தமிழ் - முஸ்லிம் அரசியல் உறவு வேறு சமூக உறவு வேறு.



தேசிய இனங்களுக்கு இடையிலான உறவு என்பது வரலாற்றில் மிகத் தொன்மையானதாகும்,

இவ்வுறவு சில காலத்தில் பல்வேறு காரணங்களால் ஏறுமுகமாகவும் சிலபோதுகளில் தேக்கமடைந்தும் இருந்தாலும் கூட, அதனை காலத்தாலோ, அரசியலினாலோ அல்லது ஆயுதத்தினாலோ முற்றாக அழித்துவிட முடியாது. 


தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான இன உறவுக்கும் அரசியல் உறவுக்கும் ஏதோ ஒரு புள்ளியில் சந்திக்கின்றது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அடிப்படையில், இனங்களுக்கு இடையிலான சமூக உறவு என்பது வேறு, அரசியல் உறவு என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. 

தமிழ், முஸ்லிம் தலைவர்களோ அல்லது இவ்விரு சமூகங்களிலும் இருக்கின்ற தீவிர போக்குள்ள குழுக்களோ முரண்பட்டுக் கொள்கின்றார்கள் என்பதற்காக, சாதாரண தமிழ் பொதுமகனும் முஸ்லிம் சிவிலியனும் முரண்பட்டுக் கொள்ளப் போவதில்லை, முரண்பட தேவையும் இல்லை. 

ஏதோ ஒரு காரண காரியத்திற்காக சம்பந்தனும், ஹக்கீமும் உறவாடுகின்றார்கள் என்றால் அதனால் தமிழ் முஸ்லிம் உறவில்; மெல்லியதொரு தாக்கம் ஏற்படலாமே தவிர அரசியல் தரப்புக்களின் உறவானது இரு சமூகங்களின் உறவையும் தீர்மானிப்பதில்லை. 

அவ்வாறே, இன்னுமொரு காரணத்தைச் சொல்லி தமிழ் தலைவர்களான சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்றோர் ஹக்கீம், றிசாட் மற்றும் அதாவுல்லா போன்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன் கருத்து முரண்படுகின்றார்கள் என்றால், (அவர்கள் சமூகத்தை தூண்டிவிடாத வரை) அதனால் யாழ்ப்பாணத்திலோ அக்கரைப்பற்றிலோ மட்டக்களப்பிலோ மட்டக்குழியிலோ இருக்கின்ற இஸ்மாயிலும் இளையதம்பியும் முரண்பட்டுக் கொண்டதும் இல்லை, முரண்பட்டுக் கொள்ளப் போவதும் இல்லை. 

அரசியல் ரீதியான அல்லது தலைவர்களுக்கு இடையிலான உறவும் அன்பும் எப்போதும் நிரந்தரமற்றதாகும். ஆனால் சாதாரண தமிழ்-முஸ்லிம்-சிங்கள மக்களுக்கு இடையிலான சமூக உறவு பின்னிப் பிணைந்ததாகும். பாரிய இன முரண்பாடு ஒன்று வந்தால் தவிர, இதில் எந்த பின்னடைவும் ஏற்படாது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். 

இப்போது தமிழ்க் கட்சிகள் கூட்டு ஆவணம் ஒன்றை தயாரித்துள்ளன. இதில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளும் வரையறுக்கப்பட்ட அளவில் உள்வாங்கப்படுவதாக கூறப்பட்டது. இருப்பினும், அதன் சில உள்ளடக்கங்கள் முஸ்லிம்களின் நிலைப்பாட்டுக்கு பாதகமானவை என்ற தோரணையில், இவ்வாவணத்தில் ஒப்பமிடுவதற்கு பிரதான முஸ்லிம் கட்சிகள் பின்வாங்குவதாக தெரிகின்றது. 

தமிழ்க் கட்சிகள் தமது கொள்கையில் விடாப்பிடியாக நிற்கும் போது, முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாட்டுக்கு அமைய செயற்பட வேண்டிய கடமை முஸ்லிம் தலைவர்களுக்கும் இருக்கின்றது என்பதை குறிப்பிட்டாக வேண்டும். இருப்பினும் அதனை மிகவும் பக்குவமாகச் செய்ய வேண்டும். 

இந்நிலையில், வயதில் மட்டுமன்றி அரசியலிலும் முதிர்ச்சி கொண்ட த.தே.கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் சொல்லியிருக்கின்ற கருத்து முக்கியமானதும் மிகவும் ஆழமாக நோக்கப்பட வேண்டிதும் ஆகும். 

'தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை மிக முக்கியமானது என்பதால் அரசியல் கோரிக்கைகள் முன்வைக்கும் போது அது தொடர்பில் அதிக கரிசனை செலுத்துகின்றோம். வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். எனவே கூட்டு ஆவணத்தில் அம்மக்களின் விடயங்களும் உள்ளடக்கப்படும்' என்று மிகவும் பக்குவமான கருத்தை முன்வைத்துள்ளார். 

அதாவது, தமிழ் மக்களால் நம்பப்படும் கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில், அவர் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றார்;. அதேநேரம் ஒரு தமிழ்ப் பொதுமகன் என்ற வகையில் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை அவர் வாஞ்சையுடன் மதிக்கின்றார் என்றே கருத வேண்டியுள்ளது. 

தமிழ் முஸ்லிம் கட்சிகள் காலத்திற்கு காலம் உறவு கொண்டாடுவதும், பின்னர் பகைமை பாராட்டுவதும் வழக்கம்தான். இந்தப் பின்னணியில், மேற்குறித்த ஆவணத்தில் முஸ்லிம் தரப்பு ஒப்பமிட்டாலும் ஒப்பமிடாமல் விலகிக் கொண்டாலும், அதனை தமிழ் முஸ்லிம் இன உறவுடன் கோர்த்துப் பார்க்க வேண்டியதில்லை. அதனை வைத்து அரசியல் செய்வதற்கோ, இனவாதம் செய்வதற்கோ யாரும் முற்படக் கூடாது. 

முன்னைய காலங்களில் இந்த நாட்டில் மூவின மக்களும் இரண்டறக் கலந்தே இருந்தனர். இனவாதமும், பயங்கரவாதமும், ஆயுதக் குழுக்களும் இந்தச் சூழலைப் பயன்படுத்தி குளிர்காய்ந்த அரசியல்வாதிகளும்தான், இனங்களுக்கு இடையில் ஒரு கற்பனைச் சுவர் ஒன்றை  கட்டியெழுப்பிருக்கின்றார்கள் எனலாம். 

மிக முக்கியமாக, தமிழ் - முஸ்லிம் அரசியல் உறவும் சமூக உறவும் நீண்டகால வரலாற்றைக் கொண்டதும், நெருக்கமானதுமாகும். அரசியல் தலைவர்களின் உறவு ஏற்ற இறக்கங்களோடு இருந்தாலும், சாதாரண மக்களுக்கு இடையிலான பரஸ்பர உறவு எல்லாக் காலத்திலும் ஒரு மிதமாக பேணப்பட்டே வந்திருக்கின்றது. 

சுதந்;திரத்திற்குப் பின்னர் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழர் அரசியலோடு இணைந்து செயற்பட்டனர். தமிழர்களுக்கு ஒரு இனப் பிரச்சினைத் தீர்வு வருகின்ற போது அதில் முஸ்லிம்களுக்கும் ஒரு உப தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற புரிதல்; அன்றைய தமிழ் தலைவர்களுக்கு இருந்தது. இதனடிப்படையில் முக்கியத்துவமிக்க பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. 

1956 மற்றும் 1961ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாடுகள், 1977இல் வெளியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் போன்றவற்றில் முஸ்லிம்களும் ஒரு தனி இனக் குழுமமாக அடையாளப்படுத்தப்பட்டு, அவர்களுக்கான உப தீர்வையும் தமிழ்த் தரப்பு அறிவித்திருந்தமை நினைவு கொள்ளத் தக்கது. 

தந்தை செல்வநாயகம், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்றோர் முஸ்லிம்களின் விடயத்தில் மிக கரிசனையுடன் செயற்பட்டவர்கள். ஒரு கட்டத்தில், 'அண்ணன் அமிர்தலிங்கம் தமிழர்கள் கேட்பதை பெற்றுத்தரவில்லை என்றால் தம்பி அஷ்;ரப் பெற்றுத் தருவான' மறைந்த முஸ்லிம் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் பேசுமளவுக்கு நெருக்கமான உறவு இருந்தது. 

சமகாலத்தில், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான சமூக, கலாசார உறவும் உயர்ந்த மட்டத்தில் இருந்தது. இதன் காரணமாகவே, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் நியாயமுள்ளது எனக் கருதிய காலம் வரை ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் அதில் இணைந்து கொண்டு தம்மை பலியாக்கினர். இதனை யாரும் மறந்து விடவோ இருட்டடிப்புச் செய்துவிடவோ கூடாது.

ஆனால், ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் முஸ்லிம்களை நோக்கித் திருப்பப்பட்டன. வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றம், படுகொலைகள், கப்பம் பறிப்புகள் இடம்பெறத் தொடங்கின. தமிழ் ஆயுதக் குழுக்கள் மட்டுமன்றி சில இடங்களில் முஸ்லிம் சண்டியர்கள் மற்றும் குழுக்களும் தமிழர்களுக்கு அநியாயங்களை இழைத்தனர் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். 

விடுதலைப் புலிகள் முன்கையெடுத்திருந்த காலத்தில் இன்றிருக்கி;ன்ற மூத்த தமிழ் அரசியல்வாதிகள் அடக்கி வாசித்தனர். முஸ்லிம்கள் விடயத்தில் கூட மௌனம் காக்க வேண்டிய நிலையிருந்தது. அத்துடன், தமிழ் அரசியல்வாதிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தத்தமது இனங்களை முன்னிறுத்தி அரசியல் செய்தனர். 

மேற்சொன்ன எல்லாக் காலத்திலும் முஸ்லிம் - தமிழ் உறவில் பெரிய தாக்கங்கள் ஏற்படவில்லை. பல நூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் மற்றும் இளைஞர்களுக்கு முஸ்லிம்கள் பாதுகாப்பளித்த எழுதப்படாத ஏராளம் கதைகள் உள்ளன. அதுபோல, விடுதலைப் புலிகள் காலத்திலேயே முஸ்லிம்களுக்காகப் பேசிய தமிழ் சமூக செயற்பாட்டாளர்களும் உள்ளனர். முஸ்லிம்களைக் காப்பாற்றிய தமிழ் சிவிலியன்களும் உள்ளனர். 

இதனால் அறியப்படுவது யாதெனில், ஆயுதப் போராட்டத்திற்கு முன்பிருந்து இன்று வரை இளையதம்பியும் இஸ்மாயிலும் உறவோடுதான் இருக்கின்றார்கள். ஆயுதக் கலாசாரமோ, 13ஆவது திருத்தமோ, வடக்கு-கிழக்கு இணைப்போ பிரிப்போ, இனப் பிரச்சினைத் தீர்வோ இந்த உறவில் குறிப்பிடத்தக்க எவ்வித எதிர்த் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 

இன்றிருக்கின்ற மூத்த தமிழ்த் தலைவர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோருக்குப் பின்னர், அதேபோல் இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒய்விற்குப் பிறகு வருகின்ற எதிர்கால தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் இரு இனங்களுக்கும் இடையிலான அரசியல் உறவை குழப்பியடிப்பார்களா என்ற கவலையும் இல்லாமல் இல்லை. 

ஆனால், சமூக, கலாசார உறவில் அரசியல் தரப்பினர் புகுந்து அரசியல் செய்யாத வரை, இனவாதத்தை தூண்டிவிடாத வரை, சாதாரண தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான சமூக உறவில் இந்த நகர்வுகள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படியான தாக்கத்தை கடந்தகாலத்தி;ல் ஏற்படுத்தவும், இனி ஏற்படுத்தப் போவதும் இல்லை. 

எனவே, அரசியல் தலைவர்கள் ஒட்டி உறவாடினாலும் வெட்டி முறித்துக் கொண்டாலும் சமூக உறவு மிதமாக பேணப்பட வேண்டும். மாறாக, தமிழ், முஸ்லிம் அரசியல் உறவையும் சமூக உறவையும் யாரும் ஒன்றுடன் ஒன்று முடிச்சுப் போட்டுக் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. 

- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி) 

தமிழ் - முஸ்லிம் அரசியல் உறவு வேறு சமூக உறவு வேறு.  தமிழ் - முஸ்லிம்  அரசியல் உறவு வேறு  சமூக உறவு வேறு. Reviewed by Madawala News on January 13, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.