கண்டி மாவட்டத்தை நோக்கி விரையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.


கண்டி மாவட்டத்திலுள்ள திகன, தெல்தெனிய பிரதேசங்களில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்‌ற உறுப்பினரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (05) கண்டி நோக்கி விரைந்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்டள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

நிலைமைகளை நேரில் அவதானித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்துவதற்கு உரிய நடவடிக்‌கைகளை மேற்கொள்ளும் நோக்கிலேயே அமைச்‌சர் ரவூப் ஹக்கீம் அங்கு சென்றுள்ளார்.

துரதிஷ்டமான சம்பவம் ஒன்றினால் சிங்கள சகோதரர் ஒருவர் மரணித்துள்ள பின்னணியில், அதை காரணமாக கொண்டு முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் சில வீடுகள் பெரும்பான்மை இனத்தவர்களால் தாக்கப்பட்டு , தீவைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களை மையப்படுத்தி இனக்கலவரமொன்றை உருவாக்கும் நோக்கத்தில் இனவாத சக்திகள் அங்கு ஒன்றுசேர்ந்துள்ளன.

இந்த பதற்றநிலையைத் தொடர்ந்து, இன்று (05) பிற்பகல் 4 மணி முதல் நாளை (06) காலை 6 மணி வரை கண்டி நிர்வாக மாவட்டத்தில் தற்போதைக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.

இன ரீதியான இந்த தாக்குதல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சராகவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அடுத்தடுத்து தொடர்புகொண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுடனும் இதனை அவர் வலியுறுத்தி கூறியுள்‌ளார்.

நேற்று அம்பாறை மாவட்டத்தில் இருந்தநிலையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், கண்டி மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த ஏக்கநாயக்கவை தொடர்புகொண்டு, கலவரங்கள் ஏற்படாதபடி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், சம்பவ இடங்களில் பாரதூரமான பிரச்சினைகள் எவையும் இல்லையென  திருப்தியற்ற விதத்தில் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் விசனம் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு உரிய வேளையில் களமிறக்கப்படவில்லை என்று அமைச்சர் ஹக்கீம் கவலை வெளியிட்டார். ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமது வீடுகளில் பாதுகாப்பாக இருந்து, அமைதி பேணும்படியும் பாதுகாப்பு தரப்பினருக்கு இயன்றவரை ஒத்துழைக்குமாறும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
கண்டி மாவட்டத்தை நோக்கி விரையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம். கண்டி மாவட்டத்தை நோக்கி விரையும்  அமைச்சர் ரவூப் ஹக்கீம். Reviewed by Madawala News on March 05, 2018 Rating: 5

2 comments:

  1. How long it will take Hakeem to reach kandy.

    ReplyDelete
  2. just eye washing since Saturday it was smoking so now only he has time to plan and visit kandy after Fires,

    Muslim Congress Crap

    ReplyDelete

adsns