பிழையான தகவலைக் கூறி மக்களை ஏமாற்றும் எரிசக்தி அமைச்சர் தனது பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும்.



ஹஸ்பர்_

எரிபொருள் விலையேற்றம் குறித்து பிழையான தகவலைக் கூறி மக்களை ஏமாற்றும் எரிசக்தி அமைச்சர்

காஞ்சன விஜேசேகர தனது பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டுமென திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு இன்று (26) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


எரிபொருள் விலையை திடீரென பெருந்தொகையால் அதிகரித்த எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகம் மூலம் நட்டத்தினை அனுபவித்து வருவதாகவும் அதனாலேயே பெரிய அதிகரிப்பை மேற்கொண்டதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். இந்தளவு அதிக விலை அதிகரிக்கப்பட்ட போதும் இன்னும் சிறிது நட்டம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் அனுபவிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


எரிசக்தி அமைச்சரது இந்தக் கூற்றுப் பிழையானதாகும். மக்களை ஏமாற்றும் விடயமாகும். இலங்கையில் ஐஓசி தனியார் நிறுவனமும் எரிபொருள் விநியோகம் செய்கின்றது. இந்த நிறுவனத்திலும் இதேவிலைக்கே எரிபொருள் விநியோகம் இடம்பெறுகின்றது. எந்தவொரு தனியார் நிறுவனமும் நட்டத்திற்கு பொருள் விற்பனை செய்வதில்லை.


எனவே, ஐஓசி இந்த விற்பனை மூலம் இலாபம் பெறுகின்றது என்பதே அர்த்தமாகும். இந்த நிலையில் எப்படி பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு மட்டும் நட்டம் ஏற்பட முடியும் என அமைச்சரைக் கேட்க விரும்புகின்றேன்.


தனியார் நிறுவனத்திற்கு இலாபம் ஏற்படும் அதேவேளை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம் ஏற்படுகின்றதென்றால் அங்கு பிழையான நிர்வாகச் செயற்பாடுகள் இடம்பெற வேண்டும் அல்லது ஊழல் இடம்பெற வேண்டும். இதனை கண்டு நிவர்த்தித்தால் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்னும் சிறிது விலையைக் குறைத்து பொதுமக்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்ய முடியும்.


இதன் மூலம் சுமைக்கு மேல் சுமையைச் சுமக்கும் பொதுமக்களுக்கு சிறிது நிவாரணத்தை அளிக்க முடியும். இது தான் இன்றைய நிலையில் அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையாகும். 


இதனை விடுத்து பிழையான நிர்வாகச் செயற்பாடுகளால் ஏற்படும் நட்டத்தை அல்லது ஊழல் மூலம் ஏற்படும் நட்டத்தை பொதுமக்கள் மீது சுமத்துவதற்கு ஒரு அமைச்சர் தேவையில்லை. எனவே, சரியான வெளிப்படைத் தன்மையான நிர்வாகம் செய்ய முடியாத, நாட்டு மக்களுக்கு பிழையான தகவலை வெளியிடும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும். 


இன்று இந்த நாட்டில் விலையேற்றம் செய்வதற்குத் தான் அமைச்சர்கள் உள்ளனர் என்ற கருத்து பொதுமக்களிடையே உள்ளது. அரசாங்கம் செய்யும் இந்த மோசமான செயற்பாடுகளே முழு பாராளுமன்றத்தையும் மக்கள் பிழையாக நோக்குவதற்கு காரணமாகும். 


இவ்வாறு அவர் தெரிவித்தார்.


பிழையான தகவலைக் கூறி மக்களை ஏமாற்றும் எரிசக்தி அமைச்சர் தனது பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும். பிழையான தகவலைக் கூறி மக்களை ஏமாற்றும் எரிசக்தி அமைச்சர் தனது பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும். Reviewed by Madawala News on May 26, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.