புலிகளால் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டது மறக்க முடியாத சம்பவமாகும்.



கலாபூஷணம் பரீட் இக்பால் - யாழ்ப்பாணம்
யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் இன்று எட்டுத் திசைகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியன்று 32 ஆண்டுகளாகின்றன. 32 ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பார்த்தால் எம் உள்ளம் கொதிக்கிறது. உடல் சிலிர்த்து கண்கள் நனைகின்றன. எனினும், அத்துரதிர்ஷ்ட நினைவுகளை கொஞ்சம் மீட்டிப் பார்க்கிறோம்.

“யாழ்ப்பாணம் என்று சொன்னால் தேன்சுவை ஊறும், பனையிலையும் புகையிலையும் நன்றாக வளரும்” என்ற இனிய பாடல் வரிகளே யாழ் மண்ணின் இனிமைக்கு சான்றாகும்

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி அதுதான் எம் வாழ்வின் துரதிர்ஷ்ட நாள். இப்படியானதொரு கோரச்சம்பவத்தை எதிர்பார்க்காத எம் முஸ்லிம் மக்கள் அனைவரும் தம் அன்றாட வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சுமார் காலை 8 மணியளவில் 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர். முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் பகுதிதான் சோனகத் தெரு. புலிகளின் திட்டத்தை அறியாத அப்பாவி மக்களாகிய நாம் அனைவரும் அதிகூடிய புலிகளின் வருகையைப் பார்த்துத் திகைத்தோம். சோனகத் தெருவை சுற்றியிருந்த அயல் கிராமங்களுக்கு வியாபாரத்திற்காக சென்ற எம் முஸ்லிம் சகோதரர்களை அவசரமாக சோனகத் தெருவிற்கு செல்லுமாறு புலிகள் அக்கிராமங்களுக்குச் சென்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு விடுத்தார்கள். வியாபாரத்திற்கு சென்ற எம் சகோதரர்கள் நிகழவிருக்கும் விபரீதம் தெரியாமல் உடனே சோனகத் தெருவிற்கு விரைந்தார்கள்.

புலி உறுப்பினர்கள் வாகனங்களில் ஏறிக்கொண்டு ஒலிபெருக்கியை கையில் வைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று அழைப்பு விடுத்தார்கள். “முஸ்லிம்களே! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் உடனடியாக ஒருவர் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திற்கு இப்போதே வர வேண்டும்” என்று கட்டளையிட்டுச் சென்றனர். நாம் அனைவரும் ஜின்னா மைதானத்திற்கு விரைந்து ஓடினோம். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஜின்னா மைதானம் நிரம்பி வழிந்தது. எம்மை ஆயிரக்கணக்கான புலிகள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். நாம் அனைவரும் என்ன ஏதென்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்தோம். அப்போது இளம்பருதி என்ற புலி உறுப்பினர் ஒருவன் மைதானத்தின் நடுவே மோட்டார் சைக்கிள் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு கையில் ஒலிபெருக்கியுடன் பேசத் தொடங்கினான். “முஸ்லிம் மக்களே! உங்களுக்கொரு துயரச் செய்தி. நீங்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு உடனடியாக இன்னும் 2 மணித்தியாலங்களில் வெளியேற வேண்டும். இது எம் தலைவரின் உத்தரவு. தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்திற்கே சொந்தம். உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இங்கே விட்டு விட்டு நீங்கள் உடனே வெளியேறுங்கள்” என்று "இளம்பருதி" கூறியதுதான் தாமதம் எமக்கு தலைசுற்றி உலகமே ஒருகணம் இருண்டு விட்டது. இது கனவா? இல்லை நனவா? என்று உணர முடியாமல் தடுமாறி விட்டோம். அடுத்தது என்ன செய்வதென்று புரியாமல் எதிர்காலமே எம் கண்களுக்கு சூனியமாக தென்பட்டது. ஜின்னா மைதானமே கதிகலங்கியது. எம் பெண்கள், ஆண்கள் அனைவரினதும் கண்களிலிருந்தும் கண்ணீர் மாலை மாலையாக ஓடத் தொடங்கியது. செய்வதறியாது அனைவரும் திண்டாடினோம். எம் சகோதரர்கள் சிலர் புலிகளிடம் நியாயம் கேட்டார்கள். வாதாடினார்கள். “எம் பிறந்த மண்ணை விட்டு நாம் ஏன் போக வேண்டும்? இது எங்களுடைய சொந்த இடம்; நாங்கள் போக மாட்டோம்” என கூச்சலிட்டார்கள். பெண்கள் கதறியழுது கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள்.

புலிகள் மனமிரங்கவில்லை. “இது எங்கள் தலைவரின் உத்தரவு. நீங்கள் அனைவரும் வெளியேறித்தான் ஆக வேண்டும். ஊரை விட்டு நீங்கள் செல்லாவிட்டால் அநியாயமாக அனைவரும் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்” என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து புலி உறுப்பினர்கள் அனைவரும் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்தனர். ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானமே வெடிச் சப்தத்தினால் அதிர்ந்தது. நாம் அனைவரும் பயந்து நடுநடுங்கி விட்டோம். வீட்டில் இருந்தவர்களும் ஜின்னா மைதான துப்பாக்கி வேட்டுச் சப்தத்தை கேட்டு எம்மவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என தெரியாது அல்லோல கல்லோலப்பட்டு ஜின்னா மைதானத்தை நோக்கி நடுநடுங்கி விரைந்தனர். ஜின்னா மைதானம் மேலும் நிறைந்து வழிந்தது. இனி இங்கிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நன்றாக புரிந்து விட்டது. மனைவி, மக்கள், குழந்தைகளை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் அனைவரின் உள்ளங்களிலும் நிலைத்திருந்தன. பயந்து, நடுங்கி, அழுது வீங்கிய முகங்களுடன் இனி என்ன நடக்கப் போகிறது என்ற எண்ணத்துடன் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்தை விட்டு அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றோம். எமக்கு நடந்த அநியாயத்தைப்போல இனி யாருக்குமே நடக்கக் கூடாது. சொந்த ஊரை விட்டு, சொந்த வீட்டை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எங்கே போவது? என்ன செய்வது? என்று தெரியாமல் நடைபிணமாக ஊரை விட்டு வெளியேறுவது என்றால் சும்மாவா?

ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திலிருந்து வீடுகளுக்கு சென்றதுதான் தாமதம் புலி உறுப்பினர்கள் வீடுகளினுள் புகுந்து எம் சொத்துக்களை சூறையாடத் தொடங்கினார்கள். 2 மணித்தியாலங்களில் வெளியேறுங்கள் என்று மைதானத்தில் வைத்துக் கூறிவிட்டு வீடுகளினுள் புகுந்து உடனே வெளியேறும்படி அவசரப்படுத்தினார்கள். இனி இங்கிருந்து பயனில்லை, மீறி இருந்தால் உயிர்தான் போகும், எங்கேயாவது போய் உயிரோடாவது இருப்போம், பிள்ளைகளைக் காப்பாற்றுவோம் என்ற நோக்கில் நாம் அனைவரும் பிறந்த மண்ணை விட்டு பிரிய ஆயத்தமானோம். கண்ணில் நீருடனும் நெஞ்சில் கனச் சுமைகளுடனும் நடைபிணமாக வெளியேறினோம்.

பெண்கள் சிலர் தமது பணம், நகைகளை மறைத்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேற முனைந்தனர். பெண் புலி உறுப்பினர்கள் பெண்களையும் ஆண் புலி உறுப்பினர்கள் ஆண்களையும் உடல் பரிசோதனை செய்து அவர்களின் உடமைகளை பறித்தெடுத்தனர். பெண்களின் நகைகளை கழற்றினார்கள். காதணிகளைக்கூட விடவில்லை. நகைகளுடன் காணப்பட்ட பெண்கள் ஒரு மஞ்சாடி நகை கூட உடலில் இல்லாத நிலையைப் பார்க்கும்போது மிகுந்த கவலை ஏற்பட்டது.

பிறந்து ஓரிரு நாட்கள் கூட கடக்காத பச்சிளம் பாலகர்களை கையில் ஏந்திக்கொண்டு கண்ணீரோடு நின்ற எம் சகோதரிகளையும் கட்டிலோடு படுக்கையில் கிடந்த வயதான நோயாளர்களை கையில் ஏந்தி நின்ற எம் இளைஞர் சமூகமும் தத்தளித்து நின்ற அந்த அவலக் காட்சி எம் மனக்கண் முன் தோன்றி மறைகின்றது. அந்த கசப்பான அனுபவத்தை மறக்க முயன்றாலும் அன்றைய நினைவுகள் எம் மனதில் ஒன்றன் பின் ஒன்றாக நிழற்படங்களாக ஓடிக்கொண்டே இருக்கின்றது......

விடுதலைப் புலிகளின் எண்ணத்தில் இக்காட்சிகள் எவ்வாறு தோன்றினவோ தெரியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் பேசும் தமிழே எங்களின் தாய்மொழியும்கூட. எங்களுக்கு இந்தக் கதியா? சிறுகுழந்தைகளின் கையில், கழுத்தில், காதில் இருந்த நகையைக்கூட பிடுங்கி எடுத்துக் கொண்டனர். கழற்ற முடியாத நகைகளை வெட்டி எடுத்தனர். ஆண்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கினார்கள். செலவுக்குப் பணம் வேண்டுமே என கெஞ்ச, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருநூறு ரூபா மட்டுமே கொண்டு செல்ல அனுமதித்தனர். இப்படியான ஓர் அவலநிலை இனி இந்த நாட்டில் யாருக்குமே வரக்கூடாது. சொந்த ஊரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெருமிதமாக வாழ்ந்துகொண்டிருந்த எம்மை வெளியூர்களில் அகதி எனும் பட்டத்தோடு கூனிக்குறுகி நாலாபுறமும் சிதறி வாழ வைத்துவிட்டார்கள் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள்.

வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் தமிழ் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு புலிகள் மாத்திரமே காரணம். முஸ்லிம்களை வெளியேற்றும்போது தமிழ் மக்களின் முக்கியமானவர்கள், இந்து சமய குருக்கள், கிறிஸ்தவ பாதிரிமார்கள் முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகளிடம் உடனடி அவசரப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும்கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன.

2002 ஆம் ஆண்டு வட்டக்கச்சியில் நடந்த புலிகள் இயக்கத் தலைவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் பங்குபற்றிய மதியுரைஞரான அன்டன் பாலசிங்கம் முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒரு துன்பியல் சம்பவம் என்று மட்டும் கூறி இதுதொடர்பில் முஸ்லிம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். 

காலம் தாழ்த்தியாவது வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என உணர்ந்தனர் புலிகள். இது எமக்கு ஓரளவு ஆறுதலளித்தது. 

முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்த காத்திரமான, அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 32 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் முஸ்லிம்களாகிய நாங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எவ்வாறு ஒன்றாக இருந்தோமோ அந்நிலைமை ஏற்பட வேண்டும்.

தற்போது வடக்கில் முஸ்லிம்கள் தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் பாதுகாப்புடனும் எமது சமய, கலாசாரத்துடனும் வாழ நல்ல சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் காத்திரமான, அர்த்தபுஷ்டியான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுகிறோம். 
 


முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் பேதமின்றி ஒற்றுமையுடன் செயற்பட்டு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற திட்டத்தில் கூடிய கவனம் எடுக்குமாறு வேண்டுகிறோம். 


யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 32 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற கனவு நனவாக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம். ஆமீன்...!! 
*கலாபூஷணம் பரீட் இக்பால்-* 
*யாழ்ப்பாணம்.*
புலிகளால் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டது மறக்க முடியாத சம்பவமாகும்.  புலிகளால் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டது மறக்க முடியாத சம்பவமாகும். Reviewed by Madawala News on October 28, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.