நெல்லிகல தர்மரத்ன தேரருடன சந்திப்பு பலனளித்தது..




மாவனல்லை பகுதியில் புத்தர் சிலை உடைக்கப்பட்டமை தொடர்பில் நெத் எப்.எம் சிங்கள வானொலி
சேவையில் முஸ்லிம்கள் தொடர்பாகவும், சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பாகவும் கருத்து வெளியிட்ட நெல்லிகல தர்மரத்ன தேரருடன் ஜமாஅத் நிர்வாகம் நேரடி கலந்துரையாடல் ஒன்றை கடந்த 06.01.2019 அன்று நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்தில் நடத்தியது.

இலங்கையில் ஏற்படும் இனவாத பிரச்சினைகள் மற்றும் இஸ்லாமியர்களின் செயல்பாடுகள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் தத்துவங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட இச்சந்திப்பு சுமார் 03 மணி நேரங்கள் நீடித்தது.

குறிப்பாக புத்தர் சிலை உடைப்பின் பின்னனி பற்றி பேசப்பட்டதுடன், இஸ்லாம் புத்தர் சிலை உடைப்பை கடுமையாக கண்டிக்கிறது என்பதை புனித குர்ஆனின் வசனங்கள் மூலம் தேரருக்கு விளக்கிக் கூறப்பட்டது. 

புத்தர் சிலை உடைப்பு எந்தவொரு இஸ்லாமிய இயங்கமும் சார்ந்த ஒன்றல்ல என்பதையும், இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்ட சிலர் செய்த காரியம் என்பதையும் விளக்கிக் கூறியதுடன் இஸ்லாத்தின் அடிப்படைகள் பற்றிய போதிய புரிதல் இன்மையே இதற்கான காரணம் என்பதும் தேரருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

கடந்த வருடம் திகன உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின் போது தமது பகுதி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்படாமல் இருக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்து உதவிய தர்மரத்ன தேரர் அவர்கள். கலவர நேரத்தில் நடத்தப்பட்ட வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் போது முஸ்லிம்களுக்காக பள்ளிவாயலின் வெளியில் காவல் இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மாவனல்லை சிலை உடைப்பின் பின்னர் நெத் எப்.எம் வானொலி சேவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேரர் சிலை உடைப்பின் பின்னனி தொடர்பில் தனக்கு கிடைத்த தகவல்களை உறுதி செய்யாமல் கருத்து வெளியிட்டிருந்தார். உடனடியாக தேரரை சந்திக்க ஏற்பாடுகளை செய்த சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் தலைமை நிர்வாகம் நெல்லிகல தேரருடன் நேரடி கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது. 

நிகழ்வின் போது, சிலை உடைப்பின் பின்னனியில் CTJ சகோதரர்கள் இருக்கிறார்களா? என்று நெல்லிகல தேரர் முன்வைத்த கேள்விக்கு ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்.

சிலை உடைப்பிற்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் (CTJ) எவ்வித தொடர்பும் இல்லை. சிலை உடைப்பு இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையிலேயே மிகத் தவறான காரியம் என்பதை தெளிவுபடுத்தி சிங்கள மொழியிலேயே நாம் வீடியோவும் வெளியிட்டுள்ளோம். சிலை உடைப்பு விவகாரத்துடன் எமது அமைப்பு தொடர்புபட்டிருந்தால் பாதுகாப்பு தரப்பினர் முதலில் எம்மைத் தான் விசாரனைக்கு உட்படுத்தியிருப்பார்கள். ஆனால் இதுவரை அது பற்றி ஒரு கேள்வியை கூட நேரிலோ தொலைபேசி வழியாகவோ பாதுகாப்புத் தரப்பினர் எம்மிடம் கேட்க்க வில்லை. காரணம் அந்த பிரச்சினைக்கும் எமது அமைப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தினார் சகோ. அப்துர் ராசிக் அவர்கள்.

அப்படியானால் சிலை உடைப்புடன் தொடர்பான இயக்கம் எது என்று நெல்லிகல தேரர் அடுத்த கேள்வியை முன்வைத்தார்.

சிலை உடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இன்னும் இரண்டு நபர்களை போலிசார் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எந்தவொரு இயக்கத்தையும் சார்ந்தவர்களாக அறியப்பட வில்லை. 

நாம் அறிந்து எந்தவொரு இஸ்லாமிய அமைப்புகளும் இலங்கையில் இது போன்ற காரியங்களை செய்யுமாறு போதனை செய்வதில்லை. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உச்சகட்ட தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் உறுதியாகவே இருக்கிறார்கள். என்று சகோ. அப்துர் ராசிக் அவர்கள் தேரரின் கேள்விக்கு பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய நெல்லிகல தேரர் அவர்கள் முஸ்லிம் பெண்கள் முகம் மறைத்தல், ஹழால் சான்றிதல் வழங்குதல் மற்றும் சரீஆ வங்கி முறைகள் பற்றி தனது சந்தேகங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்தார்.

முஸ்லிம் பெண்கள் முகம் மறைத்தல், ஹழால் சான்றிதல் மற்றும் சரீஆ வங்கி முறைமை பற்றிய தேரரின் கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பாக இஸ்லாத்தின் தெளிவான நிலைபாடுகள் தொடர்பில் குர்ஆன் மற்றும் நபிகளாரின் வழிகாட்டுதல்களை சுட்டிக்காட்டி தேரருக்கு விளக்கம் அளித்தார் சகோ. அப்துர் ராசிக் அவர்கள். 

இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களை முன்வைத்து நீங்கள் செய்து வரும் இந்த பிரச்சாரம் சிங்கள பெரும்பான்மை மக்களை சரியாக சென்றடைய வில்லையே? நேரடி வானொலி நிகழ்வில் இஸ்லாத்தின் சரியான நிலைபாட்டை முன்வைத்து கலந்துரையாட வாருங்கள். என்று அழைப்பு விடுத்தார் நெல்லிகல தர்மரத்ன தேரர் அவர்கள்.

நெல்லிகல தர்மரத்த தேரரின் அழைப்பை சிரித்துக் கொண்டே நேருக்கு நேர் ஏற்றுக் கொண்டார் சிலோன் தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள்.

இது போன்ற நல்ல சந்தர்பங்களைத் தான் நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம். இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் மாற்று மத நண்பர்களுக்கு மத்தியில் இருக்கும் தவறான எண்ணங்களை கலைவதற்கு இதனை விட எங்களுக்கு சிறந்த சந்தர்பங்கள் கிடையாதே? ஆகவே தாராளமாக உங்கள் அழைப்பை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றார் சகோ. அப்துர் ராசிக் அவர்கள்.

அப்துர் ராசிக் அவர்களின் பதிலை ஏற்றுக்கொண்ட நெல்லிகல தர்மரத்ன தேதர் அவர்கள் நெத் எப்.எம் வானொலி நிலையத்தை தொடர்பு கொண்டு சினேகபூர்வ நேரடி கலந்துரையாடலுக்கான நேரத்தை ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வானொலி சேவை நிர்வாகம் நேரம் ஒதுக்கியது.

இன்ஷா அல்லா இன்று (08.01.2019) செவ்வாய் கிழமை இலங்கை நேரம் மாலை 07.30 முதல் 09.00 மணி வரை நெத் எப்.எம் சிங்கள வானொலி சேவையில் நெல்லிகல தர்மரத்ன தேரரும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்களும் கலந்து கொள்ளும் சினேகபூர்வ நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

06.01.2018 அன்றைய சந்திப்பின் முழு வீடியோ விரைவில் வெளியிடப்படும்.

-ஊடக பிரிவு
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ)


நெல்லிகல தர்மரத்ன தேரருடன சந்திப்பு பலனளித்தது.. நெல்லிகல தர்மரத்ன தேரருடன சந்திப்பு பலனளித்தது.. Reviewed by Madawala News on January 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.