கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்து : படகுப்பாதைக்கு அனுமதித்தது யார் ? பாராளுமன்றில் கண்டனம்



(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தை புனரமைத்துத்தருமாறு கோரிக்கைவிடுத்த வேளையில் விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் கேலித்தனமாக கேவலமாக சிரித்தார், அந்த சிரிப்பின் விளைவாக பல உயிர்களை காவுகொடுத்துவிட்டோம் என சபையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் ஆவேசப்பட்டதுடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியில்லாது படகுப்பாதைக்கு அனுமதி வழங்கியது எவ்வாறு? இதற்கு யார் காரணம் எனவும் ரவூப் ஹகீம் மற்றும் இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பினர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் தனது அனுதாபத்தை சபையில் முன்வைத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் சபை அமர்வுகள் கூடிய வேளையில் விசேட கூற்றொன்றை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப், கிண்ணியா பிரதேசத்தில் படகு கவிழ்ந்த விவகாரம் குறித்து சபையில் கூற்றொன்றை முன்வைத்தார்.

அவர் கூறுகையில்,

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் இன்று அனர்த்தமொன்று இடம்பெற்றுள்ளது. குறிஞ்சாக்கேணி பாலம் புனரமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த பாதையை நிர்மாணிப்பதற்கு பதிலாக தற்காலிகமாக போடப்பட்ட பாதையில் விபத்தொன்று ஏற்பட்டு தற்போது வரையில் பத்துப்பேர் இறந்துள்ளனர். பாடசாலை செல்லும் சிறுவர்கள் இதில் உள்ளடங்குகின்றனர். இது மிகப்பெரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.

இந்த பாலம் புனரமைக்கும் விடயம் குறித்து இதற்கு முன்னரும் நான் இதே சபையில் முன்வைத்தேன். உரிய அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய வேளையில், பதில் பாதையொன்று உருவாக்காது எவ்வாறு பால நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றது என கேள்வி எழுப்பிய வேளையில் விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் இதனை ஒரு கேவலமான அல்லது நகைப்புக்குரிய விடயமாக எடுத்துக் கொண்டார். அதற்கான விளைவாக இன்று பல உயிர்கள் காவுகொடுக்கப்பட்டுள்ளன. இந்த தற்காலிக படகு பாதை யாருடைய அனுமதியுடன் இயங்குகின்றது. சட்டமுறைப்படி இயங்குகின்றதா? யார் பொறுப்பு? இதற்கு அரசாங்கம் கூறும் பதில் என்னவென கேள்வி எழுப்பினார்.

இதன்போது சபையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹகீம் :- பாலம் புனரமைக்க எடுக்கப்படும் முயற்சியை நாம் வரவேற்கின்றோம். ஆனால் இடைப்பட்ட காலத்தில் எவருடைய அனுமதியும் இல்லாத வகையில் படகுப்பாதை சேவைகளை முன்னெடுத்ததன் விளைவாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சிறிய படகில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றியமையே இதற்கு காரணம். வீதி புனரமைப்பு அதிகாரசபையின் அனுமதி இல்லாது எவ்வாறு இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன என கேள்வி எழுப்பினார்.

சபையில் நேற்று 27/2 இன் கீழ் விசேட கூற்றொன்றை முன்வைத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் கிண்ணியா அனர்த்தம் குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், கிண்ணியா குறிஞ்சாக்கேணி அனர்த்தம் வருத்தமளிக்கிறது. ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் காணமால் போயுள்ளதாகவும், மூவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சரின் பணிப்பில் இராஜாங்க அமைச்சர் நிமால் லன்சா அடிக்கல் நாட்டி பாலமொன்றை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்தார்.

எனவே குறித்த வேலைத்திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும். அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்துடன் குறித்த படகு சேவையின் செயற்பாடுகள் குறித்து விசாரனையோன்று நடத்தி உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.
கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்து : படகுப்பாதைக்கு அனுமதித்தது யார் ? பாராளுமன்றில் கண்டனம் கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்து : படகுப்பாதைக்கு அனுமதித்தது யார் ? பாராளுமன்றில் கண்டனம் Reviewed by Madawala News on November 23, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.