ரணிலின் அழைப்பில் எழும் ராஜதந்திரச் சமர்.



 -சுஐப் எம்.காசிம்-
சகலரையும் ஒருதாய் உணர்வில் இணைக்கும் தீர்வுத் திட்டத்துக்கு உழைக்க ஜனாதிபதி தயாராகிறார். 'ஏனையோர் தயார்தானா?' எனவும் வினவுகிறார். எல்லோரையும் எப்படி ஒருதாய் உணர்வில் இணைப்பது? அவ்வாறானால், அரசியலமைப்பில் சில விடயங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனிச்சிறப்புக்கள் நீக்கப்பட வேண்டும். பெரும்பான்மை இன கோட்பாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள தனிச்சிறப்பு, சிங்கள மொழிக்குள்ள விஷேட முன்னுரிமை, மத்திய அரசாங்கம் கையாளும் உச்ச அதிகாரம், அதிகாரங்களைப் பகிர்வதில் உள்ள அலட்சியம், காணிப்பங்கீடுகளில் காட்டப்படும் பாரபட்சம் இன்னும் இதுபோன்றன இல்லாமலாக்கப்பட்டால்தான், ஒரே தாயின் நீதி எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக்கும். நூறு பிள்ளைகள் இருந்தாலும் தாயின் பங்கீட்டில் பாரபட்சம் இருக்காது. அவ்வாறு இருந்தாலும் தாயின் இயலாமையை பிள்ளைகள் புரிந்துகொண்டு செயற்படும். இந்நிலையை ஏற்படுத்தவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புறப்பட்டுள்ளார். இதைத்தானே எல்லோரும் முயற்சித்தனர். எந்த ஜனாதிபதிக்கும் இது முடியாமல் போய்விட்டதே!

இருந்தாலும் இவர் உழைக்கவுள்ள சூழல் வேறுபட்டிருக்கிறது. பிரிவினையும் போரும், பகையும் நமது நாட்டவர்களை பசியால் பதம் பார்த்துள்ள சூழலிது. இந்தப் பசி வந்ததால் பத்தும் பறந்துவிட்டன.

யுத்தத்துக்காகக் கொட்டப்பட்ட நிதியைச் சேமித்து உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்கலாம். கையகப்படுத்தப்பட்ட காணிகள், காடுகள் வளர்ந்துள்ள காணிகளை மற்றும் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட காணிகளை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தலாம். ஏன், கண்ணிவெடிகள் மிதக்கவிடப்பட்ட கடலையும் பொருளாதார நோக்குகளுக்காகப் பயன்படுத்துவது பற்றி யோசிக்கும் காலமும் இதுதான். வேறுபாடுகளை களைந்து, ஒரு தேசத்தவர்களாக இணையும் அரசியல் கலாசாரத்தில்தான் இவற்றை சாத்தியமாக்கலாம். தெற்குக் கடல், வடக்குக் கடலென வயிற்றுப் பசி பாரபட்சம் காட்டுவதில்லையே! காலி முகத்திடல் ஆர்ப்பாட்டங்களிலும் இந்த பாரபட்சங்கள் இருக்கவில்லையே!

எனவே, ஜனாதிபதியின் இந்த உழைப்புக்களுக்கு உரமூட்டும் பொறுப்புக்கள் சிறுபான்மை சமூகங்களிடமே உள்ளன. குறிப்பாக, தமிழர் தரப்புக்கு இதில் சில வரலாற்றுப் பொறுப்புக்கள் உள்ளன. கடந்த கால எந்த முயற்சிகளாலும் (ஆயுதம், அஹிம்சை) வெல்லப்படாதுபோன இலட்சியத்தை (தீர்வு) தட்டில் வைத்து தருவதற்கு ஜனாதிபதி எடுக்கும் முயற்சி இது. இதைத் தட்டிவிட முடியாது. இதனால், தமிழ் தரப்புக்கள் பொறுப்புதாரிகளாகப் பணியாற்றுவது அவசியம். பட்ஜட்டின் இரண்டாம் வாசி்ப்புக்கு ஆதரவளித்து ஜனாதிபதியை உற்சாகமூட்ட வேண்டிய தமிழ் தரப்பு, வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. ஆனாலும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இல்லை என்பதை இவர்கள் வெளிக்காட்டியுள்ளனர்.

சிறுபான்மையினரின் அரசியல் பிரச்சினைகள் உள்ளிட்ட சகல விடயங்களிலும் எவ்விதப்பிடிக்கோ அல்லது அழுத்தங்களுக்கோ அடிபணியாமல் சிந்திக்கும் தலைவர் ரணில். இவ்வளவு காலமும் எட்டப்பட்ட முயற்சிகளை விடவும் ரணிலின் காலத்தில் முயற்சிக்கப்பட்டவைதான், தமிழர்களுக்கு ஓரளவாவது திருப்தியளித்திருக்கிறது. 2002 முதல் 2004 வரை இவரது அரசாங்கம் உச்சளவில் முயற்சித்து, ஏதோவொரு தீர்வுக்கு முயன்றதை சர்வதேசமே அறியும். கடந்த 2002 முதல் 2004 வரையான முயற்சிகள் தமிழ் ஈழத்துக்கான சாயலாகவே இருந்தன. இக்காலங்களில், தமிழர் தரப்பின் எல்லை தாண்டிய செயற்பாடுகள் தென்னிலங்கையின் கண்களில் குத்தியதையும் ஆயுத அமைப்பு இரண்டாகப் பிளந்ததையும் கற்றுக்கொண்ட பாடங்களாக தமிழர் தரப்புக் கருத வேண்டும்.

தென்னிலங்கையின் சகல அரசியல் தலைமைகளும் சமாதான தேசத்தையே விரும்புகையில், இனியும் பேரினவாதம் பிழைக்கப் போவதில்லை. இந்தப் பிழைப்புக்கள் காலி முகத்திடலில் எழுந்த அக்கினியில் சாம்பலாகிவிட்டன.

எனவே, ரணிலின் தீர்வுக்கான அறிவிப்பை பயன்படுத்த சிறுபான்மைச் சமூகங்கள் முன்வருதல் அவசியம். இருப்பினும், இவர்களின் முன்வருகைகள் சில முரண்பாடுகளால் பின்னகராது இருந்தால் சரிதான்.

தமிழர் தரப்பு தீர்வு வடக்கு, கிழக்கு இணைப்பை வலியுறுத்தியே, முன்வைக்கப்படும். இவ்விணைப்பில், முஸ்லிம் தரப்பு முரண்படும். இந்த இழுபறியை தென்னிலங்கை பயன்படுத்தும். இந்நிலைக்கு இம்முறை எவரும் இடம்வைக்கக் கூடாது.

எல்லோரும் ஏற்கும் தீர்வையே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்குமென அக்கட்சி கூறுகிறது. ஆனால், எந்தத் தீர்வு தேவை? என்பதில் முஸ்லிம் தலைமைகளின் நிலைப்பாடு பூச்சியத்திலே உள்ளது. முஸ்லிம்கள் விடயத்தில் விட்டுக்கொடுக்கவே முடியாதென முழங்கும் கிழக்குப் பூர்வீக அமைச்சர், விட்டுக்கொடுக்க முடியாதளவுக்கு எதை வைத்திருக்கிறார் என்பதை முன்வைப்பது அவசியம்.

உள்ளூரவுள்ள காணிப் பிரச்சினைகள் மாத்திரம் உரிமைப் பிரச்சினையாகாது. ஆளும், ஆளப்படும் சக்திகளிடம் அடிமையாகாத அதிகாரம், பறிபோகாத வளப்பங்கீடு, நிலையான வருமானம், பிடுங்கப்படாத பிரதிநிதித்துவங்களை கோருவதுதான் இருப்பை ஸ்திரமாக்கும். இவையெல்லாம் இலங்கையருக்கு சமமாக அதாவது, இன விகிதாசாரங்களுக்கு ஏற்ப வழங்கப்படுவதுதான் ஒரு தாயின் பார்வையாக இருக்கும்.
ரணிலின் அழைப்பில் எழும் ராஜதந்திரச் சமர். ரணிலின் அழைப்பில் எழும் ராஜதந்திரச் சமர். Reviewed by Madawala News on November 28, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.