உழ்ஹிய்யா கொடுப்போம், ஈதுல் அழ்ஹாவை கொண்டாடுவோம்.



புனித ஹஜ் கடமையானது இஸ்லாத்தில் ஐந்தாவது கடமையாகும். 
வசதி படைத்த செல்வந்தர்களுக்கு மட்டுமே கடமையாக்கப்பட்டுள்ளது. வசதி படைத்த செல்வந்தர்கள் அனைவரும் கண்டிப்பாக புனித ஹஜ்ஜை நிறைவேற்றியாக வேண்டும். சக்தியிருந்தும் புனித ஹஜ்ஜை நிறைவேற்றாமலிருப்பது பெரும் குற்றமாகும்.
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பமே நம் மனக்கண் முன் நிழலாடும். இஹ்ராம் கட்டுதல், கஃபாவை வலம்வருதல், ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடல், ஸபா, மர்வா மலைகளுக்கிடையில் ஓடுதல், புனிதம் நிரம்பிய ஸம்ஸம் நீர் அருந்துதல், அரபாவில் தரித்தல், குர்பான் கொடுத்தல், மினாவில் கல்லெறிதல் போன்ற அனைத்து கிரியைகளிலும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகம் பிரதிபலிக்கின்றன.
ஹஜ்ஜுக்கான ஒன்றுகூடல், முஸ்லிம் உம்மத்தின் ஐக்கிய உணர்வை பறைசாற்றும் சர்வதேசளவிலான வருடாந்த மாநாடாக கணிக்கப்படுகிறது. தொழுகையில் ஆரம்பிக்கும் முஸ்லிம் உம்மத்தின் ஐக்கியமும் ஒருமைப்பாடும் ஹஜ் ஒன்றுகூடலில் மேலும் வலுப்பெறுகிறது. 

நபி (ஸல்) அவர்களின் வருகைக்கு முன் வாழ்ந்த ஜாஹிலிய்யா காலத்து மக்கள் கூட இவ்வழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர். இணைவைப்போடு மூட நம்பிக்கைகளும் அனாச்சாரங்களும் நிறைந்த ஒரு வழிபாடாகவே இது இருந்து வந்தது. இது ஒரு வழிபாடு என்பதை விடவும் அரேபிய தீபகற்ப மக்கள் ஒன்றுகூடும் வியாபார சந்தையாகவே திகழ்ந்தது என்றால் மிகையாகாது. 

நபி (ஸல்) அவர்களின் வருகைக்குப் பின் இந்நிலை முற்றாக மாற்றப்பட்டு இணைவைப்பும் மூட நம்பிக்கைகளும் அனாச்சாரங்களும் முற்றாக அகற்றப்பட்டு வருடாந்தம் ஒன்றுகூடும் சர்வதேச இஸ்லாமிய சமத்துவமும் சகோதரத்துவமும் உள்ளடக்கிய மாநாடாக அமையப்பெற்றது. 

அல்லாஹ்வின் கட்டளையை இதயத்தில் இறுக்கமாய் கொண்டு, எத்தனையோ காலங்களாக “இல்லையே தமக்கொரு பிள்ளை” என ஏங்கித் தவித்து இன்னல் பல கண்டு இறுதியில் அன்புடனும் ஆசையுடனும் பெற்றெடுத்த அருமை மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை அல்லாஹ்விற்காக பலியிடத் துணிந்த இப்ராஹீம் (அலை) அவர்களின் உயர்வான, ஒப்பற்ற மனதையும், ஒரு மாபெரும் தத்துவத்தையும் இந்த ஹஜ்ஜுப் பெருநாள் எமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றது. 
முஸ்லிம்களின் பெருநாள் தினம் தனித்துவமானதாகவும் முன்மாதிரியானதாகவும் அமைய வேண்டுமென்று இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. முஸ்லிம்கள் இந்த நாட்டில் தனியாக வாழ்பவர்கள் அல்லர். நாம் பெரும்பான்மை சமூகங்களுடன் இரண்டறக் கலந்தே வாழ்கிறோம். எனவே அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அவர்கள் ஆவேசப்படுகின்ற, ஆத்திரப்படுகின்ற சூழ்நிலைகளை நாம் உருவாக்கக் கூடாது. ஒருவருக்கு இருக்கும் உரிமைகளும் மத, கலாசார கொள்கைச் சுதந்திரங்களும் இன்னுமொருவருக்கு இடைஞ்சலாக இருக்க முடியாது என்பது ஜனநாயக தத்துவங்களில் ஒன்றாகும். 
இஸ்லாம் இம்மை, மறுமை பயன்களை அடைந்துகொள்ளக் கூடிய வகையில் பெருநாளைக் கொண்டாட வழிகாட்டியுள்ளது. 
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தலின்படி பள்ளிவாசலில் 100 பேருக்கு மேற்படாத வகையில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒவ்வொருவரும் ஒரு மீட்டர் இடைவெளியை பேணுதல் வேண்டும். மேலும் அனைவரும் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் (மாஸ்க்) அணிதல் வேண்டும். தொழ வருபவர்கள் தங்களது முஸல்லாக்களை கொண்டு வருதல் வேண்டும். தொழுகைக்காக வீட்டிலிருந்து வுழூ செய்து கொண்டு வர வேண்டும். காய்ச்சல், இருமல், தடுமல், தொண்டைவலி, மூச்சுத்திணறல் போன்றவை உள்ளவர்கள் பள்ளிவாசல்களுக்கு செல்லக் கூடாது. கை குழுக்குதல், கட்டியணைத்தல் தவிர்க்கப்படல் வேண்டும். பள்ளிவாசல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் தேவையற்ற வகையில் சுற்றித் திரிதல் தவிர்க்கப்படல் வேண்டும்.






புனித ஹஜ் பெருநாள் தினத்திலும் அதைத் தொடர்ந்துவரும் துல்ஹஜ் மாதம் 11,12,13 ஆகிய தினங்களிலும் வசதியுள்ள ஒரு முஸ்லிம் நிறைவேற்றும் மிகச் சிறந்த வணக்கமே உழ்ஹிய்யா (குர்பான்) கொடுப்பதாகும். ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற மிருகங்களை அறுத்து தானும் உண்டு பிறருக்கும் புசிக்கக் கொடுத்து அல்லாஹ்வின் அன்பைப் பெறும் நற்செயலே உழ்ஹிய்யா ஆகும்.
ஸகாத் கொடுப்பவர்கள்தான் உழ்ஹிய்யா கொடுக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. வசதியுள்ளவர்கள் அனைவரும் கொடுக்க வேண்டும். ஒட்டகம் அல்லது மாடாக இருந்தால் ஏழு பேர் சேர்ந்து கூட்டாக கொடுக்கலாம். இது ஆண்களுக்கு மட்டும்தான் என்பதில்லை. பெண்களும் தாராளமாக இதில் பங்கேற்கலாம். உழ்ஹிய்யா கொடுப்பவரே அறுப்பது மிகவும் சிறந்தது. அப்படி இல்லையென்றால் வேறொருவருக்குப் பொறுப்புக் கொடுக்கவும் முடியும். அவர் அந்த இடத்திற்கு சமூகமளிப்பது சிறந்தது. தைரியமிருந்தால் பெண்களும் அறுக்கலாம். அறுப்பதற்கு முன் அல்லாஹ்வின் பெயர் சொல்லப்பட வேண்டும். நாம் அறுக்கின்ற போது “பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” என்று கூற வேண்டும். 

“உங்களில் ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க எண்ணியிருக்கின்ற நிலையில் துல்ஹஜ் மாதம் பிறந்ததும் நகம், முடி எதையும் வெட்ட வேண்டாம்” (முஸ்லிம்). ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க எண்ணியிருக்கும் நிலையில் நகம் அல்லது முடி ஏதாவது ஒன்றை வெட்டினால் அவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும். 
உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுகையில் பிற சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாழ்படுத்தாத வகையில் அதை நிறைவேற்றுவது முக்கிய அம்சமாகும் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது. நம் மதக் கிரியைகளை நிறைவேற்றும் போது பிற மதத்தினரின் அதிருப்தியையும் வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்வது நல்லதல்ல. 
மிருகங்களை அறுப்பதற்கும் இறைச்சியைப் பெற்றுகொண்டு சுற்றாடலுக்கு மாசு ஏற்படாதவகையில் கழிவுப்பொருட்களை அழித்தொழிப்பதற்கும் போதிய இடவசதி இருக்கும்வரை இந்த நடைமுறையில் பிரச்சினைகள் தலைதூக்குவதில்லை. பல்லின மக்களும் கலந்து வாழும், இடப்பற்றாக்குறை நெருக்கடி மிக்க பகுதிகளில் மிருகங்களை அறுப்பதும், அவற்றின் கழிவுகளை அப்புறப்படுத்துவதும் எப்போதுமே சர்ச்சைக்குரியனவாகின்றன.
அல்லாஹ் படைத்த எந்த மிருகத்தையும் (ஆகுமாக்கப்பட்டதை) அறுத்து உண்பதில் எந்தத் தவறும் கிடையாது. உழ்ஹிய்யா கொடுக்கும் விடயத்தில் பல்லின மக்கள் வாழும் எமது நாட்டில் பிற மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மிருகங்களை அறுப்பதற்காக கொண்டுசெல்லும் போது அதற்கு இம்சை செய்வதோ, அறுத்ததன் பின் இரத்தம் வடியும் நிலையில் பாதைகளில் இறைச்சியைத் தூக்கிச் செல்வதோ கூடாது. அறுத்த பிராணியின் கழிவுகளான தோல், எலும்புகள், கொம்பு, சாணம் போன்றவற்றை துர்நாற்றம் வீசும் நிலையில் பாதையோரங்களில் வீசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவைகளை குழி தோண்டிப் புதைத்து விட வேண்டும். ஆனால் நம் சகோதரர்கள் அவ்வாறு செய்யத் தவறிவிடுகின்றனர். இது கவலைக்குரிய விடயமாக உள்ளது. இது போன்ற தவறுகளை விடுவதால்தான் பிற சமூகத்தினரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் உள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதை உழ்ஹிய்யா கொடுக்கும் ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்படுவது கட்டாயக் கடமையாகும். 
  எமது நாட்டின் இறைச்சிக் கடைகள் தொடர்பான உள்ளூராட்சி அமைப்புகளுக்கு கட்டுப்பட்டு அதன் பிரகாரம் இறைச்சியின் பொருட்டு கால்நடைகளைக் கொல்வதற்குப் பாதுகாப்பான கொள்கலன்களிலேயே அறுக்கப்பட வேண்டும் என்ற நியதியும் உண்டு. உழ்ஹிய்யாவின் பொருட்டு மிருகங்களை அறுப்பதற்காக அவ்வப் பிரதேச உள்ளூராட்சி அமைப்புகளின் அதிகாரிகளுடன் பேசி, அதற்காக செலுத்த வேண்டிய சிறு கட்டணங்களையும் செலுத்தி, பாதுகாப்பான முறையில், சுற்றாடலுக்கும் சுற்றாடலிலுள்ள பிற சமூகத்தவர்களுக்கும் தொந்தரவில்லாதவாறு இக் கடமையை நாம் நிறைவேற்ற வேண்டும்.
  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினரின் அறிவுறுத்தலின்படி பள்ளிவாசல் வளாகம் (பள்ளி அமைந்துள்ள காணி) தவிர்ந்த வேறு எந்த இடத்திலும் குர்பான் மிருகங்களை அறுப்பதில் எந்தத் தடையும் இல்லை.
இலங்கையில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களாகிய நாம் எமது பெருநாளின் சிறப்புக்களை மாற்று மத இனங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எந்தத் தவறுமில்லை. .
எமது நாட்டில் உழ்ஹிய்யா சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படாமல் நிம்மதியாகவும் மன சந்தோஷத்துடனும் உழ்ஹிய்யா கொடுக்கும் நிலைமை ஏற்பட வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிலிருந்து எம்மையும் சமூகத்தையும் பாதுகாக்க உழ்ஹிய்யா விடயத்திலும் கண்டிப்பாக சுகாதார வழிகாட்டல்களை முற்று முழுதாக பின்பற்ற வேண்டும்.
 பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் சிறுபான்மையினராகிய நாம் பிற மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து புரிந்துணர்வுடன் உழ்ஹிய்யா கொடுப்போம், ஈதுல் அல்ஹாவை கொண்டாடுவோம்.

பரீட் இக்பால் - யாழ்ப்பாணம்
உழ்ஹிய்யா கொடுப்போம், ஈதுல் அழ்ஹாவை கொண்டாடுவோம். உழ்ஹிய்யா கொடுப்போம், ஈதுல் அழ்ஹாவை கொண்டாடுவோம். Reviewed by Madawala News on July 20, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.