திக்குத்தெரியாத எதிர்க்கட்சி - திக்குமுக்காடும் ஆளும்கட்சி



அரசாங்கம் மட்டுமன்றி எதிர்க்கட்சி உள்ளடங்கலாக நாட்டின் எல்லாக் கட்டமைப்புகளும் பலமாக

இருக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில், துரதிர்ஷடவசமாப் அதற்கு மாற்றமான நிலைமைகளே நமது யதார்த்தங்களாக இருக்கின்றன. 

சுகாதார, பொருளாதார, சூழலியல், சமூக அடிப்படைகளில் நாடு பெரும் பின்னடைவையும் சவால்களையும் எதிர்கொண்டுள்ள சூழலில், இப்போது அரசியல் குழப்பங்களும் தலைதூக்கியுள்ளன. இது அரசியல் ஸ்திரத்தன்மையை அற்ற புள்ளியை நோக்கி நாட்டை இட்டுச் செல்லத் தொடங்கியிருக்கின்றது. 

எதிர்க்கட்சிக்குள் ஆயிரத்தெட்டுக் குழப்பங்கள் உள்ளன. இது இப்போது உச்சஸ்தாயியை அடைந்து, 'யார் எதிர்க்கட்சித் தலைவர்' என்பதே ஒரு வாதப் பொருளாக மாறியிருக்கின்றது. அந்தளவுக்கு உள்ளக முரண்பாடுகள் வலுப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. 

இதேவேளை, ஆளும் தரப்பிற்குள் நீண்டகாலமாகவே உள்ளக முரண்பாடுகள் காணப்பட்டன. ஆளும் குடும்பத்திற்குள்; முன்னர் இருந்த அந்தப் பிணைப்பு இல்லையென்று தெரிவிக்கப்பட்ட போது, அதனை அவர்கள் மறுத்துரைத்தார்கள். ஆனால் உள்ளுக்குள் நடந்து கொண்டிருக்கும் பனிப்போர், எரிபொருள் விலை அதிகரிப்பையடுத்து வெளிப்பட்டு இருக்கின்றது. 

பெரும்பான்மையினரின் பெரும்பான்மையான வாக்குகளுடன் இரு தேர்தல்களை வெற்றி கொண்ட பொதுஜனப் பெரமுணவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து 10 -15 வருடங்களுக்கு அசைக்க முடியாத ஆட்சியை நிறுவும் என்றும், வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத புரட்சிகர மாற்றமொன்றை நடாத்தும் என்றும் மக்கள் எதிர்பார்;த்தனர். 

அதேபோன்று, சஜித் பிரேமதாச தலைமையிலான எதிரணியும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு பலமான சக்தியாக தன்னை முன்னிறுத்தும் என்று மக்கள் நினைத்தனர். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஒருவர், எதிர்க்கட்சித் தலைவராகக் கூட சிறப்பாக செயற்படமாட்டார் என்று யாரும் கருத வாய்ப்பில்லை. 

ஆகவே மக்கள் அபரிமிதமான ஒரு எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தனர். ஆளும் கட்சிக்கு கிட்டத்தட்ட சரிசமமான அரசியல் பலத்துடனான ஒரு எதிரணியாக ஐக்கிய மக்கள் சக்தி திகழும் என்பதால், நாட்டின் ஆட்சி மக்களுக்கு நன்மையளிக்கக் கூடிய விதத்தில் சமநிலைப்படுத்தப்படும் என்று மக்கள் கருதியிருந்தனர்.  

ஆனால், எல்லாம் தலைகீழாக மாறிப் போயுள்ளது. மக்களைப் பொறுத்தமட்டில் இவையெல்லாம் எதிர்பாராத நிகழ்வுகள்தான். இருப்பினும் இவற்றுக்குப் பின்னால் இயற்கைக் நிகழ்வுகள் மட்டுமன்றி திட்டமிட்ட அரசியல் நகர்வுகளும் காரணங்களாக அமைந்துள்ளனன. அதேநேரம், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உள்ளக முரண்நிலைகளுக்கு இடையில் ஒரு நேர்மறைத் தொடர்பு இருப்பதாகவும் சொல்ல முடியும். 

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிரணியில் வேறுபல சிறுபான்மைக் கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. கடந்த இரு தேர்தல்களின் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாகவும் பின்னர் பிரதமராகவும் பதவியில் அமர்த்துவதற்கு ஆசைப்பட்ட இலட்சக்கணக்கான  மக்கள் நாட்டில் உள்ளனர். 

ஆயினும், பின்வந்த நிலைமைகளாலோ என்னவோ சஜித்தினால் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக எதிர்பார்த்த அளவுக்கு கூட சோபிக்க முடியாமல் போனதென்றுதான் சொல்ல வேண்டும். இது மாறலாம். ஆனால் இப்போதைக்கு இதுவே களநிலை யதார்த்தம் ஆகும்.

அண்மைக்காலமாக எதிரணிக்குள் பெரும் குழப்பங்கள் வலுப்பெற்று வருகின்றன. முன்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது அவருக்கு எதிராக ஒரு அணியினர் கட்சிக்குள் உருவெடுத்ததைப் போல, இப்போது எதிர்க்கட்சித் தலைவரான சஜித்திற்கு எதிரான ஒரு அணியும் உருவாகி வருவதாக தெரிகின்றது. 'எதிர்க்கட்சித் தலைவரை மாற்ற வேண்டும்' என்ற கருத்தியலை இவர்கள் விதைக்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ள ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக்கும் தோரணையிலேயே இந்த நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. 

அதனையும்தாண்டி, இன்னுமொரு அரசியல் அணியை உருவாக்குவதற்கான நகர்வாகக் கூட இது இருப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. இதன் பின்னணியில் அரசாங்கம் இருக்கின்றது என்ற விடயமும் இப்போது சந்தேகம் என்ற கட்டத்தை தாண்டி விட்டதாகவே தெரிகின்றது. ரணில் இன்னும் எம்.பியாக பதவியேற்காத நிலையில் கூட, 'அவரே எதிர்க்கட்சி தலைவர்' என்று ஆளும் கட்சியினர் கூறுகின்ற கருத்திற்குப் பின்னால் ஏதோவொரு சூட்சுமம் இருப்பதாகவே உள்மனம் சொல்கின்றது. 

இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜனப் பெரமுண வெற்றிபெறும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் ஐ.தே.க.உள்ளிட்ட கட்சிகளில் மிக முக்கியமான 'தலைகள்' தோல்வியைத் தழுவினர். குறிப்பாக, நீண்டகாலம் நாட்டை ஆண்ட ஒரு கட்சியின் தலைவரான, பலமுறை பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவே தோற்றுப் போனமை சற்று ஆச்சரிமாகவே இருந்தது. ஆனால் அதுபற்றி அவர் வாய் திறக்கவில்லை. 

சத்தமில்லாமல் வியூகங்கள் வகுப்பதில் ரணில் விக்கிரமசிங்க வல்லவர். சஜித் பிரேமதாசா ஜனதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை மேட்டுக்குடி அரசியலை விரும்பும் பெருந்தேசியத் தலைவர்கள் யாரும் விரும்பியிருக்கவில்லை. எனவே ஆட்சி மாற்றத்தில் ரணிலுக்கு எதிர்மறையான பங்களிப்பு இருக்கலாம் என்று சந்தேகிப்போரும் உள்ளனர். அது உண்மையாயின், சஜித்தை வீழ்த்துவதற்கான தருணமாக இதை ரணில் கருதலாம். 

மறுபுறத்தில் அரசாங்கமானது சர்வதேச நெருக்கடிகளையும் தற்போது கடுமையாக எதிர்கொண்டுள்ளது. எனவே ரணில் விக்கிரமசிங்க போன்றதொரு அரசியல் ஆளுமை எதிர்க்கட்சி தலைவராக வந்தால் திரைமறைவிலேனும் அது பெரும் பலமாக அமையும் என்று ஆட்சியாளர்கள் கருதுகின்றார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது. இதிலிருந்தே, ரணில் பிரதமராகப் போகின்றாரோ? என்ற சந்தேகங்கள் தோற்றம்பெறுகின்றன. 

இதேவேளை, ஆளும் பொதுஜனப் பெரமுணவுக்குள் உள்ளக பனிப்போர் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன. ஆளும் கட்சிக்குள் முரண்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் நீண்டகாலத்திற்கு முன்னரே அரசியல் நோக்கர்கள் குறிப்பிட்டனர். ஆனால், அதனை அரசாங்கம் வெற்றிகரமாக மறுத்துரைத்தது. இப்போது, இந்த முரண்பாடு நீருக்குள் அமிழ்த்தி வைத்த பந்தைப் போல வேகமாக வெளியில் பாய்ந்திருக்கின்றது. 

எதிர்க்கட்சிக்குள் மூன்று அணிகள் இருப்பது போல, ஆளும் அணிக்குள்ளும் இரண்டுக்கு மேற்பட்ட அணிகள் இருப்பதாக தெரிகின்றது. ஜனாதிபதி, பிரதமர், பசில் ராஜபக்ச ஆகியோரைச் சார்ந்து அணிகள் உருவாகியுள்ளதாக அனுமானிக்க முடிகின்றது. அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று இதற்கு நல்ல உதாரணமாகும். 

கடந்த வாரம் இரவோடிரவாக எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்தது. கொரோனா வைரஸின் தாக்கம், தொடர் முடக்கம், மேற்குக் கடலில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்தமை மற்றும் பொருளாதார பின்னடைவு ஆகியவற்றால் மக்கள் கடுமையான வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். எனவே மக்களுக்கு உதவிகளை வழங்க வேண்டியதே இக்காலகட்டத்தின் தேவையாகும். 

ஆனால், அதற்கு மாற்றமாக அரசாங்கம் கணிசமான ரூபாவினால் எரிபொருள் விலைகளை அதிகரித்தமை அரசியலரங்கில் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ளது. உலக சந்தை விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்ததும், அமைச்சரவை உபகுழுவின் முடிவுக்கு அமைவாகவே விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதும் உண்மையே. ஆனால், மக்களின் மீது விலைச் சுமையை ஏற்றிவிடுவதற்கு பொருத்தமான சந்தர்ப்பமா? என்பதுதான் இங்குள்ள கேள்வி. 

எனவே இது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் எழத் தொடங்கியதும், பொதுஜனப் பெரமுணவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், எரிபொருள் விலையை அதிகரித்தமைக்காக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரான உதய கம்மன்பில பதவி விலக வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்திருந்தார். 

இதற்குப் பதலிளித்த கம்மன்பில. 'ஜனாதிபதியும் பிரதமரும் அங்கம் வகித்த உபகுழுவின் தீர்மானத்திற்கு அமையவே விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது' என்று கூறினார். இதன்மூலம் தன்னைநோக்கி வந்த 'பந்தை' அவர், ஜனாதிபதியை நோக்கி திருப்பிவிட்டார். அதன்பிறகு ஜனாதிபதி அலுவலகமானது, விலை அதிகரிப்புக்கான காரணங்களை கூறி அறிக்கையொன்றை வெளியிட்டு இவ்விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முனைந்தது எனலாம்.

ஆனாலொன்று, எரிபொருள் விலையை அதிரித்ததும், இராஜினமாச் செய்யச் சொன்னதும், பின்னர் விளக்கமளித்ததும் ஆளும் தரப்பிற்குள் இருந்துதான் நடந்தேறியிருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே 'இதுவொரு அரசியல் நாடகம்' என்றே எதிரணியினர் கூறுகின்றனர். எது எப்படியோ எதிர்க்கட்சியைப் போலவே ஆளும் தரப்பிற்குள்ளும் முரண்பாடுகள் இருக்கின்றமை இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது. 

ஆளும்கட்சி வெற்றிகரமான ஆட்சியொன்றை நடாத்தும் என்றும், எதிரணியானது பலமிக்க விதத்தில் அரசியல் சமநிலையைப் பேணும் என்று எதிர்பர்ர்த்த மக்கள் இப்போது ஏமாற்றமடைந்துள்ளனர். நாடு சுகாதார, பொருளாதார, சூழலியல் சவால்களை எதிர்கொண்டுள்ள ஒரு காலப்பகுதியில் இரு பக்கத்திலும் உள்ளக அரசியல் குழப்பங்கள் மேலெழுவது, மக்களுக்கு ஒருபோதும் நன்மையாக அமையப் போவதில்லை. 

ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 20.06.2021)

திக்குத்தெரியாத எதிர்க்கட்சி - திக்குமுக்காடும் ஆளும்கட்சி  திக்குத்தெரியாத எதிர்க்கட்சி  - திக்குமுக்காடும் ஆளும்கட்சி Reviewed by Madawala News on June 21, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.