ஆயிரம் விளக்கும் 20 வருட இருட்டும் !



(ஏ.எல்.நிப்றாஸ் - வீரகேசரி) 

போராளிகளே புறப்படுங்கள்!

ஒரு துப்பாக்கியின் ரவைகளினால்

எனது இரைச்சல் அடங்கி விட்டதுக்காய்

நமது எதிரி

வென்றுவிட்டான் என்று நீ

குழம்பிவிடக் கூடாது.

உனது தலைவனுக்கு

ஒன்றுமே நடக்கவில்லை என்பதனை

நீ எப்போதும் மறந்திடாதே!

நாம் அல்லாஹ்வின் பாதையில்

நடந்து வந்தவர்கள்

நீங்களெல்லாம் தொடர்ந்து அப்பாதையில்

நடக்க இருப்பவர்கள்

இந்தப் போராட்டத்தில்

சூடுண்டாலும், வெட்டுண்டாலும்

சுகமெல்லாம் ஒன்றேதான்

போராளிகளே புறப்படுங்கள்

ஓரத்தில் நின்று கொண்டு

ஓய்வெடுக்க நேரமில்லை

கருத்து வேறுபாடென்னும்

கறையான்கள் வந்துங்கள்

புரிந்துணர்வை சீரழிக்கும்! மிகவும்

புத்தியுடன் நடந்துகொள்ளுங்கள்.

வேகத்தைக் குறைக்காமல்

வெற்றியுடன் முன்னே செல்லுங்கள்...!

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடிவெள்ளியாக இருந்து, தனித்துவ அடையாள அரசியலின் ஊடாக முஸ்லிம்களுக்கான ஒரு அரசியல் வழித்தடத்தை உருவாக்கிய மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் எழுதிய பிரபலமான கவிதை வரிகளே இவையாகும். கவிதையில் மட்டுமல்ல நிஜத்தில் கூட அவர் இவ்வாறான ஒரு அரசியலையே முன்கொண்டு சென்றார். 


ஆனால், அவருக்குப் பின்வந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் அந்த வழித்தடத்தில் முஸ்லிம் மக்களுக்கான அரசியலை முன்கொண்டு செல்லவில்லை. 'ஓவ்வெடுக்க நேரமில்லை' என்று தலைவர் சொல்லியிருந்த போதிலும், 20 வருடங்களாக ஓரத்தில் நி;ன்று கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றனர். 


'ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தான்' பாடலை மட்டும் ஒலிக்க விட்டுக் கொண்டு, ஒரு மெழுகுதிரியைக் கூட ஏற்றி வைக்காமல் ஒட்டுமொத்த சமூகத்தையும் இருட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கின்றனர். 


அஷ்ரபின் மரணத்திற்குப் பிறகு அக்கட்சியைப் பொறுப்பேற்ற றவூப் ஹக்கீம் மற்றும் இதர முஸ்லிம் கட்சித் தலைவர்களான றிசாட் பதியுதீன், அதாவுல்லா உள்ளடங்கலாக இப்போதுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் என யாரும் இதில் விதிவிலக்கு கோர முடியாதளவுக்கு மோசமான அரசியலையே செய்திருக்கின்றனர். 


இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகள், அஷ;ரபின் பெயரையும் அவரது புகைப்படத்தையும் தேர்தல் விளம்பரமாக பயன்படுத்துகின்றனரே தவிர அவருடைய கொள்கைகளை, அரசியலை பின்பற்றவில்லை. அவ்வாறு பின்பற்றுவதற்கான ஒரு அறிகுறியும் தென்படவும் இல்லை. இவ்வாறு அவர் காட்டித்தந்த வழியை மந்துவிட்டு, வெறுமனே அவரது பிறந்த தினமான ஓக்டோபர் 23 ஆம் திகதியும் அவர் அகால மரணமடைந்த செப்டம்பர் 16ஆம் திகதியிலும் அவரை நினைவுகூருகின்றனர். 


இதற்கப்பால் அஷ;ரபிடம் இருந்த சமூக சிந்தனையோ. தூரநோக்கோ, சமூகத்திற்காக துணிச்சலுடன் குரல் கொடுக்கும் தன்மையோ, இனவாத சிந்தனையாளர்களையும் பக்குவமாக கையாளும் ஆற்றலோ, அவரது இனம் கடந்த அரசியல் அணுகுமுறையோ கடந்த 20 வருடங்களில் முஸ்லிம் அரசியல் பரப்பை நிரப்பிய எந்த முஸ்லிம் அரசியல்வாதியிடத்திலும் காணக் கிடைக்கவில்லை. 


முஸ்லிம் அரசியலை நோக்குகின்ற போது அ.மு, (அஷ;ரபுக்கு முன்) அ.பி. (அஷ;ரபுக்குப் பின்) என்று நோக்க வேண்டியிருக்கின்றது. அஷ;ரபை தவிர்த்து, இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை இனியொருபோதும் எழுத முடியாது. முஸ்லிம் சமூகத்திற்கான உரிமை அரசியலையும் அபிவிருத்தி அரசியலையும் சமாந்திரமாக கொண்டு சென்ற அவர், தனித்துவ அடையாள அரசியலில் இன்று வரைக்கும் தனியிடத்தை பிடித்திருக்கி;ன்றார். அவரை ஒரு நியம அளவுகோலாக வைத்தே, இன்றுவரையும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளின் சேவைகளை முஸ்லிம் மக்கள் அளந்து பார்க்கி;ன்றனர். 


ஆந்த வகையில், எம்.எச்.எம்.அஷ;ரப் நிச்சயமாக கொண்டாடப்பட வேண்டியவர் என்பதை அவரது அரசியல் எதிரிகளும் ஏற்றுக் கொள்வார்கள். இதில் ஒரு துளியளவும் மாற்றுக் கருத்தில்லை. அவரை இன்றும் நேசித்துக் கொண்டிருக்கின்ற இலட்சக்கணக்கான முஸ்லிம் மக்கள், அவரால் பயன்பெற்ற கணிசமான தமிழ், சிங்கள குடும்பங்கள் அதனைச் செய்வார்கள். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. 


ஆனால், அஷ;ரபின் கொள்கைகளை பின்பற்றி, சமூகத்திற்கான அரசியலைச் செய்யாமல், அவரையும் அவர் உருவாக்கிய தனித்துவ அடையாள அரசியல் கோட்பாடுகளையும் சீரழித்துப் பிழைப்பு நடாத்திக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அவரை நினைவு கூர்வதற்கான அருகதை இருக்கின்றதா? அல்லது அவ்வாறு கூடி அழுவதால் மட்டும் அவரது கனவு நனவாகி விடுமா? என்பதே இங்குள்ள கேள்வியாகும். 


ஆரநாயக்க வானப்பரப்பில் இடம்பெற்ற விமான விபத்தில் ஆஷ;;ரப் ஒருமுறைதான் இறந்தார் அல்லது கொல்லப்பட்டார். ஆனால், அவரை பின்பற்றுவதாக சொல்லிக் கொள்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் நிஜத்தில் அஷ;ரப் காட்டித்தந்த அரசிலையும் அவரது கொள்கைகளையும் பலமுறை திரும்பத் திரும்ப படுகொலை செய்திருக்கின்றனர், அவரது கனவுகளை குழிதோண்டிப் புதைத்திருக்கின்றனர். இதனால் முஸ்லிம் சமூகத்தை ஒருவித இருட்டுக்குள் இருக்கச் செய்திருக்கின்றனர். 


மர்ஹூம் அஷ;;ரப் தவறுகளுக்கு அப்பாற்பட்டவரோ, விமர்சனங்களுக்கு விதிவிலக்கான அரசியல்வாதியோ அல்லர். அவர் மீதான குறுக்கு வெட்டுப்பார்வை ஒன்றும் இருக்கின்றது. ஆயினும் அவற்றையெல்லாம் தாண்டி, ஒப்பீட்டளவில் மிகச் சிறந்த முன்மாதிரியான அரசியல் தலைவராகவே அவர் கருதப்படுகின்றார். 


1989ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அவர், 1994ஆம் ஆண்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது 11 வருடங்கள்தான். 6 வருடங்கள் மட்டுமே அமைச்சராக இருந்தார். ஆனால், காலகாலத்திற்கும் பேசப்படக் கூடிய அரசியலையும் பாரிய சேவையையும் செய்து விட்டுப் போய் இருக்கின்றார். 


ஒரு குறுகிய காலத்திற்குள் அவர் செய்த சேவையை அவருக்குப் பின்வந்த முஸ்லிம் கட்சித் தலைவர்கள் மற்றும் இந்த 20 வருடங்களில் பிரதிநிதித்துவ அரசியலுக்குள் நுழைந்த சுமார் 30 முஸ்லிம் எம்.பி.க்களால் கூட்டாக இணைந்து கூட செய்ய முடியாமல் போயிருக்கின்றது, இது அவரது திறமையா அல்லது இவர்களின் திறமையின்மையா என்பதை விபரித்துச் சொல்ல வேண்டியதில்லை. 

எம்.எச்.எம்.அஷ;ரப், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை நிறுவினார்.


 இது மிகப் பெரும் சாதனையாகும். அதேபோல், எம்.பி.தெரிவுக்கான மாவட்ட வெட்டுப்புள்ளியை 5 சதவீதமாக குறைத்தார். ஒலுவிலில் துறைமுகம் ஒன்றுக்கான அடித்தளத்தை இட்டார். பல்வேறு வீட்டுத் திட்டங்களை நிறுவினார். இனம் கடந்த அரசியலுக்கான காலடியை எடுத்துவைத்தார். 


நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களுக்கு மட்டுமன்றி தமிழர், சி;ங்களவர்களுக்கும் பாரபட்சமின்றி தொழில்வாய்ப்புக்களை வழங்கினார். இப்போதிருக்கின்ற சிலரைப் போல இலஞ்சமாக பணம் வாங்காமல் வீடுதேடிச் சென்று தொழில்களை வழங்கினார். அம்பாறை மாவட்டத்திற்கு தொழிற்பயிற்சி நிலையங்களை கொண்டுவந்தார் என இன்னும் எத்தனையோ விடங்களை பட்டியலிடலாம். முக்கியமாக, இந்த சமூகத்தை உண்மைக்குண்மையாக நேசிப்பவராக அவர் இருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. 


அவரது மறைவுக்குப் பிறகு, அவரது வழித்தடத்தில் சமூகத்தை வழிநடாத்தக் கூடிய, மக்களால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தேசிய தலைமை உருவாகியிருக்குமாக இருந்தால், இன்று முஸ்லிம் சமூகம் அவரது வெற்றிடத்தை உணர வேண்டிய நிலை ஏற்படாது போயிருக்கலாம்;. ஆனால், அவர் விட்டுச் சென்ற இடத்திலேயே முஸ்லிம் சமூகம் 20 வருடமாக நிற்;கின்றது. 'அவர் இல்லாமல் போய்விட்டாரே' என்ற மனத்தாங்கல் இப்போதும் மக்களிடத்தில் உணரப்படுகின்றது. 


கடந்த இரு தசாப்தங்களாக முஸ்லிம் கட்சிகள் உருவாகியுள்ளன. 'நானும் ரவுடிதான்' என்று சொல்லும் பாணியில், 'நானும் தேசிய தலைவர்தான்' என்று சொல்லிக் கொண்டு பல அரசியல் தலைவர்கள் களத்திற்கு வந்திருக்கின்றார்கள். ஆனால், 'முஸ்லிம் சமூகத்திற்கான' உருப்படியான தலைமைகள் கிடைக்கவில்லை. அந்த இடம் இன்னும் நிரப்பப்படாமலே இருப்பபடவில்லை. மிகக் கிட்டிய காலத்தில் அதற்கான சாத்தியங்களும் தென்படவில்லை. 


எனவே, முஸ்லிம் அரசியல்வாதிகள் அஷ;ரபை நினைவுகூர்வதில் நினைந்தழுவதில் தவறு ஏதுமில்லை. ஆனால், அப்படிச் செய்கின்றவர்கள்... முஸ்லிம் சமூகத்திற்காக கொஞ்சமாவது அஷ;ரபைப் போன்ற உரிமை, அபிவிருத்தி அரசியலைச் செய்திருக்க வேண்டும். 11 வருடங்களே எம்.பியாக இருந்த மர்ஹூம் அஷ;ரப் செய்த சேவையே இன்னும் சொல்லிக் காட்டி அதில் அரசியல் இலாபம் தேடாமல், நீங்கள் எதைச் செய்திருக்கின்றீர்கள் என்பதை மக்களுக்கு கூற வேண்டும். 


'ஆயிரம் விளக்குடன் வந்த ஆதவன்' எனக் கருதப்படும் எம்.எச்.எம்.அஷ;ரபின் மரணத்திற்குப் பிறகு வந்த முஸ்லிம் அரசியல்வாதிகளான உங்களது அரசியல் அணுகுமுறையின் காரணமாக, இருட்டுக்குள் சிக்கிக் கொண்டுள்ள முஸ்லிம் சமூகத்திற்காக, ஒரு 'மெழுகுதிரியையாவது' ஏற்றி வையுங்கள். 


- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 19.09.2021)


ஆயிரம் விளக்கும் 20 வருட இருட்டும் !  ஆயிரம் விளக்கும்  20 வருட இருட்டும் ! Reviewed by Madawala News on September 21, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.