அவள் சகித்துக்கொள்கிறாள்!



 பொன்னாக வளர்த்து  பெற்றோர்களால் கண்ணாக உங்களிடம் ஒப்படைக்கப்படும் பெண்ணின்

கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்க முடியாத உள்ளத்தால் கோழையான ஆண்களாக மட்டும் இருந்துவிட வேண்டாம்.


நீங்கள் செய்யும் சில தியாகங்களை அவள் புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை.ஆனால் அவளோ தன்னையே தியாகம் செய்யத் தயாராக இருக்கும் உன்னத ஜீவன் என்பதை எவராலும் மறுக்கவே முடியாது.



இளமைப் பருவங்களின் ஆரம்பங்களில் எதற்கெடுத்தாலும் என்னையே கடைக்கு அனுப்புவதாய் அங்கலாய்த்து அதிலிருந்து பல தடவைகள் எஸ்கேப் ஆகிய நாட்களை உங்களால் இன்னும் மறந்திருக்க முடியாது.ஆனால்,உங்களது மனைவி அப்படி இலகுவாக எஸ்கேப் ஆகிவிடமாட்டாள்.


உடல் வலிமை யாருக்கு அதிகம் என்ற விவாதம் ஒன்று வைத்தால் பெண்களை விட மிகப்பெரிய லிஸ்ட் ஒன்றைத் தூக்கி வரலாம் ஆண்கள்.ஆனால் அன்றாட வாழ்க்கை எனும் போது அவர்களுக்கு சாதாரண ஆபீஸ் வேலை கூட அப்படிப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்திவிடும்.




அப்படி இருக்க ஏதோ ஒரு விதத்தில் பலவீனமான பெண்களின் நிலை என்ன?மாலை வரை வேலை செய்ததாக இரவு வேலையிலிருந்து ஒதுங்க முடியுமா?அப்படி என்றால் அவள் இயந்திரமாகவே சுழல்கிறாள் என்பதை ஏற்கும் மனப்பக்குவம் இருக்கின்றதா?இல்லை என்றால் ஆண் என்பதற்காக அதனைத் தட்டிக் கழிக்கின்றீர்களா?



இந்த இரண்டு வருட தொற்றுக் காலங்களில் ஆண்கள் வீட்டில் வேலை செய்வது தொடர்பில் அழுத்துக் கொண்டும் பரபப்பாகவும்,செய்தித் தலைப்பாகவும் பிரபல்யமடையக் காரணமாவதேன்?


முதலாவதாக எமது கீழைத்தேய நாடுகளில் எத்துனை மேலைத்தேய நவீனங்கள் மக்கள் மத்தியில் எடுபட்டாலும் பெண்கள்தான் வீட்டு வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணப்பாடு சிலருக்கு மாறுவதாக இல்லை.


அப்படியே அவர்களது தொழில் வேலைகளை விட மிக இலகுவான காரியம் என்றால் இப்படியான புலம்பல்களே வந்திருக்காது என்பது இன்னொரு பக்கம்.


மற்றும் வீட்டு வேலைகளில் உதவக்கூடிய ஆண்களை வேறு கண்கொண்டு பார்ப்பதும், வெவ்வேறு பெயர் சூட்டுவதும் இன்னும் எம் சமூகத்தில் உள்ள மிகக் கெட்ட அழியாத தொற்றாகப் பீடித்துள்ளது.



ஆக, வேலைத்தளங்களில் பணிபுரிவதும் அவ்வளவு இலகுவானது என்று பெண்கள் கூறப்போவதுமில்லை.ஏனெனில், இன்று அதிகமான பெண்களுக்கு அந்த அனுபவம் உண்டு.


குறிப்பிட்ட காலம் கடல் கடந்து வெளிநாடு செல்லும் வலி அத்துனை கொடுமையானது.வாழ்க்கை முழுவதுமாய் தனது குடும்பத்தைக் கட்டிப் போட்டுவிட்டு,ஏதோ சொந்தக்கார வீட்டுக்குப் போவதுபோல சொந்த வீட்டிற்கு மாதத்தில் ஒரு முறை சென்று தன் கணவனின் அழைப்பில் வீடு செல்ல வேண்டும் என தான் புகுந்த வீட்டைச் சொல்லி கண்ணீர் மல்கத் தன் சொந்தத் தாய் மற்றும் உறவுகளை விட்டும் மீண்டும் இயந்திர வாழ்க்கைக்குள் நுழைந்துவிடும் மன வலிமை வேறு யாருக்கு வரும்?


இப்படி இருக்க,

"மற்றப் பெண்கள் செய்யாததையா நீ செய்கிறாய்?"


இதனைத் தானே துச்சமாக எச்சிலாய்க் கொட்டி விடுகிறோம்..


ஆம்,அவர்கள் மற்றப் பெண்கள் செய்யாத ஒன்றை செய்யவில்லை தான்.இப்படிப் பதிலளிக்கும் கணவன்களுக்கு மட்டும்.ஏனெனில்,இப்படியான ஒவ்வொரு பெண்களும் இதே வார்த்தைகளால் காயப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்களே தவிர வெளியில் சொல்வதில்லை.


அதில் வேறு சிலரது விரிவுரைகளும் வந்துவிடும்.புகுந்த வீட்டைத் தன்வீடாய் நினைக்கும் பெண்களுக்கு பிரச்சினை வருவதில்லை என்று.ஒரு சிலருக்கு வேண்டுமென்றால் அது விலக்காகலாம்.

பிரச்சினையே அவள் அப்படி நினைத்ததால் தான் வருகின்றதென்றால் ஆச்சரியமில்லை.ஏனெனில், வீட்டில் அவளுக்கு அதிகம் சுதந்திரமும்,பிழைகளைப் பொருந்திக்கொண்டு மறுகணமே சிரிக்கவும்,தன் எண்ணங்களைக் கொட்டித் தீர்க்க உறவுகளும்,ஆறுதல் சொல்லவும்,கண்ணீர் துடைத்து ஆரத்தழுவ ஏராளமான கரங்களும் இருந்ததல்லவா?


இப்போது தனது சொந்த வீடு போல் அவள் நினைப்பது பொறுப்பில்லாத்தனம் போன்றல்லவா இருக்கின்றது?


"உங்களது பணமோ,நீங்கள் வாங்கிக்கொடுத்த பொருட்களாலோ அவளால் மகிழ்ச்சியடைந்து பணி புரியாவிட்டால் அவளுக்கென்ன வந்திருக்கின்றது?"என நீங்கள் நினைக்கலாம்.


அத்துனைக்கும் அவள் வேலையைத் தட்டிக் கழிக்கப்போவதில்லை.அவள் ஏற்ற வேலைகளை உங்களுக்குத் திணிக்கப் போவதுமில்லை.சட்டப்படியாகத் திருத்தமாய் வழமையாகச் செய்து முடிக்கும் வேலையில், இருந்து நின்று வரும் சில திருத்தங்களைக் கண்டு ஏதோ

மொத்தமாய் சிதைத்துவிட்டதைப்போல மனதை நொருக்கும் வகையில் உங்களது பொஸ்  முகம் சுழித்துவிடாமல்,மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கினால் எப்படி மனம் குளிரும்?


அதே,அப்படித்தான் அவளும்.உங்களது புரிந்துணர்வொன்றே அவளது வேலைக்குப் புத்துணர்வளிக்கும் என்ற உண்மையைப் புரிய வைப்பதில் தோற்றுவிடுவதை எண்ணி வருந்துகிறாள்.


அவள் முன்னர் போன்று இல்லை எனச் சொல்லும் உங்களுக்கு,நீங்கள் முன்னர் போல இல்லை என்று அவள் மனதால் உளறுவதனைக்  கேட்க வாய்ப்பில்லை.


அவளுக்கான அறிவுரையைத் தனிமையில் மாத்திரம் கொடுங்கள்.பொதுவெளியில் எள்ளி நகையாடுவதிலும் சிந்தையுடன் இருங்கள்.உங்களுக்கு உங்களது மானம் எவ்வளவு முக்கியமோ  அதே அளவு அவளுக்கும் அவளது மானம் முக்கியமே.


"உன்னை திருமணம் செய்ததற்கெல்லாம்.."என்று கர்ச்சிக்காதீர்கள்.ஏனெனில் அவளாக விரும்பி வரவில்லை.மாறாக இறைவனே அவள் உங்களுக்குப் பொருத்தமானவள் என்று எழுதிவிட்டான்.அதற்குப் பிறகு நீங்கள் பெருமையடிக்க எந்த அதிகாரமும் உங்களுக்கு இல்லை.


இறைவன் உங்களுக்காய் வழங்கும் பரிசு குழந்தைகள்.அது கிடைத்துவிட்டால் மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.சற்றுத் தாமதமாகிவிட்டால் பொறுமையாக இருங்கள்.ஏனெனில் எதிர்காலம் எம் கையில் இல்லை என்ற முன்னளப்பினை பரிபூரணமாக நம்புதல் நம்பிக்கையின் அடிப்படையாகும்.


உங்களது பிறப்பு எப்போது என்பதையே அறிய முடியாததாக அந் நிகழ்வு இருந்தது எப்படியோ அதுபோலவே,தாய்மை என்பது எப்போது என்பதை உங்களது மனைவி அறிய மாட்டாள்.அது இறைவனின் விதி.

இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட

நபிமார்களுக்குக் கூட அது விலக்காக இருக்கவில்லை.ஒரு சில வருடங்கள் அல்ல.வயோதிப காலத்தில் கூட அவர்களுக்கான இறை நாட்டம் இருந்தது.சமூகம் வினாத் தொடுப்பதற்காக மனைவிக்கு வில்லுப் பாய்த்து 

இறுதி வரை உனக்காக இருப்பேன் என்று கூறிய சத்தியத்தை முறித்துவிடாதீர்கள்.

நீங்கள் எவ்வளவு வேதனைப்படுகின்றீர்களோ அதே போல் சமூகத்தால் அதிகம் அவளும் கிளரப்படுகிறாள். அந்த வலியை அனுபவித்துக்கொண்டே நீங்களும்

அவளிடம் கேள்வி கேட்பது அவளுக்காக யாரும் இல்லை என்று உணரும்

வேதனை அதனை விடக் கொடுமையல்லவா?


கொஞ்சம் விட்டுக்கொடுப்பை விடையாகவும்;தேவையான இடங்களில் மட்டும் கண்டிப்பாகவும்;மன்னிப்பைப் பரிசாகவும்;அன்பை தண்டனையாகவும் பகிர்ந்து வாழப் பழகுங்கள்.


புரிதல் இல்லாத வாழ்க்கை சிலருக்கு சில காலம் வரை புதுமையாகவும்;இன்னும் பலருக்கு இறுதிவரையே கண்டறியப்படாத புதிராகவுமிருக்கலாம்.


உங்களது வாழ்க்கையை மூன்றாம் நபர் தீர்மானிப்பதை விட்டும் கவனமாக இருங்கள்.ஏனெனில் வாழ்க்கை உங்கள் இருவருக்குமிடையிலானது.உங்கள் இருவருக்கிடையான பிரச்சினைகளை சரியாக அறிந்தவர்கள் உங்களைத் தவிர வேறு யாருமில்லை.ஏனெனில், அதனை அனுபவித்தவர்கள் நீங்கள்தானே தவிர மூன்றாம் நபரல்ல.


நீங்கள் இருவரும் சாதகமான தீர்வை நாட மற்றவர்களோ உங்களில் ஒருவரைக் குற்றவாளியாக்கவும்,மற்றவரை நிரபராதிக் கூண்டினுள் நிறுத்தி பிரிவோ, வாழ்வோ சகஜம் என்ற நிலைக்குத் தள்ளுவார்கள்.நிச்சயம் இது நீங்கள் எதிர்பார்த்த தீர்வாக இருக்காது.நினைத்தால் சேரவும் நினைத்தால் 'டூ' சொல்லி வீடு செல்லவும் திருமணம் குழந்தைகளுக்கான பொருள் போன்றதல்லவே?


எனின்,உங்களது பிரச்சினையைத் தீர்க்க நீங்கள் இருவருமாகிய உங்களது பஞ்சாயத்தே போதுமானது.



இங்கு யாருமே முழுமையானவர்களல்ல.உங்களது மனைவியும்தான்.ஏன் நீங்களும்தான்.ஏதோ இடத்தில் தலையில் வைக்கின்றீர்கள் தானே?வாழப்போவது ஒரு வாழ்க்கை.எவ்வளவு குறுகிய வாழ்க்கை.


இருமனமும் ஏற்றுத்தானே திருமணம் செய்தீர்கள்?


உணர்வுகளை உதாசீனப்படுத்தி உள்ளங்களை உடைத்துச் சின்னாபின்னமாக்கிவிடாமல் வாழப் பழகுங்கள்.


ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.அவள் இத்தனை வலிகளையும் காலப்போக்கில் வலிந்து ஏற்கிறாள் என நீங்கள் நினைத்தால் அதுவே உங்களது வாழ்க்கையில் 

நீங்கள்  செய்யும் மனிதம் மறித்த  மிகப்பெரும் தவறாகும்.


அவள் சகித்துக்கொள்கிறாள்,அவ்வளவுதான்!


பிற்குறிப்பு:

சிலருக்கு வலிக்கும் என்பதற்காக உண்மைகளைப் பகிராமல் இருக்க முடியாது.மற்றும் மிக முக்கியமாக,

இது எல்லா ஆண்களுக்குமான பதிவல்ல.

கணவர்களது கடமைகளை முற்றாகப் புறந்தள்ளும் பெண்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டும் என்பதுடன்

தமது மனைவியரைப் புரிந்து நடப்பவர்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்.


✍️BinthFauzar

#SEUSL

அவள் சகித்துக்கொள்கிறாள்! அவள் சகித்துக்கொள்கிறாள்! Reviewed by Madawala News on June 09, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.