பேசுபொருளான பேஸ்புக் கருத்துக்கு அய்யூப் அஸ்மின் முஸ்லிம் சிவில் சமூகத்தினரிடம் அளித்த விளக்கம்...


திருகோணமலை, சண்முகா இந்துக்கல்லூரியின் ஹிஜாப் விவகாரம்
 தொடர்பில்
தனது கருத்துக்களை அ.அஸ்மின் அவர்கள் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்,
இதுகுறித்து தமக்கு விளக்கமளிக்குமாறு கூறி யாழ் முஸ்லிம் சிவில் சமூகத்தினர் நேற்று இரவு (29-04-2018) அய்யூப் அஸ்மின் அவர்களை நேரில் சென்று சந்தித்துக் கோரியிருந்தனர். இதன்போது அவர் முன்வைத்த கருத்துக்களின் சுருக்கம்
ஹிஜாப் இஸ்லாமியப் பெண்களின் அடிப்படை உரிமை: அதனை அணியக்கூடாது என்று கூறி இந்துக் கல்லூரி சமூகம் ஆர்ப்பாட்டம் நடாத்தியமை அடிப்படை மனித உரிமை மீறல்சார்ந்த செயற்பாடாகும்.

 அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படல் அவசியமாகும். இந்த விடயங்களில் எனக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. ஹிஜாபிற்கான சட்ட ரீதியான உரித்துப் பேணப்படுதல் அவசியமாகும்.

ஆனால் குறித்த சண்முகா இந்துக் கல்லூரியில் அதனை அணிந்துகொண்டு சென்றே நாம் கற்பிப்போம் என்று அடம்பிடிப்பதில் எவ்வித நியாயங்களும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. 

ஹபாயா ஹிஜாப் அணிய விரும்பும் முஸ்லிம் ஆசிரியையகள் சண்முகா இந்துக்கல்லூரி தவிர்ந்த வேறு ஏதாவதொரு பாடாசாலையில் சேவையாற்ற முடியும். இந்துக்கள் தமது கல்லூரியில் ஹபாயா அணியவேண்டாம் என ஆர்ப்பாட்டம் செய்து எதிர்க்கின்றபோது நாம் அவர்களது உணர்வுகளை மதித்து, விட்டுக்கொடுப்போடு நடப்பது முஸ்லிம் மக்களுக்கே நன்மை பயக்கும். 

எனது இந்தக் கருத்துக்களில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம், ஆனால் இலங்கை முஸ்லிம்களின் நலன்கள் குறித்துச் சிந்திக்கின்றபோது இந்த நிலைப்பாட்டின் பயனை உணர்ந்துகொள்ளமுடியும். நாம் இந்த நாட்டிலே இரண்டு இன மக்களாலும் நெருக்குதலுக்கு உட்படுகின்ற சமூகமாக வாழ முடியாது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சமயோசிதமாக சிந்தித்தே நாம் செயலாற்றவேண்டும். 

உணர்ச்சிவயப்பட்டு, உணர்ச்சிக் கோசங்களை முன்வைப்பதில் எவ்வித பயனும் எவருக்கும் ஏற்பட்டு விடமாட்டாது.

“சண்முகா இந்து மகளிர் கல்லூரி” 150 வருடகால பழமையைக் கொண்ட பாடசாலையாகும், அது இந்து மாணவியர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கோவில் பாடசாலையாகவே ஆரம்பிக்கப்பட்டது, பின்னர் அது அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டிருக்கின்றது; அவ்வாறு அது சுவீகரிக்கப்படுகின்றபோதும் சில மரபுகள் அங்கு தொடர்ந்தும் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன. 

இப்போது சட்டம் உரிமை என்று கோசமிட்டுக்கொண்டு அந்த மரபுகளை அவர்கள் விட்டுத்தரவேண்டும் என்று நாம் கோரிக்கைவிடுத்து அமைதியின்மையை ஏற்படுத்துவது சிறப்பானதல்ல. அவர்கள் தமது மரபுரிமையினைப் பேணுவதற்கு சந்தர்ப்பம் கேட்கின்றபோது நாம் முஸ்லிம் மக்கள் அதனை பெருந்தன்மையோடு பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.

இலங்கை முஸ்லிம்களாகிய நாம் எமது ஹிஜாபிற்கான உரிமையினைப் பேணுவோம் என்பதற்கும் இந்தப் பாடாசாலையில்தான்  பேணுவோம் என்பதற்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கின்றன. நான் ஹிஜாப் உரிமையினைப் பேணுவோம் என்கின்றேன், ஆனால் இந்தப் பாடசாலையில் அல்ல என்கின்றேன். ஹிஜாப் அனுமதிக்கப்படாத பல இடங்கள் இந்த நாட்டிலே இருக்கின்றன, அதேபோன்று ஹிஜாப் அனுமதிக்கப்பட்ட பல இடங்களில் எமது பெண்கள் ஹிஜாபை அணியாமலும் இருக்கின்றார்கள். 

இதனையும் நாம் கருத்திலெடுத்தல் அவசியமாகும். எத்தனையோ முஸ்லிம் ஆசிரியைகள் ஹிஜாபை அணிவதில்லை. இதுவிடயங்களிலும் நாம் முதலில் எமது கவனத்தைச் செலுத்துவது நல்லது.

இலங்கையில் இருக்கின்ற பல பாடசாலைகளில் முஸ்லிம் தமிழ் மாணவர்கள் அனுமதிக்கபப்டுவதில்லை, முஸ்லிம் ஆசிரிய ஆசிரியைகள் அனுமதிக்கபப்டுவதில்லை இதுவிடயங்களையும் நாம் கருத்திலெடுக்கவேண்டும்.

 இலங்கை முஸ்லிம்கள் எத்தனையோ அடிப்படையான பிரச்சினைகளை எதிர்நோக்கும் இந்த சமயத்தில் ஹிஜாப் விடயத்தைப் பூதாகரமாக்கி, இப்போதிருக்கின்ற சுமூகமான சூழ்நிலைகளைக் குலைத்துக்கொள்வது ஆரோக்கியமானதல்ல.

இதுவிடயத்தில் தமிழ் அரசியல் தலைவர்களும் கூடுதல் பொறுப்போடு நடப்பதற்குக் கடமைப்பட்டிருக்கின்றார்கள்; தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைப்பதில் இத்தகைய நிகழ்வுகள் பாரிய தாக்கம் செலுத்தும் என்பதையும் அவர்கள் உணர்ந்துகொள்தல் அவசியமாகும். என்றும் குறிப்பிட்டார்.

தகவல் எம்.எல்.லாபிர்

பேசுபொருளான பேஸ்புக் கருத்துக்கு அய்யூப் அஸ்மின் முஸ்லிம் சிவில் சமூகத்தினரிடம் அளித்த விளக்கம்... பேசுபொருளான பேஸ்புக் கருத்துக்கு அய்யூப் அஸ்மின் முஸ்லிம் சிவில் சமூகத்தினரிடம் அளித்த விளக்கம்... Reviewed by Euro Fashions on April 30, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.