது வேறு ஏதாவது அழுத் தங்கள் இருக்கின்றனவா என்பது பற்றி இவர் மனைவி குடும்ப உறவினர்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை எனவும் தெரிய வருகின்றது.


இவர் தற்கொலை செய்து கொள் வதற்கான எந்தவொரு தேவையும் அவருக்கு இருக்கவில்லை . அவர் மனைவி பிள்ளைகளோடு, குடும்ப உறவினர்களோடு, நண்பர்களோடு, தனது. தொழிற்சாலையின் பிரதான முதலீட் டாளர் சிஹார்தீன் என்பவரோடு இவர் காணாமல் போகும் இறுதி நேரம் வரை நல்ல நட்புடனும் புரிந்துணர்வுடனுமே காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.


இவர் தற்கொலை செய்யவில்லை. இதனால் இவரது மரணத்தில் சந்தேகம் நிலவுகின்றது. இவரை யாராவது கொலை செய்திருக்கலாம் எனவும் அவரது குடும்ப உறவினர்களில் சிலர் சந்தேகம் வெளியிடுகின்றனர்.


மேற்படி வர்த்தகரான ஏ.எல்.எம். முபாறக் பாதணி தொழிலில் கடந்த 15 வருடங்களுக்கு மேல் அனுபவமுள்ளவர். புதிய காத்தான்குடி மத்திய வீதி 3 ஆம் குறுக்கு தெருவில் பிறந்து வசித்து. வந்த இவர் புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் மனேஜர் லேனில் திருமணம் செய்து இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு தந்தையாவார். இவரது பிள்ளைகளில் ஒருவர் 6 ஆம் தரத்திலும் மற்றையவர் 3 ஆம் தரத்திலும் கல்வி கற்கின்றனர்.


 இவரது குடும்பத்தில் ஐந்து பிள்ளை கள். நான்கு ஆண் பிள்ளைகளில் இவர் மூன்றாவது ஆண் பிள்ளையாவார். இவரது தந்தை மரணித்து விட்டார். தாய் மற்றும் சகோதரர்கள் உள்ளனர்.


பத்தாம் தரம் வரை கல்வி கற்ற இவ ருக்கு தொழிலில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் அதீத முயற்சியும் இருந்து

வந்தது. காத்தான்குடியிலுள்ள பாதணி தொழிற்சாலையொன்றில் சாதாரண தொழிலாளியாக இருந்து பாதணி உற்பத்தியை கற்றுக் கொண்ட இவர் காத்தான்குடி கடற்கரை வீதியில் ஒரு பாதணி தொழிற்சாலையை தொடங்கி அதனை சிறப்பாக நடாத்தி வந்தார்.

 காத்தான்குடியைச் சேர்ந்த சிஹார்தீன் என்பவர் இவர் தனித்துவமான பாதணி தொழிற்சாலையை உருவாக்குவதற்கு பணத்தினை கொடுத்துதவி செய்த தோடு அவரும் அதில் ஒரு பிரதான பங்காளராக இருந்துள்ளார்.


பெண்களுக்கான பாதணிகளை உற் பத்தி செய்யும் தொழிற்சாலையை காத் தான்குடி கடற்கரை வீதியில் இவர்கள் ஆரம்பித்து நடாத்தி வந்த போது கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னர் வி.கே. சி எனப்படும் ஆண்களுக்கான பாதணி களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை யொன்றை ஆரம்பித்தனர்.


இந்த தொழிற்சாலைக்குரிய பிரதான இயந்திரங்கள் சீன நாட்டிலிருந்து இறக் குமதி செய்யப்பட்டதுடன் இந்த இயந்தி ரங்களை இயங்க வைக்கும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் இருவர் சீனாவி லிருந்து வந்து இங்கு கடமையாற்றி வந்தனர்.


இந்த தொழிற்சாலைக்காக சுமார் பத்துக் கோடி ரூபாவுக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.  இந்த தொழிற்சாலையின் பிரதான ஸ்தாபகர்களாக மேற்படி முபாறக் என்ப வரும் இதற்கான நிதியுதவியை வழங் கிய அவரின் பிரதான முதலீட்டாளராக சிஹார்தீன் என்பவருமே இருந்துள்ளனர்.


இந்த தொழிற்சாலையின் திறப்பு விழா வைபவத்தின் அழைப்பிதழில் இவ்விரு வரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள் ளன. இந்த புதிய தொழிற்சாலையை ஆரம்பித்து தொழில் நடவடிக்கைகள் சரியாக இன்னும் இடம் பெறாத நிலையி லேயே இவர் உயிரிழந்துள்ளார். இவர் காணாமல் போவதற்கு முதல் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கி ழமை தினங்களில் தனது தாய் மற்றும் சகோதரியின் வீடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.

 " எனது பிள்ளைக்கு என்ன நடந்தது? அவர் என்னோடு மிகவும் அன்புடன் இருந்தவர். எனக்கு காலில் மிக நீண்ட காலம் இருந்த நோயை இந்தியா வரை கொண்டு சென்று குணப்படுத்தினார். அவரை எப்போது பார்ப்பேன்?" என அவரது தாய் கண்ணீர் மல்கக் கூறினார்.


"இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இறுதியாக எனது வீட்டுக்கு வந்த போது நான் அவரை சந்தித்தேன். பின்னர் சனிக்கிழமையன்று நான் அவருக்கு தொலை பேசி எடுத்தேன். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை . பின்னர் எனக்கு எடுத்து தான் சலூனில் இருந்ததாகவும் உம்மாவுக்கு செலவுக்கு காசு வேண்டுமா என்று கேட்க எனக்கு காசு வேண்டாம் மகன் எனக் கூறியதா கவும் அதுதான் நான் இறுதியாக அவ ருடன் கதைத்த சந்தர்ப்பமாகும்" என அவரின் தாய் மேலும் தெரிவித்தார். எனது குடும்பம் அயலவர்கள் பல ருக்கும் உதவி செய்பவராக இவர் காணப்பட்டார்.

என்னை எனது மகன் மாலைதீவு, இந்தியா போன்ற நாடுக ளுக்கு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென் றதை நான் எப்போது மறப்பேன் என்றும் குறிப்பிட்டார். இவருக்கு ஒரு பக்க தலையிடி போன்ற ஒரு நோயும் இருந்து வந் துள்ளது. இது ஒரு தீராத நோயாகவும் காணப்பட்டுள்ளது.

இதற்கு இவர் பல வைத்தியர்களிடம் சிகிச்சை செய்ததா கவும் இதற்காக அவர் தற்கொலை செய் திருக்க முடியாது எனவும் அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.


கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இவர் காத்தான்குடி ஆதார வைத்தியசா லையில் ஒரிரு தினங்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றதையும் அவரது சகோ தரி உறுதிப்படுத்துகிறார்.

"இறுதியாக வெள்ளிக்கிழமையன்று மாலை எனது வீட்டுக்கு அவரது மனைவி பிள்ளைகளுடன் வந்தார். நான் செய்த சிற்றுண்டிகளை விரும்பி சாப்பிட்டார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம் " எனவும் அவரது சகோதரி மேலும் தெரிவித்தார்.

இவர் அடிக்கடி சீனா உட்பட பல நாடுகளுக்கும் தனது வர்த்தக விடய மாக சென்று வருபவராக இருந்துள்ளார். இவர் இவரது பாதணி தொழிற்சாலை விடயத்தில் பலர் இவருக்கு கடனாக பணம் கொடுத்திருக்க முடியும். அதே போன்று இவருக்கும் சிலர் கடன்களை கொடுப்பவர்களாக இருக்க கூடும். அதற்கான இவரின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இவரது குடும்பத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட இருவரின் தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டு அவரது கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் இவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா எனும் மர்மம் இன்றும் நீடிக்கவே செய்கிறது.


அவ்வாறு அவர் தற்கொலை செய்திருந்தால் ஏன் எதற்காக அவர் தற்கொலை செய்ய வேண்டும் என்ற கேள்வியையும் அவரின் குடும்பத்தினர் எழுப்புகின்றனர். அவருக்கு ஏற்பட்ட அதிக மன அழுத்தத்தினால் இவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் சிலர் கூறுகின்றனர். இது தொடர்பில் காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து விசாரணகளை மேற் கொண்டு வருகின்றனர்.


இறைவனின் நாட்டப்படி, அவர் இந்த உலகைவிட்டும் பிரிந்திருக்கிறார். அதனை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஆனாலும் இவரது மரணம் தொடர்பில் தீர்க்கமான முடிவுக்கு வர முடியாதளவு மர்மம் நீடிப்பதால் அதனை முழுமையாக விசாரணைக்குட்படுத்தி விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க வேண்டடியது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கடமையாகும். இது விடயத்தில் காத்தான்குடி பொலிஸ் நிலையம் தனது விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் என நம்புகிறோம்,

-எம்.எஸ்.எம்.நூர்தீன்- vidivelli 16/3/2018

காத்தான்குடி வர்த்தகர் முபாறக்கின் மரணத்தில் தொடரும் மர்மம். ( இன்று வரையான விசாரணைகள் மற்றும் வாக்குமூலங்களின் அப்டேட்) காத்தான்குடி வர்த்தகர் முபாறக்கின் மரணத்தில் தொடரும் மர்மம். ( இன்று வரையான விசாரணைகள் மற்றும் வாக்குமூலங்களின் அப்டேட்) Reviewed by Madawala News on March 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.