பால்மா குறித்து கலக்கம் வேண்டாம் - ஹலால் சான்றுறுதிப் பேரவை HAC


நேர்காணல்: அஷ்கர் தஸ்லீம்
நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்கள் பாம் எண்ணெய், லக்டோஸ்
ஆகியவற்றின் கலவை என்றும் அவற்றில் பன்றிக் கொழுப்பும் கலக்கப்பட்டள்ளது என்றும் தனக்கு முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக பிரதியமைச்சர் புத்திக பதிரண சமீபத்தில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.


தொடர்ந்தும் இது குறித்து அவர் இப்போது பேசி வருகிறார்.
இவ்வாறான முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்ற நிலையில் இது குறித்த விளக்கத்தைப் பெறுவதற்கு நாம் இலங்கை ஹலால் சான்றுறுதிப் பேரவையை தொடர்பு கொண்டோம். இப்பேரவையின் உள்ளக ஷரீஆ பொறுப்பதிகாரி அஷ்ஷெய்க் இர்ஃபான் முபீன் விளக்கங்களை வழங்கினார்.

பிரதியமைச்சரின் கருத்து நிராகரிப்பு

“பிரதியமைச்சரின் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. நியூசிலாந்திலிருந்து தருவிக்கப்படும் பால்மாக்களில் பன்றிக் கொழுப்பு இல்லை. உலகில் உள்ள 300 அளவிலான ஹலால் தரச் சான்றிதழ் நிறுவனங்களில் 80 அளவிலான நிறுவனங்களையே நாம் அங்கீகரித்துள்ளோம். அந்த 80 இற்குள் வருகின்ற, நியூசிலாந்து ஹலால் தரச் சான்றிதழ் நிறுவனங்கள் இப்பால்மாக்கள் ஹலால் என்று தரச்சான்றிதழ் வழங்கியிருக்கின்றன.” என்கிறார் ஹலால் சான்றுறுதிப் பேரவையின் அஷ்ஷெய்க் இர்ஃபான் முபீன்


எவ்வாறு ஹலால் சான்றிதழ் வழங்கப்படுகின்றது?

இப்பால்மாக்களுக்கு நியூசிலாந்து ஹலால் தரச் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்கள் எவ்வாறு ஹலால் சான்றிதழ் வழங்குகின்றன என்று அவரிடம் வினவினோம், அவர் பின்வருமாறு விளக்கினார்.


“ஒரு பொருளை பரிசோதனை செய்வதற்கான இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று, அப்பொருள் தயாரிக்கப்படும் உற்பத்திசாலைக்கு சென்று, அங்கு பயன்படுத்தப்படும் உற்பத்திப் பொருட்களை பரிசோதனை செய்தல். இரண்டாவது, தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வரும் பொருளை எடுத்து பரிசோதனை செய்தல். இவற்றில் முதலாவது வகையே மிகவும் பாதுகாப்பானதாகும்.


ஏனெனில், ஒரு பொருள் நுகர்வுக்குத் தயாரான நிலையில் சந்தைக்கு வரும்போது, அதனைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்திய சில உதவிப் பொருட்கள் மறைந்து போயிருக்கும். உதாரணமாக, நாம் ரொட்டி சுடுவதாக வைத்துக்கொள்வோம். ரொட்டி சுடும்போது நாம் எண்ணெய் தடவுவோம் அல்லவா. ஆனால், சுட்டு முடித்து உணவுக்குத் தயாராக இருக்கும் ரொட்டியில் எண்ணெய்யைக் காண முடியாது.



இவ்வாறுதான், உற்பத்திசாலைகளில் உணவுப் பொருட்கள் தயாரிக்கும்போது, சில உதவிப் பொருட்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. இவற்றையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமாயின், உற்பத்திசாலைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டுதான் பரிசோதனை செய்ய வேண்டும். அதுதான் மிகவும் பாதுகாப்பானதும், நம்பகத்தன்மையானதுமான பரிசோதனையாக அமையும்.


எனவே, நியூசிலாந்தில் இருக்கும் ஹலால் தரச் சான்றிதழ் நிறுவனங்கள் இவ்வாறான பரிசோதனைகளையே மேற்கொள்கின்றன. அந்நிறுவனங்கள் அங்கீகரித்து, ஹலால் தரச் சான்றிதழ் வழங்கிய உற்பத்திகளுக்கு, நாமும் ஹலால் சான்றிதழ் வழங்குகின்றோம். இது தான் பின்பற்றப்படும் நடைமுறையாகும்.”


ஒருவேளை நியூசிலாந்து ஹலால் தரச்சான்றிதழில் தவறு?

நாம் அவரிடம் தொடர்ந்தும் கேட்டோம்… “நீங்கள் வெளிநாட்டு உற்பத்திப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும்போது சார்ந்திருக்கும் ஹலால் தரச் சான்றிதழ் நிறுவனங்கள், தவறியேனும் அல்லது மோசடியில் ஈடுபட்டு ஹராமான பொருட்களுக்கு ஹலால் தரச் சானிறதழ் வழங்கியிருந்தால், நீங்களும் அறியாமலேயே அவற்றை ஹலால் என்று சான்றிதழ் வழங்கும் வாய்ப்பு இருக்கின்றது. இவ்வாறான ஒரு நிலையில் இலங்கையில் இப்பொருட்களை பயன்படுத்தும் முஸ்லிம்கள் ஏமாற்றப்படுவார்கள் அல்லவா!?


அதற்கு அஷ்ஷெய்க் இர்ஃபானின் பதில் பின்வருமாறு அமைந்திருந்தது…
“உலகில் காணப்படும் 300 அளவிலான ஹலால் தரச் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்களில், 80 அளவிலான நிறுவனங்களை நாம் அங்கீகரிக்கிறோம். இந்த நிறுவனங்களை நாம் அங்கிகரிக்கும்போது, அந்நிறுவனங்கள் கொண்டிருக்கின்ற ஷரீஆ கண்காணிப்பு குழு, தொழில்நுட்ப குழு என்பன குறித்து மிகவும் கவனமானப் பார்ப்போம். எமது அவதானத்தின்படி அவர்கள் தகைமை கொண்டவர்களாக இருந்தால் தான் நாம் அவர்களை அங்கீகரிப்போம்.


இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட ஹலால் தரச் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்களினாலேயே நியூசிலாந்திலிருந்து வரும் பால்மாக்களுக்கு ஹலால் தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. எனவே, நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படுகின்றது”

பன்றிக்கொழுப்பு கண்டறியப்பட்டால்?

நாம் தொடர்ந்தும் கேட்டோம்… “பரிசோதனைக்காக பால்மாக்கள் வெளிநாட்டு ஆய்வுகூடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த ஆய்வுகூட அறிக்கைகளின்படி, இப்பால்மாக்களில் பன்றிக் கொழுப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை எவ்வாறு அமையும்?


அதற்கான பதில் பின்வருமாறு அமைந்திருந்தது..

“அவ்வாறு பன்றிக் கொழுப்பு காணப்படுவதற்கான வாய்ப்பே இல்லை. எவ்வாறாயினும், தாய்லாந்திலுள்ள ஆய்வுகூடங்களுக்கு அனுப்பி பரிசோதனை மேற்க்கொள்ளலாம். நாம் தாய்லாந்திலுள்ள ஆய்வுகூடங்களிலேயே பரிசோதனைகளை மேற்கொள்கின்றோம்.”

மக்கள் பதட்டமடையத் தேவையில்லை

பால்மா குறித்த சர்ச்சையால் மக்கள் மிகவும் குழம்பிப் போயிருக்கின்றனர். பால்மாவில் பன்றிக்கொழுப்பு உள்ளதாகப் பரவுகின்ற கருத்துக்கள் குறித்து மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர். இவ்வாறான இச்சூழலில், மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்? என்று நாம் ஹலால் சான்றுறுதிப் பேரவையின் அஷ்ஷெய்க் இர்ஃபான் முபீனிடம் கேட்டோம்.


“மிகவும் தரமான முறையில் பரிசோதனை செய்த பின்னர் தான், ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து குழம்ப வேண்டிய அவசியமில்லை. அத்தோடு, மக்களை பீதியடையச் செய்யும் வகையில், சமூக ஊடகங்களில் ஓடியோக்களை பதிவு செய்து அனுப்பும் வேலைகளிலிருந்து தவிர்ந்துகொள்வோம். ஹலால்; சான்றிதழ் குறித்த தெளிவுகள் வேண்டுமாயின், ஹலால் சான்றுறுதிப் பேரவையை தொடர்புகொள்ளலாம்.” என்று குறிப்பிட்டார்.
நேர்காணல்: அஷ்கர் தஸ்லீம்

பால்மா குறித்து கலக்கம் வேண்டாம் - ஹலால் சான்றுறுதிப் பேரவை HAC பால்மா குறித்து கலக்கம் வேண்டாம் - ஹலால் சான்றுறுதிப் பேரவை HAC Reviewed by Madawala News on February 18, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.