பேராசிரியர் அல்லாமா எம்.எம். உவைஸ் நூற்றாண்டு விழா 18ம் திகதி கொழும்பில்



தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஏற்பாடு; பிரதம

 அதிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்பு


இஸ்லாமிய இலக்கிய பாரம்பரியத்தை தமிழ் இலக்கிய பண்பாட்டுடன் ஒன்றிணைத்த அல்லாமா மஹ்மூத் முஹம்மது உவைஸ் அவர்களின் நூற்றாண்டு விழாவும், நினைவுக் கருத்தரங்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் 2022.01.18 ஆம் திகதி நடைபெற உள்ளன. இந்நிகழ்வுகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் தலைமையில் நடைபெற உள்ளன. பிரதம அதிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ கலந்து கொள்வார். இந்நிகழ்வில் மற்றும் பலர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.


ஆய்வுக் கருத்தரங்கில் பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் (வாழ்நாள் பேராசிரியர் பேராதனை பல்கலைக்கழகம்) தலைமையேற்று கருத்துரையாற்றுவார். அறிமுக உரையை பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் (மொழித்துறை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) அவர்களும், கருத்துரைகளை பல பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களும் நிகழ்த்த உள்ளனர். இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார், மொழித்துறை, மற்றும் அல்லாமா உவைஸ் குடும்பத்தினர் மேற்கொண்டுள்ளனர்.


சுகாதார வழிமுறைகளை பின்பற்றி குறிப்பிட்ட எண்ணிக்கையினர் மட்டும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகள் பி.ப 02.30 மணிக்கு ஆரம்பமாகி மொழித்துறைத் தலைவர் கலாநிதி M.A.S.F.ஸாதியாவின் நன்றியுரையுடன் நிறைவடைய உள்ளன.


1922.01.15 பாணந்துறையில் பிறந்து எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் பேராசிரியர் உவைஸ். 1927.05.22 ஆரம்பக் கல்வியை அரசினர் தமிழ்ப் பாடசாலையில் கற்ற பின்னர் பல்கலைக்கழக பட்டம் பெற்றதையடுத்து இலக்கியத்துக்கு இமயத் தொண்டு செய்தவர் அவர். இவரின் நூற்தொகுதி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் அமையப் பெற்ற Ex- Libras Collection பகுதியில் பாதுகாத்து பயன்படுத்தப்படுகின்றன.


இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த உலகின் முதலாவது தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலாநந்தரின் வழிகாட்டலில் தனது கலைமாணிப் படிப்பைப் பூர்த்தி செய்தார். அக்காலகட்டத்தில் தமிழ் கலைமாணி பயின்ற ஒரே மாணவர் உவைஸ் ஆவார். அப்போது உவைஸின் பொருளாதார சூழ்நிலைமை காரணமாக அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸின் கல்விச் சகாய நிதியோடு அவர் தனது பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் உதவி விரிவுரையாளராக இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றினார். அக்காலகட்டத்திலே அவர் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் பற்றித் தேடத் தொடங்கினார். அதனையே தனது முதுமாணிக் கற்கைக்கும் தேர்வு செய்தார். அவரது இப்பணிக்கு தூண்டுகோலாக பேராசிரியர் வித்தியானந்தன், பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஆகியோர் விளங்கினர்.


'முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய தொண்டு' என்ற தலைப்பில் உவைஸ் தனது முதுமாணிப் பட்டத்தை மேற்கொண்டார். பகுதிநேர விரிவுரையாளராகக் கடமையாற்றிய அவர் 1953இல் இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனைக்கு மாற்றப்பட்டதும் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் ஆசிரியராக சேர்ந்து கொண்டார். அக்காலத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றினார். பின்னர் வித்தியோதய பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதும் அதன் 'தற்கால கீழைத்தேய மொழித் துறையின் தலைவராக கடமையாற்றினார். இக்காலகட்டத்தில் இலங்கை வானொலியிலும் பத்திரிகைகளிலும் இஸ்லாமியத் தமிழிலக்கியம் குறித்து பேசியும் எழுதியும் வந்தார். இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாடுகளில் பங்குபற்றினார். இலங்கை வானொலியில் அவர் உரையாற்றியவை பின்னர் 'வழியும் மொழியும்', 'உமறுப் புலவர் ஓர் ஆலிமா' ஆகிய நூல்களாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.



தமிழிலும் ஆங்கிலத்திலும் பாண்டித்தியம் பெற்ற உவைஸ் சிங்கள – தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்ப்பதில் ஈடுபாடு காட்டினார். மாட்டின் விக்கிரமசிங்கவின் 'கம்பெரலிய' என்ற சிங்கள நாவலை தமிழில் 'கிராமப் பிறழ்வு' என மொழிபெயர்த்து வெளியிட்டார். 1964இல் அதனை சாகித்ய மண்டலய வெளியிட்டது. உத்தியோக மொழித் திணைக்களத்தின் மூலம் பல தமிழ் - சிங்கள நூல்களை மொழிபெயர்த்து வழங்கினார். கலாநிதி ஐ.ஏ.எஸ்.வீரவர்தன (பொருளியல்துறை முதுநிலை விரிவுரையாளர்) எழுதிய 'இலங்கையின் பொருளாதார முறை' என்ற நூலை சிங்களத்திலிருந்து மொழிபெயர்த்தார். சி.என்.தேவராஜன் எழுதிய தமிழ் நூல் ஒன்றை 'வாணிஜ அங்க கணிதய' என சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். பேராசிரியர் எப்.ஆர்.ஜயசூரியவின் 'ஆர்திக விக்கிரகய' என்ற நூலையும் 'பொருளியல் பாகுபாடு' என்ற பெயரில் மொழிபெயர்த்தார். இதேபோல ஆங்கிலத்தில் இருந்தும் தமிழில் இருந்தும் இஸ்லாமிய நூல்கள் பலவற்றை சிங்களத்திற்கு மொழிபெயர்த்தார்.


உவைஸ் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளில் கலந்து கொள்வதோடு மட்டுமல்லாது கொழும்பில் அதன் நான்காவது மாநாட்டை மிகப் பிரம்மாண்டமாக நடாத்தி முடித்தார். அப்போது அவர் முஸ்லிம் தமிழ்க் காப்பியங்கள் என்ற ஆய்வேட்டைச் சமர்ப்பித்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.


மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் இஸ்லாமியத் தமிழிலக்கியத்திற்கென்று இருக்கை அமைத்து அதன் முதன்மைத் தமிழ் பேராசிரியராக பேராசிரியர் உவைஸ் அவர்களை இருத்தியது. இந்நிகழ்வு 1979 ஒக்டோபர் 15இல் இடம்பெற்றது. இதன்பின்னர் இஸ்லாமியத் தமிழிலக்கியமே அவர் மூச்சானது. தோடர்ந்து அப்பணியில் ஈடுபட்டார். குறிப்பாக தமிழ் இலக்கியத்தில் வழங்கும் அரபுச் சொற்களுக்கென 'அரபுத்தமிழ் அகராதி' ஒன்றை வெளியிட்டார். இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றினைக் கூறும் ஆறு தொகுதிகளை வெளியிட முனைந்தார். இப்பணிகளை மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிப்புத்துறை மேற்கொண்டது.


இத்தகு வியத்தகு பணிகளை ஆற்றிய உவைஸ் அவர்களை 1992இல் இலங்கை அரசு தேசிய வீரர் தினத்தில் தேசிய விருது வழங்கி கௌரவித்தது. அவர் இலங்கை நாட்டுக்கும் மொழிக்கும் கலாசாரத்துக்கும் சமூகத்துக்கும் அரிய பணிகளை ஆற்றினார்.


'கல்விக்கு உதவி செய்தவர் உலகில் மறைந்து விடுவதில்லை' என்பதற்கு பேராசிரியர் உவைஸ் அவர்கள் மிகப்பெரும் உதாரணம். இஸ்லாமியத் தமிழிலக்கியம் இருக்கும் வரை உவைஸ் என்றும் நம்மோடு வாழ்வார். பல்பண்பாடும் பல்மொழியும் இணைந்த உறவுகள் வாழும் வரை உவைஸ் அதற்கு நமக்கு வழிகாட்டியாவார்.


றசாக் முஹம்மட் அலி...


நூலக ஊடகப்பிரிவு

பேராசிரியர் அல்லாமா எம்.எம். உவைஸ் நூற்றாண்டு விழா 18ம் திகதி கொழும்பில் பேராசிரியர் அல்லாமா எம்.எம். உவைஸ் நூற்றாண்டு விழா 18ம் திகதி கொழும்பில்  Reviewed by True Nation on January 13, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.