ஆட்கொல்லி டெங்கு நோயின் தாக்கத்துக்கு பலியாகும் உயிர்கள்... சுகாதார சேவைகள் பணிப்பாளர் விளக்கம்.


-பைஷல் இஸ்மாயில் -
 ஆட்கொல்லி நோயாக காணப்படுகின்ற பிளேவி வைரஸினால் உருவாக்கப்படுகின்ற
நாடளாவிய ரீதியில் சுமார் 27 ஆயிரம் பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணம் தெரிவித்தார்.



கல்முனை பிராந்தியத்தில் மட்டும் ஜனவரி தொடக்கம் இற்றைவரையான காலப்பகுதிகளில் 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையில் 700 பேர் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் மிக அதிகமாக அதிகரித்துக் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.



அவர் மேலும் கூறுகையில்,



டெங்கு தாக்கத்தினால் கல்முனை வடக்கில் ஒருவரும், திருக்கோயில் பிரதேசத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகிய பிரதேசங்கள் மிகுந்த அவதானத்துக்குரிய பிரதேசங்களாகவும், சம்மாந்துறை, ஆலையடிவேம்பு, காரைதீவு, சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்கள் ஓரளவு அபாயமுள்ள பிரதேசங்களாகவும், இறக்காமம், நாவிதன்வெளி, திருக்கோயில் போன்ற பிரதேசங்கள் பாதிப்புக் குறைந்த இடங்களாகவும் காணப்படுகின்றது.



இதில் சன அடர்த்தி கூடியதாக காணப்படுகின்ற இடத்தில் இருக்கின்ற பிரதேச மக்கள் மிக அவதானத்துடன் இருக்கவேண்டும். அந்த இடத்தில் தொற்றுப் பரம்பல் ஏற்படுமாக இருந்தால் அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான விடயமாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.



மார்ச் மாதத்திலிருந்து இற்றைவரையான காலப்பகுதியில் மிக வலுவாக அந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு குறைக்கப்பட்டிருந்தாலும், கடந்த மூன்று மாதங்களாக எமது பிராந்தியத்தில் டெங்கு நோயின் தாக்கம் இல்லை என்றுதான் கூறலாம். அந்தளவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், சாதாரண நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக விஷேட நடவடிக்கைகளை நாங்கள் எடுத்ததன் காரணத்தால், டெங்குப் பரம்பலை ஓரளவு கட்டுப்படுத்தியிருக்கின்றோம் என்று சொன்னாலும் இந்த வருடத்துக்குள் 2 உயிரிழப்பு கல்முனை பிராந்தியத்துக்குட்ட பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. இது பெரும் கவலை தரக்கூடியதாக இருக்கின்றது.



எதிர்வருகின்ற நவம்பர், டிசம்பர், ஜனவாரி சார்ந்த மாதங்களில் வழமையாக ஏற்படுகின்ற அதீத டெங்கு பெருக்கத்தை அல்லது பரவலை தடுத்து முற்று முழுதாக கட்டுப்பாட்டுக்குள் வைக்கவேண்டும் என்பதற்காக பல விஷேட திட்டங்களாக, புகை ஊட்டுதல், சட்ட நடவடிக்கைகள், நோயாளிகளின் இடங்களை மிக அதீதமாக துப்பரவு செய்தல் போன்ற பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம்.



மிக முக்கியமாக நாங்கள் பாவித்துவிட்டு வீசுகின்ற யோகட் கப், ஐஸ்கறீம் கப், சுரட்டைகள், உடைந்த அல்லது பழுதடைந்த பாத்திரங்கள், டயர்கள், கழிப் பொருட்களை தேக்கி வைத்திருக்கும் வாளிகள், பாவிக்காத மலசல கூடங்களின் கொமட், வேசன்கள், சிங், நீர்க் கசிவு ஏற்படுகின்ற சிறிய சிறிய இடங்கள், நீர்க் கசிவு ஏற்படுகின்ற இடத்தின் கீழ் வைத்திருக்கும் பாத்திரங்கள், குளிர்சாதனைப் பெட்டியின் பின்பக்கமாக நீர் சேமிக்கின்ற இடம், கிணறு, நீர்த்தாங்கி, குழாய்க் கிணறு போன்ற பல இடங்களில் இந்த ஈடிஸ் எனப்படுகின்ற நுளம்புகள் பெருகக் கூடியதாக இருக்கின்றன.



இந்த டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், ஒத்துழைப்புக்களையும் பொதுமக்களாகிய நீங்கள் முழுமையான பங்களிப்பினை வழங்குவது மிக மிக அவசியமானதாக இருக்கின்றது. அத்துடன் திணைக்களத் தலைவர்கள், உள்ளுராட்சி மன்றங்கள், பாடசாலைகள், விளையாட்டுக் கழகங்கள், பள்ளிவாயல்கள், பொது அமைப்புக்கள் என எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே கல்முனை பிராந்தியத்தை டெங்கு நோயற்ற பிராந்தியமாக மாற்றியமைக்கலாம்.



விஷேடமாக பாடசாலைகளில் ஒரு ஆசிரியரை நியமித்து ஒவ்வொரு வாரமும்

பாடசாலை சுற்றுப்புரச் சூழல் தொடர்பாக, டெங்கு பற்றி அதற்குரிய மேற்பார்வையைச் செய்து டெங்கு பரவாத இடங்களை உறுதிப்படுத்த வேண்டும். இது பொதுச் சுகாதார உத்தியோகத்தர் மூலம் மேலதிகமாக அவதானிக்கப்பட்டு அறிக்கையிடப்படவேண்டும். இதேபோல் ஒவ்வொரு திணைக்களங்களும் சுற்றுப்புரச் சூழல் சம்பந்தமாக ஒரு உத்தியோகத்தரை நியமித்து பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களுடன் இணைந்து அது தொடர்பான அறிக்கையிடல் மற்றும் துப்பரவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.



இந்த ஆட்கொல்லி டெங்கு நோயை ஒழிக்க சுகாதாரத் திணைக்களம் வைத்தியசாலைகளுடன் இணைந்து கடமையாற்றும். அதேபோன்று சுகாதார திணைக்களம் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களோடு இணைந்து செயலாற்றுவதற்கும் தயாராக இருக்கின்றது. அதற்கான பணியினை நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செய்வதற்கு முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆட்கொல்லி டெங்கு நோயின் தாக்கத்துக்கு பலியாகும் உயிர்கள்... சுகாதார சேவைகள் பணிப்பாளர் விளக்கம். ஆட்கொல்லி டெங்கு நோயின் தாக்கத்துக்கு பலியாகும் உயிர்கள்...  சுகாதார சேவைகள் பணிப்பாளர் விளக்கம். Reviewed by Madawala News on September 10, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.