(எம்.வை.எம்.சியாம்)
நாட்டின் இருவேறு பகுதிகளில் மூன்று பெண்களை கழுத்தை நெரித்து கொலை செய்து சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்ற பிரதான சந்தேக நபர் வெள்ளிக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 2ஆம் திகதி இத்தேபானே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்ணொருவர் கழுத்தை நெரித்து கொலை செய்து சொத்துக்களை கொள்ளையடித்துள்ளார்.
இதேவேளை, கடந்த மாதம் முதலாம் திகதி எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்கள் இருவரின் கழுத்தை நெரித்து கொலை செய்து சொத்துக்களை கொள்ளையடித்த சம்பவத்திலும் இந்த சந்தேக நபர் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 34 வயதுடைய யகிரல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது கொள்ளையடிக்கப்பட்ட, 3 தங்க காதணிகள், தங்க மாலை ,கையடக்கத்தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபருக்கு எதிராக மதுகம, களுத்தறை, எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மூன்று பெண்களை கழுத்தை நெரித்து கொலை செய்த நபர் கைது.
Reviewed by Madawala News
on
March 18, 2023
Rating:

No comments: