மறைந்தும், மக்கள் மனதில் வாழும் தலைவர் மர்ஹூம் M.E.H. மகரூப் . - Madawala News Number 1 Tamil website from Srilanka

மறைந்தும், மக்கள் மனதில் வாழும் தலைவர் மர்ஹூம் M.E.H. மகரூப் . -By: அரபாத் பாருக் 

இன்று ஜுலை 20ஆம் திகதி முன்னாள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், துறைமுகங்கள்

கப்பல்துறை இராஜாங்க அமைச்சருமான M.E.H மகரூப் அவர்கள் மறைந்து  24 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு இந்த ஞாபகார்த்த கட்டுரை எழுதப்படுகின்றது.


மறைந்தும், மக்கள் மனதில் வாழும் தலைவர் மர்ஹூம் M.E.H.  மகரூப் அவர்கள்.  

திருக்குறளின் அதிகாரம் 24, குறள் 236 இவ்வாறு கூறுகின்றது. 

"தோன்றின் புகழோடு தோன்றுக 

அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

அதன் பொருள், ஒரு துறையியல் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்கு தோன்றுவதைவிட தோன்றாமலிருப்பதே நல்லது என்பதாகும். இந்த குறளுக்கு இலக்கணமாக அரசியலில் தோன்றி வாழ்ந்து காட்டியவர் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், துறைமுகங்கள் கப்பல்துறை இராஜாங்க அமைச்சருமான மர்ஹூம் M.E.H. மகரூப் அவர்கள். தனது பொது வாழ்விலும் சரி, அரசியல் வாழ்விலும் சரி எந்தவொரு மனிதனுக்கும் மனது நோகும்படி நடக்காதவர், எச்சந்தர்ப்பத்திலும் எவருடனும் சத்தமாகவோ, கோபமாகவோ பேசாதவர், 20 வருடங்கள் அதிகாரமிக்க அரசியல்வாதியாக இருந்த போதிலும் அரசியல் மூலம் சொத்துக்களை சேர்க்காதவர், மாறாக தனது குடும்ப சொத்துக்களை ஏழைகளுக்கும், பொது நிறுவனங்கள் அமைப்பதற்கும் வழங்கி வைத்தவர், உதாரணத்திற்கு குறிஞ்சாக்கேணியில் பள்ளிவாயல் மற்றும் பாடசாலை அமைப்பதற்கும், பெரியாற்றுமுனையில் பாடசாலை அமைப்பதற்கும், மூதூர் நாவலடியில் சிங்கள பாடசாலை மற்றும் பள்ளிவாயல் அமைப்பதற்கும் அதேபோன்று கிண்ணியா தோணா பகுதியில் பத்து ஏக்கர் காணியினை மீனவர்களுக்கு வழங்கியமையையும்  குறிப்பிடலாம்.     மர்ஹூம் மகரூப் அவர்கள் தான் உயிருடன் இருந்த காலத்தில் தனது போட்டி அரசியல்வாதிகளுடன் கூட மிகவும் நட்பாகவும்,பண்பாகவும் பழகிய ஒருவர், இவரை பற்றி இவரது எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் கூட இதுவரை தவறாக பேசியதில்லை அந்தளவுக்கு நாகரிகமான அரசியலை மேற்கொண்டவர், இவரின் எதிராளிகள் கூட மர்ஹூம் M.E.H. மகரூப் அவர்கள் "கனவான் அரசியல்வாதி" (Gentleman Politician) என போற்றியதை நாம் அறிவோம்.

.மர்ஹூம் அல்ஹாஜ் M.E.H. மகரூப் அவர்கள் 1939 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05ஆம் திகதி செல்வந்தரான மர்ஹூம் எஹுத்தார் ஹாஜியார், ஜொஹரா உம்மா தம்பதிகளுக்கு மூன்றாவது புதல்வராக பெரிய கிண்ணியாவில் பிறந்தார். இவர் தனது ஆரம்ப கல்வியினை பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலையிலும், இடைநிலை கல்வியை மாத்தளை  சாஹிரா கல்லூரியிலும் உயர் கல்வியை கண்டி புனித அந்தோனியார் கல்லூரியிலும் கற்றார். பின்னர் ஊர் பிரமுகர்கள் இவரின் தந்தையிடம் விடுத்த வேண்டுகோள்களுக்கு இணங்க 1964ஆம் ஆண்டு தனது 25வது வயதில் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டார். 1964ஆம் ஆண்டு நடைபெற்ற கிண்ணியா பட்டிணசபை தேர்தலில போட்டியிட்டு அதன் தவிசாளராக தெரிவானார். தொடர்ச்சியாக 1977 ஆம் ஆண்டுவரை பட்டிணசபை தவிசாளராக கடமையாற்றிய மர்ஹூம்  M.E.H. மகரூப் அவரகள், 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் JR ஜயவர்தன அவர்களினால் கிழக்கு மாகாணத்தில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக அப்போதைய அமைச்சர் M.H. முகம்மட் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால் மூதூர் தொகுதிக்குரிய பொருத்தமான வேட்பாளராக கட்சி தலைவர் JR ஜெயவர்தனாவிற்கு சிபாரிசு செய்யப்பட்டு 1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் மூதூர் தொகுதி வேட்பாளராக நியமிக்கப்பட்டார். இத்தேர்தலில் இவர் எதிர்த்து போட்டியிட்டது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் மூன்று தேர்தல்களில் வெற்றிபெற்ற A.L. அப்துல் மஜீத் அவர்களை, மஜீத் அவர்கள் 1960ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டுவரை பாராளுமன்ற உறுப்பினராகவும்,திருகோணமலை மாவட்ட அதிகாரமளிக்கப்பட்ட அரசியல் பிரமுகராகவும், பிரதி அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.   அத்தேர்தலில் ஐ.தே.க. மூதூர் தொகுதியில் 12530 வாக்குகளை பெற்று வெற்றிபெற M.E.H. மகரூப் அவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் (இத்தேர்தலில் ஸ்ரீ.சு.கட்சி 7800 வாக்குகளை பெற்றது). 

அதன்பின்னர் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் விகிதாசார முறையில் நடைபெற்றது, இத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் முதன்முதலாக போட்டியிட்டது இத்தேர்தலானது மூதூர் தொகுதியின் மூதூர் பிரதேசத்தில் மிகவும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்றது அதாவது மூதூரில் SLMC சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என  வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டதோடு மூதூரில் பிரச்சாரம் செய்வதற்கு சென்ற ஏனைய வேட்பாளர்கள்/ஆதரவாளர்கள் அச்சுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்கள். இதனால் இத்தேர்தல்  M.E.H. மகரூப் அவர்களுக்கு மிகவும் நெருக்கடி மிகுந்ததாக காணப்பட்டது. இத்தேர்தல் முடிவின் படி மாவட்டத்திலுள்ள மூன்று தொகுதிகளிலும் ஐ.தே.க தோல்வியடைந்தது, ஆனால் இது மாவட்ட ரீதியான தேர்தல் என்பதினால் ஐ.தே.க. மூன்றாம் நிலைக்கு வந்து ஒரு ஆசனம் கிடைக்கப்பெற்றது அத்தேர்தலில் M.E.H மகரூப் சரியாக 10,000 விருப்பு வாக்குகளை பெற்று மீண்டும் பாராளுமன்றம் சென்றார்கள். இத்தேர்தலில் சுயேட்சை குழுவாக போட்டியிட்ட EROS 25,259 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும், SLFP 22,966 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும், UNP 22,450 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது, SLMC 17,884 வாக்குகளை பெற்று நான்காம் இடத்திற்கு வந்தது ஆசனம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நாடுமுழுக்க ஆட்சிமாற்றம் ஒன்றை எதிர்பார்த்த மக்கள் மத்தியில் சந்திரிக்கா அலை வீசத்தொடங்கியது 22 தேர்தல் மாவட்டங்களில் வெறும் 6 மாவட்டங்களில் மாத்திரமே ஐ.தே.கவினால் வெற்றிபெற முடிந்தது அவற்றுள் M.E.H மகரூப் அவர்களின் தலைமையிலான திருகோணமலை மாவட்டமும் ஒன்று  என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்தலில் ஐ.தே.க 34,986 வாக்குகளை பெற்று இரண்டு ஆசனங்களை கைப்பற்றியது,  M.E.H மகரூப் அவர்களோடு சுனில் ஷாந்த ரணவீரவும் பாராளுமன்றம் சென்றனர் (ஐ.தே.க வெற்றிபெற்ற ஏனைய மாவட்டங்கள் பதுளை,கண்டி,நுவரெலிய,கேகாலை,அம் பாறை என்பனவாகும்) 

பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இவர் 1980ஆம் ஆண்டு JR யின் காலத்தில் மன்னார் மாவட்ட அமைச்சராகவும், 1989ஆம் ஆண்டு பிரேமதாச காலத்தில் துறைமுகங்கள், கப்பல்துறை இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார், தனக்கு கிடைத்த பதவிகளை கொண்டு தன்னால் முடியுமான வரையில் தனது மாவட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். மிகமுக்கியமாக தனது சமூகம் கல்வியில் பின்தங்கி இருப்பதனை கருத்திக்கொண்டு கல்வி துறையில் தனது கவனத்தினை செலுத்தினார், இவரால் கல்வித்துறைக்கு ஆற்றப்பட்ட சில முக்கிய விடயங்களை இந்நேரத்தில் ஞாபகப்படுத்துவது சிறந்தது என கருதுகின்றேன். 

M.E.H. மகரூப் அவர்கள் தனது காலத்தில் திருகோணமலை மாவட்டம் முழுதும் 22 புதிய பாடசாலைகளை ஆரம்பித்து வைத்துள்ளார் இவற்றில் மூன்று பாடசாலைகளை தனது சொந்த காணியில் அமைத்தமை விசேட அம்சமாகும் அவையாவன தனது தந்தை பெயரில் பெரியாற்றுமுனையில் அல்ஹாஜ் எஹுத்தார் வித்தியாலயமும், தனது தாயார் பெயரில் குறிஞ்சாக்கேணியில் ஜொஹரா உம்மா வித்தியாலயமும், நாவலடி பகுதியில் வசித்த சிரியளவான சிங்கள மக்களுக்காக தனது சொந்த காணியில் நாவலடி சாகர வித்தியாலயமும் அமைத்து கொடுத்தமையாகும். அதேபோன்று 14 பாடசாலைகளை தரமுயர்த்தி கொடுத்ததன் மூலம் அப்பகுதி மாணவர்கள் சாதாரண தரம், உயர் தரம் என்பவற்றை தமது பகுதி பாடசாலைகளிலேயே கற்பதற்கு வசதி செய்து கொடுத்தார் இதன்மூலம் மாணவர்களின் பாடசாலை இடைவிலகளை குறைவடைய செய்தார், அத்தோடு நின்றுவிடாமல் 32 ற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு பாடசாலை கட்டிடங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.  மேலும் இவரால் கல்விக்கு ஆற்றப்பட்ட மகத்தான பணியாக குறிப்பிடக்கூடிய இன்னொரு விடயம், ஆசிரியர் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு அப்போதைய கல்வி அமைச்சர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் ஆசிரியர் போட்டி பரீட்சையொன்றுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு 1987 ஆகஸ்ட்டில் பரீட்சை நடைபெற்று அதன் முடிவுகள் 1988 ஆம் ஆண்டு வெளியாகின, ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு முன்னர் உரியவர்களுக்கு 21 நாள் சேவை முன்பயிற்சி வழங்கப்பட வேண்டும் அதுவும் ஆசிரியர் கலாசாலையில் வழங்கப்பட வேண்டும் என்ற நியதி இருந்தது, அப்போதைய காலப்பகுதி பயங்கரவாத பிரச்சினை நிறைந்த காலமாக இருந்ததினால் யாரும் வெளியில் பயணம் செய்ய முடியாத நிலை காணப்பட்டது, திருகோணமலை மாவட்டம் முழுவதும் 400 பேர் ஆசிரியர் முன்சேவை பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர், இப்பிரச்சினை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த M.E.H. மகரூப் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது, உடனடியாக செயற்பட்ட M.E.H. மகரூப் அவர்கள் உரிய அதிகாரிகளுடன் பேசி சொந்த இடங்களிலேயே சேவை முன்பயிற்சியை வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டது அதன்பிரகாரம் கிண்ணியா,மூதூர், தோப்பூர், தம்பலகாமம் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கிண்ணியா மத்திய கல்லூரியிலும், மாவட்டத்தின் ஏனைய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு திருகோணமலை இந்து கல்லூரியிலும் 1988.05.19ஆம் திகதி பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு ஆசிரியர் நியமனமும் வழங்கப்பட்டது, இதன்மூலம் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த 400 பேர் ஆசிரியர் நியமனம் பெற முடிந்ததோடு மாவட்டத்தில் நிலவிய கூடுதலான ஆசிரியர் வெற்றிடங்களையும் நிரப்ப முடிந்தது. திருகோணமலை மாவட்டத்தில் முதலாவது மூன்று மாடி வகுப்பறை  கட்டிடம் இவரது காலத்திலேயே கட்டப்பட்டது அது கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியில் 1982 டிசம்பர் 14ஆம் திகதி அப்போதைய கல்வி அமைச்சர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இவரது காலத்தில்தான் கிண்ணியா கோட்ட கல்வி அலுவலகம் அமைக்கப்பட்டது 1991.02.15 ஆம் திகதி அப்போதைய கல்வி, உயர் கல்வி அமைச்சர் லலித் அத்துலத்முதலி அவர்களை அழைத்துவந்து திறந்து வைத்தார். இப்படி இவரால் கல்விக்கு ஆற்றிய சேவைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

மர்ஹூம் M.E.H. மகரூப் அவர்கள் கல்விக்கு முன்னுரிமை வழங்கினாலும் ஏனைய துறைகளையும் கவனிக்க தவறவில்லை. இவரினால்தான்  மாவட்டத்தின் பல இடங்களுக்கும்  மின்சாரம் வழங்கப்பட்டது  அதேபோன்று குடிநீர் விநியோகம், வீடமைப்பு  திட்டங்கள், வைத்தியசாலைகள், வீதிகள், புதிய கிராமங்கள் உருவாக்கம்,மீன்பிடி,விவசாயம் ஆகியவற்றிலும் தனது சேவையை ஆற்றியுள்ளார். இவரது காலத்திலேயே கிண்ணியாவில் மின்சார சபை அலுவலகம்,தபாற்கந்தோர்கள், இலங்கை போக்குவரத்து சபை உப டிப்போ என்பன அமைக்கப்பட்டன, இதில் கவலைக்குரிய  விடயம் என்னவென்றால் 1994 ஆம் ஆண்டு இவரது முயற்சியால் அப்போதைய போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் U.L.M. பாரூக் அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட போக்குவரத்து சபை உப டிப்போ ஆனது 27 வருடங்கள் கழிந்தும் இன்னும் உப சாலையாகவே காணப்படுகின்றது, இக்காலப்பகுதியில் 5 பேர் இம்மண்ணிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளார்கள், அதில்,அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர், பிரதி அமைச்சர்கள் (ஒருவர் போக்குவரத்து பிரதி அமைச்சர் ) மாகாண முதலமைச்சர் என்பன உள்ளடங்கும். அதேபோன்று மாவட்டம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு இன,மத, பிரதேச, கட்சி வேறுபாடின்றி வேலை வாய்ப்புக்களை வழங்கியுள்ளார். 

இவர் மன்னார் மாவட்ட அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் மன்னாரில் பல அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்தியுள்ளதனை அறிந்துகொள்ள முடிகின்றது முக்கியமாக அப்போது மிக மோசமாக இருந்த வீதிகளை போக்குவரத்திற்கு ஏற்றவகையில் அபிவிருத்தி செய்துள்ளார், அதேபோன்று இவர் துறைமுகங்கள், கப்பல்துறை இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில்தான் கொழும்பு துறைமுகத்தில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்களின் நலன்கருதி துறைமுக வளாகத்தினுள் பள்ளிவாயலொன்று அமைத்துக்கொடுக்கப்பட்டது, அது தற்பொழுதும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

கிண்ணியா மக்களின் நீண்டகால போக்குவரத்து பிரச்சினையாக இருந்த கிண்ணியா - வெள்ளைமணலை இணைக்கும் துறைக்கு பாலம் அமைப்பதற்கு லிபியா, ஈராக் ஆகிய நாடுகளின் உதவிகளுடன் முயற்சி செய்தார் சில காரணங்களால் அவை வெற்றிபெறவில்லை இருந்தும் வேறு வகையில் தொடர்ந்து முயற்சி செய்து 1993/94ஆம் ஆண்டுகளில் பாலத்திற்குரிய மண் பரிசோதனைகளை மேற்கொண்டு பாலத்திற்குரிய வரைபடம் மற்றும் செலவு மதிப்பீடு (Estimate ) என்பன தயாரிக்கப்பட்டன. பின்னர் 1994ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டமையால் அத்திட்டம் கவனிக்கப்படவில்லை. பின்னர் 2004ஆம் ஆண்டு மர்ஹூம் M.E.H. மகரூப் அவர்களின் காலத்தில் தயாரிக்கப்பட்ட பட வரைபை கொண்டே கிண்ணியா பாலம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று மிகமுக்கியமான ஒரு விடயத்தை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த வேண்டும், நிர்வாக சேவையில் முஸ்லிம்கள் மிகக்குறைவாக இருந்ததினால் 1988ஆம் ஆண்டு விசேட அமைச்சரவை அனுமதி மூலம் SLAS தரத்தை சேராதவர்களை நிர்வாக சேவையில் அமர்த்தினார், அதன்படி திருகோணமலை அரசாங்க அதிபராக மாத்தளையைச்சேர்ந்த A.C.M. செய்ர்தீன் அவர்களையும், கிண்ணியா பிரதேச உதவி அரசாங்க அதிபராக A.M. சாஹுல் ஹமீட் அவர்களையும் நியமித்த பெருமை மர்ஹூம் மகரூப் அவர்களையே சாரும், கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் முஸ்லிம் ஒருவர் அரசாங்க அதிபராக கடமையாற்றிய மாவட்டம் திருகோணமலை மாவட்டம் மட்டுமே ஆகும், அதற்கு காரணம் மர்ஹூம் மகரூப் அவர்களே ஆகும், ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்த  மர்ஹூம் M.E.H. மகரூப் அவர்கள் அவசர கடிதங்களை தானாகவே தட்டச்சு மூலம் தயார் செய்துகொள்வதனை வழக்கமாக கொண்டவர். கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே கிரிக்கெட்  பிரியராக இருந்த இவர் (அமைச்சர்களான லக்ஸ்மன் கதிர்காமர், சரத் அமுனுகம மற்றும் குமார் சங்ககார, முரளிதரன் ஆகியோர் இப்பாடசாலை கிரிக்கெட் அணி தலைவர்களாக இருந்தவர்கள்) கிண்ணியாவில் கிரிக்கெட் விளையாட்டை அறிமுகப்படுத்தியவர், இவரின் ஆலோசனையின் பேரில் இவரின் தீவிர ஆதரவாளரான மர்ஹூம் சுக்கூர் ஆசிரியரின் தலைமையில் "கிண்ணியன்ஸ்" கிரிக்கெட் விளையாட்டு கழகம் உருவாக்கப்பட்டது. எப்பொழுதும் முகத்தில் புன்னகையுடன் காணப்படும் மர்ஹூம் M.E.H. மகரூப் அவர்கள், எவருடனும் சத்தமாகவோ, கோபமாகவோ பேசமாட்டார், அதேபோன்று இவரிடத்தில் கட்சி பேதம், இனமத பேதம் என்பன அறவே காணப்படவில்லை, இதற்கு சிறந்த உதாரணம் இவரினால் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டவர்கள், உதவி பெற்றவர்களின் விபரத்தினை பார்த்தால் புரியும். இச்சந்தர்ப்பத்தில் ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன், ஒரு தடவை ஆசிரியர் நியமனம் வழங்கும் போது (அப்பொழுது MP மாரின் சிபாரிசினால்தான் வேலை வழங்கப்படுவது வழக்கம்) இவரின் தீவிர ஆதரவாளரான ஆசிரியர் ஒருவர் பட்டியலில் உள்ள தீவிர SLFP ஆதரவாளரான தனது சொந்த தங்கையின் மகளின் பெயரை  நீக்கிவிட்டு பட்டியலில் இல்லாத தனது மகளை உள்வாங்குமாறு கேட்டிருக்கின்றார், அதற்கு பதிலளித்த  மர்ஹூம் M.E.H. மகரூப் அவர்கள் "கல்வியில் அரசியல் பார்க்க முடியாது, தகுதியானவர்களுக்கு கிடைக்க வேண்டும்" எனக்கூறி அவரின் கோரிக்கையை நிராகரித்துள்ளார், அன்றுடன் மர்ஹூம் M.E.H. மகரூப் அவர்களை விட்டு விலகிய அந்த ஆசிரியர் இன்று வரை தீவிர SLFP ஆதரவாளராகவே இருக்கின்றார்.

1977.07.21 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தல் மூலம் தேசிய அரசியலுக்கு பிரவேசித்த மர்ஹூம் M.E.H. மகரூப் அவர்கள் பாராளுமன்ற வாழ்வில் 20வது வருடத்தை பூர்த்தி செய்வதற்கு ஒரு நாளைக்கு முன்னர் அதாவது 1997.07.20ஆம் திகதி குச்சவெளி பிரதேசத்தின் இறக்கக்கண்டி பகுதியில் புலிகளால் கடத்தி கடத்திச்செல்லப்பட்ட மீனவர்களின் குடும்பங்களை சந்திப்பதற்கு சென்ற போது  நிலாவெளி 6ஆம் கட்டை பகுதியில் வைத்து ஆயுததாரிகளால் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டார், இவருடன் சேர்ந்து அவரது மெய்ப்பாதுகாவலர் அஷ்ஷதுல்லாஹ், அதிபர் லத்தீப், வாகன சாரதி மன்சூர் அவரின் 7 வயது மகன் சிராஜ் மற்றும் உதுமான் ஆகிய 6 பேர் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

மர்ஹூம் M.E.H. மகரூப் அவர்கள் மறைந்து 24 வருடங்கள் கடந்தாலும் இன்னும் திருகோணமலை மாவட்ட மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். இதற்கு சிறந்த இரண்டு உதாரணங்களை கூற முடியும். 

01. மர்ஹூம் மகரூப் அவர்கள் மறைந்து 15 வருடங்களுக்கு பின்னர் அரசியலுக்கு வந்த அவரின் ஒரே புதல்வன் இம்ரான் மகரூப் அவர்களை  2012யில் கிழக்கு மாகாண சபை தேர்தலிலும், 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களிலும் வெற்றிபெற வைத்தார்கள். இதற்கு மூல காரணம் M.E.H. மகரூப் அவர்களின் செல்வாக்கு.

02. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை,திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லிம் பகுதிகளில் ஐ.தே.கவின் செல்வாக்கு அதிகமாக காணப்பட்டது அம்மாவட்டங்களிலிருந்து பல முஸ்லிம்கள் MPயாக தெரிவாகி வந்துள்ளனர், 1988ஆம் ஆண்டிலிருந்து SLMC வருகையுடன்  அவர்கள் ஐ.தே.க தலைவர்களுடன் மாறி மாறி செய்த உடன்படிக்கைகளினால் இன்று அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் ஐ.தே.க அழிந்து போயுள்ளது ஒரு முஸ்லிம் மாகாண சபை உறுப்பினரையாவது பெற முடியாத நிலை காணப்படுகின்றது. ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் அக்கட்சி ஒரு MP யை பெருமளவிற்கு உயிர் வாழ்கின்றது என்றால் அதற்கு காரணம் மர்ஹூம் M.E.H. மகரூப் அவர்கள் இட்ட விதை, மர்ஹூம் M.E.H. மகரூப் அவர்கள் இன்னும் மாவட்ட மக்களின் இதயங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதேயாகும்.

இந்நாளில் அன்னாருடன் சேர்ந்து மரணித்த அனைவரினதும் பாவங்களை மன்னிப்பாயாக.

மறைந்தும், மக்கள் மனதில் வாழும் தலைவர் மர்ஹூம் M.E.H. மகரூப் . மறைந்தும், மக்கள் மனதில் வாழும் தலைவர் மர்ஹூம் M.E.H.  மகரூப் . Reviewed by Madawala News on July 20, 2021 Rating: 5