மருதமுனையில் சுனாமி வீடு வழங்கலில் முறைகேடு மக்கள் விசனம்(வாஹிட் முகம்மது ஜெஸீல்)
அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனையில் அண்மையில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக ஊர் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த 2004 சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் மற்றும் ஏழை மக்களுக்கு வழங்குவதற்காகவும் 168 வீடுகளும் இதர தேவைகைளுக்காக 10 வீடுகளுமாக மொத்தம் 178 வீடுகள் அரசினால் நிர்மானிக்கப்பட்டு முதற்காட்டமாக 108 வீடுகள் வழங்கப்பட்டது. பின்னர் எஞ்சிய வீடுகளையும் மக்களுக்காகவே வழங்கவேண்டும் என்ற தீர்மானத்திற்கமைவாக வீடுகளற்ற ஏழைகளுக்கு வழங்குவதற்கு ஆயத்தங்கள் செய்யப்பட்டது. இருப்பினும் தேவையுடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டதால் மருதமுனை ஜம்இய்யதுல் உலமாவிற்கு பயனாளிகளைத் தெரிவு செய்யும் பொறுப்பு கையளிக்கப்பட்டு பயனாளிகளும் தெரிவுசெய்யப்பட்டு மருதமுனையின் பள்ளிவாசல்களில் கல்முனை பிரதேச செயலாளரின் உறுதிப்படுத்தலுடன் காட்சிப்படுத்தப்பட்டது. இருப்பினும் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர்ப்பட்டியல் நீக்கப்பட்டு பல குளறுபடிகள் செய்யப்பட்டு புதியதோர் பெயர்ப்பட்டியலை தற்போதுள்ள பிரதேச செயலாளர் திரு.ஜெ.லியாக்கத் அலியின் உறுதிப்படுத்தலுடன் வெளியிட்டது கல்முனை பிரதேச செயலகம்.
மருதமுனை மேட்டுவட்டைப் பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த 65 மீற்றர் வீட்டுத் திட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியலில் ஊரின் பிரதான கட்சிகளின் அரசியல்வாதிகள், பணம் படைத்தவர்கள், பதவியிலுள்ளவர்கள், ஐரோப்பிய நாடுகளில் வாழ்பவர்கள் என மொத்தமாகவும் ஏழைகள் புறக்கணிக்கப்பட்டு தற்போது வீடுகள் தனவந்தர்களுக்கு ஊர்மக்களின் விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் தாண்டி வழங்கப்பட்டு பாதிவீடுகள் நாற்பத்து ஐந்து இலட்சம் (4,500,000.00) ரூபாய்க்கும் அதற்கு மேலாகவும் விற்பனையாகிக் கொண்டு இருக்கின்றது. இவை அனைத்திற்கு மேலாக மேற்படி இடம்பெற்ற குளறுபடிகளை வெளிக்கொணர முயற்சித்த சில முகநூல் எழுத்தாளர்களையும் குறித்த குளறுபடிகளை செய்த வீடு வழங்குனர்கள் தங்களால் வழங்கப்பட்ட வீடுகள் மற்றும் காணிகளில் ஒவ்வொன்றை வழங்கி வாயடைப்பு செய்த நிலைமைகளும் காணப்படுகின்றது. அத்தோடு வீடு தேவைக்காக பிரதேச செயலாளரிடம் விண்ணப்பங்களை செய்த ஏழைகள் வேண்டுமென்றே விரட்டியடிக்கப்பட்டு தம்முடன் குளறுபடியில் உறுதுணையாக நின்ற ஆதரவாளர்கள், கிராமசேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,உறவினர்கள் என்று அனைவருக்கும் வழங்கி தமது பினாமிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி 65 மீற்றர் வீட்டுத்திட்டத்தின் வீடுவழங்கலின்போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான தொலைபேசி உரையாடல் குரல்பதிவுகள் மற்றும் ஆதாரங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் குழப்பநிலையைத் தோற்றுவித்துள்ளதுடன் சமூகவலைத்தளங்களிலும் வைரலாகி சமூகவலைத்தளவாசிகளிடையே பெரும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீடுவழங்கல் முறைகேடு தொடர்பில் செய்திகள் சேகரிக்க முனையும் செய்தியாளர்கள் குறித்த கட்சியின் காடையர்களால் தாக்கப்படுவதும், எச்சரிக்கை செய்யப்படுவதுமான நிலைமைகளும் காணப்படுகின்றது. இதனால் பத்திரிகைச் சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்படவிருந்த வீடுகளில் இடம்பெற்ற முறைகேடுகள், ஊழல்கள் என்பவற்றை விசாரணை செய்து உழலில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் தகுதியற்ற குறுக்கு வழிகளில் வீடுகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதோடு ஊழல்கள் குளறுபடிகள் இடம்பெற்ற வீடுகளை பறிமுதல் செய்து உண்மையான தேவையுடையவர்களை இனங்கண்டு அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் உரிய அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றனர்.
மருதமுனையில் சுனாமி வீடு வழங்கலில் முறைகேடு மக்கள் விசனம்  மருதமுனையில் சுனாமி வீடு வழங்கலில் முறைகேடு மக்கள் விசனம் Reviewed by Madawala News on March 12, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.