நாளைய தினம் மின்வெட்டு நேரம் குறைப்பு.

துறைமுக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இன்று (23) மதிய உணவு வேளையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை மற்றும் அதிகரித்துள்ள வாழ்க்கை செலவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும், இதன் காரணமாக அருகில் உள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
(எம்.ஆர்.எம்.வசீம்)
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இலஞ்சம் வழங்கும் வேட்பாளர்களிடமிருந்து மக்கள் ஏமாந்துவிடக்கூடாது.
தேர்தல் நடவடிக்கைக்காக அரச அதிகாரம் மற்றும் வளங்கள் பயன்படுத்தப்படுவதை தடுப்பது அரச அதிகாரிகள் பொறுப்பாகும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிடைக்கப்பெறும் தேர்தல் சட்ட மீறல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சிலர் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச அதிகாரம் மற்றும் அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக பல முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த நடவடிக்கைகளை தடுப்பதற்காக அரச அதிகாரிகள், குறிப்பாக உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள், நகர ஆணையாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதேபோன்று வேட்பாளர்களும் மக்கள் பிரதிநிதியாவதற்கு தகுதியானவர்கள் என்ற வகையில் செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
நாடு பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், மக்கள் பொருளாதார கஷ்டத்தில் இருக்கின்றனர். அதனால் உணவுப் பொதிகள், வேறு உதவிகள் அல்லது 5 ஆயிரம் ரூபா பணம் போன்ற விடயங்களுக்காக மக்கள் தங்களதும் தங்கள் பிள்ளைகளினதும் எதிர்காலத்தை அழித்துக்கொள்ளக்கூடாது.
இதுதொடர்பாக மக்கள் மிகவும் சிந்தித்து செயற்பட வேண்டும். ஏனெனில், வேட்பாளர்கள் இன்று வழங்கும் 5 ஆயிரம் ரூபாவுக்கு பதிலாக தேர்தலுக்கு பின்னர் 50 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகம் பெற்றுக்கொள்ள முடியும்.
பணம், உதவிகளை வழங்கும் வேட்பாளர்கள் மக்களின் உண்மையான வேட்பாளர்களாகப் போவதில்லை. அதனால் அவதானமாக இருக்கவேண்டும்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, எமது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளின் முதற்கட்ட நடவடிக்கைகளை தற்போது நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம். அதனால் தேர்தல் சட்டம் மீறப்படுகின்றமை தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு தேவையான தொலைபேசி இலக்கங்களை எதிர்வரும் தினங்களில் அறிவிக்கவுள்ளோம் என்றார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதி ஒருவர் இன்று ஆரம்பமான 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அது நடைமுறைப்படுத்தப்படாமல் ஆயுள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து மேலும் நான்கு கைதிகளும் 2022/23 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கைதிகள் வெலிக்கடையில் உள்ள மகசின் சிறைச்சாலை பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்றுவர்.
இதேவேளை, யாழ்ப்பாண சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரும் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2023 ம் ஆண்டுக்கான கல்வி பொது உயர்தர பரீட்சைகள் திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்று வருகின்றது .
இன்று காலை ஆரம்பமான பரிட்சை நடவடிக்கைகள் மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு பரீட்சை நிலையங்களுக்கு செல்வதை காணக்கூடியதாக இருந்தது .
அத்தோடு இவ் மாவட்டத்தில் பாதுகாப்பு கடமைகளில் பொலிசார் ஈடுபட்டதையும் காணக்கூடியதாக இருந்தது .
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் கிண்ணியா மூதூர் வெருகல் தம்பலகாமம் முள்ளிபொத்தானை போன்ற கல்வி வலயங்களில் பரிட்சை நிலையம் ஏற்படுத்த பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்தது .
மாணவர்கள் ஆர்வத்தோடு பரிட்சை நிலையத்துக்கு சென்றதையும் அவதானிக்க முடிந்தது .
பாறுக் ஷிஹான்
மாட்டு இறைச்சியின் விலையை உடனடியாக 1200 ருபாவாக குறைக்கவுள்ளோம்
எதிர்வரும் காலங்களில் சம்மாந்துறை பிரதேச சபையை எமது அணி கைப்பற்றியதுடன் மாட்டு இறைச்சியின் விலையை உடனடியாக 1200 ருபாவாக குறைக்கவுள்ளோம்.தமிழ் பேசும் மக்கள் அரசியல் அனாதைகளாக தற்போது இருக்கின்ற நிலையில் அதனை நிவர்த்தி செய்ய நாம் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என என நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகரும் சமூக சேவையாளருமான கலாநிதி யூ.கே. நாபீர் குறிப்பிட்டார்.
உள்ளுராட்சி தேர்தல் -2023 தொடர்பில் அம்பாறை ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
உள்ளுராட்சி மன்ற வேட்புமனுத்தாக்கல் நிறைவுற்றுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் சம்மாந்துறை பிரதேச சபைக்காக கட்டுப்பணம் மற்றும் வேட்புமனுத்தாக்கல்களை மேற்கொண்டுள்ளோம்.எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளோம்.சம்மாந்துறை சகல வளங்களையும் கொண்ட பிரதேசமாகும்.இங்கு தமிழ் முஸ்லீம் ஏனைய சமூக அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளோம்.
கடந்த 2 தசாப்தங்களாக பல அரசியல்வாதிகளை அமுக்க குழுக்கள் போல் அழுத்தங்களை கொடுத்து வருகின்றோம்.சம்மாந்துறை பகுதிகளில் பல கட்சிகள் கால் ஊன்றி காணப்பட்ட போதிலும் எதுவித உரிமைகளையோ அல்லது அபிவிருத்தியையோ பெற்றதாக நாம் காணவில்லை.எனவே எதிர்வரும் காலங்களில் எமது பகுதி பிரச்சினைகளை நாம் இனங்கண்டுள்ளோம்.தற்போது மக்களுக்கு தேவையானது கொள்கை ரீதியான அரசியல் அல்ல.தற்போது மக்களுக்கு வாழ்வாதாரம் சார்ந்த அபிவிருத்தியே குறிக்கோளாக காணப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு எவ்வாறு முகம் கொடுக்க முடியும் என்ற குறிக்கோளில் எமது மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.எனவே தான் எதிர்வரும் தேர்தலில் மக்களின் பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கு எதிர்பார்த்து களமிறங்கியுள்ளோம்.100 வீதம் இப்பிரச்சினைகளை தீர்க்க முடியாத நிலையிலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்காவது அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.அத்துடன் எமது திட்டங்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக அறிவிக்கவுள்ளோம்.
குறிப்பாக சகல மக்களாலும் தற்போது நுகரப்படுகின்ற இறைச்சி வகைகளில் மாட்டு இறைச்சியின் விலை ஏனைய பிரதேசங்களை விட சம்மாந்துறை பகுதியில் அதிகளவில் காணப்படுகின்றது.இங்கு விலை அதிகரிப்பினால் மாட்டு இறைச்சியை விற்பவர்களை குறை கூற முடியாது.பிரதேச சபையின் குத்தகை பெறுமானம் அதிகமாக இருப்பதே விலையேற்றத்திற்கு பிரதான காரணமாகும்.இதனால் மாட்டின் விலை எற்றப்படுகின்றது.
நாளடைவில் மக்களின் பொருளாதார விடயத்தில் தாக்கம் செலுத்துகின்றது.இதனை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்பதை நாம் திட்டமிட்டுள்ளோம்.எதிர்வரும் காலங்களில் சம்மாந்துறை பிரதேச சபையை எமது அணி கைப்பற்றியதுடன் மாட்டு இறைச்சியின் விலையை உடனடியாக 1200 ருபாவாக குறைக்கவுள்ளோம்.தமிழ் பேசும் மக்கள் அரசியல் அனாதைகளாக தற்போது இருக்கின்ற நிலையில் அதனை நிவர்த்தி செய்ய நாம் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டத்தில் பொருளாதார ரீதியான அபிவிருத்தி முன்னெடுப்துடன் பாரிய உரிமை இருப்பு சார்ந்த விடயங்களையும் இளைஞர்களின் வேலைவாய்ப்பினையும் முன்னெடுக்கவுள்ளோம்.எம்மதமும் சம்மதம் என்ற நிலையில் எமது வேலைத்திட்டங்கள் அமையும் என நம்பிக்கை வெளியிட்டார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் என்ற வகையில் நானாக யாரையும் கட்சியிலிருந்து விரட்டியது கிடையாது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை கட்சியில் இணைத்துக்கொண்டது போன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை இணைத்துக்கொள்வீர்களா என்று ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.ஐ.முகாஜிரீன் கேட்டதற்கே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை தாய்வீடாக கருதும் யாருக்கும் இந்தக் கதவு திறந்திருக்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.
ஆனால், அவர்கள் இணைய விரும்புகின்ற போது இந்தக் கட்சியின் பாரம்பரியத்துக்கமைய, கட்சியில் இருக்கும் அனைத்து முக்கியஸ்தர்களுடனும் கலந்துரையாடியதன் இறுதியில் சாத்தியமான முடிவை எடுக்கலாம்.
எதிர்காலத்தில் கட்சியில் யாரும் இணைய விரும்பினால், அது தொடர்பாக பரிசீலித்து இணைக்கப்படுவார்கள் என்றார்.
ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல் வழியாக நேற்று இரவு நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 6 இலட்சம் மதிப்பிலான 250 ஜோடி காலணிகள், ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடத்தலில் ஈடுபட்ட கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராமேஸ்வரம் சுங்கத்துறை கண்காணிப்பாளருக்கு சனிக்கிழமை இரவு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இன்று மாலை ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகள் சேராங்கோட்டை கடற்கரையில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது சேராங்கோட்டை கடற்கரை மணலில் வெள்ளை சாக்கு மூட்டைகள் சில புதைத்து வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அதை சோதனை செய்த போது சுமார் 15க்கும் மேற்பட்ட சாக்குப் பைகளில் 250 ஜோடி காலணிகள் இருந்தது.
இதனையடுத்து 250 ஜோடி காலணிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து விசாரணை நடத்தினர்.
சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 6 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 250 ஜோடி காலணிகள் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக தயாராக கடற்கரை மணலில் பதுக்கி வைத்தது தெரிய வந்துள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கடத்தல்காரர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கைக்கு சமையல் மஞ்சள், யூரியா உரம், வலி நிவாரணி, மருத்துவ பொருட்கள் கடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது இலங்கைக்கு கடத்த இருந்த 250 ஜோடி காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டது பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.