ஹஜ் கடமை : தவறான புரிதல்கள்!ஸகாத் வாஜிப் ஆகாதவர்களுக்கு ஹஜ் கடமையில்லை, அதனால் தான் அதனை இறுதிக் கடமை என்கிறோம்!


குடும்பத்தின், தங்கியிருப்போரின் அடிப்படைத் தேவைகளுக்கான வருவாய் மூலங்களை முதலீடுகளை ஹஜ்ஜுக்காக செலவிட  முடியாது, கூடாது..!


ஹஜ் கடமையை முந்திய பொறுப்புக்களும் கடமைகளும் அல்லாஹ்விற்கான கடமைகள் தான்!


குடும்ப உறுப்பினர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பின் அவர்கள் மீதான செலவுகளும் தமக்கு கீழிருப்போர் மீதான செலவுகளாகும்!


வருடா வருடம் ஹஜ் செய்யும் வழக்கமுடைய அதிகமானோர் பல குடும்ப சமூகப் பொறுப்புக்களை மறந்து விடுகின்றனர்.


அதே போன்றே அதிகமான உம்ராக்களை செய்வோரும் மேற்படி முன்னுரிமைகளை கடமைகளை கவனத்திற் கொள்ள வேண்டும்!


ஹஜ் கடமையானவர்கள் ஆயிரக் கணக்கில் இருந்தாலும் மக்கா மதீனா மற்றும் மினா அரபா முஸ்தலிபா இடவசதிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு ஒவ்வொரு நாட்டிற்கும் தரப்படும் கோட்டாவும் மார்க்க அடிப்படைகளை கொண்டவை!


ஹஜ் உம்ரா செய்ய வசதியற்றவர்களுக்கு பூரணமாக அவற்றை நிறைவேற்றிய இம்மை மறுமை பேறுகளை ஈட்டித் தரும் நற்கருமங்கள் பற்றி உலமாக்கள் சொல்லித்தர வேண்டும்!

ஒருவரிடம் ஒரு வீடு இருக்கிறது, ஒரு கடை இருக்கிறது, அல்லது அன்றாட செலவுகளுக்கான வருமானத்தை ஈட்டித் தரும் ஒரு தொழிற்சாலை மற்றும் உபகரணங்கள் இருக்கின்றன,  அவை சிறுகச் சிறுகச் சேர்த்த அவரது உழைப்பின் பிரதிபலன்கள், சில சந்தர்ப்பங்களில் அவரது வருவாய் மூலங்கள் ஸகாத் கொடுக்கும் நிஸாபை எட்டி இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம், ஸகாத் கொடுத்தும் கொடுக்காதும் இருந்திருக்கலாம்!


வீடு அவரது குடும்பத்திற்கு வாழ்வதற்கு போதுமான சாதாரண வீடு ஆகும், வியாபாரம், விவசாயம், காலநடை வளர்ப்பு, கைத்தொழில் அவரது அன்றாட அடிப்படைச் செலவுகள் மற்றும் கடமைகள் பொறுப்புக்களை நிறைவேற்றப் போதுமானவை!


இவரது நிரந்தர வருமானம் அன்றாட செலவுகளுக்கும், கடமைகள் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் போதுமானதாக இருந்து மேலதிக வருவாய், சேமிப்பு இருப்பின் அவற்றிற்கு ஸகாத்தும் கொடுத்து தூய்மைப்படுத்தப் பட்ட செல்வம் ஆயின் அவருக்கு ஹஜ் கடமையாகிறது.


மக்காவில் அல்லது ஸவூதியில் வசிப்பவர்களாயின் ஸகாத் நிஸாபை அடையாத போதும் அந்த நாட்டை சேர்ந்தவர்கள் ஹஜ் செய்வார்கள், ஆனால் தொழிலுக்காக அங்கு இருப்பவர்கள் தாய் நாட்டில் தமது அடிப்படை செலவுகள் கடன்கள் கடமைகள் பொறுப்புக்களையும் கவனத்தில் கொள்வார்கள்!


ஆக, தனது மற்றும் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளுக்க்கான நிரந்தர வருமானம் தரும் தொழில் வியாபாரம், விவசாயம், கால்நடை வளர்ப்பு, கைத்தொழில் ஆகியவற்றை பாதிக்காத விதத்தில் அவர் தனது ஹஜ் பயணத்தை திட்டமிட்டுக் கொள்வார்.


மாறாக அவற்றில் உள்ள அடிப்படை முதலை, முதலீட்டை ஹஜ் பயணத்திற்காக செலவு செய்ய மாட்டார், செய்யவும் கூடாது அவ்வாறு மார்க்கம் அவரை பலவந்தப் படுத்துவதுமில்லை! 


உதாரணமாக அவரது அடிப்படை வாழ்வாதார முதலீடு 20 இலட்சம் ஆக இருக்க  ஹஜ்ஜுக்கான செலவும் 20 இலட்சமாக இருக்க தனது  கையிருப்பில் மேலதிகமாக இருக்கும் ஒரு 5 இலட்சத்தை  வைத்துக் கொண்டு ஹஜ் கடமையை செய்ய முயற்சித்தால் அது அறியாமையாகும்!


ஸகாத் கொடுப்பதாயினும் அடிப்படை தேவைகளுக்கான நிரந்தர வருவாய் மூலங்களை முதலீடுகளை பாதிக்கின்ற விதத்தில் கணிப்பீடுகள் செய்யப்படுவதில்லை, இவ்வாறான கரிசனைகள் கவனத்திற் கொள்ளப்பட்டுதான் அவற்றிற்குரிய கால எல்லை நிஸாபுகள் தீர்மானிக்கப் படுகின்றன.


ஆனால் அடிப்படைத் தேவைகள் கடமைகள் பொறுப்புக்கள் போக மேலதிகமான அல்லது ஆடம்பரமான வீடுகள், வளவுகள், வாகனங்கள், வியாபாரங்கள், சேமிப்புகள் இருப்பவர்கள் கடமையாகும் ஹஜ்ஜினை ஒரு தாமதப் படுத்துதல் கூடாது, அதே போன்று ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ் செய்யும் பொழுது தனது குடும்பம் சமூகம் சார்ந்த ஏனைய முன்னுரிமைகள் கடமைகள் பற்றிய சன்மார்க்க வழிகாட்டலை அறிந்து கொள்ள வேண்டும்!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

ஹஜ் கடமை : தவறான புரிதல்கள்!  ஹஜ் கடமை : தவறான புரிதல்கள்! Reviewed by Madawala News on June 07, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.