உலகில் 200 கோடி மக்கள் வீடற்றவர்களாக வாழும் பரிதாப நிலை.



 கலாபூஷணம் பரீட் இக்பால் - யாழ்ப்பாணம்

உலகின் ஆரம்ப காலத்தில் உருவான குடியிருப்புக்கள் நதிக் கரைகளில்தான் தோற்றுவிக்கப்பட்டன.

அங்கேதான் உலக நாகரிகங்களும் தோற்றுவிக்கப்பட்டன என்று வரலாறு கூறுகின்றது. குடியிருப்பானது மனித வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமானது. குடியிருப்பு என்பது வீடு, சுகாதார வசதி, குடிநீர் வசதி, நல்ல சுற்றாடல், வீதிப் போக்குவரத்து, தொலைத் தொடர்பு, சமூக கட்டமைப்பு ஆகிய அனைத்தையும் கொண்டதே ஆகும். இதற்கு அமைவாகவே குடிருப்புக்களும் நகரங்களும் அமைய வேண்டுமென்பது ஐக்கிய நாடுகள் சபையின் இலட்சியமாகும். 


இந்த இலட்சியத்தைக் கொண்டு மனித குடியிருப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் முதல் மாநாடு கனடாவின் வான்கூவரில் 1976 இல் நடைபெற்றது. ஐ.நா பொதுச்சபையின் சிபாரிசின் பெயரில் 1985 இல் ஒவ்வொரு வருடமும் உலக குடியிருப்பு தினம் அனுஷ்டிக்கப்பட வேண்டுமென்று முடிவுசெய்யப்பட்டது. அதற்கமைய முதலாவது உலக குடியிருப்பு தினம் 1986 தொடக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 


உலகில் வாழும் அனைவரும் குடியிருப்பு வசதிகளை கொண்டிருக்க வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகள் சபையின் இலட்சியம். ஆனால் இன்று உலகில் வாழும் மக்களின் தொகை 798 கோடியையும் தாண்டி விட்டது. 200 கோடி மக்கள் வீடற்றோர்களாக இருக்கின்றனர். இவர்கள் சுத்தமான குடிநீர் வசதி, மின்சார வசதி, சுகாதார வசதி ஆகியன இன்றி வாழ்கின்றனர். நகரங்களிலும் 40 சதவீதத்தினர் சுத்தமான நீர், பொதுவசதிகள் என்பன கிடைப்பதில்லை. இன்று உலக சனத்தொகையில் 55 சதவீதத்தினர் நகரங்களிலேயே வாழ்கின்றனர். 2050 இல் 2/3 பங்கினருக்கு மேல் நகரங்களில் தான் வாழ்வார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 


தற்போது உலகில் நகர்ப்புறங்களில் சனத்தொகையில் அரைவாசிப் பேர் திட்டமிடப்படாத ஆக்கிரமிக்கப்பட்ட குடியேற்றங்களில் தங்கி வாழ்கின்றனர். எனவே தொற்று நோய்களை கொண்ட சுற்றாடலில் அமைந்த தரக்குறைவான வீடமைப்பு திட்டங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


உலக சனத்தொகையானது கி.பி. 01 இல் 2 கோடியாக காணப்பட்டது. இன்று 798 கோடி ஆகும். 2050 ஆம் ஆண்டளவில் 1000 கோடியாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. சனத்தொகை அதிகரிக்க அதிகரிக்க குடியிருப்பு வசதிகளில் தரக்குறைவு ஏற்படும். இதனால் தொற்று நோய்கள், புதிய நோய்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சனத்தொகையானது அதிகரிக்கும் போது குடியிருப்பு தரக்குறைவாக இருக்கும் நிலையில் பெண்களின் சீரழிவு, சிறுவர் துஷ்பிரயோகம், வறுமை, வேலையின்மை காணப்படும். இவற்றை தவிர்க்கும் முகமாக உலகில் வாழும் அனைவருக்கும் தரமான குடியிருப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் இலட்சியமாகும்.   


மூன்றாம் உலக நாடுகளின் சனத்தொகையானது விரைவாக அதிகரித்துச் செல்லும் அளவுக்கு குடியிருப்பு வசதிகள் பெருகவில்லை. சுகாதார வசதிகளும் குடிநீர் வசதிகளும் போதியதாக இல்லை. உலகெங்கும் நகரமயமாக்கல் மிகவும் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக நன்கு திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் என்பதிலும் ஐக்கிய நாடுகள் சபையினர் அக்கறை கொண்டுள்ளனர். 


நகரங்களை மக்கள் அதிகளவில் நாடுவதனால், நகரங்களில் மக்கள் வாழ்வதற்கு பற்றாக்குறை ஏற்படும் போது புதிய நகரங்களை உருவாக்குகிறார்கள். இதனால் சுற்றாடல் பாதிக்கப்படுகின்றது. 


திட்டமிடப்படாத குடியிருப்புக்கள் காரணமாக உலகின் வனம் முற்றாக அழிந்துவிடும் ஆபத்துள்ளது. உலகின் வெப்பவலயக் காடுகள் ஒரு மணித்தியாலத்திற்கு சராசரியாக 60,000 ஏக்கர் என்ற வீதத்தில் அழிந்த வண்ணம் இருக்கின்றன. இலங்கைக் காடுகளில் இன்று எஞ்சியுள்ளது 25 சதவீதம் மட்டுமே. மனித அபிவிருத்திக்காகவும் அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை திட்டமிட்டு பேண வேண்டிய அவசியத்தை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து செயற்பட வேண்டும். 


குடியிருப்புக்களை ஏற்படுத்துதல் என்பது சில நிபுணர்கள் மாத்திரம் நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்குகளை நடத்தி விவாதிக்கும் ஒரு விவகாரம் என்று இன்றும் கூட பலர் நினைக்கிறார்களோ என்று வியக்க வேண்டியிருக்கிறது. புதிய குடியிருப்பு பணிகள் காரணமாக அண்மைய சில ஆண்டுகளாக பிறந்த புதிய குடியிருப்புக்கள் பற்றி மக்கள் மத்தியில் ஓரளவுக்கு உணர்வு காணப்படுகின்ற போதிலும், அரசியல் தலைமைத்துவங்கள் இது விடயத்தில் போதியளவு அக்கறை காண்பிக்காததால் கணிசமான முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை.


புதிய குடியிருப்புக்களை உருவாக்குவதற்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திற்காகவும் அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன். உலகில் மனித குடியிருப்பினை மனித வாழ்க்கைக்கு உகந்ததாக அமைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதுடன் மக்களிடமும் தரமான குடியிருப்பு பற்றிய உணர்வு இருக்க வேண்டும். மக்களும் அரசுடன் ஒத்துழைப்பதன் மூலமே தரமான குடியிருப்புக்களை உருவாக்க முடியும். உலகில் வாழும் மக்களில் 200 கோடி பேர் தரமான குடியிருப்புக்கள் அற்றோர்களாக இருக்கின்றனர். உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் தரமான குடியிருப்புக்களை ஏற்படுத்த அரசும் ஐக்கிய நாடுகள் சபையும் உழைக்க வேண்டும். மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.


*கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்*

உலகில் 200 கோடி மக்கள் வீடற்றவர்களாக வாழும் பரிதாப நிலை. உலகில் 200 கோடி மக்கள் வீடற்றவர்களாக வாழும் பரிதாப நிலை. Reviewed by Madawala News on October 05, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.