சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது .

பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியைகளுக்கு சேலையைக் கட்டாயமாக்கும் சுற்று நிருபம் இன்று (23) வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாடசாலை ஆசிரியர்கள் பணிக்காக சேலைக்குப் பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வருகை தந்துள்ளனர்.
இதன் காரணமாகவே இந்த புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளதாக செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
பாணமுர - எம்பிலிபிட்டிய பிரதான வீதியில் பாணமுரவில் பொலிஸார் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது நாய் மோதியதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
திங்கட்கிழமை இரவு சோதனையின் பின்னர் பனமுர பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று பல மோட்டார் சைக்கிள்களில் பொலிஸ் நிலையத்திற்கு திரும்பிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது பொலிஸ் அதிகாரி ஒருவரின் மோட்டார் சைக்கிள் முன் நாய் ஒன்று ஓடியது. மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பனாமுர பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான கான்ஸ்டபிள் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்
நாட்டில் போராட்டத்தின் ஊடாக மற்றுமொரு ஆட்சி மாற்றத்திற்கு இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்தார்.
அவ்வாறு ஆட்சிமாற்றம் செய்வதற்காக போராட்டத்தில் ஈடுபடுவார்களாயின், முப்படையினரை பயன்படுத்தி அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இது வன்முறை செயலாகும். அவ்வாறு தீ வைப்பதற்கு யார் அவர்களுக்கு அதிகாரம் வழங்கினார்கள் எனவும் ஜனாதிபதி சபையில் கேள்வி எழுப்பினார்? தீ வைத்தவர்களின் பின்னால் யார் செயற்பட்டார்கள் என்பதை கண்டறிய விசேட செயலணி ஒன்றை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்தோடு, தேர்தல் முறைமையிலும் மாற்றம் ஏற்படுவது அவசியம் என தெரிவித்த ஜனாதிபதி, விருப்பு வாக்களிப்பு முறை இருக்கும் வரையில் ஊழல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமெனவும் சுட்டிக்காட்டினார்.
நாடு வங்குரோத்தடைய ராஜபக்ஷர்களும் அவர்களின் சகாக்களுமே காரணம். அதேபோல் 2004ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் ஜே.வி.பியும் ராஜபக்ஷவும் இணைந்து மக்களை ஏமாற்றியதன் விளைவாகவே நாடு வீழ்ச்சி கண்டது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசிம் தெரிவித்தார்.
அடுத்த வருட அரச வருமானத்தை நூற்றுக்கு 69 வீதமாக அதிகரித்துள்ளது. இதன் சுமையும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. நாடு அந்த அளவுக்கு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைவதற்கான காரணத்தை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து அறிக்கையிட்டுள்ள பொருளாதார நிபுணர்களின் கூற்றின் பிரகாரம் 2004க்கு பின்னரே இந்த பிரச்சினை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதன் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபயராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, பி,பி, ஜயசுந்தர, நிவாட் கப்ரால் ஆகியோரே பொருளாதார கொலையாளிகள் என்றே எமக்கு கூறவேண்டி ஏற்படுகின்றது.
அதேபோன்று கடன் வட்டி செலுத்துவதற்கு அரச வருமானத்தில் நூற்றுக்கு 72வீதம் செலுத்தவேண்டி இருந்தது என்றார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சீரான வானிலை .
கடல் பிராந்தியங்களில்
****************************
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் சீரான வானிலையே காணப்படும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 40 km வேகத்தில் வடமேற்குத் திசையில் இருந்து அல்லது தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
காங்கேசன்துறை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் கொழும்பு தொடக்கம் காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.
-ஹஸ்பர்_
கிண்ணியா குறிஞ்சாக்கேணி இயந்திர படகு பாதை கோர விபத்து ஏற்பட்டு இன்றுடன் (23.11.2022) ஒரு வருடமாகின்றது .கடந்த 2021.11.23 ந் திகதி ஏற்பட்ட இவ் விபத்தில் எட்டு அப்பாவி உயிர்கள் பலியாகின இதில் ஐந்து மாணவர்களும் மூன்று பொது மக்களும் பலியாகினர்.
இப்பலியான சம்பவத்தினையடுத்து இன்று (23) பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலையினால் எதிர்ப்பு பேரணி ஒன்று இடம் பெற்றது. இப் பேரணி பாடசாலை முன்றலில் ஆரம்பித்து குறிஞ்சாக்கேணி பாலம் வரை சென்றடைந்தது இப்பேரணியில் பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் ,பொது மக்கள் கிண்ணியா பிரதேச செயலாளர் உட்பட வலயக்கல்வி பணிப்பாளர் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப்பேரணியில் சென்றவர்கள் பால நிர்மாண பணியினை துரிதகதியில் செய்து தருவதோடு இரு பகுதி மக்களினது போக்குவரத்தினை இலகுபடுத்தி தருமாறும் வேண்டிக் கொண்டனர்.அத்துடன் மேலும் அப்பாவி உயிர்களை பலி கொடுக்க நாங்கள் தயாரில்லை என்றும் அவ்வாறான சம்பவம் ஒன்று இனிமேலும் ஏற்படக்கூடாது என்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இக்கோரிக்கைகளை முன்வைத்து மகஜர் ஒன்றையும் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனியிடம் கையளித்தனர்
இதே வேலை கிண்ணியா பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயிர் நீத்தவர்களுக்கான துஆ பிரார்த்தனையும் இனி அவ்வாறானதொரு நிகழ்வு ஏற்படக் கூடாது என்றும் துஆ பிரார்த்தனை செய்து கொண்டனர்.
இவ் பிரார்த்தனையின் போது உயிர் நீத்தவர்களின் குடும்பங்கள்,உலமா சபையினர்,கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரிகள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
உலகக்கிண்ண உதைபந்து போட்டி கட்டாரில் கடந்த 20 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விளையாடும் அணிகளுக்கு இந்தியாவிலும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். உலகக்கிண்ண உதைபந்து போட்டி தொடங்கிய நாளன்று தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணியின் டி-சர்ட்டுகளை அணிந்து கோலாகலமாக கொண்டாடினர்.
அந்த வகையில், கேரள மாநிலம் கொல்லத்தில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஏராளமான கால்பந்து ரசிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென பிரேசில், அர்ஜென்டினா அணி ரசிகர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் எத்தனை பேருக்கு காயம் ஏதும் ஏற்பட்டது? என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
உள்ளூர் பிரமுகர் ஒருவர் இரு அணி ரசிகர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இந்த மோதல் தொடர்பாக புகார் ஏதும் அளிக்கப்படவில்லை. எனினும் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதேபோல் பாலக்காட்டிலும் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கால்பந்து ரசிகர்கள் மோதிக் கொண்டபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது
⏩ அருவக்காடு மற்றும் களனி குப்பை அகற்றும் தொகுதி 90% நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன....
அருவக்காடு குப்பைத் திட்டத்தை முறையாக விரைவாக மீள ஆரம்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலை காரணமாக இந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அருவாக்கலு குப்பைத் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் எதிர்காலத்தில் திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் தொடர்பில் அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவிக்கும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடல் இன்று (22) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 40 பேர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்கான வீடுகள் அழிந்தன. இதன் காரணமாக கொழும்பு நகரில் கழிவுகளை அகற்றுதல் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் முறையான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் கொழும்பு நகரில் நாளாந்தம் சேகரிக்கப்படும் சுமார் 1200 மெற்றிக் தொன் குப்பைகள் களனி, வனவாசல இருந்து சுமார் 170 கிலோமீற்றர் தொலைவில் உள்ள புத்தளம், அருவக்காடு குப்பைத் தளத்திற்கு புகையிரதம் மூலம் கொண்டு செல்லப்படும்.
தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் அருவக்காடு குப்பைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கான மதிப்பிடப்பட்ட தொகை 130 மில்லியன் டொலர்கள் ஆகும். அருவக்காடு கழிவு அகற்றும் தொகுதி மற்றும் களனி, வனவாசல கழிவுப் பரிமாற்ற நிலையத்தின் 90% நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன. சீனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி என்ற சீன நிறுவனம் இங்கு கட்டுமான பணிகளை செய்து வருகிறது.
தனிப்பட்ட இலாபத்திற்குப் பதிலாக மனித தேவைகளை கருத்தில் கொண்டு செயற்படுவதன் மூலமே முறையான கழிவு முகாமைத்துவத்தை அடைய முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். எனவே அரசியல் கருத்து எதுவாக இருந்தாலும் இது போன்ற நல்ல திட்டங்கள் தொடர்ந்தும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றார்.
இந் நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்களான அருந்திக பெர்னாண்டோ மற்றும் தேனுக விதானகமகே, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் அனில் விஜேசிறி, அருவக்காலு குப்பை திட்டப் பணிப்பாளர் சரத் பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் குழு கலந்துகொண்டனர்.
முனீரா அபூபக்கர்
ஹஸ்பர் ஏ ஹலீம்_
2021 - 2022 ம் ஆண்டுகளில் முறையான முறையில் சிகரட்டிற்கான வரி அறவிடப்படாமையினால் சுமார் ரூபா 50 பில்லியன்களை அரசாங்கம் இழந்துள்ளது. இழக்கப்பட்ட இத்தொகையை முன்மொழியப்படவுள்ள 2023 ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறேன் என மாவட்ட ஒருங்கிணைப்பு இளைஞர் பாராளுமன்ற அமைச்சர் ற.முஹம்மது ஸபான் தெரிவித்தார்.
மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற இளைஞர் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்
கொவிட் -19 தொற்று காலத்தில் உலகலாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள், இலங்கையை மிகவும் பாதித்துள்ளமை தொடர்பாக நாம் அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாக நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரித்து செல்கின்றது. மேலும் எமது நாடு, கடந்த காலத்தில் ஏற்றுமதி உட்பட சுற்றுலாத்துறையினூடாக ஈட்டிக்கொள்ளக் கூடிய பெருந்தொகையை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக நாட்டின் வருமானம் சரிவதோடு, அத்தியவசிய பொருட்களின் விலையேற்றமும் உயர்வடைந்து வருகின்றன . இதனால் சாதாரண வாழ்க்கையை கொண்டு செல்வதற்கான பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த அசாதாரண நிலைமையில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டியது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளின் பிரதான பொறுப்பாகும்.
இப்பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக பல்வேறு ஆலோசனைகள் நிதியமைச்சினால் முன்வைக்கப்பட்டன, அவற்றில் சில ஆலோசனைகளுக்கு பொதுமக்களின் எதிர்ப்புக்கள் வெளியாகின. எனினும் பொது மக்கள் பெரிதும் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தாத சிகரட் மீதான வரியை அதிகரிப்பதற்கு 2019,2020,2021, ஆம் ஆண்டின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதியமைச்சினால் முன்மொழியப்படவும் இல்லை, கவனம் செலுத்தப்படவும் இல்லை. இந்த தீர்மானத்தின் மூலமாக நாட்டிற்கு கிடைக்கப்பெறவிருந்த சுமார் ரூபா 100 பில்லியன்கள் இழக்கப்பட்டுள்ளது. அதாவது இலங்கை புகையிலை நிறுவனம் ( CTC ) எனும் பெயரில் இயங்கி வரும் 84.14 வீதமான பங்குகளிற்கு உரிமம் கொண்ட பல்தேசிய நிறுவனமான பிரித்தானியா, அமெரிக்கா புகையிலை நிறுனத்திடமிருந்து, பெற்றிருக்க வேண்டிய தொகையான ரூபா 100 பில்லியன்கள் எனும் தொகை இழக்கப்பட்டமையானது, நாட்டின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளமைக்கு தாக்கம் செலுத்தும் காரணிகளில் மிக பிரதான காரணியாகும். கடந்த இரண்டு வருடங்களாக அத்தியவசிய பொருட்களின் வரி மென்மேலும் அதிகரித்துள்ளதோடு, அத்தியவசியமற்ற பொருளான சிகரட் மீதான வரி எந்தவொரு காரணத்திற்காகவும் அதிகரிக்கப்படவில்லை. இச்சம்பவமானது புகையிலை நிறுவனம் நிதியமைச்சின் மூலமாக பல தந்திரோபாயமான நுணுக்கங்களை மேற்கொண்டு வருகின்றமை வெளிப்படுகின்றன
எனது சென்ற வருட முன்னெடுப்பில் ஊடாக 2022ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் சிகரெட் மீதான உற்பத்தி வரி விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது இதன் மூலம் ரூபா எட்டு ( 8 ) பில்லியன் வருமானம் ஒன்றை அரசாங்கம் பெற்றுக் கொண்டது.
கடந்த காலங்களில் எவ்வாறான முறையில் சிகரட் மீதான விலையேற்றம் ஏற்பட்டது என்பதினை இவ்வட்டவணையில் காண்பிக்கப்பட்டுள்ளது
வருடம் விலை ( ரூபா )
2015 33
2016 35
2017 50
2018 55
2019 65
2020 65
2021 65
2022 70
கடந்த 2019,2020,2021 ம் ஆண்டு காலப்பகுதிகளில் சிகரட் மீதான வரி அதிகரிப்பு இடம்பெறவில்லை. இவ்விரண்டு வருடங்களுக்குள் முறையாக சிகரட் வரி அதிகரிப்பை குறைந்த பட்சம் ரூபா 20.00 இனால் உயர்த்தியிருப்பின், சுமார் ரூபா 100 பில்லியன்களை அரசாங்கம் வருமானமாக பெற்றிருக்கலாம்.
இழக்கப்பட்ட இவ்வரி வருமானத்தின் பெறுமதியை கீழ்காணும் உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்.
இந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஐந்து ரூபாவினால் வரி அதிகரிக்கப்பட்டது இதன்மூலமாக நாட்டிற்கு எட்டு (8) மில்லியன் வருமானத்தினை அரசாங்கம் பெற்றிருந்தது
- [ ] தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கு செலவான தொகை : ரூபா 100 பில்லியன்கள்
- [ ] மொரகஹாகந்த நீர்ப்பாசனத் திட்டத்திற்கு செலவான தொகை : ரூபா 91 பில்லியன்கள்.
- [ ] விமானநிலைய நுழைவிற்கான அதிவேக நெடுஞ்சாலை அமைத்தல் திட்டத்திற்கு செலவான தொகை : ரூபா 39 பில்லியன்கள்
- [ ] மத்தளை விமான நிலையத்திற்கு செலவாகிய தொகை : ரூபா 21 பில்லியன்கள்
நிதியமைச்சின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கையால் நாட்டிற்கு கிடைக்கப்பெற வேண்டிய சுமார் ரூபா 100 பில்லியன்கள் இழக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இடம்பெற்றிருக்காவிடின் அரசாங்கம் அத்தியவசிய பொருட்களுக்கான வரியை இந்தளவு அதிகரித்திருக்க நேரிட்டு இருக்காது.
இறுதியாக 2019 ம் ஆண்டு சிகரட் மீது வரியை அதிகரித்தமையினால் இலங்கை அரசாங்கத்திற்கு ரூபா 94.3 பில்லியன்கள் வருமானம் அதிகரித்துள்ளது என 2020 ம் ஆண்டு மத்திய வங்கியின் அறிக்கையில் ( 155 ம் பக்கம் ) குறிப்பிடப்பட்டுள்ளது . இதற்கு முன்னர் மத்தியவங்கி அறிக்கைகளில் சிகரட் மீதான வரி அதிகரிப்பானது ஒரு வெற்றியளிக்கும் வழிமுறை என்பதை நிரூபித்திருந்தாலும், அத்தியவசிய பொருட்கள் மீதான வரி மென்மேலும் அதிகரிக்கும் காலப்பகுதியில் மற்றும் அரசாங்கம் மக்களின் ஆதரவை எதிர்ப்பார்க்கும் இத்தருணத்தில் நிதியமைச்சானது இரண்டு வருடங்களாக சிகரட் மீது வரி அதிகரிப்பை மேற்கொள்ளாமல் இருந்தது ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகின்றது.
மேலும் சிகரட்டிற்கான வரியை அதிகரிப்பதில் தாமதம் ஏற்படல், முறையற்ற விலை அதிகரிப்பு போன்ற புகையிலை நிறுவனத்திற்கு நன்மை பயக்கும் பல விடயங்களிற்கு முக்கிய காரணமாக அமைவது, இதுவரையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிகரட் மீதான " முறையான வரி முறைமை " இல்லாமல் இருப்பதே ஆகும். தற்போதுள்ள வரி அறவீட்டு முறைமையான சிகரட்டின் நீளத்திற்கு வரி அறவிடும் சிக்கலான வரிக் கொள்கையை நீக்குவதன் மூலமும், விஞ்ஞான ரீதியான எளிமைப்படுத்தப்பட்ட வரிக்கொள்கையை கொண்டுவருவதன் மூலமும் சிகரட் மீது அதிக பட்ச வரியை அறவிட்டு அரசாங்கத்தின் இலாபத்தை அதிகரித்துக்கொள்ள முடிவதோடு, சட்டவிரோதமான முறையில் புகையிலை நிறுவனம் ஈட்டி வரும் இலாபத்தை தடுக்கவும் முடியும். 2021 ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட உரையில் " வரிக்கொள்கை " எனும் தலைப்பின் கீழ் பயன்தகு வரிமுறைமை அறிமுகப்படுத்தப்படும் என அப்போதைய பிரதமரும் நிதியமைச்சருமான கௌரவ. மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கூறப்பட்டது. எனினும் இதுவரையில் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் நிதியமைச்சினால் மேற்கொள்ளப்படவில்லை. நாட்டின் நலனுக்காக சிகரட்மீது வரி விதிக்காது, பல்தேசிய நிறுவனத்திற்கு சாதகமாக கொள்கை முடிவுகளை எடுப்பதே வரலாறு முழுவதும் நிதியமைச்சின் செயற்பாடாக இருந்து வருகிறது. இந்த நிலைமையை சீர்செய்ய வேண்டியது அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகும்.
மேலும் சிகரட் மற்றும் புகையிலை மீது வரியை அதிகரிக்கும் போது பாவனையில் சடுதியான வீழ்ச்சி ஏற்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது ( உலக சுகாதார ஸ்தாபனம் WHO / NMH / PND / 14.2 ). பொதுவாக சிகரட் மீது 10 வீதம் வரி அதிகரிக்கப்படும் போது அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கப்படுவதோடு, எம்மை போன்று அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சிகரட் பாவனையானது 5 வீதத்தினால் குறைவடையும்.
சமூகமயமாக்குவதற்கு சிகரட் மீது வரி அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சட்ட விரோதமான சிகரட்டுக்கள் அதிகரித்துவிட்டன அல்லது பீடி பாவனை அதிகரிக்கும் என பல போலியான பிரச்சாரங்களை புகையிலை நிறுவனம் ஊடகங்களினூடாக முயற்சிக்கின்றது. மேலும் வருடாந்தம் அரசாங்கத்தினால் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்படும் காலங்களில் புகையிலை நிறுவனம் இது போன்ற போலியான கருத்துக்களை பரப்புவது வழக்கம். சட்ட விரோதமான சிகரட் வியாபாரம் என்பது புகையிலை நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் ஒரு வியாபாரம் என்பதோடு, பீடி பாவனையானது இலங்கையில் அதிகரிக்கவில்லை என்பது பல ஆய்வுகளில் இருந்தும் தெரியவந்துள்ளது. இவை அனைத்துமே புகையிலை நிறுவனத்தின் வியாபார நுணுக்கங்கள் என்பதை நாம் நினைவூட்டுகிறோம்.
மேற்குறிப்பிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு, நாடு பொருளாதார நெருக்கடியிலிருக்கும் இந்த நிலைமையில் இன்னுமொரு இழப்பை சந்திக்காமல் இருப்பதற்காகவும் , அவ்விழப்பை தடுப்பதன் மூலம் நாட்டின் வருமானத்தை உயர்த்துவதற்கும், பொது மக்களின் சலுகைகளை வழங்குவதற்கும், இம்முறை நவம்பர் மாதம் முன்வைப்பதற்கு எதிர்ப்பார்க்கும் 2023 ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் கீழ்காணும் படிமுறைகளை பின்பற்றுமாறு கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றோம்.
- [ ] சிகரட்டிற்கான அதிக பட்ச வரியை பணவீக்கம் மற்றும் கொள்வனவு திறனுக்கு ஏற்ற வகையில் விதித்தல்.
- [ ] வரி அதிகரிப்பின் பின்னர், வரிப்பணத்திற்கு மேலதிகமாக புகையிலை நிறுவனம் மூலம் விலை நிர்ணயிக்கப்பட்டு அந்நிறுவனத்தின் இலாபத்தை அதிகரிப்பதற்கு இடமளிக்கக்கூடாது. ( கடந்த வருடங்களில் முறையான வரி அதிகரிப்பு இடம்பெறாதமையினால் அதிகரிக்கப்பட்ட சிகரட்டிற்கான விலையின் 50 வீதம் சிகரட் நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டும் வகையில் அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இது அரசாங்கம் பெற்றுக்கொள்ளவிருந்த இலாபமாகும் )
- [ ] 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட உரையில் நிதி அமைச்சர் கௌரவ. பசில் ராஜபக்ஷ அவர்களினால் கூறப்பட்ட பயன்தகு வரி விதிப்பு முறைமையை நிறுவுதல்.
மக்கள் நலன் விரும்பும் பிரதிநிதி என்ற வகையில், எதிர்வரும் 2022 ம் ஆண்டு நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள 2023 ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் சிகரட் மீது முறையாக வரி அறவிடப்படும் கொள்கையொன்று உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என தீர்க்கமாக நாம் நம்புகின்றேன்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இன்று (22) காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையில், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், 121 வாக்குகள் ஆதரவாகவும் 84 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன.
இதன்படி, 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 37 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அடுத்தாண்டுக்கான வருடத்திற்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
அதனையடுத்து வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமானது. இன்று 7ஆவது நாளாகவும் விவாதம் இடம்பெற்றதோடு, இன்று மாலை வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.
வரவு செலவுத் திட்ட குழு வாய்ப்பு விவாதம் நாளை (23) முதல் டிசம்பர் 8 ஆம் திகதி வரை 13 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் மாலை 5 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இலங்கையின் சொத்துக்கள் மீதான வெளிநாட்டு சக்திகளின் ஆர்வமும், இந்த உண்மைக்குப் பின்னால் உள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலும் இலங்கையின் பொருளாதாரம் சிதைவதற்கான முக்கிய காரணங்களாகும்.
இலங்கை தொடர்பான இவ்வாறான நிகழ்ச்சி நிரல்கள் நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாகவும், பல சந்தர்ப்பங்களில் பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கு இதுவே காரணம் எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த அவர், இலங்கையின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு தாம் எதிரானவர் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அதிக கடன் வாங்கியதன் காரணமாக யஹபாலன அரசாங்கம் பாரியளவிலான கடனைச் சுமத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
கடந்த அரசாங்கத்தின் கொள்கைகளை பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் காட்டுபவர்கள், மக்களிடம் பிரபலமாக இருக்கவே அவ்வாறு செய்கிறார்கள், ஆனால் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் நீண்ட கால பிரச்சினைகளை வசதியாக மறந்து விடுகிறார்கள் என்று மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டினார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, உத்தேச வரவு செலவுத் திட்டம் தேசத்தின் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையாகும்.
இன்று வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள உத்தேச வரவு செலவுத் திட்டம் 2023க்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய ஒற்றை இயற்கை நீலக்கல் கொத்தணி இன்னும் விற்பனை செய்யப்படவில்லையென தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்தார்.
சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி - 2023 முதல் பதிப்பை அறிவிபக்கும் நிகழ்வின் பின்னர், கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தக் கண்காட்சி எதிர்வரும் 2023 ஜனவரி 7 முதல் 9 ஆம் திகதிவரை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
கடந்த ஆண்டு இரத்தினபுரியில் கண்டெடுக்கப்பட்ட 503.2 கிலோ எடையுள்ள நீலக்கல் கொத்தணி கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த, உலகின் மிகப்பெரிய நீலக்கல் கொத்தணி கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி, சுவிட்சர்லாந்தில் உள்ள Gubelin இரத்தினக்கல் ஆய்வகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.
குறித்த கல்லுக்கான கொள்வனவாளர் ஒருவரை நாம் இதுவரை கண்டறியவில்லை.
எனவே, வாடிக்கையாளர் குறித்த கொத்தணியை துபாய்க்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். துபாயில் குறித்த கொத்தணி தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.
தேசிய சொத்துக்களை விற்பனை செய்வது தனது தரப்பினரின் கொள்கையல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
முதலில் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபம் ஈட்டும் உள்ளுணர்வுகளாக மாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- கந்தளாய் யூசுப் -
அனுராதபுரம் மாவட்டத்தில் ஹொரவப்பொத்தானை பிரதேச சபைக்குட்பட்ட முக்குர குளம் கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றார்கள் .
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் தென்னை வாழை சோளம் பயிரிடப்பட்டுள்ளது .
இக் கிராமத்தில் யானை வேலி இல்லாத காரணத்தினால் யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது .
இன்று (22) அதிகாலை தோட்டத்தித்திற்குள் புகுந்த யானைக்கூட்டம் அங்கிருந்த தென்னை மரங்களை சேதப்படுத்தியும் வேறோடு சாய்த்தும், காய்த்திருந்த மா மரத்தின் கிளைகளை ஒடித்து முற்றாக சேதப்படுத்தியதோடு அங்கிருந்த வாழை மரங்களையும் பிடிங்கியுள்ளது.
சுமார் 4 யானைகளுக்கு மேல் வந்து இவ்அட்டகாசத்தினை மேற்கொண்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
,ஒவ்வொரு நாளும் காட்டு யானைகள் தோட்டப்பகுதிக்கு வரும் யானை கூட்டத்தால் மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து சமந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவெரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்கள்.
உலகக் கிண்ண உதைபந்து தொடரில் இன்று நான்கு போட்டிகள் இடம்பெறவுள்ளன.
22-வது உலகக் கிண்ண உதைபந்து தொடர் கட்டாரில் நடைபெற்று வருகிறது. இந்தத்தொடரில் இன்று 4 போட்டிகள் நடைபெறவுள்ளன..
1️⃣ அதில் இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதுகின்றன.
கிண்ணம் வெல்ல தகுதியுள்ள அணிகளில் ஒன்றான அர்ஜென்டினா அணிக்கு லயோனல் மெஸ்சி தலைவராக செயற்பட உள்ளார். இவ்விரு அணிகளும் இதுவரை இவ்விரு அணிகளும் 4 சர்வதேச போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 2 போட்டிகளில் அர்ஜென்டினா வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் சமநிலையில் முடிந்தது.
2️⃣ இதையடுத்து D பிரிவில் மாலை 6.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் டென்மார்க், துனிசியா அணிகள் மோதுகின்றன.
இதுவரை ஒரே ஒரு சர்வதேச போட்டியில் இவ்விரு அணிகள் மோதியுள்ளன. இந்த ஒரு ஆட்டத்திலும் டென்மார்க் அணியே வெற்றி பெற்றுள்ளது.
3️⃣ இதையடுத்து இலங்கை நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் மெக்சிகோ, போலந்து அணிகள் விளையாடுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. மற்ற 2 போட்டிகளும் சமநிலையில் முடிந்தது.
4️⃣ இதையடுத்து நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் நடப்பு சம்பியன் பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதுவரை 5 முறை இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் பிரான்ஸ் அணி 3 முறையும், ஆஸ்திரேலியா அணி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் சமநிலையில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும்.
கடல் பிராந்தியங்களில்
****************************
தாழ் அமுக்கமானது வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் தென் மேற்குத் திசையுடன் இணைந்ததாக யாழ்ப்பாணத்திற்கு வடக்கு ‐ வடகிழக்குத் திசையில் சுமார் 410 km தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்துவரும் 12 மணித்தியாலங்களில் படிப்படியாக நலிவடைவதுடன் மேற்கு ‐ வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து ஆந்திரப் பிரதேசத்தின் தென் பகுதியையும் தமிழ் நாட்டின் வட பகுதி மற்றும் புதுச்சேரி கரைகளையும் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனபடியினால் காங்கேசன்துறை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கும் அத்துடன் வங்காள விரிகுடாவின் தென் மேற்கு கடல் பிராந்தியத்திற்கும் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகின்றனர்.
கொழும்பு தொடக்கம் காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 40 km வேகத்தில் வடமேற்குத் திசையில் இருந்து அல்லது தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
காங்கேசன்துறை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் கொழும்பு தொடக்கம் காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.
தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு
தேர்தலை நடத்துவதன் மூலம் தீர்வு கிடைக்காது என
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்
இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு
உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு எதிர்நோக்கும் சவால்களின் பாரதூரத்தை
சில தரப்பினர் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.
இந்த நேரத்தில் அரசியல் செய்வது நாட்டை பின்னோக்கி
தள்ளும் எனவும் அவர் குறிப்பிட்
ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வளர்ப்பு நாய் தனது எஜமானரைப் பின்தொடர்ந்து அவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று அவர் விடுவிக்கப்படும் வரை அங்கேயே தங்கியிருந்த சம்பவம் புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
குடும்பத் தகராறு தொடர்பாக 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்குக் கிடைத்த அழைப்பின் பேரில் பொலிஸ் நடமாடும் ரோந்துப் பிரிவினர் புலத்சிங்கள, மொல்காவ வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர். சில நிமிடங்களுக்குப் பின்னர் , பொலிஸ் அதிகாரிகள் அறைக்கு அருகில் ஒரு நாய் படுத்திருப்பதைக் கண்டனர். நாயை பலமுறை விரட்டியடித்தாலும் அது மீண்டும் வந்து கொண்டே இருந்தது. பின்னர், குறித்த நாய் சிறை கூண்டில் அடைக்கப்பட்ட நபரின் செல்ல நாய் என்பதை பொலிஸார் கண்டறிந்தனர்.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வந்ததையடுத்து, சந்தேக நபரை வெளியே அழைத்துச் செல்வதற்காக பொலிசார் சிறை கூண்டை திறந்தனர், நாய் உடனடியாக அதன் எஜமானரிடம் விரைந்தது.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கடுமையான எச்சரிக்கையின் பின்னர் சந்தேக நபரை விடுவித்துள்ளதுடன், அதன் போது நாய் தனது மகிழ்ச்சியைக் காட்டி குரைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது
ஓமானில் தொழில் பெற்று தருவதாக கூறி பெண்களை ஏமாற்றி அந்நாட்டில் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் கைது செய்யப்பட்ட குறித்த பெண் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ரூபா 3 இலட்சம் கொண்ட தலா 2 சரீரப்பனைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி, இலங்கைப் பெண்களை சுற்றுலா வீசாவில் ஓமானுக்கு அழைத்துச் சென்று, அங்கு அவர்களை விற்பனை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவில் குறித்த சந்தேகநபர் சரணடைந்தததைத் தொடர்ந்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கமை, ஏமாற்றப்பட்ட பெண்கள் வழங்கிய தகவலுக்கமைய, இலங்கையில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தின் பிரதிநிதி எனத் தெரிவிக்கப்படும் தம்புள்ளையைச் சேர்ந்த ஆஷா திஸாநாயக்க எனும் பெண்ணைத் தேடி வந்த நிலையில், குறித்த சந்தேகநபர் இன்று (21) முற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சட்டத்தரணிகளுடன் சரணடைந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர QR முறைமையை அடுத்த மாதம் முதல் நீக்குவதற்கு எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என, அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தேவைகள் முழுமையாக பூர்த்தியாகும் வரை Qr முறைமை தொடரும் எனவும் சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் குறிப்பிடப்படுவது போல, அடுத்த மாதம் நீக்கப்படாது என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, எதிர்காலத்தில் எரிபொருள் ஒதுக்கீட்டைத் தவிர்த்து சாதாரணமாக எரிபொருளை விநியோகிக்க ஆரம்பித்ததும், நாளாந்த அடிப்படையில் எரிபொருள் விலையை திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்களின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் அமைச்சர் தெரிவித்தார்.