சாம்ராஜ்ஜியத்தை மீள கட்டமைக்கிறதா யானை?




இலங்கை அரசியலில் ஒவ்வொரு நாளும் ஊகிக்க இயலாத
 மாற்றங்களை அவதானிக்க முடிகிறது. தனது கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் நுழைந்தவர் ஜானாதிபதியானது அதற்கான பெரும் சான்றெனலாம். அடுத்தடுத்து என்ன நிகழும் என்பது பெரும் எதிர்பார்ப்பாகவே உள்ளது.

சில நாட்கள் முன்பு சோபித்த ஜே.வி.பிவின் மக்கள் அலை, தற்போது சற்று சோபை இழந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. இதுவே ஐ.ம.சக்தியின் நிலையும் கூட. இவற்றை சில விடயங்களை கோடிட்டு நிறுவவும் முடியும். அதனை தனியான கட்டுரையொன்றின் எழுத முயற்சிக்கின்றேன்.

டொலரின் பெறுமதி சடுதியாக குறைந்தமை, எரிபொருள் விலை குறைந்தமை ஆகிய இரண்டும் இலங்கை மக்களிடையே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள இன்னும் பல மாற்றங்கள் மக்கள் சிந்தனையை ரணிலுக்கு சாதகமாக திருப்பியுள்ளன. இந் நாட்டை மீட்கும் சக்தி ரணிலுக்கே உள்ளதென மக்கள் ஏற்க ஆரம்பித்துள்ளனர். இச் சிந்தனை ஏற்கனவே மக்களிடயே இருந்த ஒன்றே. தூசி படிந்திருந்த அச் சிந்தனை, மீண்டும் தூசு தட்டப்பட்டு, எழுந்து நடனமாகிறது.

ரணில் மொட்டணியுடன் இணைந்து செயற்படுவதே, தற்போது அவரை மக்கள் ஏற்க சிந்திப்பதற்கான பிரதான காரணமாகும். இனி மொட்டணியின் பக்கம் மக்கள் தலை வைத்தும் தூங்க மாட்டார்கள். அப்படி மொட்டணியினர் மக்களை துன்புறுத்தியுமுள்ளார்கள். ரணில் மொட்டை அரவணைத்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார் என்பதையும் ஏற்றேயாக வேண்டும். தற்போது அவர் செயல் ரீதியாக காட்டிக்கொண்டிருக்கும் சிறந்த மாற்றங்களை மக்கள் பூரணமாக ஏற்கின்றனர் எனலாம். இவற்றை தவறாக காட்ட முயற்சிக்கும் அரசியல் கட்சிகளின் பேச்சுக்களை மக்கள் சிறிதும் ஏற்க தயாரில்லை. எப்போதும் பேச்சை விட செயலுக்கு வீரியம் கூடுதலல்லவா? ரணில், தனது செயலினூடாக ஆற்றலை வெளிப்படுத்துவதானது அரசியல் கட்சிகளின் மொட்டு முலாமையெல்லாம் கழுவி சென்றுள்ளது.

மக்கள் அலை எங்குள்ளதோ, அங்கே அரசியல் வாதிகள் இருப்பர். தற்போது மக்கள் பார்வை ரணிலின் பக்கம் திரும்பியுள்ளது. ராஜபக்ஸவினருக்கு விசுவாசமாக இருந்து, தங்களது அரசியல் வாழ்வை இழக்க மொட்டு எம்.பிக்கள் பலர் தயாரில்லை. மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானவர்கள் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள். இப்போதே அரசியல் வாழ்வை ஆரம்பித்துள்ளார்கள். இவ்வாறானவர்கள் ரணிலின் பக்கம் சாய ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு வேறு தெரிவும் இல்லை. இவ்வாறானவர்களை ஆரவணைக்கும் பண்பு ஜே.வி.பியிடம் இல்லை என்பதும் இங்கு சுட்டிகாட்டவல்லது.

ஐ.ம.சக்தியில் உள்ளவர்களில் பலர் சஜிதின் தலைமைத்துவத்தில் குறை காண்கின்றனர். அங்குள்ள பலர் வேறு வழியின்றியே அவரை தலைவராக ஏற்றுள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் வேறு வழியின்றியே அவரை ஜனாதிபதி வேட்பாளராக்கினர். அங்கும் ரணிலுக்கு ஆதரவான ஒரு அலையே உள்ளது. இவ்வளவு நாளும் அதனை வெளிப்படுத்த கூடிய சாதக நிலை இருக்கவில்லை. தற்போது ரணிலுக்கு ஆதரவான களமிருப்பதால், ரணிலுடன் இணை துடுப்பாட தயாராகின்றனர்.

ஐ.ம.சக்தியில் இருந்தும், மொட்டுவிலிருந்தும் ஒரு பெரிய அணியை ரணில், தன் வசப்படுத்தியுள்ளார். ஐ.ம.சக்தியில் இருந்து ஒரு குறித்த அளவு எம்.பிக்கள் ரணிலுடன் இணைந்தால், சஜிதின் ஆட்டம் முழுமையாக முடிந்துவிடும். மொட்டு அணி என கூறிக்கொண்டு அரசியல் வாதிகள் யாருமே மக்களிடம் செல்ல முடியாது. ராஜபக்ஸவின் விசுவாசிகள் ஓரிருவரே அவர்களுடன் எஞ்சுவர். ரணிலுக்கு சவாலாக அமையப் போவது ஜே.வி.பியே!

ஜே.வி.பியினர் பேச்சளவிலேயே வீரர்கள் என்ற கருத்து மக்களிடையே பரவலாக உள்ளது. மக்கள் ரணிலை செயல் வீரராக பார்க்க ஆரம்பித்துள்ளனர். இங்கும் ரணிலுக்கு சாதகமான நிலையே உள்ளது. ரணில் சிறப்பாக பந்து வீசி, விக்கட்டுக்களை எடுப்பதோடு, வரும் பந்துக்களுக்கெல்லாம் எல்லாம் சிக்ஸர் அடித்துகொண்டிருக்கின்றார். ரணில் வீழ்ந்து கிடந்த, தனது சாம்ராஜ்யத்தை மீள கட்டிவிட்டார் எனலாம். இலங்கை அரசியலில் எதனையும் உறுதிபட குறிப்பிட்ட முடியாது. ரணிலுக்கெதிரான அரசியல் எவ்வாறு செய்யப்போகிறார்கள் என்பதை காலமே சொல்லும்.

ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
சாம்ராஜ்ஜியத்தை மீள கட்டமைக்கிறதா யானை? சாம்ராஜ்ஜியத்தை மீள கட்டமைக்கிறதா யானை? Reviewed by Madawala News on March 30, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.