புதிய அரசாங்கத்தை உருவாக்க தேவையான எண்ணிகையை பெற்றுக் கொள்ள இயலாது போனது. எங்கே தவறு நடந்திருக்கக் கூடும்?


ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம்  (Daily Mirror)
 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க
சுமதிபாலவுடனான அண்மைய நேர்காணலின்போது சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்டிருந்த திடீர் அரசியல் கொந்தளிப்பு நிலைமைகளின்போது புதிய அரசாங்கத்தை தோற்றுவிக்க முனைந்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்களில் இவர் முக்கிய நபராக கருதப்பட்டார்.


 அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சுதந்திரக் கட்சியின் கொள்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது பேசப்பட்டன. அதனை வாசகர்களுக்காக தொகுத்து தருகின்றோம்.

கேள்வி: நாட்டின் தற்போதைய அரசியல் களம் குறித்து உங்களின் பார்வை என்ன?


பதில்: நாட்டின் அரசியல் ஸ்திர நிலைமையை கருத்திற் கொண்டால் அது முற்று முழுதாக சீர்குலைந்துள்ளது என்றே கூற வேண்டும். அரசியல் உறுதிப்பாடு என்பது சிறிதும் அற்ற நிலையே தற்போது நாட்டில் நிலவுகிறது.
மஹிந்த ராஜபக்சவை பிரதமராக பதவியேற்குமாறு அழைப்பு விடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முன்கூட்டிய தேர்தல் ஒன்றை விரும்பியிருந்தார். தேர்தலுக்கு அழைப்பு விடுத்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் சென்ற சிலர் அந்த அறிவிப்பை செல்லுபடியற்றதாக்கிக் கொண்டனர்.


கடந்த ஒரு வருடத்தை எடுத்துக் கொண்டால் அரசியல் உறுதிப்பாடுகளை நிலைநிறுத்தும் காத்திரமான பணிகள் எதுவும் இடம்பெற்றதாக தெரியவில்லை. தேசிய திட்டமிடலை அடிப்படையாக கொண்ட முகாமை ஒன்று தற்போது அவசியமாகின்றது.


கேள்வி: கட்சியின் இரு தரப்புக்களையும் இணக்கப்படுத்துவதில் முன்னின்ற சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களில் முக்கியமானவராக நீங்கள் கருதப்பட்டீர்கள். இருப்பினும் புதிய அரசாங்கத்தை உருவாக்க தேவையான எண்ணிகையை பெற்றுக் கொள்ள இயலாது போனது. எங்கே தவறு நடந்திருக்கக் கூடும்?


பதில்: இரு தரப்பில் இருந்தும் சில குழுக்கள் தாம் அளித்த வாக்குறுதிகளுக்கு ஏற்ப நடந்துகொள்ள தவறிவிட்டனர். சில உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடனேயே இருந்து விட தீர்மானித்தனர். சில சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொள்ள தீர்மானித்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கே மனப்பூர்வமாக ஆதரவளித்தது. இதனை நாம் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.


சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற நிலைமைகள் குறித்து நடந்து கொண்ட விதம் எங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்து போனது.
பாராளுமன்றின் நிலையியற் கட்டளைகளுக்கு முற்றும் முரணாக நடந்து கொண்ட சபாநாயகர் தனது கட்சியை பாதுகாப்பதிலேயே குறியாக இருந்தார். ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாத்து அதனைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவே சபாநாயகரின் நடத்தை விளங்கியது. 


கேள்வி: அப்படியானால் உங்களது மதிப்பீடுகள் பொய்த்துப் போயின என்று கூறுகின்றீர்களா?


பதில்: உறுப்பினர் எண்ணிக்கை தொடர்பான மதிப்பீடுகள் அல்ல அவை. அம்மதிப்பீடுகள் கொள்கை ரீதியானவை. திரும்பி வரவே இயலாத பாதாளப் படுகுழியை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கையில் அவ்வாறுதான் சில சடுதி நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
அரசியலமைப்பை மாற்றும் முயற்சிகள், நிறைவேற்று அதிகாரத்தை அழிக்கும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சர்வசன வாக்கெடுப்பை வேண்டி நிற்கும் எந்தவொரு ஏற்பாடு குறித்தும் நாம் எதிர்த்தே வந்தோம். அரசியலமைப்பு பேரவை உள்ளிட்ட அரச தாபனங்களின் செயற்பாட்டை உற்று நோக்கியே வந்தோம்.


அரசியலமைப்பு திருத்தங்களுக்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை நிறைவேற்றப்பட வேண்டும்.


தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அபரிமிதமான வகையில் ஐக்கிய தேசிய கட்சி பணிந்து போவதை நாம் அவதானித்தோம். இது பெரும்பான்மை மக்களின் நலன்களைப் பேணுவதாக அமையவில்லை.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் அங்கமாக நாம் இனிமேலும் இருக்க விரும்பவில்லை. ஐக்கிய தேசிய கட்சியுடனான கூட்டணியினால் எமது அரசியல் கொள்கைகள் புதைந்து போகப் பார்த்தன. ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணியில் இருந்தமையினாலேயே நாம் எமது வாக்கு வங்கியை பொதுஜன பெரமுனவிடம் இழக்க நேரிட்டது.


கேள்வி: பத்துக்கும் மேற்பட்ட சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவதற்கு முயற்சிப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்ளவென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அனுமதி பெற்றுக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான உங்களது கருத்து என்ன?


பதில்: கட்சி என்ற வகையில் சுதந்திரக் கட்சியானது ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணிக் கட்சியாக இணைந்து கொள்ளும் நிலையில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. சுதந்திரக் கட்சி மீண்டும் ஒரு போதும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்ளாது என்பது திண்ணம்.
கட்சியை விட்டு விலகியவர்கள் தனிநபர்கள் என்ற வகையில் அவர்கள் எதையும் செய்து கொள்ள முடியும். ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அமைச்சுக்களை பொறுப்பேற்பதற்கு கட்சியின் தலைவர் என்றவகையில் மைத்திரிபால சிறிசேன கட்சியின் ஏனைய உறுப்பினர்களுக்கு அனுமதியளிப்பார் என்று நான் நினைக்கவில்லை. அது சாத்தியமன்று.
தேசிய அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கு எதிராக வாக்களிப்பதாகவே சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்படுவது கொள்கை மீறலாக கருதப்படும்.



கேள்வி: இவ்வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. சுதந்திரக் கட்சியின் தயார் நிலை எவ்வகையில் உள்ளது?


பதில்: எமது கட்சி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டே வந்துள்ளது. முன்னாள் தலைவர் ஸ்ரீமாவோ பண்டாராநாயக்கவின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது அவருக்கு பதிலாக ஹெக்டர் கொப்பேகடுவ போட்டியிட்டார்.

பின்னர் சந்திரிக்கா பண்டாரநாயக்க போட்டியிட்டார்.
பின்னர் மஹிந்த ராஜபக்ச இரு தடவைகள் போட்டியிட்டார். கடந்த வருடம் நாம் தோல்வியுற்றோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டால் மஹிந்த ராஜபக்ச செல்வாக்கு மிக்க தலைவராக விளங்குவார். அவர் போட்டியிட்டால் நாம் அவருக்கு முழுமுதல் ஆதரவை வழங்குவோம்.


எனினும், சட்ட ரீதியான முறையில் அவர் போட்டியிடுவதற்கு முடியாதுள்ளது. அது அவ்வாறிருக்கும் பட்சத்தில் அடுத்த உயர் பதவியான பிரதமர் பதவியை ராஜபக்சவுக்கு வழங்குவதற்கு நாம் தயாராகவுள்ளோம்.


கேள்வி: ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை முன்மொழியும் யோசனையொன்றை முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திசாநாயக்க முன்வைத்துள்ளார். இது பற்றி உங்களது கருத்து என்ன?


பதில்: அவ்வாறான முன்மொழிவுகளை முன்வைப்பது அவர்களது உரிமை அதனை நாம் தடுக்க முடியாது. தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில் எத்தகைய தலைவரை மக்கள் விரும்புகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 2020 இற்குப் பின்னர் இந்நாட்டை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திச் செல்வதற்கே மக்கள் விரும்புவர்.


அதற்கு மைத்திரிபால சிறிசேன தயாராக இருந்தால் அவருக்கு ஆதரவு வழங்குவதில் தயக்கமில்லை. வேட்பாளர் தொடர்பான தனிநபர் தேடலில் நாம் தற்போது இறங்கவில்லை. நாடும் நாட்டு மக்களும் என்ன விரும்புகிறார்கள், அவர்களது உயரிய தேவைகள் எவை என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.


அது பற்றிய இறுதி முடிவு எட்டப்பட்ட பின்னரே அதற்கேற்ற தலைவரை நாம் முன்னிறுத்துவோம். அதற்கு மைத்திரிபால சிறிசேன பொருத்தமானவராக இருந்தால் நாம் ஆதரிப்போம். அடுத்த ஆறு மாதங்களில் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம்.


கேள்வி: மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி வேட்பாளர் என்றுதான் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பகிரங்கமாக குறிப்பிட்டு வருகின்றனர். இதில் இரகசியம் இல்லை. உங்களது கருத்து?


பதில்: இது முதற் தடவையல்ல. பல சந்திப்புக்களில், கலந்துரையாடல்களில் அவரது பெயர் முன்வைக்கப்பட்டே வருகிறது. ஐக்கிய தேசிய கட்சிக்கும் இதே நிலையே. கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாசவின் பெயர்களே பொதுவெளியில் பேசப்பட்டு வருகின்றது.



இது பொதுவான பேசுபொருளாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலை எடுத்துக் கொண்டால், கரு ஜயசூரிய, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சோபித தேரர் ஆகியோரின் பெயர்கள் பேசப்பட்டு வந்தன. எனினும், இவர்களில் ஒருவர் கூட முன்னிறுத்தப்படவில்லை.


கேள்வி: கடந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை எடுத்து நோக்கும் பட்சத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கூட்டணியானது படுதோல்வியை சந்திக்க, பொதுஜன பெரமுன செல்வாக்கை பெற்றுக் கொண்டது. இது இவ்வாறிருக்க உங்களது கட்சியில் இருந்து வேட்பாளரை முன்மொழிவது சாத்தியமாகுமா?
பதில்: நாம் கூட்டணிக் கட்சியாகும். கடந்த நவம்பர் 5 இல் பேரணி ஒன்றை நாம் அறிவித்திருந்த போது மஹிந்த – மைத்திரி கூட்டணி தொடர்பில் மக்கள் பெரிதும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



கேள்வி: பொதுஜன பெரமுன தமது சொந்தக் கட்சி வேட்பாளரை முன்னிறுத்தவுள்ளதாக தெரிகிறது. ஏனைய கட்சிகளிடம் வேட்பாளர் உரிமையை ஒப்படைக்கத் தயாராக அது இல்லை என்றே தோன்றுகிறது. இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்?


பதில்: அவர்கள் ஒருவரின் பெயரை தெளிவாக முன்மொழியா விட்டால் கட்சியின் பலம் குன்றும்.

கேள்வி: பொதுஜன பெரமுன குறிப்பிடுவது போன்று கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவது குறித்து உங்களது கருத்து என்ன?


பதில்: மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றிருந்தால் மேல் மாகாணத்தில் போட்டியிட்டு கோத்தாபய ராஜபக்ச  வெற்றி பெற்றிருப்பார். மேல் மாகாணத்தின் சிறப்பான முதலமைச்சராக பணியாற்றியிருப்பார். அதனூடாக தன்னை ஜனாதிபதி வேட்பாளராக தயார்படுத்தியிருப்பார். நிலைமாற்றத்திற்கு அது வழிவகுத்திருக்கும்.


அவர் சிறந்த நிறைவேற்று அதிகாரி. அவரது செயற்பாடுகள் காத்திரம் மிகுந்தவை. நிர்வாகத்திறன் மிக்கவர். எனினும், அவர் ஓர் அரசியல்வாதியல்ல. ஆகவே, அரசியல்வாதி இல்லாத ராஜபக்சா ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பில் நாம் இன்னும் பல மதிப்பீடுகளை செய்ய வேண்டியுள்ளது.



கேள்வி: மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதில் ஐக்கிய தேசிய கட்சி பின்னிற்கின்றது. அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?


பதில்: ஜனாதிபதி அது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்திருந்தார். அது பற்றி ஆராய ஐக்கிய தேசிய கட்சி ஒரு வார காலம் அவகாசம் கேட்டிருந்தது. நாம் வழங்கிய தவணை முடிவடைந்து விட்டது. கலப்பு தேர்தல் முறையையே சுதந்திரக் கட்சி விரும்புகின்றது. இருப்பினும், எத்தேர்தல் முறையிலேனும் குறைந்த பட்சம் தேர்தலை அவர்கள் நடாத்தினால் போதும் என்றாகி விட்டது.



கேள்வி: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க புதிய அரசியற் கட்சியொன்றை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி கூறுங்கள்?


பதில்: அவர் அவ்வாறு புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கும் பட்சத்தில் அது ஐக்கிய தேசிய கட்சிக்கே சாதகமாக அமையும். இது வருந்தத்தக்கது. ராஜபக்சாக்கள் தொடர்பில் அவர் கசப்புணர்வுகளைக் கொண்டிருக்கலாம். அவர் அவ்வாறு முயற்சிகளை மேற்கொள்ளும் பட்சத்தில் அவரது சொந்தக் கட்சிக்கே ஆபத்தாக அமையும்.


அவ்வாறான முயற்சிகளில் அவர் ஈடுபட மாட்டார் என்றே நான் கருதுகிறேன். எனினும், மக்கள் அவரது பெயரை உபயோகித்து பயன்பெற முயற்சிக்கக் கூடும். அவரது கொள்கைகள் எமக்கு எதிரானதாக இருப்பினும் அவர் அவ்வாறான முயற்சிகளில் ஈடுபட மாட்டார். அவரது சொந்தக் கையெழுத்தின் கீழ் புதிய கட்சியொன்றை அவர் ஒருபோதும் அமைக்க மாட்டார்.


கேள்வி: அரசியலுக்கு அப்பால் உங்களால் ஆதரவு வழங்கப்பட்ட குழு இலங்கை கிரிக்கெட் சபையை பொறுப்பேற்றுள்ளது. தற்போதைய இலங்கை கிரிக்கெட் அணியைப் பொறுத்தமட்டில் உங்களது ஆலோசனைகள் என்ன?



பதில்: தற்போதைய நிலையில் அண்மையில் நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கே நாம் முன்னுரிமை வழங்க வேண்டும். அதன் பின்னர் எமது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை விருத்தி செய்ய வேண்டும். 2020 இல் மீண்டும் தலைசிறந்த கிரிக்கெட் அணியாக இலங்கை பரிணமிக்க வேண்டும்.
கிரிக்கெட் வெறுமனே விளையாட்டாக கருதாமல், எமது அணியை நேசிப்பவர்களாக நாம் மாற வேண்டும். இதற்கு அணிவீரர்களின் நன்னடத்தையில் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

புதிய அரசாங்கத்தை உருவாக்க தேவையான எண்ணிகையை பெற்றுக் கொள்ள இயலாது போனது. எங்கே தவறு நடந்திருக்கக் கூடும்?  புதிய அரசாங்கத்தை உருவாக்க தேவையான எண்ணிகையை பெற்றுக் கொள்ள இயலாது போனது. எங்கே தவறு நடந்திருக்கக் கூடும்? Reviewed by Madawala News on March 23, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.