தேர்தலில் கறிவேப்பிலையாகிய எமது சமூகம்.


கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் சட்டமூலம் மற்றும் நாடளாவிய ரீதியில் அனைத்து
கட்சி சார்பாகவும் அதிகமான முஸ்லிம்கள் தேர்தலில் போட்டியிட முன்வந்தமை என்பவற்றை கருத்திற் கொண்டு முன்வைக்கப்பட்ட ஒரு கருத்துதான் இத் தேர்தலில் முஸ்லிம்கள் கறிவேப்பிலைகள்.

இக்கருத்து உண்மை என நிருபிக்கும் விதமாக தென்னிலங்கை வெலிகம நகரசபை, அதுரலிய பிரதேச சபை உறுப்பினர் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

கறிவேப்பிலைகள் உணவை சுவையூட்ட பயன்படுத்தி உண்ணும்போது வீசி விடுகின்றனர். இவ்வாறு தேர்தலில் தென்னிலங்கை சிறுபான்மை சமூகம் பயன்படுத்தப்பட்டு தற்போது அரசியலில் இருந்து தூக்கி எறிந்துள்ளனர்.

தென்னிலங்கையில் முஸ்லிம்களை பெரும்பான்மை கொண்ட நகரசபை வெலிகம நகரசபையாகும். மேலும் அங்கு பல ஆண்டுகளாக முஸ்லிம் ஒருவரே நகர பிதாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வெலிகம நகரசபை மக்கள் எதிபார்த்த முஸ்லிம் ஒருவருக்கு பதிலாக வேறு ஒருவர் வெலிகம நகரசபைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதுரலிய பிரதேச சபையில் UNP அணைத்து வாட்டராங்களிலும் தோல்வியுற்ற நிலையில் கொடபிடிய முஸ்லிம் வாக்காளர் பெட்டியில் வெற்றி பெற்றுள்ளது. எனவே இக்கட்சி சார்பாக போட்டியிட்ட கொடபிடிய வட்டார வேட்பாளர்கள் இருவரில் ஒருவரை அதுரலிய பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்படுவார் என கொடபிடிய முஸ்லிம்கள் எதிர் பார்த்தனர். என்றாலும் இவ்விரு சந்தர்பத்திலும் தென்னிலங்கை சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்திலும், மாகாண சபையிலும் தமிழ் பேசும் பிரதிநிதிகள் இல்லாத ஓர் மாகாணமே தென் மாகாணம். தற்போது நடைமுறையில் உள்ள இதே தேர்தல் சட்டமூலம் அடுத்தடுத்த தேர்தலிலும் இலங்கையில் நடைபெற்றால் குறிப்பாக மாத்தறை மாவட்டத்தில் சிறுபான்மையினர் உள்ள பிரதேச சபைகளில் சிறுபான்மைனரின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகலாம். எனவே அதனை தடுக்க இப்பிரதேச சபை சிறுபான்மை மக்கள் கட்சி பேதமின்றி என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராயும் கடப்பாடு நமக்குள்ளது. இதன் முதற்கட்டமாக கடந்த ஆறு மாத கால வரலாற்றை ஆய்வு செய்தால் நமக்கு ஒரு சில அறிவுரைகளை அடுத்த தேர்தலுக்காக பெற்றுக்கொள்ள முடியும்.

கடந்த ஆண்டு இறுதி பகுதியில் கின்தொட்டை கலவரத்தை தொடர்ந்து இயற்கை அனர்த்தம் மற்றும் தேர்தல் அறிவிப்பு என்பவற்றால் சமூகம் மற்றும் சமூக வலைத்தளத்தில் அடங்கிப் போயிருந்த இனவாதம் தேர்தல் முடிவடைந்து ஒரு மாதத்திற்குள் பாரிய பூகம்பமாக 3 உயிர்களை பலியெடுத்து கண்டி கலவரத்தில் முடிவடைந்தது.

இக்கலவரத்தில் முன்வைக்கப்பட்ட பிரதான போலிக் குற்றச்சாட்டு முஸ்லிம்களின் உணவகத்தில் உணவுகளில் கருத்தடை மருந்து கலக்கப்படுகின்றது. மேலும் முஸ்லிம்களின் ஆடையகங்களில் உள்ளாடைகளில் கருத்தடை திரவியங்கள் கலக்கப்டுகின்றது என்பனவாகும்.

இக்கருத்தானது பிற சமூகத்தின் இளைஞர்களின் மனங்களில் மட்டுமல்ல சிறியோர் முதல் முதியோர்வரை அனைவரது உள்ளங்களிலும் பதிவாகியுள்ளதை அவதானிக்க முடிந்தது.

இக்கருத்து பிற சமூகத்தின் அனைவரது உள்ளங்களிலும் ஒரே காலப்பகுதியில் பதிவதற்கு சமூக வலைத்தளத்திற்கு மேலதிகமாக தேர்தல் பிரசாரக்களங்களும் பயன்படுத்தப் பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உறுப்பினர் தெரிவு செய்வதற்கு இருந்த ஒரே ஒரு விதி குறித்த வட்டாரத்தில் எக்கட்சி வெற்றி பெறுகின்றதோ அக்கட்சியின் பிரதான வேட்பாளருக்கு பிரதேச சபை உறுப்புரிமை கிடைக்கின்றது. மேலதிக பட்டியல் (Bonus) உறுப்பினரை தெரிவு செய்யும் உரிமை மக்களுக்கு கிடையாது மாறாக குறித்த கட்சியின் செயலாளருக்கும் தலைவருக்குமே உள்ளது. இந்த தேர்தலில் ஒரு முஸ்லிம் கிராமத்தில் உள்ள  1 ௦௦௦ வாக்குகளை  சின்னாபின்னப்படுத்த 4  கட்சிகள் சார்பாக ஒரே கிராமத்தில் 4 பேர் போட்டியிட முன்வந்தனர். இதனை குறிப்பாக ஹக்மன, வீரகெட்டிய, அதுரலிய பிரதேச சபைகளில் அவதானிக்க முடிந்தது.

இத்தேர்தல் சட்டவிதி மற்றும் முஸ்லிம்களில் அதிகமானோர் தேர்தலில் களமிறங்கியமை என்பன மாற்று சமூகங்களில் முஸ்லிம்கள் பற்றிய போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைக்க இலகுவாக களமைத்துக் கொடுத்தது.

அது எவ்வாறு என இனிப் பார்ப்போம்???

விகிதாசாரத் தேர்தலில் குறித்த பிரதேச சபைக்கு அதிகூடிய வாக்குகளை பெற்றவர் ஒழுங்கில்தான் உறுப்பினர் தெரிவு  செய்யப்படுவார். இந்நிலையில் ஒவ்வொருவரும் தமக்கான வாக்கு வங்கியை அதிகரிக்க இனமத பேதமின்றி பிரதேச சபையின் அனைத்து மூலை முடுக்குகளுக்கும் சென்று பிரசாரம் செய்தனர். ஆனால் புதிய கலப்புத்  தேர்தல் முறைக்கமைய தமது பிராசரத்தை தனது வட்டராத்துடன் ஒவ்வொரு வேட்பாளரும் சுருக்கிக் கொண்டனர். இதனால் பழைய தேர்தல் சட்ட மூலப்படி இனங்களை கடந்து சமூகத்தில் ஏற்படும் பிணைப்பு இத்தேர்தலில் இடம்பெறவில்லை.

சிறுபான்மையினர் தனியாகவும் பெரும்பான்மையினர் தனியாகவும் தமது பிரசாரங்களை ஒழுங்கமைத்தனர். இத்தேர்தல் காலத்தில் சிறுபான்மையினரும் பெரும்பான்மையினரும் ஒன்றாக தேர்தல் பிரசாரங்களில் கலந்து கொள்ளாமை காரணமாக ஒரு சில வேட்பாளர்கள் பிற இனம் மீதான போலிக்குற்றசாட்டையும் வெறுப்புணர்வையும் நல்லுள்ளம் கொண்ட பொதுமக்கள் மனங்களில் விதைத்தனர்.  இந்நிலைதான் ஒரே தடவையில் சிங்கள சமூகத்தில் முஸ்லிம்களின் கருத்தடை விநியோகம் பற்றிய போலிக் குற்றச்சாட்டை முன்வைக்க இலகுவாக இடமளித்தது.

இத்தேர்தலில் சிறுபான்மையினர்  ஒரே ஊருக்குள் அல்லது வட்டாத்திற்குள் வாழ்ந்து கொண்டு அவ்வட்டாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தி  4 பேர்  4 கட்சி சார்பாக போட்டியிட்டனர். இவற்றின் இறுதி விளைவு ஒரே ஊருக்குள் கட்சிக்காக ஒரே இனம் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டதுடன் தேர்தல் முடிந்ததும் தமக்கான அடையாளமாக ஒரு சிறுபான்மை பிரதிநிதியும் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை காரணமாக இனங்களுக்கிடையிலான பிரிவினையை ஏற்படுத்தத்தான் இலகுவான வழியுள்ளது. மேலும் இதிலும் சிறுபான்மையினத்தின்  பிரதிநிதித்துவத்தை உறுதியாக தக்கவைக்க முடியாதுள்ளது.

இதற்குத் தீர்வாக ஒரு பிரதேச சபையில் பெரும்பான்மையினத்துடன் ஒரு கிராமத்தில் மாத்திரம் சிறுபான்மையினர் இருந்தால் அவர்களுக்கு மாத்திரம் தனியானதொரு வட்டாரத்தை உருவாக்க வேண்டும். அல்லது சிறுபான்மை மக்களும் வேட்பாளர்களும் கட்சி பேதமின்றி ஒரே கூரையின் கீழ் அமர்ந்து சிந்தித்தால் நமக்கு அடையாளமாக பொருத்தமான உறுப்பினரை தெரிவு செய்யலாம்.

சிந்திப்போம்! அடுத்த தேர்தலில் செயற்படுவோம்!

(புதிய தேர்தல் முறையில் பெரும்பான்மை இனமுள்ள ஒரு பிரதேச சபையில் சிறுபான்மை இனத்தின் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு உறுதியாக தக்க வைப்பது பற்றி எழுதப்பட்டது. தென்மேற்கு  பிரதேசங்களில் தமிழ் பேசும் சமூகம் சிறுபான்மையாக உள்ளது போன்று வடகிழக்கு பிரதேசங்களில் சிங்களம் பேசும் சமூகம் சிறுபான்மையாக உள்ளனர். என்றாலும் இக்கட்டுரை தென்னிலங்கையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. பொறுமையாக முழுமையாக வாசிக்கவும் உங்கள் கருத்துகளை ibnuasadymail@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.)

Ibnuasad
தேர்தலில் கறிவேப்பிலையாகிய எமது சமூகம். தேர்தலில் கறிவேப்பிலையாகிய எமது  சமூகம். Reviewed by Madawala News on March 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.