விழிப்புலனற்றோர் படித்து பட்டதாரிகளாகவும் பேராசிரியர்களாகவும் முன்னேற வழியமைத்த பிரெய்ல் எழுத்து முறைகலாபூஷணம் பரீட் இக்பால்

 உலக சுகாதார ஒழுங்கமைப்பின் புள்ளி விபர தகவலின்படி உலகில் ஏறத்தாள 39 மில்லியன் பேர் பார்வையற்றவர்களாக இருக்கின்றனர். இதில் 82 சதவீதமானோர் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள். 18 சதவீதமானோர் ஐம்பது வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள். பிறவியிலேயே குருடர்களாக பிறப்பவர்கள் மிகச் சிலரே. எனினும் பலர் தம் குழந்தை பருவத்தில் தவிர்க்கப்படக் கூடிய காரணிகளால் பார்வையை இழக்கின்றனர். பிள்ளைகளில் போசணைக் குறைபாடே பார்வைக் குறைபாட்டிற்கான பிரதான காரணியாக இருக்கின்றது. வளர்ந்தவர்களில் நீரிழிவு நோய், உயர் குருதியமுக்கம், விழித்திரை மையத்தின் சிதைவு என்பன குருட்டுத் தன்மையை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாகும். 


முன்பொரு காலத்தில் பார்வை இழந்தவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்று கருதப்பட்டனர். அந்தக் காலம் போய்விட்டது. கண்பார்வை இழந்தவர்கள் பிரெய்ல் முறையின் மூலம் இப்போது எல்லோரையும் போல படிக்க முடியும். பிரெய்ல் முறை பற்றி எல்லோருமே கேள்விபட்டிருப்போம். இதைக் கண்டுபிடித்தவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லூயிஸ் பிரெய்ல் ஆவார். லூயிஸ் பிரெய்ல் நான்கு வயது சிறுவனாக இருந்த போது, செருப்பு தைக்கும் தனது தந்தையின் பெரிய ஊசியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது அந்த ஊசி கண்ணை குத்தி விட்டது. அவர் ஒரு கண்பார்வையை இழந்துவிட்டார். அந்தக் கண்ணில் ஏற்பட்ட தொற்று சில மாதங்கள் கழித்து அடுத்த கண்ணிற்கு பரவி முழுப் பார்வையையும் இழந்துவிட்டார். அவருக்கு பார்வை போய் விட்டாலும், படிக்கவேண்டும் என்ற ஆவல் அவரிடம் நிறைய இருந்தது. கண்பார்வை இழந்தவர்கள் படிக்க ஏதாவதொரு வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று யோசித்தார். பலரிடமும் கலந்தாலோசித்தார். ஒருநாள் போர்வீரர் ஒருவரிடம் பேசியபோது, ஒரு தகவல் கிடைத்தது. போரின்போது தகவல்களை பரிமாற்றம் செய்யும் முறை பற்றி அவர் விளக்கினார். அந்த போர்வீரர் கையால் எழுதினால் விளக்கொளியில்தான் அதை படிக்க முடியும். விளக்கொளியை ஏற்றினால் எதிரிகள் இவர்களது இருப்பிடத்தை அறிந்துவிடுவர். எனவே இருட்டில் தொட்டுப்பார்த்து படித்தறியும் முறையில் குறியீட்டு எழுத்துகளை அனுப்புவோம் என்று அந்த போர்வீரர் கூறியதை கேட்ட லூயிஸ் பிரெய்ல் யோசிக்கலானார். அவருக்கு எந்த ஊசி தன் கண்ணை குத்தியதோ அதே ஊசியைப் பயன்படுத்தி ஒரு தாளில் துளைகளை போட ஆரம்பித்தார். ஒரு தாளை எடுத்து அதன் மீது நெருக்கமாக ஆறு துளைகளை இட்டார். தொட்டு பார்த்தார். இன்னொரு விதமாக ஆறு துளையிட்டு மறுபக்கமாக தடவிப் பார்த்தார். கடதாசி தாளின் பின்புறத்திலிருந்து ஊசி போன்ற எழுதுகருவியினால் குத்துவதன் மூலம் பொங்கி நிற்கும் வண்ணம் குத்துக்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு எழுதும் போது எதிர்த் திசையிலிருந்தே எழுத்துக்கள் குத்தப்படுகின்றன. இந்த அமைப்பில் புள்ளிகளை வெவ்வேறு விதமாக துளையிடுவதன் மூலம் ஆங்கில எழுத்துக்களையும் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைகளையும் உண்டாக்கினார். இப்படித்தான் இன்றும் விழிப்புலனற்றோர் முனைவர் பட்டம் வரையில் படிக்க உதவும் முறையை 1929 இல் விழிப்புலனற்றோருக்கான எழுத்து முறையொன்றை லூயிஸ் பிரெய்ல் கண்டுபிடித்தார். இதுவே இன்று உலகெங்கும் பயன்படுத்தப்படும் பிரெய்ல் எழுத்து முறையாகும்


பிரெய்ல் முறையை உலகிற்கு அளித்து விழிப்புலனற்றோர் வாழ்வில் ஒளியேற்றிய லூயிஸ் பிரெய்ல் 1809 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி பிறந்தார். இத் தினத்தையே லூயிஸ் பிரெய்ல் தினம் என்று கொண்டாடுகிறார்கள். 1828 ஆம் ஆண்டு குருடர் கல்விக்கான தேசிய நிறுவனத்தில் விழிப்புலனற்றோருக்கான ஆசிரியராக பணி புரிய ஆரம்பித்தார். இவர் 1852 ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் திகதி காலமானார்.  


உலகமே பாராட்டிய இந்த முறைக்கு அவரது பெயரையே வைத்துவிட்டார்கள். 


விழிப்புலனற்றோர் கல்விக்காக பிரெயில் என்ற எழுத்து முறை மூலம் இலட்சக்கணக்கான விழிப்புலனற்றோர் படித்து பட்டதாரிகளாகவும் கலாநிதிகளாகவும் பேராசிரியர்களாகவும் மேதைகளாகவும் நாவலாசிரியர்களாகவும் முன்னேறியுள்ளனர். 


*கலாபூஷணம் பரீட் இக்பால் - யாழ்ப்பாணம்.*

விழிப்புலனற்றோர் படித்து பட்டதாரிகளாகவும் பேராசிரியர்களாகவும் முன்னேற வழியமைத்த பிரெய்ல் எழுத்து முறை  விழிப்புலனற்றோர் படித்து பட்டதாரிகளாகவும் பேராசிரியர்களாகவும் முன்னேற வழியமைத்த பிரெய்ல் எழுத்து முறை Reviewed by Madawala News on January 04, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.