ரிஷாத் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி திகாம்பரம் தலைமையில் ஆர்ப்பாட்டம். - Madawala News Number 1 Tamil website from Srilanka

ரிஷாத் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி திகாம்பரம் தலைமையில் ஆர்ப்பாட்டம்.பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் புட்சிட்டிக்கு முன்பாக இன்று (21) காலை 11 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தொழிலாளர் தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி. தலைமையேற்றார். 

தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவர், மகளிர் அணி உறுப்பினர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்று, நீதிக்காக குரல் எழுப்பினர். 

" டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும், இது விடயத்தில் சட்டம் உரிய வகையில் செயற்பட வேண்டும். நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்." என போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பியதோடு, பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். 

அத்துடன், மலையகத்திலிருந்து சிறார்களை எவரும் வேலைக்கு அமர்த்தக்கூடாது, அவர்களுக்கான கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் குரல் எழுப்பினர். 

-மலையக நிருபர் கிரிஷாந்தன்-
ரிஷாத் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி திகாம்பரம் தலைமையில் ஆர்ப்பாட்டம். ரிஷாத் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த  சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி திகாம்பரம் தலைமையில் ஆர்ப்பாட்டம். Reviewed by Madawala News on July 21, 2021 Rating: 5