மாகந்துரே மதுஷ் இற்கு நடந்தது போல் என் மகனுக்கும் நடந்து விடாமல் இருக்க பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஹரக் கட்டாவின் தந்தை மனு .



 மடகஸ்காரில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நந்துன் சிந்தக விக்ரமரத்ன என்ற ஹரக் கட்டாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப் பேராணை மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


கடந்த காலங்களில் காவல்துறை காவலில் இருந்த மாகந்துரே மதுஷ் போன்ற சந்தேகநபர்கள் விசாரணைக்காக வெளியே அழைத்துச் செல்லப்பட்ட போது உயிரிழந்த விடயத்தை சுட்டிக்காட்டி சந்தேகநபரின் தந்தை இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.


இதன்படி, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமது மகனின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய சிக்கல் எழுந்துள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த மனுவில் பிரதிவாதிகளாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், காவல்துறைமா அதிபர், மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.


இதேவேளை, ஹரக் கட்டாவுடன் மடகஸ்காரில் கைதுசெய்யப்பட்ட மற்றொரு சந்தேகநபரான 'குடு சலிந்து' என்றழைக்கப்படும் சலிந்து மல்ஷிக குணரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணையின்றி நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் நேற்று கோரியிருந்தார்.


குடு சாலிந்துவின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்து இந்த நீதிப்பேராணை மனுவை அவரின் தாயார் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.


மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய இருவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் ஷனில் குலரத்ன, அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்தார்.


இந்த நிலையில், மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டி, மகனின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தமது கட்சிக்காரர் தனக்கு அறிவித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


இரு தரப்பு சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், மனுவை எதிர்வரும் 20 ஆம் திகதி அழைப்பதற்கு தீர்மானித்ததுடன், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் குறித்த நிலைப்பாட்டை அன்றைய தினம் தெரிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டார்.


கடந்த முதலாம் திகதி மடகஸ்காரில் 8 பேருடன் கைது செய்யப்பட்ட பிரபல குற்றக் கும்பலின் உறுப்பினர் நதுன் சிந்தக எனப்படும் ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து நேற்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

மாகந்துரே மதுஷ் இற்கு நடந்தது போல் என் மகனுக்கும் நடந்து விடாமல் இருக்க பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஹரக் கட்டாவின் தந்தை மனு .  மாகந்துரே மதுஷ்  இற்கு நடந்தது போல் என் மகனுக்கும் நடந்து விடாமல் இருக்க  பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஹரக் கட்டாவின் தந்தை மனு . Reviewed by Madawala News on March 16, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.