இந்தியா, அமெரிக்கா என சென்று கொண்டிருந்த ரணிலின் சர்வதேச பயணம் திசைமாறியதேனோ...



இலங்கை அரசியலில் அனைத்தும் தலை கீழாகவே சென்று கொண்டிருக்கிறது. யார், யாரோடு இருக்கின்றார்கள்

என்றே தெரியவில்லை. நண்பர்கள் பகை பட்டுள்ளனர். எதிரிகள் ஒன்று பட்டுள்ளனர். அரசியலில் யாருமே நிரந்தர நண்பனுமில்லை, எதிரியுமில்லை என்ற கூற்றுக்கான உண்மையான அர்த்தத்தை இலங்கை அரசியல் வழங்கி கொண்டிருக்கின்றது. 


சர்வதேச மற்றும் இலங்கை அரசியலில் இந்தியா, அமெரிக்கா என்பதான ஒரு அணியும், சீனா, ரஸ்யா என்பதான ஒரு அணியும் ( கட்டுரைக்கு அவசியமான நாடுகளை மாத்திரம் இணைத்துள்ளேன் ) உள்ளமை யாவரும் அறிந்ததே! இதில் இந்தியா, அமெரிக்கா ஆகியவற்றோடு ஒன்றிணைந்து செல்லும் பண்பையே ரணில் இதுவரை காலமும் வெளிப்படுத்தியிருந்தார். தற்போதைய ரணிலின் பாதை சீனா, ரஸ்யா நோக்கி திரும்பியுள்ளதை அவதானிக்க முடிகிறது. இதுவே ரணிலின் சர்வதேச இயலாமையை வெளிப்படுத்தும் புள்ளி. ரணிலின் கடந்த கால தொடர்புகள், அவருக்கு பயனளிக்கவில்லை. இனி அவரது வெற்றிக்கு சர்வதேச அரசியல் இராஜதந்திர நகர்வுகளே கை கொடுக்க வேண்டும். இதனை எதிரியை வளைக்கும் உத்தி அல்லது நண்பனுக்கும் அழுத்தம் வழங்கி, சாதிக்கும் உத்தி எனலாம். 


இந்தியாவின் பலத்த எதிர்ப்பையும் மீறி இலங்கை பாதுகாப்பு அமைச்சு சீனாவின் யுவான் வாங் 5 கப்பலுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த கப்பல் இலங்கைக்குள் நுழைந்து, திரும்பினால், நிச்சயம் இந்தியா, தனது ஆட்டத்தை  காட்ட ஆரம்பிக்கும். தன்னை பாதுகாக்க ஆரம்பித்தேயாக வேண்டிய நிர்ப்பந்தமும் அதற்குள்ளது. அதே நேரம் இலங்கை நோக்கி வந்துகொண்டிருக்கும் சீன கப்பலை நிறுத்தினால், சீனா பேயாட்டம் ஆடும். சீனாவின் பொருளாதார பேயாட்டத்தை தாங்கும் நிலையில் இலங்கையில்லை. 


தற்போது ரஷ்யாவிடம் எரிபொருளை பெற இலங்கை அரசு முயற்சிக்கின்றது. ரஸ்யாவும் இலங்கைக்கு உதவும் நிலையில் இல்லை. அதற்கும் பெருமளவான பண பற்றாக்குறை உள்ளது. குறைவான விலையில் வழங்கினாலும், இலவசமாக வழங்காது. இதனாலேயே இந்தியா ரஸ்யாவிடமிருந்து எரிபொருளை வாங்கி, இலங்கைக்கு கூடிய விலை கடனுக்கு வழங்கியுள்ளது. இந் நிலையில் இந்த பயணமும் ரணில் அரசுக்கு பெரு வெற்றியை கொடுக்கும் வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. 


ரஸ்யா, உக்ரேன் மீது தாக்கிய பாணியில் சீனா, தாய்வான் மீதான தாக்குதலுக்கு தயாராகிறது. சொற் போர்கள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. இந்த தாக்குதல் ஆரம்பித்தால் மூன்றாம் உலக போரின் ஒரு சிறிய வடிவத்தை அங்கே பார்க்கலாம். அமெரிக்கா நேரடியாக தாய்வானுக்கு உதவும் என நம்பப்படுகிறது. அதற்கான நம்பிக்கையை தாய்வானுக்கு பல வழிகளிலும் வழங்கியுள்ளது. அண்மையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் தாய்வானுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  அண்மையில் உள்ள சீனாவுக்கு எதிராக தொலைவில் உள்ள அமெரிக்கா அவ்வளவு எளிதில் உதவ முடியாது. எனவே, தாய்வானுக்கு அருகில் உள்ள நாடுகளின் உதவி நிச்சயம் அவசியம். இந்த மோதலின் போது அமெரிக்காவுக்கு உதவ முடியுமான ஒரே ஒரு நாடு இந்தியாவாகும். எனவே, இந்தியா தொடர்பில் சீனா கவனமாக இருக்க வேண்டிய தேவையுள்ளது. 


இந்தியாவும், சீனாவும் நிரந்தர பகை நாடுகள். தீர்க்க முடியாத எல்லை பிரச்சினை இருப்பதால் அவற்றிற்குள் உடன்பாடு எட்டப்படுவதன்கான சாத்தியமே இல்லை. இந் நிலையில் இந்தியாவின் நட்பு நாடுகளை அடையாளம் காண வேண்டிய தேவை சீனாவுக்கு உள்ளது. தற்போது நடந்துகொண்டிருக்கும் ரஸ்யா - உக்ரைன் போரை, இந்தியா, தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றது. இந்தியாவின் சர்வதேச கொள்கை மாறியுள்ளதா, அதன் உறுதி தன்மை எவ்வாறுள்ளது, இந்தியாவின் பலம் என்ன, இலங்கை - இந்திய உறவு எவ்வாறு உள்ளது போன்ற பல்வேறு வினாக்களுக்கான விடைகள் சீனாவுக்கு அவசியம். இந்த கப்பல் வந்து போனல் அதற்கான விடைகளை சீனா பெற்றுக்கொள்ளும். எதிரியின் பலத்தை நாடி பிடித்துவிட்டால், எதிர்ப்பது இலகுவாகிவிடும். 


இலங்கை - இந்தியா உறவு  வலுவானது. அயல் நாடல்லவா? இலங்கையின் பொருளாதார பிரச்சினைக்கு இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ் நாடு உதவி செய்திருந்தமை இலங்கை - இந்தியா உறவின் உறுதியை வெளிப்படுத்துகிறது. இந்தியா - இலங்கை உறவை விட ரணில் - இந்தியா உறவு மிக வலுவானது. இது சீனாவுக்கு எப்போதும் ஆபத்தானது. இலங்கையின் தற்போதைய நிலை சீனா இலங்கையை முழுமையாக வளைப்பதற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஜனாதிபதி தெரிவின் போது இந்தியா டலஸ் அணிக்கு ஆதரவளித்துள்ளதால், ரணில் - இந்தியா உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இவற்றை சாதகமாக பயன்படுத்தியே சீனாவானது இந்திய - இலங்கை உறவை துடைத்தெறிய முனைகிறது. இலங்கை - இந்திய உறவில் விரிசல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியமே தெரிகின்றமை குறிப்பிடத்தக்கது. 


இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளை இலங்கையர்கள் மறந்துவிட முடியாது. இருந்தாலும் இலங்கைக்கு தொடர்ந்து உதவும் நிலையில் இந்தியாவும் இல்லை. இந்தியாவின் பொருளாதாரமும் அவ்வளவு உறுதியாக இல்லை என்பதே உண்மை. தற்போதைய நிலையில் இலங்கைக்கு உதவி செய்யும் ஆற்றல் உள்ள நாடு சீனா மாத்திரம் என்பதே உண்மை. நட்புக்காக இந்தியாவுடன் உறவு வைத்திருப்பதா அல்லது தேவைக்காக சீனாவை அனுசரிப்பதா என்ற இக்கட்டிலேயே இலங்கை மாட்டியுள்ளது. இலங்கை நட்பை பாராட்டும் நிலையில் இல்லை. வேறு வழியில்லை சீனாவுக்காக இந்தியாவை பகைக்கும் நிலையிலேயே உள்ளது. இந்த சார்பு கொள்கையாலேயே சீனாவின் சார்பு அணியாக கருதப்படும்  விமல் அணியினர் ரணிலை ஆதரிக்கின்றனர் எனலாம். 


எது எவ்வாறு இருப்பினும், இச் செயற்பாடு பாரிய அரசியல் புரட்சிக்கு வித்திடும் என்பதில் ஐயமில்லை. தன்னை தாக்க வருபவனை அரவணைக்கும் இலங்கையோடு, இனி இந்தியா நட்பு பாராட்ட முனையாது. இந்தியாவோடு மலையக மற்றும் தமிழ் கட்சிகள் அனைத்தும் உள்ளன. முஸ்லிம் கட்சியொன்றும் இந்தியாவின் ஏஜென்டாக செயற்படுவது கடந்த கால சான்றுகளுடனான வரலாறு. இலங்கை அரசியலில் சிறுபான்மையினரின் வகிபாகம் மிக அவசியமானது. அது எதிர்வரும் தேர்தலில் கடந்த காலங்களை விட முக்கியத்துவம் பெறும். எனவே, எதிர்வரும் தேர்தலில் ரணிலுக்கு எதிராக இந்தியா பலமான வியூகங்களை அமைக்கும் என்பதில் ஐயமில்லை. 


ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,

சம்மாந்துறை.


இந்தியா, அமெரிக்கா என சென்று கொண்டிருந்த ரணிலின் சர்வதேச பயணம் திசைமாறியதேனோ... இந்தியா, அமெரிக்கா என சென்று கொண்டிருந்த  ரணிலின் சர்வதேச பயணம் திசைமாறியதேனோ... Reviewed by Madawala News on August 05, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.