அகில இலங்கை வை எம் எம் ஏ பேரவை தலைவர் மற்றும் உயர் சபை உறுப்பினர்களின் அவதானத்திற்கு ...



பத்தாவது முறையாகவும் பதுளை வை. எம். எம். ஏ. தலைவர் பதவியை சுவீகரித்துக் கொண்டார்  பதுளை ஜும்மா பள்ளி தலைவர் இம்தியாஸ் பகீர்தீன்.......!

“முஸ்லிம் வாலிபர் சங்கம்      (YMMA), இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியம்        (CMSF) ஆகிய இரண்டும், அஸீஸ் அவர்களினதும் அன்னாரின் புலவர் நண்பரினதும்              ( கவிஞர் அப்துல் காதர் லெப்பை) இரட்டைப் படைப்புகளாகும். வாலிபர் சங்கத்தை உருவாக்குவதும் வறுமையான மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குதலும், அவர்கள் இருவரினதும் கல்முனைக் கால நட்பில் உருவானவையாகும். நாட்டின் பல பாகங்களிலிருந்தும் நுற்றுக்கணக்கான மாணவர்கள் நிதியுதவி பெற்று, தொழில் வல்லுநர்களாகவும் சிரேஷ்ட சிவில் சேவை அலுவலர்களாகவும் நாட்டில் இன்று சேவை செய்கின்றனர். முதலாவது வாலிபர் சங்கக்  கிளை, 1943ஆம் ஆண்டில், பதுளையில் அவருடைய புலவர் நண்பரால்( கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்களால் ), அவர் அங்கு ஆசிரியராக மாற்றம் பெற்றுச் சென்ற பின்பு ஆரம்பிக்கப்பட்டது.  இந்தக் கிளை, கொழும்பிலுள்ள வாலிபர் சங்கத் தலைமைஅலுவலகத்துக்கு முன்பதாகவே  ஆரம்பிக்கப்பட்டதாக விளங்குகின்றது.                  
                          (நன்றி  கலாநிதி ஏ.சீ.எல். அமீர் அலி -  தமிழ் மிரர்) 

     ஆக பதுளை அல் அதானை புனைப்பெயராக கொண்ட , இன்றைய எமது கல்வி நிலைக்காக வித்திட்ட கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்களின் மகனான கலாநிதி ஏ. அமீர் அலி அவர்களின் கூற்றுப் படி பதுளை வை எம் எம் ஏ ஆனது ,  கொழும்பு வை எம் எம் ஏ பேரவையின் தலைமை காரியாலயம் 1950 இல் ஆரம்பிக்கும் முன்பு 1943ஆம் ஆண்டிலேயே , பதுளையில் ஆரம்பிக்கப் பட்டதொரு முன்னோடி சங்கமாகும் . இந்த சங்கத்தின் தற்போதைய அவலத்தையே இவ்வாக்கத்தின் மூலம் வெளிக்கொண்டுவர நினைக்கின்றேன்...................


           கல்வியறிவுள்ளதொரு பண்பட்ட சமூகத்தின் அங்க அடையாளங்களாக அச்சமூகத்தின் பண்பான ஒழுக்கமுள்ள , அறிவு பின்புலமுள்ள ஏனையவர்களின் கருத்துக்களை மதிக்கின்ற எதிர்கால இலக்குகளை கொண்ட தலைவர்களின் ஆளுமை அச்சமூகத்தை வழிநடத்தக்கூடிய  இயங்கு சக்தியாக மிளிரும் என்பதை அறிவொழுக்கம் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளும் விடயமாகும். 
    இயக்கங்கள் , சங்கங்கள் , நிறுவனங்கள் ,போன்ற  சிவில் சமூக அமைப்புகள்  எத்தனை இருந்தாலும் அவையாவும் அச்சமூகத்தை தூக்கி நிறுத்தும் அல்லது தாங்கி நிற்கும் தூண்களாகவே கருதப் பட வேண்டும். அந்தந்த சமூக நிறுவனங்களின் சம கால  தலைமைகளின் அறிவு, திறன், மனப்பாங்கிற்கு அமைய அவரவர்களின் ஆளுமைக்கேட்ப அச்சிவில் சமூக நிறுவனங்களின் இயங்கு தளம் சமூகத்திற்குள் வீச்சம் பெற்று இருக்கும் . 

            ஆனால் பதவி மோகம் எனும் ஜாஹிளியத்தனமும் , பண்பற்ற அறிவீனத்தின் காரணமாக ஏற்படும்,  நல்ல தலைமைத்துவங்களின்  மீது கொள்ளும் பொறாமையும் , காழ்புணர்ச்சியும் ஒரு சமூகத்தின் சீரான கட்டமைப்பையே சிதைத்து சின்னாபின்னமாக்கி விடும் . புதிய புதிய தலைமைத்துவங்களை உருவாக்கவிடாமல் பிட்போக்குதனமான ஒரு சமூக முறைமையை உருவாக்கி விடும் .  
இக்கருத்துக்களை மெய்படுத்தும் நிகழ்வாக கடந்த 3ம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற பதுளை வை எம் எம் ஏயின் வருடாந்த பொதுச் சபை கூட்டத்தை சொல்லலாம்.

        குறித்த இந்த கூட்டத்தை பற்றி அறியுமுன் சில முக்கிய நிகழ்வுகள் பற்றியும் வாசகர்கள் அறியவேண்டியுள்ளது. 

         குறித்த இந்த பொதுச் சபை கூட்டத்திற்கு சுமார் ஒருமாத காலத்திற்கு முன் பதுளை வை எம் எம் ஏ யினால் அகில இலங்கை ரீதியிலான கால்பந்து சுற்றுப் போட்டியொன்று ஏற்பாடு செய்யப் பட்டு அது மிகச் சிறப்பாக நடந்தேறியது. குறித்த இந்த நிகழ்வுக்கு தேசிய வை எம் எம் ஏ பேரவையின் பிரதிநிதிகளாக அதன் தேசிய தலைவர் அல் ஹாஜ் றிஸ்மி அவர்கள் உட்பட சில மேல்மட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இதன் இறுதி நிகழ்வில் பரிசில்கள் வழங்கப் படும் போது பிரத்தியேகமாக சிலருக்கும் பரிசில்கள் வழங்கப் பட்டன . அதாவது குறித்த ஆண்டில் வை எம் எம் ஏ சார்பில் அவரவர்களின் விஷேட செயற்பாடுகளுக்காக  அல்லது பங்களிப்புகளுக்காக சில கேடயங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப் பட்டனர் .

          கடந்த தேசிய வை எம் எம் ஏ பேரவையின் பொது கூட்டத்தின் போது சிறந்த கிளைத் தலைவராக பதுளை வை எம் எம் ஏ தலைவர் எஸ் எம் நாசிம் ( ஆசிரியர்) அவர்களுக்கும்,  சிறந்த கிளை பொருளாளருக்கான விருது பதுளை வை எம் எம் ஏ பொருளாளர் கௌரவ இல்ஹாம் பதுருத்தீன் அவர்களுக்கும் பல் துறைகளிலும் சிறந்த கிளையாக பதுளை வை எம் எம் ஏ கிளை தெரிவு செய்யப் பட்டதால் அதற்கான விருதையும் நினைவு கூர்ந்து அன்றைய இறுதி நிகழ்வில் உரியவர்களுக்கான கௌரவிப்புகள் நடந்தன.    
         இதனை அவதானித்த இம்தியாஸ் அவர்கள். “ தான் தான் பல முக்கிய சேவைகளை பதுளையில் செய்துள்ளவர் என்றும், தனக்கும் இவ்விடத்தில் கேடயமோ பரிசிலோ வழங்கப் பட்டிருக்க வேண்டும் என்றும் , தான் இவ்விடத்தில் கணக்கில் எடுக்கப் படவில்லை என்றும் ஆதங்கப் பட்டு ,  அடுத்த முறை தாமே  வை எம் எம் ஏ யின் தலைவராக வருவதாகவும் சவால் விட்டு சென்றுள்ளார் இம்தியாஸ் அவர்கள். ( இது சம்பந்தமான ஆதார பூர்வமான பதிவு என்னிடம் உள்ளது)
       இது தவிர கடந்த காலங்களில் வை எம் எம் ஏ நிறுவனத்தினால் பல காலோசிதமான உயிரோட்டமிக்க  சமூக நல திட்டங்கள் முன்வைக்கப் பட்டு அவை மிகவும் சாதகமான முறையில் நடைமுறைபடுத்தப் பட்டன. குறிப்பாக உத்தியோகபூர்வ பட்மிண்டன் திடலொன்று அமைத்து அதன் வருமானத்தை பிரதேசத்தின் கல்வி மேம்பாட்டுக்காக செலவழிக்கும் முறையொன்றை யாப்பின் மூலமாக உறுதிப் படுத்தி செயற்பட்டார்கள். 

அதே போல் வை எம் எம் ஏ யின் பாலர் பாடசாலையை (கட்டடத்தை) சிறப்பாக அமைத்து பிரதேசத்தின் சிறார்களின் கல்வியை மேலோங்கச் செய்தார்கள். 
க பொ த ( சா/த ) (உ/த ) மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்குகள் , மேலதிக வகுப்புகள் போன்றவற்றை உரிய காலங்களில் ஏற்பாடு செய்து வழிநடத்தினார்கள் .  
ஆக இதுபோன்ற சமூக நல விடயங்களில் சிறந்த முறையில் செயல் பட்ட இவர்கள் மீது ஏற்பட்ட காழ்புணர்ச்சியின் பிரதிபலிப்பே கடந்த பதுளை வை எம் எம் ஏ யின் பொது கூட்டத்தின் போது பிரதிபலித்தது எனலாம். 

         இருந்த பொதுச் செயலாளரின் அழைப்பிற்கு ஏற்ப குறித்த தினத்தில் பதுளை வை எம் எம் ஏ கேட்போர்கூடத்தில் வருடாந்த பொதுக் கூட்டம் கூடியுள்ளது..  இங்கு நடப்பாண்டுக்கான நிர்வாகத் தெரிவின் போது நடக்கவிருக்கும் முறைகேடுகளை ஏற்கனவே அறிந்தவராக தலைவர் நாசிம் ஆசிரியர் அவர்கள் தமது ஓராண்டுகால விடயங்கள் சம்பந்தமாக விளக்கி நடத்திய உரையில்,  யாப்பிற்கமைய நிர்வாக தெரிவு எவ்வாறு நடத்தப் பட வேண்டும் என்பதை பற்றி விளக்கமளித்துள்ளார்.  
குறிப்பாக வை எம் எம் ஏ யின் நீண்டகால மரபுகளின் படி “ இப்பொதுக் கூட்டத்திற்கு சமூகமளிக்க தகுதியானவர்கள் சங்கத்தின் பொது அங்கத்துவம் பெற்றவர்கள் மாத்திரமே” எனும் விடயத்தை தெளிவாக விளக்கப் பட்டுள்ளது. ஆனால் இவ்வாறு கூறும் போது கூட சில படித்தவர்களாக தம்மை கூறிக்கொள்ளும் சமூகத்தில் முக்கிய பொறுப்புக்களை வகிப்பவர்கள் கூட ஜடங்களாக அங்கே “ கம் “  என்று வீற்றிருந்திருக்கின்றார்கள். உண்மையில் ஒரு சராசரி மனிதனுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை இவை யாவும் படைத்த இறைவனால் தரப்பட்ட மகத்தான குணாதிசயங்கள் ஆகும் . சில சந்தர்ப்பங்களில் பதவி ஆசை அல்லது வேறெந்த ஆசையும் தம்மை மீறி தமக்குள் மேலெழும் போது மேட சொன்ன , வெட்கம் மானம் சூடு சொரணை போன்ற உன்னத குணங்களில் ஏதேனும் ஒரு குணம் மேலெழுந்து எம்மை கட்டுப் படுத்த வேண்டும் . இதுவே ஒரு சராசரி மனிதனின் பண்பாகும் . 


  “கண்ணுடையவர் என்போர் கற்றோர் , முகத்திரண்டு புன்னுடையவர் கல்லாதவர்” எனும் திருக் குறளுக்கு அமைய ஒருவரின் கல்வித்தரம் குரிக்கும் அவரின் சான்றிதழ் அவருக்கு எத்தகைய பட்டத்தையும் வழங்கினாலும் அநியாயத்தை அறிவீனத்தை ஒழுக்கவீனத்தை காணத் தெரியாத அவரது கண்கள் “ முகத்திரண்டு புன்னுடையவர்” என்பது தான் யதார்த்தமான உண்மை. 
உண்மையில் கற்றவர்களின் ஒழுக்கம் சார்ந்த பண்புகள் அவர்களின் நடை யுடை பாவனைகளில் மற்றவர்களுக்கு முன்னுதாரணம் இருக்கும். அனால் இந்த சபையில் சொரணை கெட்டு வீற்றிருந்த அனேகர் வை எம் எம் ஏ க்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாதவர்கள் என்பது வை எம் எம் ஏ வரலாற்றை களங்கப் படுத்தியதுடன் வை எம் எம் ஏ யின் மகுட வாசகமான ( FAITH UNITY. DISCIPLINE ) ஆகிய மூன்று கோட்பாடுகளும் குறிப்பாக மூன்றாவது கோட்பாடான ஒழுக்கம்  (DISCIPLINE) தகர்த்தெறியப்பட்டுள்ளது. /ன. 

கூடத்தின் இறுதி நிகழ்வான நடப்பாண்டுக்கான நிர்வாக உத்தியோகத்தர்களை தெரிவு செய்ய வேண்டிய தருணம் வரவே அதற்காக ஒரு தற்காலிக தலைவரை தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தில் அதற்காக பதுளை மாவட்ட “ வை எம் எம் ஏ பணிப்பாளர் ஏ ஏ ஜுனைதீன் அவர்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளார். முன்னாள் பொதுச்செயலாளர் பாயிஸ் ஆசிரியர் செயலாளராக தொடர்ந்தும் இருக்கையில் குறித்த நிர்வாகத் தெரிவு நடந்துள்ளது. 

              இதன் போது ஏற்கனவே இம்தியாஸ் அவர்களின் வீட்டில் நடந்தேறிய பல ஒத்திகைகள்  முன்னாயத்தங்களுடன் வந்திருந்த வகையில் தயாரிக்கப் பட்ட தொரு சிட்டையில் எழுதிவைத்த பெயர்பட்டியல் வாசிக்கப் பட்டு அவர்களை குறித்த அந்தந்த பதவிகளுக்கு ஏற்கும் படி அவர்களால் வற்புறுத்தப் பட்டுள்ளது. ஆனால் இது முற்றிலும் தவறான முறைமை என்றும் ஜனநாயக விரோத செயல் என்றும் சிலரால் வன்மையாக எதிர்க்கப் பட்டுள்ளது. ஆனால் இம்தியாஸ் அவர்களை சார்ந்தவர்களால் இது ஏற்றுக் கொள்ளக் கூடிய முறைதான் என்றும் குறிப்பாக நல்ல திட்டங்களை ???? முன்னெடுப்பதென்றால் இது பிழையில்லை என்றும் விவாதிக்கப் பட்டுள்ளது. என்றாலும் அனுபவமுள்ள கற்றறிந்த சிலரால் இது முறையல்ல.  இவ்வாறு செய்வது ஒரு ஒழுங்கான நிறுவனத்திற்கு  முற்றிலும் முறையான செயலல்ல எனும் விடயத்தை ஆணித்தரமாக எடுத்துக் கூறப் பட்டுள்ளது. இறுதியில் குறித்த “ சிட்டையில்” உள்ளவாறு உரிய பதவிகளுக்கு சபையில் பிரேரித்து தெரிவு செய்து கொள்ளுங்கள் என்ற வேண்டுதலுக்கு இணங்க ஏற்கனவே எழுதிவந்தவாறு அமைய நிர்வாக தெரிவு நடந்துள்ளது. 

இதன் படி தலைவராக இம்தியாஸ் பகீர்டீன் பத்தாவது முறையாகவும் பதுளை வை எம் எம் ஏ க்கு தலைவராக  தெரிவு செய்யப் பட்டுள்ளார். 
உண்மையில் இந்த தெரிவு ஜனநாயக ரீதியிலானதாக இருந்தால் எவரும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால் வை எம் எம் ஏ யின் தேர்தல் தெரிவுக் குழுவில் அங்கத்துவம் பெற்றிருக்கும் ஒருவர் தாமே ஒரு போட்டியாளராக வர முடியாது என்றிருக்கையில் இவர் தலைவராக தான் தோன்றித் தனமாக தெரிவாகியுள்ளார்.   
இதைவிட இவர் தலைவராக தெரிவு செய்யப் படக் கூடிய தகுதியையும் , பண்பையும் இழக்கும் விடயம் யாதெனில் வை எம் எம் ஏ யின் யாப்பின் பிரகாரம் , நிர்வாக சபைக்குத் தலைவரகாவோ செயலாளராகவோ தெரிவு செய்யப் படுபவர்கள் அதற்கு முந்தைய வருடங்களில் நிர்வாக குழு அங்கத்தவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு அடிப்படை தகுதியாக உள்ளது. 
யாப்பின் அந்த முக்கிய சரத்தை தானே முன்னின்று மீறும் வகையில் வை எம் எம் ஏ யின் சாதாரண அங்கத்தவராக கூட இருந்திராத வை எம் எம் ஏ க்கு கடந்த காலங்களில் எந்த வகையிலும் சம்பந்தமே இல்லாத பதுளை சுகாதார திணைக்களத்தில் சுகாதார பரிசோதகராக கடமை புரியும் ஜனாப் நளீம் அவர்களை பொது செயலாளர் பதவிக்கு நியமித்துள்ளதாகும். 
அதே போல் உதவி செயலாளராக நியமிக்கப் பட்டிருக்கும் அல் ஹாஜ் ரெஹான் முபாரக் அவர்களும் , கலாசார செயலாளராக நியமிக்கப் பட்டிருக்கும் மௌலவி ஷிபான் அவர்களும் ஒரு சாதாரண அங்கத்தவர்களாக கூட வை எம் எம் ஏ உடன் சம்பந்தப் பட்டில்லாதவர்கள். 
                      கண்ணியமிக்க எம் சமூக முன்னோர்களால் ஸ்தாபிக்கப் பட்ட,  நாட்டில் பல பாகங்களில் கிளைபரப்பி சமூகத்தின் ஒரு முக்கிய தூணாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சமூக நிறுவனத்தின் முன்னோடி இயக்கமாக சான்றோர்களால் சாட்சி பகரும் பதுளை வை எம் எம் ஏ யின்  ஒழுக்க விதிகளை மீறிய இவர்களை விட  , யாப்பு சட்டங்களை மீற வைத்து அதற்கு உறுதுணையாக நின்ற தம்மை தலைவர் என்று அழைத்துக் கொள்ளும் இம்தியாஸ் அவர்களின் இந்த செயல் பாட்டை ஒருபோதும் ஏற்க முடியாது. குறிப்பாக இவர் பதுளை வை எம் எம் ஏ இனது மற்றுமல்ல எந்தவொரு தலைமை பதவிக்கும் தகுதியற்றவராக கருதப் படவேண்டியவர் ஆவார் . 
  
        கடந்த 2012 ம் ஆண்டு பதுளை வை எம் எம் ஏ யின் தலைவராக இருந்த இவரது இளைய சகோதரனான ஜனாப் ரூமி பகீர்டீன் அவர்களால் பதுளை வை எம் எம் ஏ யை நான்கு மாடி கட்டிடமாக கட்டி அதில் பல சமூக நல திட்டங்களை செயற்படுத்துவதாக கூறி பல நாடகங்கள் பதுளையில்  அரங்கேற்றப் பட்டன. அக்காலத்தில் இம்தியாஸ் அவர்கள் பதுளை ஜும்மா பள்ளியில் தலைவராக இருந்தார். அப்போது ஜும்மா பள்ளிவளாகத்தில் பாரியதொரு காட்சிப் பலகையை காட்சிப் படுத்தி குறித்த வை எம் எம் ஏ யின் கட்டிட நிதிக்காக ஒரு பங்கு 2500/= வீதம் வசூல் செய்வதற்காக அறிவித்தல் செய்யப் பட்டது. இதற்காக தனியானதொரு பத்திரிகை அச்சிட்டு அதுவும் வசூலுக்காக விற்பனை செய்யப் பட்டது. ஒரு சமூக ஊடகவியலாளன் என்ற வகையில் இவர்களின் இந்த போலியான முயற்சிகளை அக்காலத்தில் நேரடியாக எதிர்த்து முரண் பட்டிருக்கின்றேன் . குறிப்பாக எமது பதுளை வை எம் எம் ஏ காணி எமது சொந்தக் காணி அல்ல . அது பதுளை மாநகர சபையின் காணி. எமக்கு குத்தகை அடிப்படையில் பெற்றுத் தரப்பட்டுள்ளது. ஆகவே ஊரான் வீட்டுக் காணியில் கட்டிடம் கட்டுவதை விட குறித்த காணியின் குத்தகையை ரத்து செய்து அதை எமக்கு சொந்தமாக பெற்றுக் கொள்ள முயற்சி செய்வதே காலத்தின் தேவையாக உள்ளது என்று அன்று வாதிட்டோம் . 

நாம் சுட்டிக் காட்டிய படி பகட்டுக்காக முன்னெடுத்த அந்த வேலைத் திட்டங்கள் இடையில் கைவிடப் பட்டன.   குறித்த கட்டிடத்திட்காக போடப் பட்ட சுமார் பதின் மூன்று அல்லது பதினான்கு தூண்கள் இடித்து தரைமட்டமாக்கப் பட்டன . இதற்காக சுமார் பத்துலட்ச ரூபா பணம் அந்த காலத்தில் வீணடிக்கப் பட்டது. இறுதியில் வை எம் எம் ஏ யின் பொதுப் பணம் வீணடிக்கப் பட்டதும் போலியாக பத்திரிகை அச்சிட்டு வெளியிட்டதும் மட்டுமே எஞ்சியது . 

குறித்த அதே 2012 ம் ஆண்டு ஹஜ்ஜுப் பெருநாளைக்கு குர்பான் மாடுகளுக்கான அனுமதிப் பத்திரங்களை தாம் வழங்குவதாக பதுளை வை எம் எம் ஏ  மூலம் அறிவுறுத்தல் செய்யப் பட்டது. இதற்கிணங்க பலர் குறித்த மாடுகளை அறுப்பதற்கான அனுமதிகளை ( PERMIT)  பெற்றுக்கொண்டு உரிய குர்பான் விடயங்களில் ஈடுபட்டிருந்த வேளை குறித்த பெர்மிட்கள் அனைத்தும் போலியானவை எனக்கூறி சுகாதார பரிசோதகரால் ரத்து செய்யப் பட்டன. குர்பான் பணிகளில் ஈடுபட்டவர்கள் அல்லோல கல்லோல பட்டனர். 

                     வை எம் எம் ஏ கடிதத் தலைப்பில் போலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினதும் பதுளை மாநகர சபையின் உத்தியோகத்தர்களினதும் உத்தியோகப் பூர்வ முத்திரைகளை போலியாக செய்து அவற்றை முறைகேடாக குறித்த அனுமதிப் பத்திரங்களை தயாரித்துள்ளார் என்ற குற்றச் சாட்டில் அப்போதைய பதுளை வை எம் எம் ஏ யின் தலைவராக இருந்த ரூமி பகீர்டீன் அவர்கள் பதுளை போலீசாரால் கைது செய்யப் பட்டார். 

இலங்கையின் ஒரு பலம் வாய்ந்த நிறுவனம் ஒன்றின் தலைவராக இருந்துக் கொண்டு இவ்வாறான போலி ஆவணங்களை தயாரித்தும், நிறுவனத்தின் பெயரையும் சமூகத்தின் பெயரையும் களங்கப் படுத்தியும் , போலியான பத்திரிகைகளை அச்சிட்டு கட்டிடம் கட்டுவதாக கூறி எந்த வித பொறுப்புமில்லாமல் இன்னொருவர் செயல் பட்டிருந்தால் பதுளையில் என்ன நடந்திருக்கும் . 

முன்னால் பதுளை வை எம் எம் ஏ தலைவராகவும் குறித்த நிகழ்வுகளின் போது , அ இல வை எம் எம் ஏ இணைப்பாளராகவும் அல்லது பணிப்பாளராகவும் அல்லது வை எம் எம் ஏ யின் முக்கியஸ்தராகவும் அல்லது பதுளை ஜும்மா பள்ளி தலைவராகவும் இம்தியாஸ் அவர்கள் மேற்குறித்த நிகழ்வுகளுக்கு எதிராக எடுத்த ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்ன . 

சமூக ஒழுக்கங்களுக்காக இவற்றை பகிரங்க ஊடகங்களில் இதுகால வரை எழுதாமல் மௌனம் காத்தோம். ஆனால் இவர்களின் எல்லை மீறிய செயற்பாடுகளுக்கு ஒரு எல்லை வகுக்க வேண்டும். அல்லாஹ் மீது ஆணையாக இவர்கள் மீது தனிப்பட்ட வகையில் எந்தவித தனிப்பட்ட கோபமோ வைராக்கியமோ கிடையாது. ஆனால் சமூக நிறுவனங்களின் ஒழுக்கம் காப்பது என்பது எமது எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரிகளை விட்டுச் செல்வதாகும். 
ஆகவே அகில இலங்கை வை எம் எம் ஏ பேரவை இது சம்பந்தமாக தமது உடனடி அவதானத்தை செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 
சில வேளை அகில இலங்கை வை எம் எம் ஏ பேரவை மூலம் மேற்கொள்ளப் படும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு இவர்கள் உடன் படாது , பேரவையிலிருந்து பிரிந்து தாங்கள் தனியாக செயற்படுவதாக முடிவுக்கு வரலாம். 
அவ்வாறு இவர்களால் தன்னிச்சையாக முடிவுக்கு வர முடியாது. குறைந்தது ஒரு விஷேட பொதுக் கூட்டம் கூட்டப் பட்டு அதில் பெரும்பான்மை முடிவை எடுக்க வேண்டும் . அதேவேளை இவ்விடயத்தை சட்டரீதியில் அணுகலாம். ஆகவே  அகில இலங்கை வை எம் எம் ஏ பேரவை இதுவிடயமாக பக்க சார்பற்ற தீர்கமானதொரு தீர்வை பதுளைக்கு தரவேண்டும். 

இவர்கள் நம்பிக்கையாளர் என்ற தகுதியை இழந்தவர்கள் என்ற நிலைக்கு சாட்சியாக இன்னும் சில விடயங்கள் ஆதாரப்பூர்வமாக இருக்கின்றன . வை எம் எம் ஏ சம்பந்தப் படாத இவைகள் இன்ஷா எதிர்காலத்தில் முன்கொணரப் பட்டு பதுளை முஸ்லிம்களுக்கு நியாயம் பெற்றுத் தரும் முயற்சிகள் தொடரும். 

இவ்வாக்கத்தில்  குறிப்பிடப் பட்ட விடயங்களுக்கு நானே பொறுப்பாளன். இதற்கான மாற்றுக் கருத்துக்கள் ஆக்கங்களாக வரும் பட்சத்தில் தாராளமாக அவற்றை பிரசுரிக்கலாம் .
நன்றி . 

ஏ எம் எம் முஸம்மில் – பதுளை. 





அகில இலங்கை வை எம் எம் ஏ பேரவை தலைவர் மற்றும் உயர் சபை உறுப்பினர்களின் அவதானத்திற்கு ... அகில இலங்கை வை எம் எம் ஏ பேரவை தலைவர் மற்றும் உயர் சபை உறுப்பினர்களின் அவதானத்திற்கு ... Reviewed by Madawala News on October 11, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.