இலங்கையின் முக்கிய அரசியல் பிரபலங்களின் பங்கேற்புடன் உதயமானது தயாசிறி தலைமையிலான 'மனிதநேய மக்கள் கூட்டணி' என்ற கட்சி


 

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தலைமையிலான 'மனித நேய மக்கள் கூட்டணியின்' அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை (20) கொழும்பு 7இல் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச தொடர்புகளுக்கும் ஆய்வுகளுக்குமான நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


தயாசிறி ஜயசேகர தலைமையில், கூட்டணியின் செயலாளர் பிரபா கணேஷனின் பங்கேற்புடன் சர்வமத மதவழிபாடுகளுடன் அங்குரார்ப்பண நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. 


சர்வமத வழிபாடுகளைத் தொடர்ந்து கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் 20 கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.


அதற்கமைய ஜனநாயக மக்கள் காங்ரஸ், எக்சத் லங்கா பொதுஜன கட்சி, ஐக்கிய காங்ரஸ் கட்சி, தேசிய பெரமுன, ஐக்கிய ஜனநாயக மக்கள் கட்சி, புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் (முபாரக் மவ்லவி) , இந்திய தொடர்புகளையுடைய மக்கள் கட்சி, மௌபிம ஜாதிக பெரமுன, அருனலு ஜனதா பெரமுன, ஸ்ரீலங்கா மக்கள் தேசிய கட்சி, புதிய ஜனநாயக மக்கள் பெரமுன, ஐக்கிய மக்கள் பெரமுன, புதிய தொழிலாளர் விடுதலை முன்னணி, ஜனநாயக ஐக்கிய மக்கள் முன்னணி, ஐக்கிய லங்கா தேசிய பெரமுன, ஸ்ரீலங்கா மக்கள் முன்னணி, முற்போக்கு இடதுசாரி முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி, புதிய ஜனநாயக ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய தொழிலாளர் முன்னணி ஆகிய கட்சிகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.


கையெழுத்திடப்பட்ட குறித்த ஒப்பந்தத்தில், 'மனிதநேய மக்கள் கூட்டணியின் யாப்பிற்கமைய செயற்படல், கூட்டணியின் கொள்கை மற்றும் நிலைப்பாட்டுக்கமைய செயற்படல், கூட்டணியின் பதவி மற்றும் பொறுப்புக்களை இருதரப்பு இணக்கப்பாட்டுக்கமைய பயன்படுத்தல், எதிர்வரும் தேர்தல்களில் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடல் மற்றும் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்கள் மற்றும் ஊடகவியலாளர் மாநாடுகளில் பங்கேற்றல் என்பவை நிபந்தனைகளாக உள்ளடக்கப்பட்டிருந்தன.


இந்த நிகழ்வில் விசேட அம்சமாக பிரதான அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர். அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபால மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

PHOTOS 👇🏼

https://www.facebook.com/100064423340538/posts/pfbid02FJZHGfxZqae3tLekxjnXcPjNaP6hN9Zer6NfEUUyL8NHmTacjVtsqTKvbEKKvaXTl/

இலங்கையின் முக்கிய அரசியல் பிரபலங்களின் பங்கேற்புடன் உதயமானது தயாசிறி தலைமையிலான 'மனிதநேய மக்கள் கூட்டணி' என்ற கட்சி இலங்கையின் முக்கிய அரசியல் பிரபலங்களின் பங்கேற்புடன் உதயமானது தயாசிறி தலைமையிலான 'மனிதநேய மக்கள் கூட்டணி' என்ற கட்சி Reviewed by Madawala News on March 21, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.