லண்டனில் இந்திய மன்னர் திப்பு சுல்தானின் வாள் இந்திய ரூபாயில் 140
கோடிக்கு மேல் ஏலத்தில் விற்பனையானது.*கலாபூஷணம் பரீட் இக்பால் - யாழ்ப்பாணம்
அக்னி சிறகுகள்” எனும் நூலில் முன்னாள் இந்திய ஜனாதிபதி மர்ஹூம் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மையத்திற்கு சென்றபொழுது இந்தியர் ஒருவர் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை பார்த்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார். அந்த இந்தியர்தான் திப்பு சுல்தான் ஆவார்.
குதிரை வீரன் ஹைதர் அலி- ஃபக்ருன்னிஸா தம்பதியினருக்கு மகனாக திப்பு சுல்தான் 1750 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தேவனஹள்ளி என்ற ஊரில் பிறந்தார். 1761 ஆம் ஆண்டு திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி அவர்கள் மைசூர் மன்னராக பொறுப்பேற்றார். ஹைதர் அலி அவர்கள் மன்னராக பொறுப்பேற்கும்போது திப்பு சுல்தானுக்கு வயது 11 ஆகும். கல்வியில் சிறந்து விளங்கிய திப்பு சுல்தான், இளம் வயதிலேயே தனது தந்தையுடன் பல போர்க்களம் கண்டார். அதனால் தனது 16 வயதிலேயே யுத்த தந்திரங்கள், ராஜ தந்திரங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்று,சிறந்த படைத் தளபதியாக வளர்ந்தார்.
1767 ஆம் ஆண்டு ஆங்கிலேயருடன் முதலாம் மைசூர் போர் நடைபெற்றபோது ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலேய படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக் கனியை 17 ஆம் வயதில் திப்பு சுல்தான் சுவைத்தார்.
1767 ஆம் ஆண்டு தொடக்கம் 1769 வரை பரவலாக பல இடங்களில் ஆங்கிலேய படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் திப்பு சுல்தான் வெற்றியே பெற்றார்.
06-12-1782 இல் மன்னர் ஹைதர் அலியின் மரணத்தை தொடர்ந்து 26-12-1782 இல் தனது 32 ஆவது வயதில் திப்பு சுல்தான் மைசூர் மன்னரானார். மன்னர் திப்பு சுல்தான் “புலி சின்னம்” பொறிக்கப்பட்ட கொடியை தனது சின்னமாக பயன்படுத்தினார். இதனால் திப்பு சுல்தான் “மைசூரின் புலி” என அழைக்கப்பட்டார்.
இரண்டாம் மைசூர் போர் அதாவது மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்த வேண்டும் என்ற எண்ணத்தில் திப்பு சுல்தான் பிரான்ஸ் படையினரையும் சேர்த்துக் கொண்டு 1780 ஆம் ஆண்டில் போர் தொடுத்தார். யுத்தம் நடைபெற்று நான்கு வருட முடிவில் 1784 ஆம் ஆண்டில் பிரான்ஸ் மன்னன் 16 ஆம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்பு சுல்தான் வேறு வழியில்லாமல் போரை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4,000 இராணுவ வீரர்கள் திப்பு சுல்தானால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்பு சுல்தானை நினைத்தாலே குலை நடுங்க செய்தது.
1789 ஆம் ஆண்டு திப்பு சுல்தான் தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற மூன்றாம் மைசூர் போரில் மராட்டிய பேரரசும், ஹைதரபாத் நிஜாமும், பிரிட்டிஷ் படைத் தளபதி கார்ன் வாலிஸுடன் இணைந்து திப்பு சுல்தானுக்கு எதிராக போர் தொடுத்தனர். திப்பு சுல்தான் எதிரிகளை துணிச்சலுடன் எதிர்கொண்ட போதிலும் 1792 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இந்தப் போரில் திப்பு சுல்தான் தோல்வி அடைந்தார். இறுதியில் ஸ்ரீரங்கப்பட்டிணம் அமைதி ஒப்பந்தத்தின்படி பல பகுதிகள் பிரிட்டிஷ், ஹைதராபாத்நிஜாம் மற்றும் மராட்டியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
மூன்றாம் மைசூர் போரின் ஆரம்பத்தில் வெற்றி பெற்ற திப்பு சுல்தான் போரின் இறுதிக் கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணைந்து கொண்டதால் ஒப்பந்தம் செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீட்டுத் தொகையை செலுத்தும் வரை திப்பு சுல்தானின் இரு மகன்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டனர். திப்பு சுல்தான் இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது இரு மகன்களை மீட்டார். ஆங்கிலேயர்களால் ஸ்ரீரங்கப் பட்டிணம் முற்றுகை இடப்பட்ட போதிலும் திப்பு சுல்தானின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ திப்பு சுல்தானின் கோட்டையை தூரத்தில் இருந்துதான் பார்க்க முடிந்தது என்று குறிப்பிட்டிருக்கிறான்.
அந்த கால கட்டத்தில் திப்பு சுல்தான் மாத்திரமே ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் பெரும் சவாலாகவும் இருந்தார். திப்பு சுல்தானை தீர்த்துக் கட்டினால்தான் இந்தியாவில் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் நெடுநாட்களாக காலூன்ற முடியும் என்று ஆங்கிலேயர்கள் நினைத்தனர்.
திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியைக் கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி திப்பு சுல்தானின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதன் பிறகு துணிச்சலாக திப்பு சுல்தான் மீது போர் தொடுக்கலாம் என்று நினைத்தனர்.
1799 ஆம் ஆண்டு நடைபெற்ற 4 ஆவது மைசூர் போரில் துரோகிகள் ஒரு பக்கம், கூட இருந்தவர்களின் குழி பறித்தல் ஒரு பக்கம் என எதிர்ப்புக்கள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11,000 படை வீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக திப்பு சுல்தான் போரிட்டார்.
4 ஆவது மைசூர் போரின்போது 1799 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி எதிரிகள் திப்பு சுல்தானுக்கு உயிர்த் தியாகத்தின் வாசலைத் திறந்து கொடுத்தனர். திப்பு சுல்தான் ஸ்ரீரங்கப்பட்டிணம் கோட்டை வாசலில் குண்டுக் காயங்களுடன் சரிந்து கிடந்தார். திப்பு சுல்தானிடம் பணியாள் ஒருவன் “அரசே! யாரேனும் ஓர் ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா? சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான். “முட்டாள்! வாயை மூடு!” என்று உறுமுகிறார் திப்பு சுல்தான். ஆடுகளைப்போல இருநூறு ஆண்டுகள் பிழைப்பதை விட புலியைப்போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம் என்று பிரகடனம் செய்த திப்பு சுல்தான் போர்க் களத்திலேயே வீர மரணம் அடைந்தார். திப்பு சுல்தானின் மரணம் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில், மேலும் 150 வருடங்கள் நிலைபெற உதவியது.
திப்பு சுல்தான் மிகப் பெரியளவில் இராணுவப் படையினை கொண்டிருந்தார் எனவும் அதில் குதிரைப்படை, ஒட்டகப் படை மட்டுமல்லாமல் போரில் பீரங்கிகளையும் பயன்படுத்தியுள்ளார். ஆங்கிலேயர்களுக்கு நிகராக நவீன ஏவுகணைகளை பயன்படுத்தினார் என கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த 2 கிலோ மீற்றர் வரை சென்று இலக்கைத் துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளார். திப்பு சுல்தானின் ஏவுகணைகளுக்கான பகுப்பாய்வு ஆவணங்கள் தற்போது லண்டனிலுள்ள ஆட்டிலறி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் 200 ஆண்டுகளுக்கு முன் திப்பு சுல்தானிடம் இருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் அபகரித்த பொருட்களில் ஒன்றான வாள் இந்திய ௹பாயில் 140 கோடிக்கு லண்டனில் ஏலமிட்ட பொழுது அதனை வாங்கி நினைவுச் சின்னமாக பாதுகாக்கக்கூட இந்திய அரசு தயாராக இல்லை. திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாறை மறைக்கப் பார்ப்பது ஏன்?
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது “The Discovery of India” என்ற நூலில் திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர் என்றும் பிரிட்டிஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனை மிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள் என்றும் கிழக்கிந்திய கம்பனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு திப்பு சுல்தானும் அவருடைய தந்தை ஹைதர் அலியும் விளங்கினார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திப்பு சுல்தான் இஸ்லாத்தில் பிடிப்புள்ள சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தவர். அவருக்கு இஸ்லாத்தின் மீதான பிடிப்பு காரணமாக ஒருபோதும் பிற மதங்களின் மீது எவ்வித காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. பள்ளிவாசல்களுக்கு அளித்த கொடைகள் போல் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் ஏராளமாக கொடைகள் அளித்துள்ளார். திப்பு சுல்தானின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்காக செலவழிக்கப்பட்ட ஆண்டின் தொகையாக 2,33,959 வராகன்களில் இந்துக் கோயில்கள், மடங்களுக்கு மட்டும் 2,13,959 வராகன்கள் அளிக்கப்பட்டது என்ற கணக்கு விபரமானது திப்பு சுல்தான் தனது ஆட்சியில் பெருவாரியாக இருந்த இந்துக்களுக்கு பெருமளவில் ஆதரவளித்தார் என்பது புலனாகிறது. இவ்விடயத்தை சேலம் அரசு அருங்காட்சியக காப்பாளராகவிருந்த க. இலக்குமி நாராயணன் தமது “திப்புவின் சமயக் கொள்கை” என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆனால், இதனை ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்வு கொண்ட கல்கத்தா பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவின் தலைவராக இருந்த ஒருவர் “திப்பு சுல்தான் முஸ்லிமாக மாறச் சொல்லி வற்புறுத்தியதால் 3,000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டனர்” என்று எழுதிய கட்டுக்கதை வங்காளம், அஸ்ஸாம், பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களிலுள்ள பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருந்ததைக் கண்ணுற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்த பி.என். பாண்டே அவர்கள் இச்சம்பவம் பொய்யானது எனக் கூறி இதனை எழுதியவரிடம் தொடர்புகொண்டு அவரது கூற்று அவதூறானது என்று நிரூபித்ததோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் எழுதிய புத்தகத்தையே நீக்குவதற்கு காரணமான மகத்தானதொரு பணியைச் செய்தார்.
திப்பு சுல்தான் மக்களின் உடன் நலனையும் ஒழுக்கத்தையும் பொருளாதார நலனையும் கருத்திற்கொண்டு, அரசுக்கு வருமானத்தை ஈட்டும் மது விற்பனையை அனுமதித்த தமது அமைச்சரைக் கண்டித்தார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளை கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்தியபோது, திப்பு சுல்தான் கஞ்சா உற்பத்தியை தடை செய்தார். மேலும், ஆங்கிலேயர்கள் விபசாரத்தை ஊக்குவித்தபோது திப்பு சுல்தான் விபசாரத்தை தடை செய்ததோடு, அநாதை சிறுமிகளை தேவதாசிகளாக தானமளிப்பதையும் தடை செய்தார். கீழ் சாதிப் பெண்கள் மேலாடை அணியக்கூடாது என மேல் ஜாதி வர்க்கம் விதித்த சட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தார் திப்பு சுல்தான். இவ்வாறு திப்பு சுல்தான் நல்லொழுக்கத்தை போதித்தார்.
திப்பு சுல்தான் போர்க்களத்தில் எந்தளவு நேர்மையாக நடந்துகொண்டார் என்பது பற்றி சில விடயங்களாவன. “தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களை சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால், அது தேசத்தை ஏழ்மையாக்கும். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களை கௌரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் பாதுகாப்புக் கொடுங்கள்” என்று தனது இராணுவத்தினருக்கு ஆணை பிறப்பித்தார் திப்பு சுல்தான்.
விடுதலைப் போருக்கு முன்னோடியாகவும் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்த திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாற்றை தொலைக்காட்சித் தொடராக தயாரிக்க முற்பட்ட சஞ்சய் கான் என்பவர் திப்பு சுல்தான் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களால் பல இன்னல்களுக்கு ஆளானார்.
சஞ்சய் கான் “The Sword of Tippu” என்ற தொலைக்காட்சி தொடரை படமாக்கிய பிரிமியர் சினிமா ஸ்டூடியோவிற்கு திப்பு சுல்தான் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்கள் தீ வைத்தபோது 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டது. சஞ்சய் கான் பலத்த காயங்களுடன் பல மாத சிகிச்சைக்குப் பின்னர் உயிர் தப்பினார்.
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் சவாலாகவும் திகழ்ந்த விடுதலைப் போருக்கு முன்னோடியாகவும் விளங்கிய வீரமிக்க மைசூர் புலி திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாறை ஏன் மறைக்க வேண்டும்?
*கலாபூஷணம் பரீட் இக்பால் யாழ்ப்பாணம்*
No comments: