அரசியல் அநாதைகளாகும் திருகோணமலை முஸ்லீம்கள்


திருகோணமலை மாவட்டத்தில் சுதந்திரத்திற்கு பின்னரான காலங்களில் இருந்து இன்று வரை

ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் பாராளுமன்ற உறுப்பினர்களை தொடர்ச்சியாக முஸ்லீம்கள் தெரிவு செய்து வருகின்றனர்.


அவ்வாறு தெரிவு செய்கின்ற போதிலும் அண்மைய தசாப்த காலங்களில் முஸ்லீம்கள் அரசியல் ரீதியான தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத அநாதைகளாகவே இருந்து கொண்டிருக்கின்றார்கள்.


முஸ்லீம்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப் படுகின்ற இப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வாக்களிக்கின்ற மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் தவறு விட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.


இச் சமூகத்தின் சுய கௌரவம், தனித்துவம் என்பவற்றை பாதுகாக்க வேண்டிய இவர்கள் இனத்தின் பெயரால் தமக்கான இயக்கத்தையும் வைத்துக் கொண்டு நயவஞ்சகர்களாகவும், ஏமாற்றுபவர்களாகவும் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.


முஸ்லீம்களின் காவலர்கள் நாங்களே என்று அலப்பறித்துக் கொள்ளும் இவர்கள் தேர்தல் காலங்களில் பணத்தையும் பார்சல்களையும் வழங்குவதன் மூலம் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுகின்றனர்.


இவர்கள் மக்கள் மீதான எந்தப் பொறுப்புணர்ச்சிகளும் இன்றி தமது சுய நலன்களுக்காக பணத்திற்கும், பதவிகளுக்கும், சோரம் போகின்றவர்களாக இருக்கின்றனர்.


அரசியலுக்கான தலைமைத்துவப் பண்புகள், விவேகம் ஆற்றல், துணிவு, வெளிப்படைத் தன்மை எனும் பண்புகள் இல்லாத இவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்கின்றமை இம் மக்கள் செய்யும் மாபெரும் தவறாகும். 


சில பேரினவாதிகள் தமக்கான அரசியல் நிகழ்ச்சி நிரலில் திட்டமிட்டு கட்டமைத்த போலியான குற்றச்சாட்டுகளை முஸ்லீம்கள் மீது திணித்து குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்காக அரங்கேற்றிய அருவருக்கத்தக்க செயற் பாடுகளால் முஸ்லீம்களும் முஸ்லீம்களின் உடமைகளும் உயிர்களும் அநியாயமாகவே அழிக்கப் பட்டன.


வைத்தியர் சாபி மீதான போலிக் குற்றச் சாட்டுகள், நூற்றுக்கணக்கான உயிர்களை பலி எடுத்த ஈஸ்டர் தாக்குதல், அம்பாறை,  திகன தாக்குதல்கள் முஸ்லீம்களின் ஆடைகள் , தனியார் சட்டங்கள், பள்ளிகள், வியாபார நிலையங்கள் மீது  பல் வேறு துன்பியல் சம்பவங்களை அநியாயமாக அரங்கேற்றினார்கள்.


கொரோனா என்ற பேரனர்த்தத்தின் பெயரால்  20 நாள் பச்சிளம் குழந்தை உட்பட பல நூறு முஸ்லீம் ஜனாஸாக்களை  எரித்தார்கள். முஸ்லீம் சமூகத்தின் தலைமைகள், ஆன்மீகத் தலைவர்கள், உலமாக்கள், அறிஞர்கள் என பலரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து  சிறையிலடைத்தார்கள்.


இவ்வாறான துன்பியல் சம்பவங்கள் பலவற்றை இந்த அப்பாவி முஸ்லீம்கள் மீது அநியாயமாக அரங்கேற்றினார்கள்.


அவ்வாறு அரங்கேற்றப் பட்ட கொடிய செயல்கள் அனைத்திற்கும் சூத்திர தாரிகளாக இருந்த அக்கருமக் காரர்களின் கூடாரத்திற்குள் மறைந்து கொண்ட இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் சுகபோகங்களை அனுபவித்தது மாத்திரமன்றி இந் நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் சவால் விடுக்கின்ற 20 ஆவது சட்டத் திருத்தத்திற்கும் கை தூக்கி ஆதரவு வழங்கினார்கள்.


கொரோனாவின் தாண்டவத்தால் ஊரே முடக்கப்பட்ட போது மக்களோ தொழில்களின்றி உணவின்றி, பால்மா இன்றி, பசி பட்டினியால் வாடிக் கொண்டிருந்த போது அவர்களின் துயர் துடைக்க முன்வரவில்லை.


புல்மோட்டை,  குச்சவெளி, தோப்பூர், கிண்ணியா உட்பட பல பிரதேசங்களில் முஸ்லீம்களின் புராணக் காணிகள் படிப்படியாக பறிபோய்க் கொண்டிருக்கின்றன.  அவற்றின் தகவல்களை திரட்டுவதற்கோ, ஆவணப்படுத்துவதற்கோ அல்லது அவற்றை மீட்டு, பாதுகாக்கவோ, கபலீகரத்தை தடுத்து நிறுத்துவதற்கோ எந்த முயற்சியும் எடுப்பதற்கு அவர்களால் முடியாதுள்ளது.


கல்வியில் ஆயிரம் பிரச்சினைகள்,  ஆன்மீகத்தில் வீழ்ச்சி, போதையின் ஆக்கிரமிப்பு என பல்வேறு அச்சுறுத்தல்கள் எமது சமூகத்தை துவம்சம் செய்து 

கொண்டிருக்கின்றன.


அவற்றை ஏன்? எதற்காக? என்றோ யார் காரணம் என்றோ ஆராய்ந்து அவற்றிற்கான தீர்வுகளைத் தேட அவர்களுக்கு நேரமில்லை.


இன்னும் 10 அல்லது 20 வருடங்களில் எமது பிரதேசம் கல்வியில், கலாச்சாரத்தில், பொருளாதாரத்தில் அபிவிருத்திகளில் எப்படி இருக்க வேண்டும் என்று ஆய்வுகள் செய்து குறுங்கால நீண்ட கால திட்டங்களை தயாரித்து அவற்றின் ஊடான தீர்வுத் திட்டத்தை முன்மொழிந்து அவ் இலக்கை நோக்கி பயணிப்பதற்கும் தயாரில்லை.


எமது புத்தி ஜீவிகளை,  துறைசார்ந்தவர்களை ஆலோசகர்களாக ஏற்று அவர்களின் ஆலோசனைகள் வழிகாட்டல்களை பெற்று அவற்றையேனும்  செயல் படுத்த இப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாரில்லை.


வீதிகளை அமைப்பதும், கட்டடங்களை கட்டுவதும், பாலங்களை அமைப்பதும், அவற்றின் மூலம் கொமிஸன் பெறுவதும் தம்மை சாதனையாளர்கள் போல் விளம்பரப் படுத்திக் கொள்வதும் தான் அரசியல் எனவும் அதுவே எமது பணி என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் இவர்களிடத்தில் எப்படி எமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்? 


இவ்வாறான அடி மட்ட அரசியற் செயற்பாடுகளை தமது ஆயுதமாக கொண்டிருக்கும் இவ்வாறான அரசியல் வாதிகளுக்கு அதுவே பெரும் சாதனை என அலப்பரிக்கும் ஆதரவாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


இனி மேலாவது நாம் சிந்திக்காது இவ்வாறே எமது அரசியற் பயணம்  தொடருமாக இருந்தால்  எப்போது நாம் ஏனைய பிரதேசங்களோடு சமாந்தரமாக பயணிப்பது? என்ற வினாவை எமக்குள் எழுப்ப வேண்டி இருக்கின்றது. 


அண்மைய நாட்களில் பாராளுமன்ற "தேசிய சபை" என்ற கட்டமைப்பை உண்டாக்க வேண்டும் என ஆளும் அரசாங்கம் முயற்கிக்கின்றது.

அச்சபையின் உருவாக்கத்தில் வாதப் பிரதிவாதங்கள் இல்லாமல் இல்லை.


இருந்தாலும் அவ்வுயரிய சபையிலே தாமும் அங்கம் வகிப்பதாக இருந்தால் எமது மக்கள் முகங் கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத் தர வேண்டும் எனவும். விசாரணைகள் இன்றி பல வருடங்களாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும். அநியாயமாக கபலீகரம் செய்யப் படுகின்ற எமது பூர்வீகக்  காணிகளை விடுவிக்க வேண்டும். என தமிழ் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நிபந்தனைகளை முன்வைக்கின்றனர். 


மேலே சொல்லப்பட்ட அதே பிரச்சினைகளுக்கு எமது சமூகமும் முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அவற்றின் தகவல்களை இவர்கள் திரட்டினார்களா? வழக்குகளை தொடர்ந்தார்களா? கவனயீர்ப்பு போராட்டங்களையேனும் நடத்தினார்களா? ஜெனீவாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்தார்களா? என சிந்தித்தால் எந்த முயற்சியும் அவர்களிடத்தில் இல்லை. அவ்வாறாயின் இச் சமூகம் இந்நாட்டில் எப்படி நிலைத்து நிற்க முடியும்.


இம்மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் தமது அரசியல் தலைமைகளை தொடரச்சியாக தெரிவு செய்த போதிலும் தமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் இன்னும் அரசியல் அநாதைகளாகவே இருக்கின்றார்கள் . 


சமூக நிறுவனங்களும் சில உள்ளூர் தலைவர்களும் தமது சக்திக்கு உட்பட்ட வகையில் முடியுமான சில முயற்சிகளை செய்து நீதிமன்றங்கள் பொலீஸ் நிலையம் என அலைவதோடு அவை குறித்து பல ஆய்வுகளையும் நடாத்திக் கொண்டு புதிய திட்டங்களை முன்மொழிந்து ஆவணங்களாக வைத்துக் கொண்டு இருகின்றார்கள். காலங்களும் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன.


அவ்வாறாயின் தூரநோக்கு இல்லாது நமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற முடியாத சுய நல அரசியலை செய்து கொண்டிருக்கும் இவ்வாறான அரசியல் தலைமைகளைத் தான் தொடர்ந்தும் தெரிவு செய்யப் போகின்றோமா? என்ற கேள்வியை எழுப்புகின்றது.


எனவே எதிர்வரும் காலங்களிலேனும் அரசியல் களத்தில் இருந்து கொண்டு காலத்தை வீணாக கடத்தும் இவ்வாறானவர்களை தவிர்த்து பொருத்தமான தகுதியான புதிய தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களை தலைவர்களாக்க நாமே ஒன்றிணைய வேண்டும் என சமூகம் சார்பாக நான் முன் மொழிகின்றேன்.

Hasfar A Haleem BSW (Hons)
Journalist
அரசியல் அநாதைகளாகும் திருகோணமலை முஸ்லீம்கள் அரசியல் அநாதைகளாகும் திருகோணமலை முஸ்லீம்கள் Reviewed by Madawala News on September 30, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.