மலையகத்தின் சில அரசியல் தலைவர்கள் மீண்டும் எமது காதுகளில் பூச்சுத்த நினைக்கின்றார்கள் , அது வெறும் பகற்கனவாகும்”



யு. சி. எம். சி. மற்றும் உமேடா தலைமைகள் இணைந்து கண்டனம் தெரிவிப்பு ! 


மேற்படி விடயமாக மலையக முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் பாரியதொரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது விடயமாக கடந்த சனிக்கிழமை பதுளை பாத்திமா வழிகாட்டல் மையத்தினூடாக மலையக முஸ்லிம் கவுன்சில் (UCMC) மற்றும் உமேடா ஆகிய சிவில் அமைப்புகள் இணைந்து ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.


 இக்கூட்டத்தில், கூட்ட நோக்கத்தை விளக்கும் நோக்கில் கருத்துரைத்த ஏ எம் எம் முஸம்மில் அவர்கள் உரை நிகழ்த்தும் போது தெரிவித்ததாவது , 

  
“ மலையக தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு ஆசிரிய உதவியாளர்களை நியமிப்பது சமபந்தமாக கடந்த 2024/01/24 ந் திகதி அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது. 


இது விடயமாக கல்வியமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா அவர்களின் கையொப்பத்துடன் கடந்த 2024/02/15ந் திகதி  மாகாண செயலாளர்களுக்கு அனுப்பிவைக்கப்  பட்டுள்ள கடிதத்தில்  மேற்படி விடயம் தொடர்பான விதிமுறைகள் மற்றும் விளக்கங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளது.



குறித்த சுற்றுநிருபத்தில் முதலாவது தெரிவிக்கப் பட்டுள்ள விடயம் பின்வருமாறு அமைந்துள்ளது. “ மலையக பெருந் தோட்ட பாடசாலைகளில் நீண்ட நாட்களாக நிலவி வரும் ஆசிரிய பற்றாக் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் , இம்முறைக்கு மாத்திரம் வரையறை செய்யப்பட்டு எதிர்காலத்தில் இந்த நடைமுறையை பின்பற்றுவதற்கு இம்முறைமையை உதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனும் நிபந்தனைக்கு உட்பட்டு பாடசாலையில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக்கு அமைய இந்த நியமனங்கள் வழங்கப் படவேண்டும்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. “ 

என்று குறிப்பிடப் பட்டுள்ளதாக கூறி குறித்த கடிதப் பிரதியை ஆதாரமாக காட்டி விளக்கப் படுத்தினார். க பொ த (உ/த) சித்தியடைந்த மற்றும் பட்டதாரிகளான அபேட்சகர்கள் மத்தியில் தொடர்ந்தும் உரை நிகழ்த்திய முன்னாள் அதிபர் முஸம்மில் அவர்கள் மேலும் கூறியதாவது,


குறித்த கடிதத்தில் “இம்முறைக்கு மாத்திரம் வரையறை செய்யப்பட்டு எதிர்காலத்தில் இந்த நடைமுறையை பின்பற்றுவதற்கு இம்முறைமையை உதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனும் நிபந்தனைக்கு உட்பட்டு பாடசாலையில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக்கு அமைய இந்த நியமனங்கள் வழங்கப் படவேண்டும்” என்று குறிப்பிட்டுக் கூற வேண்டிய அவசியம் என்ன ? . 


இது ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அமையும் ஓர் நியமனம் அல்ல . இதில் எங்கோ நெறி பிறழ்வு ஏற்பட்டுள்ளது. எனும் விடயம் புலப்படுகின்றதல்லவா ? 
 

     மலையக தமிழ் மொழி மூல ஆசிரிய நியமனங்கள் வழங்கப் படும் போது ஒவ்வொரு முறையும் முஸ்லிம்களை புறக்கணிக்கும் வகையில் பல உக்திகளை இவர்கள் கையாள்கின்றார்கள். 2005 ம் ஆண்டில் இவ்வாறு நியமனங்கள் வழங்கப் படும் போது அதற்கான அடிப்படை தகுதியாக சமயப் பாடத்தில் இந்து சமயம் அல்லது கிறிஸ்தவ சமய பாடங்களுக்கு திறமை சித்தி எடுத்திருக்க வேண்டும் என்று நிபந்தனை வித்திக்கப் பட்டது . ஆகவே இஸ்லாம் பாடத்தை சமய பாடமாக எடுத்த முஸ்லிம் அபேட்சகர்கள் இதன் மூலம் புறக்கணிக்கப் பட்டார்கள். இதற்கெதிராக நாங்கள் நீதிமன்ற நடவடிக்கைகள் மேட்கொண்டதால் அறுநூறு முஸ்லிம் அபேட்சகர்களுக்கும் நியமனம் வழங்க வேண்டிய நிலை உருவானது.
2005ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் முஸ்லிம்களை புறம் தள்ள நினைத்து அதற்கெதிராக நீதிமன்றம் சென்று போராடியதால் கிடைக்கப் பெற்ற 6௦௦ ஆசிரிய நியமனங்களில் ஊவா மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு கிடைக்கப் பெற்ற 190 ஆசிரியர்கள் ...  
 

    அதே போல் தான் 2014ம் ஆண்டும் இவ்வகையில் மலையக தமிழ் மொழிமூல ஆசிரிய நியமனம் ஒன்று வழங்கப் பட்டது. அதிலும் முஸ்லிம் அபேட்சகர்களை ஓரங்கட்டும் சில விதிமுறைகளை மேட்கொண்டார்கள். இம்முறை இவர்கள் குறிப்பிடுவது போல் பாடசாலைகளில்  நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பும் வகையில் ஆசிரிய நியமனங்கள் வழங்கப் படுவதாக கூறி நூறு வீதம் பெருந் தோட்ட தமிழ் பாடசாலைகளை மாத்திரம் தெரிவு செய்து அதை வர்த்தமானியில் வெளியிட்டார்கள். 


இதில் ஒரு முஸ்லிம் பாடசாலையும் உள்வாங்கப் பட்டிருக்க வில்லை. இந்த அநீதிக்கு எதிராகவும் நாம் அப்போது குரல் எழுப்பினோம் ,  முன்னாள் அமைச்சர்களான ரவுப் ஹகீம் மற்றும் ரிஷாத் பதியுத்தீன் ஆகியோருடன் இணைத்துக் கொண்டு, அப்போதைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களுடன் ஒரு நேரடி சந்திப்பில் இது விடயமாக நீண்டதொரு கலந்துரையாடலை நடத்தினோம் . 


அப்போது கல்விச் செயலாளராக இருந்த ராஜமநோகரி புலேந்திரன் அவர்களை நேரடியாக அழைத்த கல்வியமைச்சர் இது பற்றியா விளக்கத்தை கேட்டார். அப்போது விளக்கமளித்த கல்விச் , “ செயலாளர்குறித்த இந்த நியமனங்கள் பெருந் தோட்ட தமிழ் பாடசாலைகளுக்கு மாத்திரம் என்று மட்டுபடுத்தி தான் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.



( 2014ம் ஆண்டு அப்போதைய கல்வ்யமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களுடன்  ரவுப் ஹகீம் ரிஷாத் பதியுத்தீன் மற்றும் மலையக முஸ்லிம் கவுன்சில் உறுப்பினர்கள் குறித்த ஆசிரிய நியமனங்கள் விடயமாக கலந்துரையாடிய போது. ) 
இதில் நகர்புற பாடசாலைகளுக்கு வாய்ப்பளிக்க முடியாது என்று விளக்கமளித்தார். அபோது தோட்டப் புற மற்றும் நகர்புற பாடசாலைகளை பிருக்கும் அளவு கோல் எது ? ஏற்றுக் கொள்ளப் பட்ட அவ்வாரனதோர் பிரிவுக் கோடு கல்வியமைச்சின்  நடைமுறையில் உள்ளதா ?  என்று நாம் மேலும் வினவி நின்றோம். முறையான தெளிவை தர முடியாது தடுமாறிய செயலாளரிடம் நாம் மேலும் வினவினோம் , “ தெல் தோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயம் தேயிலை மரங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு முஸ்லிம் பாடசாலை . குறித்த இந்த பாடசாலையிலும் கடுமையான ஆசிரிய பற்றாக் குறைகள் நிலவுகின்றன. 


ஆகவே இந்த நியமனகளில் எப்படி அந்த முஸ்லிம் பாடசாலை விடுபடலாம்” ? . என்று கேள்வி எழுப்பினோம் .


 அதற்கும் முறையானதொரு தெளிவை தர தவறினார் , கல்விச் செயலாளர். உடனடியாக பதிலளித்த கல்வியமைச்சர் உண்மையில் முஸ்லிம் அபேட்சகர்களுக்கு இவ்விடத்தில் ஒரு அநீதி நடந்துள்ளது. ஆகவே முஸ்லிம்களுக்கும் நாம் 15௦௦ நியமனங்களை வழங்க உடனடி நடவடிக்கைகளை மேட்கொல்வோம் என்று தமது அபிப்ராயத்தை வெளியிட்டார் கல்வியமைச்சர். இம்முடிவுக்கு ஒப்புக் கொண்ட முஸ்லிம் அரசியல் தலைமைகள் குறித்த நூறு நாள் அரசாங்க களத்தில் அதை நடைமுறை சாத்தியமாக்குவதில் வழமை போல் தமது இயலாமையை பறைசாற்றினார்கள். 
ஆனால் இம்முறையும் முஸ்லிம்களை ஒதுக்கிவிட்டு இந்த நியமனங்கள் வழங்கப் படுமாயின் அதை வெறும் பார்வையாளர்களாக பார்த்துக் கொண்டு சும்மா இருந்து விட மாட்டோம் என்றும கூறினார். 



இக் கூட்டத்தில் அடுத்ததாக உரை நிகழ்த்திய உமேடாவின் செயலாளர் ஏ எம் நவாஸ் ஆசிரியர் அவர்கள் கூறுகையில், ஊவா வில் நாம் அரசியல் அனாதைகள் எனும் விடயம் காலத்திற்குக் காலம் நிரூபணம் ஆகிக் கொண்டே இருக்கின்றது. அநேகமாக எமது பள்ளிவாயில்களை தேர்வு செய்து அங்கொன்றும் இங்கொன்றுமாக பத்தாயிரம் பதினைந்தாயிரம் என்று சிறு தொகைகளை பங்கிடும் ஒரு சில அரசியல் வாதிகள் தேர்தல் காலங்களில் நான் அந்த பள்ளிக்கு இவ்வலவு கொடுத்தேன் , இந்த பள்ளிக்கு இவ்வலவு கொடுத்தேன் என்று பட்டியல் போட்டு சொல்வார்கள் . நாங்கள் முஸ்லிம்களின் வாக்குகளால் தான் இம்முறை பாராளுமன்றத்திட்கு தெரிவானோம் என்றும் சொல்வார்கள் . 


ஆனால் வளங்களை பங்கீடு செய்யும் போது எமது முஸ்லிம் பாடசாலைகளை வசதியாக மறந்து விடுவார்கள் அண்மையில் கூட பாடசாலை மாணவர்களுக்கு சீருடை பங்கிடும் போது எந்தவொரு முஸ்லிம் பாடசாலையும் உள்வாங்கப் படவில்லை. ஆனால் ஒரு சில தமிழ் பாடசாலைகளுக்கு மூன்று நான்கு எனும் தொகையில் பங்கீடு செய்தார்கள் . குறிப்பாக பதுளை தமிழ் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு மும்மூன்று சோடி வெள்ளாடைகள் வழங்கப் பட்டிருந்தன . 


அதில் ஆண்பிள்ளைகளுக்கு வழங்கப் பட வேண்டிய சீருடைகளும் இருந்துள்ளன. அவற்றை பெற்றுக் கொண்ட ஒரு சில பெண்மாணவிகள் சில கடைகளுக்கு சென்று ஆண்பிள்ளைகளின் சீருடைக்கு பதிலாக பெண்பிள்ளைகளின் சீருடைகளை மாற்றி எடுக்க முயன்றதாகவும் அறிய முடிகின்றது. 


இது விடயங்கள் பற்றி அமைச்சரிடம் விசாரித்தபோது கடந்த முறை வழங்கப் பட்ட சீருடை தொகுதியில் எஞ்சியிருந்த வற்றையே இவ்வாறு தாம் பங்கீடு செய்ததாக விளக்கமளித்துள்ளார் எமது கல்வி ராஜாங்க அமைச்சர். நாம் அவரிடம் கேட்கின்றோம் அவ்வாறு எந்தவொரு விதிமுறையையும் பின்பற்றாமல் இவ்வாறு தாம் நினைத்தவாறு சீருடை பங்கீடு செய்வதற்கு அமைச்சர் வீட்டு சொத்தையா அமைச்சர் பங்கீடு செய்தார் ? என்று நாம் அவரிடம் கேட்கின்றோம். 
இவ்வாறு இவர்கள் தமக்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை வாய்ப்பை பயன் படுத்தி முஸ்லிம்களை ஓரங்கட்டி ஒதுக்கி வைப்பதை நாம் தொடர்ந்தும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். 



ஆகவே  வழங்கப் படப் போகும் இந்த நியமனகளில் முஸ்லிம்களுக்கும் இத்தனை நியமனகள் வழங்கப் படவேண்டும் என்ற நிலைபாட்டில் இருந்து கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை என்று நாம் அறிந்துக்கொண்டால் குறித்த இந்த அநீதிக் கெதிராக ஜனநாயக ரீதியிலான அத்தனை முயற்சிகளை மேற்கொண்டு எமக்கான நியாயத்தை நாம் பெற்றுக் கொள்வோம் . என்று கூறினார் !  இக்கூட்டத்தில் மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவர் எம் பி செய்யத் முஹம்மத் அவர்களும், உமேடாவின் உதவித் தலைவர் அல் ஹாஜ் ஏ ஏ ஜுனைதீன் அவர்களும் ப/ ராசீக் பரீத் மு ம வி அதிபர் ஜனாப் எம் ஏ சி எம் முனவவ்வர் அவர்களும் கருத்துக்களை தெரிவித்தார்கள் . குறித்த நியமனங்களுக்காக விண்ணப்பிக்கக் கூடிய தகுதிபெற்ற அபேட்சகர்களும் தத்தமது ஆட்சேபனங்களை தெரிவித்து கருத்துரைத்தார்கள் .  



இவ்விடயம் தொடர்பாக வெலிமடை , மொனராகலை , பதுளை போன்ற பிரதேச ங்களிலும்  மேலும் பல தெளிவூட்டல் கூட்டங்களை நடத்தி முஸ்லிம் தரப்பில் நியாயம் பெறுவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என்றும் தீர்மானிக்கப் பட்டு கூட்டம் முடிவுற்றது.   

- உம்மு ஹைதம் -       


                            
மலையகத்தின் சில அரசியல் தலைவர்கள் மீண்டும் எமது காதுகளில் பூச்சுத்த நினைக்கின்றார்கள் , அது வெறும் பகற்கனவாகும்” மலையகத்தின் சில அரசியல் தலைவர்கள் மீண்டும் எமது காதுகளில் பூச்சுத்த நினைக்கின்றார்கள் , அது வெறும் பகற்கனவாகும்” Reviewed by Madawala News on April 26, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.