முடியுமென்றால், ரிஷாட் பதியுதீனின் கட்சியைச்சேர்ந்த மூவரையும் அரசாங்க தரப்பிலிருந்து உடனடியாக நீக்குவதாகப் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்


 (நா.தனுஜா)

ரிஷாட் பதியுதீன் எமது கட்சியைச் சேர்ந்தவரல்ல. அரசாங்கம் அதன் இயலாமையை

மூடிமறைப்பதற்காகப் பயன்படுத்திக்கொள்கின்ற ஒரேயொரு விடயமாகவே இதனைக் கருதவேண்டியிருக்கின்றது. அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 20 ஆவது திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொள்வதற்குப் பங்களிப்பை வழங்கிய ரிஷாட் பதியுதீனின் கட்சியைச் சேர்ந்த மூவருக்கு அமைச்சுப்பதவிகளை வழங்குவதற்கு ஆளுந்தரப்பு வாக்குறுதியளித்துள்ளது. 


எனவே தற்போது எதிரணிமீது குற்றஞ்சாட்டும் அரசாங்கம், இயலுமாக இருந்தால் ரிஷாட் பதியுதீனின் கட்சியைச்சேர்ந்த மூவரையும் ஆளுந்தரப்பிலிருந்து உடனடியாக நீக்குவதாகப் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி சவால்விடுத்துள்ளார்.  


கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியில் தலைமைக்காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 



அங்கு அவர் மேலும் கூறியதாவது:




பொருளாதாரம், சுகாதாரம், கல்வி மற்றும் ஏனைய சமூக நிலைவரங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில்

இலங்கை மிகவும் மோசமானதொரு நிலையிலிருப்பது தெளிவாகின்றது. இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து தற்போதுவரை நாட்டை ஆட்சிசெய்தவர்கள் அதனை முன்நோக்கி சரியான பாதையில் வழிநடத்திச்சென்றிருக்கின்றார்களா? என்ற கேள்வியை இப்போது அனைவரும் கேட்டுபார்க்கவேண்டும். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தற்போதைய அரசாங்கம் மாத்திரமன்றி, கடந்த காலங்களில் ஆட்சிசெய்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக்கூறவேண்டும். அரசாங்கமொன்றினால் இழைக்கப்பட்ட தவறுகளைத் திருத்துவதற்காகப் பிறிதொரு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முன்னரை விடவும் மோசமானதாகக் காணப்படுகின்றன. அந்தவகையில் ஏற்கனவே கூறியவற்றுக்கு முற்றிலும் முரணான வகையில் செயற்படுகின்ற அரசாங்கமாகவே தற்போதைய பொதுஜன பெரமுன அரசாங்கம் விளங்குகின்றது.


புதிதாகக் களமிறங்கிய இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி இறுதியாக நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்றிருக்கின்றது. அந்த அணிக்கு வாழ்த்துக்களைக் கூறிக்கொள்ளும் அதேவேளை, தற்போது சீர்குலைந்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கும் புதியதொரு அணிக்கான தேவையேற்பட்டிருக்கின்றது. எனெனில் தற்போதுள்ள அணியால் அதனைச்செய்யமுடியாது என்பது கடந்த ஒன்றரை வருடகாலத்தில் பல்வேறு விதங்களிலும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. எனினும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பாடு செய்யப்படும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களின்போது, நாட்டின் பொருளாதாரத்தின் தற்போதைய நிலையென்ன? அதனை எவ்வாறு கட்டியெழுப்புவது? கடந்த காலத்தில் பெறப்பட்ட கடன்நிதி எதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன? அவற்றை மீளச்செலுத்துவதற்கு அவசியமான நிதியை எங்கிருந்து திரட்டிக்கொள்வது? என்பது போன்ற விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்படுகின்றன. அவைமாத்திரமன்றி பொதுமக்களின் பொதுவான பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கான தீர்வைப்பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான நீண்டகால செயற்திட்டங்கள் தொடர்பிலும் எமது கட்சி ஆராய்ந்து வருகின்றது.


அடுத்ததாக தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் கொவிட் - 19 தடுப்பூசி வழங்கல் செயற்திட்டமானது அரசாங்கத்தினால் முழுவதுமான அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஏனைய உலகநாடுகள் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையை ஆரம்பித்தவேளையில், இலங்கை அரசாங்கம் அதனைத் தொடர்ச்சியாகத் தாமதப்படுத்திவந்தது. அதன் காரணமாக நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன் பொருளாதார ரீதியில் அனைத்துத் துறைகளும் முழுமையான ஸ்தம்பிதமடைந்தன.


மேலும் தற்போது உலக சுகாதார ஸ்தாபனத்தினால் உரியவாறு அங்கீகாரமளிக்கப்படாத சினோவெக்ஸ் தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை மறுபுறம் தடுப்பூசி தொடர்பான இலங்கையின் விசேட நிபுணர்குழுவிலிருந்து அடுத்தடுத்து பலர் விலகியிருக்கின்றார்கள். இவ்வாறானதொரு சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் பொதுமக்களின் சுகாதாரத்தை மையப்படுத்தியதாக தடுப்பூசி வழங்கல் தொடர்பான தேசிய செயற்திட்டமொன்று அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட வேண்டும். எனவே இதுவிடயத்தில் எதிர்க்கட்சிகளைக்கண்டு அஞ்சாமல், அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து, அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு செயற்படுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்.


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் சுமார் ஒன்றரை வருடகாலமாக மூடப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களுக்கான கல்விச்செயற்பாடுகளைத் தங்குதடையின்றி முன்னெடுத்துச்செல்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் எவையும் இதுவரையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறு செயற்படும் அரசாங்கத்திடம் இனிவருங்காலங்களில் தேசிய பாடசாலைகளை அமைப்பதற்குப் பதிலாக சிறைச்சாலைகளை நிர்மாணிக்குமாறு கோரிக்கையொன்றை முன்வைக்கின்றோம். ஏனெனில் கல்வியைப் பெறாத மாணவர்கள் சமூகத்தின் மீது கோபம் கொள்வதுடன் குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள். எனவே அதன்போது சிறைச்சாலைகளும் நீதிமன்றங்களுமே அமைக்கப்பட வேண்டியிருக்கும்.


அடுத்ததாக நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை இலக்காகக்கொண்டு அரசாங்கத்தினால் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தெற்கில் சீனப்பிரஜைகளைப் பயன்படுத்தித் தூர்வாரப்படும் வாவியொன்றில் புதையல்கள் காணப்படலாம் என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் காணப்படுகின்றது. அதேபோன்று தற்போது வில்பத்து வனப்பிராந்தியத்திற்குள் வரலாற்று அரசர்களின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இடமொன்றைத் தோண்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கும் பெருமளவான புதையல்கள் காணப்படக்கூடும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே புதையல்கள் இருக்கக்கூடிய வரலாற்றுச்சிறப்புமிக்க இடங்களைக் கண்டறிவத்றகு அரசாங்கத்தினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவே எமக்குத் தோன்றுகின்றது.


மேலும் ரிஷாட் பதியுதீன் எமது கட்சியைச் சேர்ந்தவரல்ல. அரசாங்கம் அதன் இயலாமையை மூடிமறைப்பதற்காகப் பயன்படுத்திக்கொள்கின்ற ஒரேயொரு விடயமாகவே இதனைக் கருதவேண்டியிருக்கின்றது. ரிஷாட் பதியுதீன் தேர்தலின்போது எமது கட்சியுடன் கூட்டிணைந்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியின் தலைவராவார். அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறுவதில் அவரது கட்சியின் பிரதிநிதிகள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். அதன் காரணமாகவே இப்போது பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கும் அமெரிக்கப்பிரஜையொருவர் எமது நாட்டின் நாணயத்தாள்களில் கையெழுத்திடுவதற்கும் வாய்ப்பேற்பட்டிருக்கின்றது.


எனவே அவர்களுக்கு அமைச்சுப்பதவிகளை வழங்குவதற்கான வாக்குறுதிகள் தற்போதைய அரசாங்கத்தினாலேயே வழங்கப்பட்டிருக்கின்றன. ரிஷாட் பதியுதீன் எமது கட்சியின் பொருளாளர் அல்ல. மாறாக ஹர்ஷ டி சில்வாவே ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாளராவார். எனவே இவ்விடயத்தை மையப்படுத்தி அரசாங்கம் எம்மீது சேறுபூசுவதற்கான முயற்சிகளிலேயே ஈடுபட்டு வருகின்றது. ரிஷாட் பதியுதீன் மீதான வழக்கு விசாரணைகளுக்கு முன்பதாக, அவரது கட்சியைச்சேர்ந்த மூவரையும் அரசாங்கத்தைவிட்டு நீக்குமாறு நாம் ஆளுந்தரப்பினருக்கு சவால்விடுகின்றோம்.


முடியுமாக இருந்தால் அமைச்சுப்பதவி உள்ளடங்கலாக எந்தவொரு வரப்பிரசாதங்களையும் வழங்காமல் அவர்களை அரசாங்கத்திலிருந்து நீக்கியிருப்பதாக அரசாங்கம் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும். நீதிமன்றத்தின் ஊடாக ரிஷாட் பதியுதீன் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால், உடனடியாக அவரை கட்சியிலிருந்து அனைத்து விதங்களிலும் நீக்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என்று குறிப்பிட்டார். 

முடியுமென்றால், ரிஷாட் பதியுதீனின் கட்சியைச்சேர்ந்த மூவரையும் அரசாங்க தரப்பிலிருந்து உடனடியாக நீக்குவதாகப் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் முடியுமென்றால், ரிஷாட் பதியுதீனின்  கட்சியைச்சேர்ந்த மூவரையும் அரசாங்க தரப்பிலிருந்து உடனடியாக நீக்குவதாகப் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் Reviewed by Madawala News on July 31, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.