அரசியலமைப்பு பேரவையின் சிவில் பிரதிநிதிகளாக மூவர் நியமனம்



தற்போதைய பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் நாளை (12) ஓய்வுபெறவுள்ளார்.


புதிய பிரதம நீதியரசரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு பேரவை நாளை கூடவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.


இதேவேளை, அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்படும் சிவில் செயற்பாட்டாளர்கள் மூவருக்கு பாராளுமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளது.


அரசியலமைப்பு பேரவையில் சிவில் பிரதிநிதிகளாக கலாநிதி ஜயந்த தனபால, அஹமட் ஜாவிட் யூசூப் மற்றும் நாகநாதன் செல்வக்குமாரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ள ஜயந்த தனபால சர்வதேச உறவுகள் தொடர்பிலான ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக செயற்படுகின்றார்.


இராஜதந்திரிகளில் ஒருவரான ஜயந்த தனபால அணு விஞ்ஞானிகளின் சமவாயமொன்றின் உறுப்பினராகவும் செயற்படுகின்றார்.


ஸ்டொக்ஹோம் சர்வதேச சமாதான ஆய்வு நிறுவனத்தின் நிர்வாக சபை உறுப்பினராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.


மேலும், 2006 இல் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பதவிக்காக இலங்கையில் இருந்து ஜயந்த தனபால பரிந்துரைக்கப்பட்டார்.


2007 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை விஞ்ஞானம் மற்றும் சர்வதேச விவகாரம் தொடர்பான புக்வாஷ் அமைப்பின் தலைவராக இவர் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.


1950 ஆம் ஆண்டு பிறந்த சட்டத்தரணி அஹமட் ஜாவிட் யூசுப், கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார்.


அதன் பின்னர், இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை நிறைவு செய்து, சட்ட மா அதிபர் திணைக்களத்திலும் பணியாற்றியுள்ளார்.


1992 ஆம் ஆண்டில் இருந்து 1995 ஆம் ஆண்டு வரை கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் அதிபராகவும் ஜாவிட் யூசுப் செயற்பட்டுள்ளார்.


பின்னர், சவுதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவராக செயற்பட்ட இவர், 1997 ஆம் ஆண்டில் இருந்து 2000 ஆம் ஆண்டு வரை மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் செயற்பட்டார்.


சட்டத்தரணி அஹமட் ஜாவிட் யூசுப் உதலாகம ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நாகநாதன் செல்வக்குமாரன் பருத்தித்துறை வேலாயுதம் கல்லூரியில் ஆரம்பக் கல்வியை பயின்றார்.


அதன் பின்னர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப்பீடத்தின் சிரேஷ்ட சட்ட விரிவுரையாளராக 43 வருடங்கள் இவர் சேவையாற்றியுள்ளார்.


12 தடவைகள் சட்ட பீடாதிபதியாக சேவையாற்றியுள்ள நாகநாதன் செல்வக்குமாரன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகவும் செயற்பட்டுள்ளார்.


இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராகவும் நாகநாதன் செல்வக்குமாரன் செயற்பட்டுள்ளார்.


சட்ட முதுமாணி மற்றும் சட்ட இளமாணி பட்டங்களையும் இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையின் ஊடக சட்டம் தொடர்பிலான புத்தகம் ஒன்றையும் நாகநாதன் செல்வக்குமாரன் வௌியிட்டுள்ளார்.


இதேவேளை, பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் தலதா அத்துகோரலவும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனின் பிரதிநிதியாக சமல் ராஜபக்ஸவும் அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.


சிறு கட்சிகளை பிரதிநிதித்துப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.


அரசியலமைப்பு பேரவையில் சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் உள்ளடங்குவதுடன், ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தார்.


 



அரசியலமைப்பு பேரவையின் சிவில் பிரதிநிதிகளாக மூவர் நியமனம் அரசியலமைப்பு பேரவையின் சிவில் பிரதிநிதிகளாக மூவர் நியமனம் Reviewed by Madawala News on October 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.