இன்றைய வாக்கெடுப்பில் உதயகம்மன்வில வை முஸ்லிம் உறுப்பினர்கள் காப்பாற்றுவார்களா ? - Madawala News Number 1 Tamil website from Srilanka

இன்றைய வாக்கெடுப்பில் உதயகம்மன்வில வை முஸ்லிம் உறுப்பினர்கள் காப்பாற்றுவார்களா ?


அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா

பிரேரணையின் வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.


ஆளும் கட்சிகளுக்குள் கருத்து முரண்பாடுகள் காணப்பட்டாலும் தங்களது அமைச்சருக்கு எதிராக எதிர்க் கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை எதிர்த்து வாக்களிப்பதென்று ஆளும்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.


இந்த வாக்கெடுப்பில் குரங்குகள் போன்று தாவித்திரிகின்ற கொள்கையற்ற முஸ்லிம் பிரதிநிதிகளின் நிலைப்பாடுகள் பற்றி அறிந்துகொள்வதற்கு அனைத்து தரப்பினரும் ஆவலாக உள்ளனர்.


இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு அமைச்சர் பதவிக்காக அலைந்து திரிகின்ற பிரதிநிதிகளுக்கு ஆட்சியாளரை சந்திப்பதற்கு நேரம் வழங்கப்பட்டிருக்கவில்லை.


ஆனால் நமிபிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பு நெருங்கிய சூழ்நிலையில் நேரம் வழங்கப்பட்டதுடன், சந்திப்பின் பின்பு முஸ்லிம்களின் பல பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு எட்டப்பட்டதாக அவர்களது எடுபிடிகளின் முகநூல்களில் காணக்கிடைத்தது.


இங்கே நாங்கள் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், முஸ்லிம் பிரதிநிதிகளுடனான எந்தவொரு சந்திப்பின் பின்பும் “முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கினோம்” என்று ஆட்சியாளர்கள் ஒருபோதும் கூறியதில்லை. மாறாக எம்மவர்களே அறிக்கை விட்டுக்கொள்வார்கள்.  


 ஜனாசாக்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில், ஜனாசாக்களை அடக்குவதற்கு ஆட்சியாளர்கள் சம்மதித்ததன் காரணமாகவே தாங்கள் இருபதுக்கு வாக்களித்ததாக காரணம் கூறினார்கள்.


ஆனால் தொடர்ந்து ஜனாஸா எரிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. இறுதியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் ராஜதந்திர தலையீடு காரணமாகவே அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் சம்மதித்தது என்பதனை நாங்கள் மறக்க முடியாது.    


அதுபோன்று இன்றைய வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துவிட்டு, அதனை மக்கள் மத்தியில் நியாயப்படுத்தும் நோக்கில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் சாதகமான சமிக்ஜையை வழங்கியுள்ளதாக முன்கூட்டியே கூறியுள்ளார்கள்.


ஆனால் இவர்கள் ஒருபோதும் முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி ஆட்சியாளர்களுடன் பேசியிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் வேண்டுமென்றே முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கப்படுகிறது.


இந்த நிலையில் ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டுக்கு மாற்றமான கோரிக்கையை முன்வைத்தால், அது தாங்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற அமைச்சர் பதவிகளை அடைய முடியாதென்பது இவர்களுக்கு நன்றாக தெரியும்.


இது ஒருபுறம் இருக்க, மறுபக்கத்தில் தலைவர்களின் நிலைப்பாடு என்ன ? மக்கள் காங்கிரஸ் தலைவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டுமென்பதுதான் நியாயமாகும்.


முஸ்லிம் காங்கிரசை பொருத்தமட்டில் அதன் உறுப்பினர்கள் எவரும் தலைவரின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை. இது யார் விட்ட தவறு ? இதனை ஏன் ஆரம்பத்தில் கட்டுப்படுத்த முடியவில்லை ? என்ற கேள்விகளுக்கு தலைவர் ரவுப் ஹகீம் அவர்களே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். (இதுபற்றி வேறு ஒரு தலைப்பில் விரிவாக ஆராய்வோம்)


உதய கம்மன்விலவுக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் ஆதரவாக கையொப்பமிட்டவர்களில் ரவுப் ஹகீம் அவர்களும் ஒருவர். அவ்வாறு ஆதரவாக கையொமிட்டுவிட்டு பின்பு பிரேரணைக்கு எதிராகவோ அல்லது நடுநிலையாகவோ வாக்களிப்பது அவரது நம்பக தன்மையை முற்றாக அழித்துவிடும்.


எனவேதான் இன்றைய வாக்கெடுப்பில் மு.கா உறுப்பினர்கள் தலைவருடன் சேர்ந்து வாக்களிப்பார்களா ? அல்லது முஸ்லிம்களின் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படாத நிலையில், அமைச்சர் பதவி மற்றும் இதர சலுகைகளுக்காக அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா ?


அதாவது முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் தீவிரமாக செயல்பட்டுவருகின்ற முஸ்லிம்களின் எதிரியான உதய கம்மன்விலவை காப்பாற்றுவார்களா ? பொறுத்திருந்து பார்ப்போம்.


கட்டுரையாளர் :  முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது    

இன்றைய வாக்கெடுப்பில் உதயகம்மன்வில வை முஸ்லிம் உறுப்பினர்கள் காப்பாற்றுவார்களா ?  இன்றைய வாக்கெடுப்பில்  உதயகம்மன்வில வை முஸ்லிம் உறுப்பினர்கள் காப்பாற்றுவார்களா ? Reviewed by Madawala News on July 20, 2021 Rating: 5