நீர்நிலைகளில் நீராடச் செல்லும் என் அன்புச் சகோதரனுக்கு...நீர்நிலைகளில் நீராடச் செல்லும் என் அன்புச் சகோதரனுக்கு...

உன் உடன்பிறவா சகோதரன் எழுதும் மடல்...

நான் நலம் அது போல் நீயும் குடும்பத்தோடு நலமாய்... சந்தோஷமாய்... நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்ற அவாவில் இறைவனைப் பிராத்திக்கின்றேன்.

கம்பஹாவில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி மரணம்... பாசிக்குடா கடலில் குளித்த இளைஞன் கடலில் மூழ்கி மரணம்... ஹம்மாந்தோட்டையில் ஆற்றில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி மரணம்...
இப்புடி கடந்த இரு வாரங்களாக வருகின்ற செய்திகளைப் பார்க்கின்ற போது மனம் மருத்துப் போகின்றது. வாழ வேண்டிய இளம் வயதில் இப்படி மரணிப்பதை நினைக்கையில் ஒரு இனம் புரியாத கவலை ஆட்கொள்கிறது.

இந்தச் செய்திகளை பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு உன்னைப் பற்றிய நினைப்புத்தான். பயணங்கள், கடல், ஆற்றுக் குளியல் என்றால் உனக்கு மிகவும் பிடிக்கும். உனக்கு மட்டுமல்ல நாட்டில் இப்போது அடிக்கின்ற சூட்டுக்கு யாருக்குத்தான் அது பிடிக்காது. எல்லோரும் இப்போது நீர் நிலைகளை நோக்கித்தான் ட்ரிப் போகின்றார்கள்.

இருந்தும் வருகின்ற விபத்துச் செய்தியின் பட்டியலில் உன் பெயரும் வந்துவிடக் கூடாது என்ற ஆசைதான் இந்த மடலை என்னை எழுதத் தூண்டியது.

நாளை விடுமுறை தினம் என்பதால் நீ கூட எங்கையாவது ஒரு ஆற்றில் குளிக்க, கடலில் நீந்தச் செல்ல திட்டமிட்டிருப்பாய். சில நேரம் வருகின்ற வெசாக் விடுமுறையில் கூட நீ செல்ல யோசித்து வைத்திருக்கலாம் அதற்கு முதல் இந்த மடல் உன் கரம் கிடைக்க வேண்டும் என்ற அவசரத்தில் எழுதுகின்றேன். கொஞ்சம் நேரம் எடுத்து அமைதியாய் வாசித்துவிட்டுச் செல்.

உன்னை எங்கும் போகாமல் வீட்டிலே இரு என்று சொல்லவில்லை. பயணங்கள் போ... உலகைப் பார்... இயற்கையை ரசி... வாழ்வை ருசி என்றுதான் நானும் சொல்கின்றேன். இருந்தும் கொஞ்சம் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருந்து கொள் என்றுதான் சொல்ல வருகின்றேன்.

உனக்கு நீச்சல் தெரியவில்லை என்றால் ஆழமான ஆற்றில், நீர் வீழ்ச்சியில் இறங்காதே... நண்பர்கள் கூட இருக்கின்றார்கள் என்று நம்பிக்கை உனக்கிருக்கும் ஆனால் ஒவ்வொருத்தருக்கும் அவர்களுடைய உயிர்தான் மேல் என்பதையும் நீ புரிந்துகொள்ள வேண்டும்.

நீ நீந்தப் போகும் நீர் நிலைகளில் போடப்பட்டிருக்கின்ற எச்சரிக்கை பலகைகளை கவனமாகப் படி, கட்டாயம் பின்பற்று அவை சும்மா வீணுக்காகப் போடப்பட்டதல்ல. ஆபத்தை அறிந்து உன்னைப் பாதுகாக்க அங்கு போடப்பட்டிருக்கின்ற பாதுகாப்பு அரண்கள் அவை. அதை ஒரு முறை பரீட்சித்துப் பார்ப்போமே என்று முயற்சிக்காதே...

கடலில் கயிறுகள் போடப்பட்டிருப்பதால் அதுவரைக்கும் நீ போகவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. கரையில் இருந்தும் நீ தாராளமா நன்றாகக் குளிக்கலாம். கயிறுவரைச் சென்று உன் காலத்தை நீயே முடித்துக்கொள்ளாதே...

பலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன் சாப்பிட்டவுடனும் வாயில் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டும் ஆற்றில் கடலில் நீந்துவது ஆபத்து என்று. மதிய நேரத்தில் குளிக்கக்கூடாது என்றும் சொல்லுவார்கள். அவற்றையும் நீ கொஞ்சம் கவனத்தில் கொள்.

உனக்கு இருதய நோய், சதைப் பிடிப்பு போன்ற ஏதும் வருத்தம் இருந்தால் ஆழம் சென்று குளிப்பதை தவிர்ந்துகொள் ஆட்களோடு சேர்ந்து கரையிலே குளிக்கப் பார் இல்லை என்றால் அதனையும் தவிர்த்துக்கொள்.

சகோதரா நீ ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள். உன் ஆசை மகனும் மகளும் நீ வாங்கி வருவதாகச் சொன்ன விளையாட்டுப் பொருளுக்கும் சாக்லேட்டுக்கும் நிமிடங்களை எண்ணிக்கொண்டிருப்பார்கள்... வீதிவரை வந்து வழியனுப்பிய மனைவி உன் வருகைக்காய் காத்திருப்பாள்... உன் உழைப்பில் உளமாறும் உன் பெற்றோர் உடன் பிறப்புக்கள் குடும்பம் உன்னை அனுப்பி விட்டு உன் தரிசனத்துக்காய் தவம் இருப்பார்கள்...

அவர்கள் அத்தனைபேரது ஆசைக் கண்களுக்கு முன்னால் உயிரற்ற உன் உடலைக் கொண்டு போய் வைக்கின்ற அந்தத் தருணத்தை கொஞ்சம் நினைத்துப்பார். முழுக் குடும்பமும் நிலைகுலைந்து நிற்கும் அந்த நாளை கொஞ்சம் கற்பனை செய்து பார். 

சிறு வயதிலே தந்தையை இழந்த குழந்தையின் ஏக்கத்தை தினம் தினம் பார்த்துக்கொண்டிருப்பவன் சொல்கின்றேன். அந்த நிலையை உன் பிள்ளைகளுக்கு நீ கொடுத்துவிடாதே. அந்த அவஸ்தை கொடூரமானது. அதனைத் தாங்கிக்கொள்ளும் சக்தி அவர்களுக்கில்லை.

உன் இழப்பு எத்தினை சோகங்களை கஷ்டங்களைக் கொண்டுவரும் என்பதனை நின்று நிதானமாக யோசி அதன் பின் உன் பயணத்தை ஆரம்பி.

மரணம் இறைவனின் நாட்டமும் நியதியும்தானே நாம் என்ன செய்ய முடியும் என்று நீ யோசிக்கலாம். நானும் அதைத்தான் சொல்கின்றேன் ஆபத்து என்ற அவனின் நாட்டத்தை, நியதியை விட்டுவிட்டு பாதுகாப்பு என்ற அவனது நியதியை நோக்கி போ என்று. 

இரண்டு நியதியும் உன் முன்னேதான் இருக்கின்றது அதில் நல்லதை நீ தெரிவு செய்யவேண்டும் என்பதே இந்தச் சகோதரனின் அவாவும் ஆசையும். நீ நல்லதைத்தான் தெரிவு செய்வாய் என்கின்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது என்ற செய்தியோடு முடித்துக்கொள்கின்றேன்.

இப்படிக்கு

கட்டாரிலிருந்து...
என்றும் உன் மீது அக்கறைகொண்ட அன்புச் சகோதரன்.

சஜீர் முஹைதீன்
03/05/2024
நீர்நிலைகளில் நீராடச் செல்லும் என் அன்புச் சகோதரனுக்கு... நீர்நிலைகளில் நீராடச் செல்லும் என் அன்புச் சகோதரனுக்கு... Reviewed by Madawala News on May 03, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.