முன்னைய ஆட்சியாளர்களுக்கு இலகுவில் தப்பித்துக் கொள்ள முடியாது ; ரவூப் ஹக்கீம்



முன்னைய ஆட்சியாளர்களுக்கு இலகுவில் தப்பித்துக் கொள்ள முடியாது

நினைவேந்தல் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

ஜெனீவா,பிரேரணைத் திருத்தங்களில் மிக முக்கியமான ஒன்றாக இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான மோசடிகளுக்கான பொறுப்புக்கூறல் ஒன்றும் இடம்பெறவேண்டும் என்று புதிதாகச் சேர்த்திருக்கிறார்கள். இதன் நோக்கம் என்னவென்று எல்லோருக்கும் தெரியும் எனவே முன்னைய ஆட்சியாளர்களுக்கு இலகுவில் தப்பித்துக்கொள்ளமுடியாது. இது முள்ளிவாய்க்கால் இழப்புகள் சம்பந்தமான விடயத்திற்கு அப்பால் போன விடயமாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் மறைந்து 22 ஆண்டுகள் நிறைவையொட்டிய நினைவேந்தல் நிகழ்வு, அக்கரைப்பற்று அய்னாஹ் கடற்கரை மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற்றபோது தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

ஒரு நினைவேந்தல் நிகழ்வு என்பது வெறும் மறைந்த எங்களுடைய மாபெரும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் உடைய நினைவுகளை இரைமீட்டுகின்ற நிகழ்ச்சியாக மாத்திரம் இருந்துவிட்டுப்போவது அல்ல .
ஆனால் , அவருடைய வாழ்க்கையோடு எங்களுடைய அரசியலை ஒர் உரைகல்லாக உரசிப்பார்க்கின்ற நிகழ்வாகத்தான் இந்த நிகழ்வுகள் தொடர்ந்தும் நடந்து வந்திருக்கின்றன என்பதுதான் யதார்த்தமாகும்.

தமிழ் பேசும் இனங்களின் ஒற்றுமையை தலைவர் பார்த்த அதே பார்வையில் எப்படி நாங்கள் காப்பாற்றி முன் கொண்டுபோவது என்பது முக்கியம். நிறைய முரண்பாடுகளோடு தமிழ் பேசும் சமூகங்கள் இருந்தாலும் அந்த முரண்பாடுகளை அந்த வேற்றுமைகளுக்கு அப்பால் ஒற்றுமை ஏற்படுத்துவது என்ற அவருடைய சித்தாந்தத்தைப் பற்றி எங்கள் பிரதம அதிதி நண்பர் ஜெயபாலன் இங்கு  தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

 பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ்வும் பேசுகின்ற போது சொன்ன விடயங்களில் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸுக்கு அப்பால் இன்னுமொரு கட்சி வந்துவிடக்கூடாது, முஸ்லிம்களுக்கென்று ஒரு தனிக் கட்சிதான் இருக்கவேண்டும் என்று தலைவர் அஷ்ரப்,  பாஷாவிலாவில் கட்சியை ஆரம்பித்தபோது சொன்ன விடயத்தை இங்கு   நினைவூட்டினார்.

 ஊர்வாதம் என்பது மிக மோசமான பிரதேசவாதமாகும்.இன்று முஸ்லிம்களுடைய அரசியல் சிதறிப்போயிருப்பதற்கான அடிப்படையே ஊரை மையப்படுத்திய கட்சியமைக்கிற அல்லது ஒரு பிராந்தியத்தை மையப்படுத்தி அதிலிருந்து, அந்த அபிலாஷைகளோடு சேர்ந்து எங்களுக்கும்  அமைச்சர் அந்தஸ்து வேண்டும் என்பதற்காக கட்சி வேண்டும் என்று தொடங்கிய விவகாரங்கள்தான் இன்று கல்லெறிந்தால் போய் முஸ்லிம் கட்சித் தலைவர் ஒருவரின் தலையில் விழக்கூடிய அளவிற்கு தலைவர்கள் மலிந்துபோயிருக்கின்ற சமூகமாக நாங்கள் மாறியிருக்கிறோம்.  

கட்சிக்குள்ள இருக்கின்ற உள்விவகாரங்களை பொறுத்தவரை மறைந்த தலைவரின் வார்த்தைகளில் சொல்வதானால்" நீ குருடனாகவும்,செவிடனாகவும், ஊமையாகவும் இல்லாதிருந்தால் இந்தப் பயணத்தில் உன்னால் நிலைக்கமுடியாது."
நான் சிலவேளைகளில் குருடனாக இருக்கிறேன், சிலவேளைகளில் செவிடனாக இருக்கிறேன், பல சந்தர்ப்பங்களில் ஊமையனாக இருக்கிறேன் ஆனால் பயணத்திலிருப்பதற்காக, ஏன் என்றால் இந்தப் பயணம் நிறைய கரடுமுரடான பயணம்,  இதில் பலவிதமான, விதவிதமான பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொண்டு போகிறோம். ஆனால் ,நிச்சியமாக ஈற்றிலே அந்த இலக்கை அடைவதற்கான  உளச்சுத்தியுடனான முயற்சியாகத்தான் அது இருக்கிறது என்பதற்காகத்தான் நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  வெவ்வேறான நிலைப்பாடுகளில் இருந்து கொண்டு இந்த விடயங்களைக் கையாண்டு வருகிறேன்  என்ற ஒரு விடயத்தை மாத்திரம் நான் இப்போதைக்கு ச்சொல்லிவைக்க விரும்புகின்றேன்.

எல்லாம் போட்டி அரசியலின் வெளிப்பாடு ,விருப்புவாக்கு தேர்தலின் போட்டி அதுதான் நடக்கின்றது.இங்கு மேடையில் பேசப்படுவதும் அப்படியாக இருக்கலாம், மேடைக்கு அப்பால் சிலர்  இன்று நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் தவிர்ந்து கொள்வது எல்லாம் போட்டி அரசியலின் விளைவாகும். நான் இங்கு விருப்புவாக்கு அரசியலின் விபரீதம் என்று சொல்லும்போது எல்லோரும் அதனைப்  புரிந்து கொள்வீர்கள்.   விருப்புவாக்கு அரசியலின் விபரீதம் எதுவாகவும் இருக்கலாம்.அது இயல்பான விடயம், ஒரு மாமூலான விடயம்,  அதை நாங்கள் தவிர்க்கமுடியாது,

ஆனால் ,கட்சியுடைய தீர்மானங்கள்,கொள்கைகள், பாராளுமன்றத்தில் வாக்களிப்பது  போன்றவற்றில் அங்கு விருப்பு,வெறுப்பு என்பதெல்லாம் தீர்மானம் எடுப்பதற்கு முன்பு செய்யப்படவேண்டிய விடயங்களாகும். தீர்மானம் எடுத்த பின்னர் அதில் குளறுபடிகள் இருக்குமாகவிருந்தால் அவை குறித்த விவகாரங்களில் கட்சி மிக இறுக்கமான முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதுதான் போராளிகளுடைய எதிர்பார்ப்பாகும். அதன் விளைவுகளை தாராளமாக எல்லோரும் அனுபவித்துவிடுவார்கள்.
என்ன நடக்கும் என்பதை நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன்.

"இந்த ஆட்சியாளர்கள் ஆட்சியில் நீடிக்கமாட்டார்கள்; இந்த ஆட்சியாளர்களின் ஆயுள் நீடிக்கப்போவதில்லை ;ஆபத்தான கட்டத்திற்கு வரப்போகிறது" என்று ஆரூடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். அதனைக் கேட்கத் தவறியதன் விபரீதத்தினால்இன்று என்ன நடந்திருக்கிறது என்பது எல்லோரும் எண்ணிப்பார்க்கவேண்டிய விடயமாகும்.  

 நண்பர்  மறைந்த எம்.ஐ.எம்.  முஹைதீனுடைய நாமத்தினால், இன்று ஒர் அரங்கம் அமைத்திருக்கிறோம்,  அந்த நாமத்தைச் சூடி அரங்கம் அமைப்பதற்கான காரணமே எங்களை விட்டு அவர் மறைந்துவிட்டதால்  மாத்திரமல்ல ,  அவர் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு அவருடைய ஆளுமை என்ன செய்தது என்ற விவகாரத்துக்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கவேண்டிய அவசியமிருக்கிறது.

 நண்பர் மறைந்த எம்.ஐ.எம். முஹைதீன் ஒரு வித்தியாசமான ஆளுமை  .தலைவர் அஷ்ரப்புடைய ஆளுமை ஜனரஞ்சகமான அரசியல் சார்ந்த ஆளுமை, எம்.ஐ.எம். முஹைதீன்  ஜனரஞ்சகமாக அரசியல் செய்த ஒருவராக கணிக்கப்படாமல் இருக்கலாம்,  ஆனால் அவர் தனிக் கட்சி அமைத்த விவகாரமும், முதலாவது புலிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது,  கலாநிதி பதியுத்தீன்  மஹ்மூத்தோடு, கிட்டுவோடு போய் புலிகளுடனான முதலாவது பேச்சுவார்த்தையும், உடன்படிக்கையும் செய்தவர் என்பது மாத்திரமல்ல, அப்போதிலிருந்து  முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற கட்சியை அமைத்திருந்தார்.

 1995 ஆம் ஆண்டு அவர் தலைவரோடு தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு, தன்னுடைய கட்சியை கலைத்துவிட்டு  , முஸ்லிம்களுக்கு என்று இன்னுமொரு கட்சி தேவையில்லை என்று சொன்னதுடன் , தலைவரோடு சேர்ந்து ஒன்றாக இணைந்து,  முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளராகஆற்றிய அவருடைய பணிகள்  சாமான்யமானவையல்ல, இந்த நாட்டின் முஸ்லிம்களின் ஆவணப்படுத்தல் விவகாரம் என்ற ஒரு விடயம் இருக்குமாகவிருந்தால், முஸ்லிம்களின் தரவுகளை ஆவணப்படுத்துவது, இழப்புகளை ஆவணப்படுத்துவது என்ற விவகாரத்தில் அவருடைய பங்கு, அவருக்கு நிகர் அவர்தான் என்ற அடிப்படையில் மாபெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார்.
. எம்.ஐ.எம்.முஹைதீன் தனிமனிதனாக,   இப்படியெல்லாம்  செய்திருக்கிறார், அவரது வீட்டில் நான் பல தடவைகள், பல மணித்தியாலங்கள் நான் அவரோடு கழித்திருக்கிறேன்.ஏன்என்றால் அவ்வளவு தூரம் எல்லா வரைபடங்களையும், அட்டவணைகளையும் அடுக்கி,அடுக்கி வைத்திருப்பார். எங்கெங்கெல்லாம் முஸ்லிம்களுடைய விவசாய நிலங்கள் பறிபோயிக்கின்றன என்பதற்கு  70வது ஆயிரத்திற்கு மேற்பட்ட கோப்புக்களை நான் புலிகளோடு பேச்சுவார்த்தைக்கு போனபோது எனக்கு உறுதுணையாக அவர்  தந்திருந்தார்.ஒரு டென்மார்க்  நிறுவனத்தின் உதவியோடு   ஆவணப்படுத்துகின்ற விவகாரத்தில்,அவரிடம் வேண்டிக் கொண்டமாதிரி கன கச்சிதமாக அந்தக் காரியத்தை அவர் செய்திருந்தார். வடகிழக்கு ,
வடக்கு முஸ்லிம்களின் இழப்புகள்,சுனாமியின் போது ஏற்பட்ட இழப்புகள் என்பவற்றையெல்லாம் முழுமையாக ஆவணப்படுத்தி மிகப் பெரிய ஒரு பங்களிப்பை அவர் செய்தது மாத்திரமல்ல, முஸ்லிம்களுடைய எல்லைப் பிரச்சினைகள், தமிழ் பிரதேசங்களிலும்,சிங்கள பிரதேசங்களிலும் எல்லை நிர்ணய விவகாரத்தில் என்னென்ன விதமாக முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை  கன கச்சிதமாக ஆவணப்படுத்திய வேறொருவர் இருக்க முடியாது என்கின்ற அளவிற்கு எம்.ஐ.எம்.முஹைதீனுடைய பங்களிப்பிருந்தது. 
இதை எங்களுடைய மாபெரும் தலைவர் கண்ணியப்படுத்தியது மாத்திரமல்ல அவரை கட்சியோடு இணைக்கவேண்டும், அவரின் முழு அறிவையும் இந்த இயக்கத்திற்குப் பயன்படுத்தவேண்டும்  என்பதில் தலைவர் காட்டிய ஆர்வத்தின் வெளிப்பாடுதான் அவரை தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர் என்ற பதவியைக் கொடுத்து எல்லா விடயங்களிலும் அவரையை ஈடுபடுத்தியதாகும்.

தென்கிழக்கு பல்கலைக்கழகம் அமைவதில்,அந்த பல்கலைக்கழகத்தின் கட்டடவேலைகளெல்லாம் மேற்பார்வை செய்வதில் தலைவருக்கு உறுதுணையாக நின்ற அவருடைய பங்களிப்பு  சாமான்யமானதல்ல.
எனவே அப்படிப்பட்ட ஒருவருடைய பெயரில் இந்த அரங்கை அமைதத்தது, அதுவும் அவருடைய ஊரிலே இந்த விடயங்களை நினைவுகூர்வது எங்களுடைய கடமை .

இங்கு நாம் பேசிக் இந்தக்கட்டத்தில ஜெனிவாவில் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன, அந்த அமர்வில், இந்த நாட்டிற்கு எதிரான ஒரு பிரேரணை குறித்து வாக்கெடுப்பு நடக்கின்ற ஒரு விவகாரமும், இருக்கிறது.பிரேரணைக்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. திருத்தங்களில் மிக முக்கியமான ஒன்றாக பொருளாதார நெருக்கடிக்கு காரணமான மோசடிகளுக்கான பொறுப்புக்கூறல் ஒன்றும் இடம்பெறவேண்டும்  என்று புதிதாக சேர்த்திருக்கிறார்கள். இதன் நோக்கம் என்னவென்று எல்லோருக்கும் தெரியும் எனவே  முன்னைய ஆட்சியாளர்களுக்கு இலகுவில் தப்பித்துக்கொள்ளமுடியாது. ஏனென்றால் இது முள்ளிவாய்க்கால் இழப்புகள் சம்பந்தமான விடயத்திற்கு அப்பால் போன விடயமாகும். முள்ளிவாய்க்காலோடு சேர்த்து இப்போது மோசடிகளுக்கு பொறுப்பு கூறுகின்ற, அந்த மோசடிகளூடாக இந்த நாட்டின் பொருளாதாரத்தை  அதலபாதாளத்திற்கு இட்டுச்சென்ற முன்னாள் ஆட்சியாளர்களுக்கு எதிரான குற்ற விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான ஒரு முஸ்தீபும் ஆரம்பித்திருக்கிறது.


அதனோடு சேர்த்து  மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவது மற்றும் அதிகாரங்கள் பகிர்தளிக்கப்படுவது சம்பந்தமாக இந்திய அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அதனால் அடுத்தகட்ட அரசியல் இன்னும் கொஞ்சம் சூடுபிடிக்கிற அரசியலாக கட்டாயம் இருக்கப்போகிறது.


வெறும் அரசியல் யாப்பு திருத்தங்கள் மாத்திரமல்ல,  அரசியல் யாப்பு திருத்தமென்று ஜனாதிபதி அண்மையில் இன்னுமொரு கூற்றை பகிரங்கமாக சொல்லியிருக்கிறார்.  "பாராளுமன்ற தேர்தல் சீர்திருத்தத்திற்கு பாராளுமன்றத்திலிருப்பவர்கள் உடன்படவில்லை என்றால் நான் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்போகிறேன்" என்ற ஒரு சவாலை விட்டிருக்கிறார், இவை இந்த மொட்டுக்காரர்களுடைய தூண்டுதல்களால் பேசும் பேச்சுக்கள் . ஏனென்றால், அவர் மொட்டுக்காரர்களின் பேச்சாளராக மாறிவருகின்ற ஒரு வேதனைதான் எல்லோருக்குமிருக்கிறது. இதனை அவரிடம் நேரடியாகவே சொல்லியிருக்கிறேன்.ஆனால், இந்தவிதமாக முஸ்லிம் காங்கிரஸுக்கு மாத்திரமல்ல, சகல எதிர்க் கட்சிகளுக்கும் இன்று இவ்வாறு எச்சரிக்கை விடுத்து, அச்சமூட்டி  பல்கலைக்கழக மாணவரர்களை பிடித்து அடைக்கின்றமாதிரி எங்களுடனும் நடக்கவந்தால் அந்த விவகாரம் சரிப்பட்டு வராது. அதே நேரம் எங்களுக்கு  "வேறு அழைப்பு"ம் வருகிறது.

 ஆனால் இவற்றுக்கெல்லாம் முகம் கொடுப்பதற்கு இந்தக் கட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்திற்கு இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பலம் ,ஒற்றுமை என்பன முக்கியமாக இருக்கிறது, அது சமூகத்திற்காக ஒவ்வொரு கட்டத்திலும் பயன்படுத்தப்படவேண்டும்.


ஒருவர் போய் அமைச்சுப் பதவியை எடுத்து, இப்போது அரசின் சார்பில் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக போய் ,கேவலம் இளவரசர்   சல்மானுக்கு கொடுக்கவேண்டிய கடிதத்தை  ஒரு துணையமைச்சரின் கையில் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். இது இராஜதந்திர ரீதியாக ஜனாதிபதிக்கு செய்யப்பட்ட மிகப் பெரிய இழுக்கு,  Protocol இன் படி ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக நியமித்து இளவரசர் சல்மானிடம்  அனுப்பினால் இளவரசர் சல்மானைத்தான்அவர் சந்திக்கவேண்டும்,  அங்கு இளவரசரை சந்திப்பதை விட்டுவிட்டு, அமைச்சரைக் கூட சந்திக்கவில்லை, ஒரு துணையமைச்சர் வந்து கடிதத்தை பெற்றுக் கொண்டு, "போய் வாங்க" என்று கூறி அனுப்பிவிட்டார் . இதுதான் அவரது கூத்து.

ஆனால்,அவருக்கு எதிரான வழக்கு  நீதி மன்றத்தில் நடக்கிறது. கட்சியை மீறி வாக்களித்தது ஒரு புறமிருக்க , கட்சியை மீறிப் போய் அமைச்சர் பதவியும் எடுத்து   அதற்கு அப்பாலும் போய்  பெரிய டாம்பீகமாகப் பல விடயங்கள் நடக்கின்றன.

இவற்றையெல்லாம் கண்டு கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் சும்மா வாளாவிருக்கிறது என்பதல்ல. அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், இப்படியான துரோகத்தனங்கள் என்ற விவகாரம் எனது காலத்தில்  மாத்திரமல்ல, மறைந்த தலைவர் காலத்திலும் ஏராளமாக நடந்திருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கெதிரான நடவடிக்கைகள் செய்யக்கூடிய அடிப்படையில் செய்யப்பட்டு பலரும் அதன் விளைவை அனுபவித்திருக்கின்றார்கள்.

 ஆனால்  இவற்றையெல்லாம் மீறி இவர்களையெல்லாம் ஒன்று சேர்க்கவேண்டும் துரோகத்தனங்களை மறந்து,பிரச்சினைகளை மறந்து,  பிரதேசவாத அரசியலை அப்படியே போட்டுவிட்டு தேசிய அரசியலுக்கு இந்தக் கட்சியை வலுப்படுத்துவதற்கு அனைவரையும் அரவணைப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது. 

அவர்களாகவே முஸ்லிம் காங்கிரஸின் தலைவரோடு சேர்ந்து பல சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை தலைமைப்பதவியில் வைத்து தொழிற்பட்ட சந்தர்ப்பங்கள் அண்மைக்காலங்களில் நடந்திருக்கின்றன. கூட்டாக இராஜினாமா செய்த விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸுடைய தலைவரைத்தான் முன்னிலைப்படுத்தி இந்த விவகாரங்கள் செய்யப்படவேண்டும் என்ற போது எல்லோரும் ஒன்றாக செயற்பட்டார்கள். 

 தலைவருடைய அந்திம கால விருப்பம் தன்னுடைய எதிர்ப் பாசறையில் இருந்த அனைவரையும் அரவணைப்பது. அதன் விளைவாக அக்கறைப்பற்று மண்ணில் எம்.ஐ. உதுமாலெப்பை,  றிஸ்வி சின்ன லெப்பை  ஏ.ஆர்.மன்சூர் , எம்.எம்.முஸ்தபா சம்மாந்துறை  அப்துல் மஜீத், பொத்துவில் மஜீத் ,ஜலால்தீன் ஆகியோரை நேரில்போய் சந்தித்து அனைவரையும் ஆரத்தழுவி, பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்.

ஒவ்வொரு வீடுவீடாக பெரும்பாலும் அவருடன்  நானும் போயிருக்கிறேன் . இவையெல்லாம்  அவருடையஅந்திம காலத்தில் அவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் .ஆனால் அவாற்றிற்கு கைமேல் பலன்கிடைத்தது. ஒட்டுமொத்தமாக யாரும் மறுக்கவில்லை .எல்லோரும் இந்த கட்சியை அங்கீகரித்தார்கள்.

 நாங்கள் ரமடா ஹோட்டலில் நடத்திய மாநாட்டில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள்  வந்து எங்கள் கட்சியோடு இணைந்து கொண்டார்கள். அது 2000ஆம் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி நடந்தது. தலைவர் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி எங்களை விட்டுப் பிரிந்தார்.  இவ்வாறான ஒரு மாபெரிய சாதனையை செய்துவிட்டுத்தான் தலைவர்  எம்மை விட்டும் பிரிந்தார். ஆனால் அவரின் பிரிவின் பின்னால் கட்சிக்குள் நடந்த பிளவுகள்,பிரச்சினைகள் என்ற அந்த நீண்ட வரலாற்றைப்  பேசுவதற்கான சந்தர்ப்பமல்ல இது. ஆனால், அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி இந்த இயக்கத்தைப் பலப்படுத்துகின்ற முயற்சி எவ்வளவுதான் தடைகள்,பிரச்சினைகள் வந்தாலும் தடையின்றித் தொடரும் என்றார்.

(தொகுப்பு: எம்.என்.எம்.யஸீர் அறபாத்,ஓட்டமாவடி)

முன்னைய ஆட்சியாளர்களுக்கு இலகுவில் தப்பித்துக் கொள்ள முடியாது ; ரவூப் ஹக்கீம் முன்னைய ஆட்சியாளர்களுக்கு இலகுவில் தப்பித்துக் கொள்ள முடியாது ; ரவூப் ஹக்கீம் Reviewed by Madawala News on September 19, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.