பலூன் விவகாரமும், சுன்னாவை மறந்த தாஈக்களும்.


1366. உமர்(ரலி) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி ஸலூல் மரணித்ததும் அவனுக்கு (ஜனாஸாத்) தொழுகை
நடத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தத் தாயரானபோது நான் அவர்களிடம் சென்றுஇ இறைத்தூதர் அவர்களே! அப்துல்லாஹ் இப்னு உபைக்காக ஜனாஸாத் தொழப் போகிறீர்களா? அவன் இன்னின்ன நாள்களில் இன்னின்னவற்றைப் பேசியுள்ளான் எனஇ அவன் பேசியவற்றை நபி(ஸல்) அவர்களுக்கு எடுத்துக் கூறினேன். நபி(ஸல்) அவர்கள் புன்கைத்தார்கள். நான் மேலும் அதிகமாக வலியுறுத்தியதும் அவர்கள்இ 'எனக்கு(த் தொழுகை நடத்துதல்இ தொழுகை நடத்தாமலிருத்தல் ஆகிய இரண்டில் எதையும் செயல்படுத்த) அனுமதியுள்ளது. எழுபது முறைகளுக்கும் அதிகமாக நான் பாவமன்னிப்புத் தேடினால் அவனுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பதாக நான் அறிந்தால் அவ்வாறே நான் அதிகமாகப் பாவமன்னிப்புத் தேடுவேன்' என்று கூறினார்கள்.

மேற்கூறப்பட்ட ஹதீஸூடன் சேர்த்து இன்னுமொரு ஸஹீஹான ஹதீஸ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது. நபியவர்கள் தனது ஆடையில் ஒரு துண்டை அப்துல்லாஹ் இப்னு உபைக்கு  அணிவித்து. நபியவர்கள்  தனது எச்சிலால் எடுத்து அப்துல்லாஹ் இப்னு உபையின் வாயில் வைத்ததாகவும் ஸஹீஹான ரிவாயத்களில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னர்

இனிமேல் இப்படி செய்ய வேண்டாம் என நபி அவர்களுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது.


யார் இந்த அப்துல்லாஹ் இப்னு உபை நபியவர்கள் இவருக்காக ஜனாஸா தொழுவிக்க முற்படும் போது உமர்(றழி)அவர்கள் ஏன் நபிகளாரை தடுக்க முற்பட வேண்டும்.

அப்துல்லாஹ் இப்னு உபை என்பவன் தான் முனாபிக்குகளின் தலைவன். பல ஹதீஸ்களில் வருவது போல் நரகத்தின் கீழ் தட்டில் இருப்பவர்கள் இவர்கள் தான். அவ்வளவு கெட்ட மனிதர்கள் தான் இந்த முனாபிக்குகள்.

நபிகளாரின் அன்பு மனைவி அன்னை ஆயிஷா (ரழி) விடயத்தில் அவதூறு பரப்பி முழு மதீனாவும் அதனை நம்பும் படி செய்ய பின்னால் இருந்து கடுமையாக உழைத்தவர்கள் தான் இந்த முனாபிக்குகள்.

நபியவர்கள் அன்னை ஆயிஷா (ரழி) யை விவகாரத்து செய்திடுவார்களோ என்று அனைவரும் பயப்படுமளவுக்கு அன்னை ஆயிஷா (ரழி) மீதான அவதூறை பரப்பி நபிகளாரின் தூய்மை மிகு உன்னத குடும்பத்துக்குள்ளேயோ பாரிய குழப்பங்களை விளைவித்தவர்கள் தான் அப்துல்லாஹ் இப்னு உபை உட்பட முழு முனாபிக்குகள் கூட்டமும்.

இந்த சம்பவம் ஹிஜ்ரி 6 காலப்பகுதியில் நிகழ்ந்தது. நபியவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டு ஸஹாபாக்களை பயிற்றிவித்து அவர்களை ஆளுமைகளாக  உருவாக்கி ஒரு உன்னத சமூகத்தை கட்டியெழுப்பி கொண்டு வந்த நேரம் அது. பண்பாடுகளில் உயர்ந்த மனிதர்களான ஸஹாபாக்களுக்குள்ளேயே கைகலப்பை ஏற்படுத்தியவர்கள் இந்த முனாபிக்குகள்.

அன்னை ஆயிஷா (ரழி) மீதான அவதூறு தொடர்பிலான ஒரு வாக்கு வாதத்தில் ஸப்வான் (றழி) அவர்கள் ஒரு கல்லை எடுத்து இன்னொரு ஸஹாபிக்கு அடித்து அந்த ஸஹாபியின் தலையால் இரத்தம் வழிந்தோடியது. நபிகாளாரால் மிக சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்ட அந்த உன்னத ஸஹாபா சமூகத்துக்குள்ளேயே பாரிய குழப்ங்களை ஏற்படுத்தியவர்கள் தான் அப்துல்லாஹ் இப்னு உபை உட்பட முழு முனாபிக்குகள் கூட்டமும்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் நிதானமாக சிந்திக்கும் ஆபூபக்கர் (றழி) அவர்கள் கூட சற்று நிதானமிழந்து சில முடிவுகளை மேற்கொள்ளுமளவுக்கு முனாபிக்குகளின் சதி பலமாக அமைந்து இருந்தது. அபூபக்கர் (றழி) அவர்களின் சில முடிவுகளை மாற்றிக்கொள்ளும் படி குர்ஆன் வசனம் கூட இறங்கியது.

அன்னை ஆயிஷா (றழி) அவர்களின் விடயத்தில் முனாபிக்குகளின் சதிவலையில் சிக்கி அவதூறு பேசிய காரணத்துக்காக ஸஹாபா சமூகத்தை சேர்ந்த மூவர் 80 கசையடியும் பெற்றனர்.

அப்துல்லாஹ் இப்னு உபை உட்பட  முனாபிக்குகள் எப்படிப்பட்ட கொடிய பாதகர்கள் என்று புரிய வைக்க ஆயிரக்கணக்கான சம்பவங்களை அடிக்கிக்கொண்டே போகலாம். இவர்கள் எந்தளவுக்கு கொடியவர்கள் என்று புரிந்து கொள்ள இந்த உதாரணங்கள் மட்டும் போதும் என நினைக்கின்றேன்.

இப்படிப்பட்ட இந்த கொடிய பாதகர்களான முனாபிக்குகள் யார் யார் என்பதனை அல்லாஹ் ஏற்கனவே நபியவர்களுக்கு அறிவித்து இருந்தான். அவர்கள் யார் என்பதனை நபிகளார் ஒரேயொரு ஸஹாபிக்கு மாத்திரமே சொல்லியிருந்தார். இந்த பாவக்கறை நிறைந்த முனாபிக்குகள் யார் என்ற பட்டியலை நபியவர்கள் ஒரு ஸஹாபியை தவிர மற்ற எவருக்கும் கடைசி வரை பகிரங்கபடுத்தவில்லை இந்தக் கொடிய முனாபிக்குகளின் தலைவன் தான் இந்த அப்துல்லாஹ் இப்னு உபை.

இவனின் கொடிய செயல்களை பற்றி முழு மதீனாவும் அறிந்து வைத்திருந்தது. இவன் முனாபிக் என்பதனை நபியவர்களும் அறிந்து வைத்திருந்தார். அதனால் தான் நபியவர்கள் இவனுக்காக தொழுகை நடாத்த முற்பட்ட போது உமர் (றழி) அவர்கள் நபிகளாரை தடுக்க முற்பட்டார்கள்.

நபியர்களுக்கு தவறு நிகழப் போகும் சில சந்தர்ப்பங்களில் அல்லாஹ் உடனடியாக வஹீ அறிவித்து நபியவர்களை தவறு நிகழ்வதிலிருந்து தடுத்திருக்கிறான். உதாரணத்துக்கு உம்மீமக்தூம் (றழி) அவர்களுடன் தொடர்பான சந்தர்ப்பத்தை குறிப்பிடலாம். ஆனால் இங்கு நபியவர்களுக்கு இரண்டு தெரிவுகள் வழங்கப்பட்டிருந்தது என்பதனை புகாரியில் வரும் ஹதீஸினூடாக எம்மால் தெளிவாக புரிந்துகொள்ளலாம்.

நபியவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபையின் ஜனாஸா கடமைகள் அனைத்தும் முடித்ததன் பின்னரே அல்லாஹ் கண்டிக்கும் தோரணையில் அல்லாமல் இனிமேல் இப்படி செய்ய வேண்டாம் என அல்லாஹ் நபிகளாருக்கு அன்புக் கட்டளை இட்டான்.





ரஹ்மதுல் ஆலமீன் இந்த பிரபஞ்சத்துக்கே அருளாக அனுப்பப்பட்டவர். நபிகளாரின் உயர்ந்த அன்புக்கும், சிறந்த பண்புக்கும் ஈடாக உலகில் யாருமில்லை. அவ்வுயர்ந்த மாமனிதருக்கு அவர் மட்டும் தான் நிகர். அதனை தனது முன்மாதிரியால் உலகுக்கு எடுத்துக் காட்டிய வரலாற்று நிகழ்வு தான் தான் இது.

ஒரு மனிதருக்கு எந்தளவுக்கு அநியாயம் செய்ய முடியுமோ அந்தளவுக்கு நபிகளாருக்கு துரோகமும், அநியாயமும் செய்தவனின் ஜனாஸாவுக்கு இந்தளவு மரியாதை கொடுக்க யாரால் தான் முடியும்.

சுன்னா என்பது வெறுமனே சில இபாதத்கள் அடங்கிய சடங்கு அல்ல. அது ஒரு உயர்ந்த பண்பாடு. அந்த பண்பாட்டை அடுத்த மக்கள் காணும் போது வியந்து போவார்கள். நபிகளார் மிகவும் குறைந்த காலத்தில் உலகையே ஆழப் போகும் ஒரு அரசை உருவாக்கியது இந்த உயர்ந்த பண்பாட்டை அடிப்படையாக வைத்து தான்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் வேதனையளிக்கும் விடயம்

குர்ஆனை பின்பற்றுவோம், சுன்னாவை பின்பற்றுவோம் என்ற குரல் கேட்காத இடமில்லை. எங்கு பார்த்தாலும் குர்ஆன்,சுன்னா என்ற கோஷங்கள் தான்.

எந்தப் பக்கம் திரும்பினாலும் உலமாக்களின் குரல். இஸ்லாத்தின் பால் அழைப்பதாக கூறிக்கொள்ளும் குரல்கள். நபிமார்களின் வாரிசுகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்களே இன்று நிதானமிழந்து பண்பாட்டை இழந்து பேசுவதனையும் செயலாற்றுவதனையும் கண்கூடாக காண்கிறோம்.

இஸ்லாத்தை, குர்ஆனை, சுன்னாவை பின்பற்றவதாகவும் நாம் நபிமார்களின் வாரிசுகளாகவும் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் நம்மத்தியில் நபிகளாரின் பண்பாட்டில் சொற்பமாவது வர வேண்டும்.

ஒருவார காலமாக அனைத்து ஊடகங்களையும் ஆக்கிரமித்திருக்கும் ஒரு கல்லூரியில் நடந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களின் விடயத்தில் நாம் எந்தளவுக்கு குர்ஆன், சுன்னா கூறும் வழிகாட்டலின் அடிப்படையில் நடந்துகொள்கிறோம் என்று நாம் நம்மையே மீள்பரிசீலனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டும்.

 யார் சரியானவர்கள்? யார் பிழையானவர்கள்? என்று நாம் தீர்ப்பு சொல்லும் முன்னர் நான் மேலே குறிப்பிட்ட நபிகளார் உலக வரலாற்றிலேயே கொடிய மனிதர்களுடன் எந்தளவு பண்பாடாக நடந்துகொண்டார்கள் என்று தெளிவாக ஹதீஸ்களில் பார்த்தோம்.

முனாபிக்குகளின் தலைவனை பழிவாங்க அத்தனை சந்தர்ப்பமும் நபிகளாருக்கு கிட்டியது. ஆதாரபூர்வமாக நிரூபித்து நபியவர்கள் முனாபிக்குளின் தலைவனை சீரழித்திருக்க முடியும். ஆனால் நபிகளார் அவர்களுக்கு அவ்வாறு செய்ய அனுமதியிருந்தும் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.

காரணம் நபிகளாருக்கு நன்றாக தெரியும் மனிதர்கள் இஸ்லாத்தின் பால் கவர பயான்கள் மட்டும் போதாது உயர் பண்பாடுகளும் அவசியம் என்பது.

நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த குறிப்பிட்ட கல்லூரி சம்பந்தமான விடயத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணோ, குடும்பத்தினரோ முனாபிக்குகளின் தலைவனான அப்துல்லாஹ் இன்பு உபையை விட கொடியவர்கள் அல்ல. ஆனால் நாம் அனைவரும் நடந்துகொள்வதனை பார்த்தால் இதில் சம்பந்தப்பட்டோர்கள் முனாபிக்குகளின் தலைவனை விட கொடியவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அந்தளவு மோசமாக சீர்திருத்தம், தீமையை தடுத்தல் என்ற பெயரில் நடந்து கொள்கிறார்கள்.

இவ்வாறான சர்ச்கைகளின் போது நாம் நிச்சயம் நாம் நிதானமிழக்காது இப்படியான விடயங்களுக்கு குர்ஆன் சுன்னா எப்படி பண்பாடான ரீதியில் வழிகாட்டியுள்ளது என்பதனை சிந்திக்க வேண்டும்.

சுன்னாவின் வழிகாட்டலை போலவே குர்ஆனும் தெளிவாக வழிகாட்டுகிறது. இக்குர்ஆன் வசனத்தை வாசித்து புரிந்து நடை முறைபடுத்துங்கள். சமூகத்தில் பல தீமைகள் ஒழியும்.

49:6. முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால்இ அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.

சமூகவலைத்தளங்கிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ நாம் தகவல்களை பரிமாறும் போது கட்டாயம் குர்ஆனின் இந்த வழிகாட்டலை மனதில் கொள்ளுங்கள். இல்லாத பட்சத்தில் நீங்கள் இந்த குர்ஆன் வசனத்துக்கு மாறு செய்வதன் மூலம் நாம் மரணித்தாலும் அழியாத ஒரு பாவம் நம்மால் நிகழ வாய்ப்புக்கள் அதிகம். இன்று சமூக ஊடகங்களில் இந்த பெரும் பாவம் தான் மிகவும் சர்வசாதாணமாக நடந்துகொண்டிருக்கிறது.

ஒரு அறிஞர் கூறுவது போல

“நீ இறக்கும் போது உன்னுடன் சேர்த்து நீ செய்த பாவங்களும் மரணித்தால் நீதான் பாக்கியசாலி”

இது தான் உண்மையான நிலை சமூக ஊடகங்களில் நாம் அடுத்தவர்களை பற்றி பரப்பிய தவறான ஒரு செய்தி அது ஊடகங்களில் வரும் காலமெல்லாம் அதனை பரப்பியவர்களுக்கு அதற்குரிய தீமை எழுதப்பட்டுக்கொண்டேயிருக்கும். தவறான செய்தியை பரப்பியவர் மரணித்த போதும் கூட.

இப்படியான பயங்கர நிலையிலிருந்து வல்ல இறைவன் நம்அனைவரையும் பாதுகாப்பானாக.

இறுதியாக ஒரு அனுபவத்தை பகிர்ந்து முடிக்கின்றேன்.

அண்மையில் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதி அனைவரையும் பார்த்து ஒரு கேள்வியை கேட்டார். ஒரு இளைஞன் அல்லது யுவதி ஒரு தவறு செய்வதனை நீங்கள் காண்கிறீர்கள்.

அப்படி கண்டால் நீங்கள் அடுத்து எடுக்கும் நடவடிக்கை என்னவென்று சபையோரிடம் கேள்வி எழுப்பினார். பலரும் பலவாறாக பதிலளித்து இருந்தார்கள்.

 எல்லோரின் பதிலையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த அதிதி இவ்வாறாக பதிலளித்தார்.

முதலில் நீங்கள் தவறு செய்பவரை காணும் போது

அவர் எனது மகன்,மகள், சகோதரன், தாய் ,தந்தை எனது குடும்பத்தின் நெருங்கிய உறவினன் ,எனது சிறந்த நண்பன் என்ற எண்ணத்தை மனதில் கொள்ளுங்கள். அதன் பின்னர் அவனின் தவறை திருத்துவதற்காக முயற்சியுங்கள் என்று சுருக்கமாக கூறினார்.

BY : ARM INAS
பலூன் விவகாரமும், சுன்னாவை மறந்த தாஈக்களும். பலூன் விவகாரமும், சுன்னாவை மறந்த தாஈக்களும். Reviewed by Madawala News on April 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.