சகிப்புத் தன்மையுடன் நீதி, நியாயத்திற்காக பாடுபடுவோம்.



சகிப்புத் தன்மையுடன் நீதி, நியாயத்திற்காக பாடுபடுவோம்
பெருநாள் வாழ்த்துச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்

இறைவன் அளித்த பொறுமையினூடாக சகிப்புத் தன்மையைக் கையாளும் அதேவேளையில், நீதி, நியாயம் நிலைநாட்டப்படுவதற்குப் பாடுபடவும்  இந்த நன்னாளில் திட சங்கற்பம் பூணுவோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ஈதுல் அழ்ஹா பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையிலும், உலக நாடுகளிலும் பல்வேறு சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் மத்தியில் முஸ்லிம்கள்  'ஈதுல் அழ்ஹா 'எனப்படும் ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

இவ்வேளையில்,அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்களைத்  தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்தப் பெருநாள்,  எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நியதிப்படி பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் எங்களை வந்தடைந்திருக்கின்றது.  ஒரு கொடிய தொற்று நோயின்   காரணமாக  பள்ளிவாயல்கள் மூடப்பட்டிருந்த நிலையிலும் கூட சன்மார்க்க ஈடுபாட்டையும்,இறை நம்பிக்கையையும்இழந்து விடாமல் எங்களைப் பாதுகாத்த இறைவனுக்கு  நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

மீண்டும் இறை இல்லங்களில் வணக்க வழிப்பாடுகள் நடைபெறுகின்ற போதிலும், சுகாதார வழிமுறைகளை அனுசரித்து நாம் அனைவரும் நாட்டில் நிலவிவரும் நெருக்கடியான நிலையிலிருந்து அனைத்து இன மக்களும் மீண்டு வருவதற்காகப்  பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.
 
நபி இப்ராஹீம் (அலை) மற்றும்  இஸ்மாயில் (அலை) ஆகியோரின் அளப்பரிய தியாகத்தை வெளிப்படுத்தும் ஒரு வரலாற்று உண்மையை நாங்கள்  இந்தத் தியாகத் திருநாளின் போது நினைவு கூர்கின்றோம்.

தியாகத்தின் நினைவை மாத்திரம் இந்தப் பெருநாள்  தினத்தில் இரை மீட்டிக் கொள்பவர்களாக இல்லாமல், எங்களுக்கு மத்தியில் அன்றாட வாழ்வாதாரத்திற்காக, வறுமையில் சிக்குண்டு சிரமப்படுகின்றவர்களின் நிலைமையைச் சீர்தூக்கிப் பார்த்து அவர்களுக்கு உதவுவதற்கு முன்வர வேண்டும்.

பலவிதமான பொய்க் குற்றச்சாட்டுக்களின் காரணமாக பலர் இன்று சிறையில் வாடுகின்ற நிலையில் ,அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டுமென்பதற்காகவும் நாங்கள் பிரார்த்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

குற்றமிழைக்காதவர்களை கூட நாட்டுப்பற்று அற்றவர்களாகவும் ,விரோதிகளாகவும்  வலிந்து வம்புக்கிழுக்கின்ற ஒரு புதிய கலாசாரம் மிக மோசமாக இந்நாட்டில் பரவியிருக்கின்றது.
இறைவன் எங்களுக்கு அளித்த பொறுமையினூடாக, துன்புறுத்தல்களை தாங்கிக் கொண்டு, சகிப்புத் தன்மையைக் கையாளும் அதேவேளையில், நீதி, நியாயம் நிலைநாட்டப் படுவதற்குப் பாடுபடவும்  இந்த நன்னாளில் திட சங்கற்பம் பூணுவோமாக.

ஈத் முபாரக் !

சகிப்புத் தன்மையுடன் நீதி, நியாயத்திற்காக பாடுபடுவோம். சகிப்புத் தன்மையுடன் நீதி, நியாயத்திற்காக பாடுபடுவோம். Reviewed by Madawala News on July 21, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.