நீண்:டகால திட்டமிடல் இல்லாத 'அன்றாடங்காய்ச்சி' அரசியல். - Madawala News Number 1 Tamil website from Srilanka

நீண்:டகால திட்டமிடல் இல்லாத 'அன்றாடங்காய்ச்சி' அரசியல்.ஒரு சமூகம் பிழையான பாதையில் பயணிப்பதை விட, தாம் பிழையான வழியில் சென்று கொண்டிருக்கின்றோம்

என்பதை உணராமல் இருப்பதுதான் மிகவும் மோசமான பின்னடைவு நிலையாகும். பிழையான அரசியல் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்ற மக்கள் மீதான எதிர்த்தாக்கம் என்றும் இதனைக் கருதலாம். நிகழ்காலத்தில், முஸ்லிம் சமூகமும் அந்த ஒழுங்கிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றது. 


முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமைகள், தளபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முறையான குறுங்கால பணித்திட்டங்கள் இல்லை. அதுபோலவே, அடுத்த வாரம் என்ன நடக்கப் போகின்றது? இன்னும் 10 வருடங்களில் இலங்கையின் அரசியல் சூழல் எவ்வாறு இருக்கப் போகின்றது? அதனை நோக்கி ஒரு சமூகமாக முஸ்லிம்கள் எவ்வாறு நகர்வுகளைச் செய்ய வேண்டும் என்று எந்த தூரநோக்குடன் தயாரிக்கப்பட்ட நீண்டகால அரசியல் திட்டங்கள் அறவே கிடையாது. 

அதாவது, நிரந்தரத் தொழிலற்ற நாளாந்த கூலித் தொழிலாளர்களைப் பற்றி நமக்குத் தெரியும். அவர்களது எதிர்பார்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். அடுத்த மாதம் பிள்ளையின் வகுப்பிற்கு எப்படிக் கட்டணம் செலுத்தப் போகின்றோம் என்று அவர்களுக்கு எந்தவிதமான உத்தேசங்களும் இருக்கமாட்டாது. 


ஒரு நாளைக்கு நாட்டாமை வேலைக்கு போவார்கள். மறுநாள் கடலை வியாபாரம் செய்வார்கள். திருவிழா, பெருநாள் வந்து விட்டால் நடைபாதை கடை விரிப்பார்கள். அவர்களின் நோக்கம், தமது வாழ்வாதாரத்தை எப்படியாவது தேடிக் கொள்ள வேண்டும். இன்றைய பொழுதை தமது குடும்பம் பசியின்றி கழிக்க வேண்டும் என்பதாகவே இருக்கும். நாளைய பொழுதைப் பற்றி திட்டமிட மாட்டார்கள். அதற்காக அவர்களை நாம் தரக்குறைவாக மதிப்பிட முடியாது.

ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது சமூகத்தை வழிநடாத்துவதற்கான நீண்டகால திட்டமிடல்கள், அதனை நிறைவேற்றுவதற்கான முலோபாய நகர்வுகள் பற்றி பெரிதாகச் சிந்திக்காமல் 'அன்றாடங்காய்ச்சி' அரசியலையே செய்து கொண்டு காலத்தை வீணடிப்பதை எக்காரணங்கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது.

முஸ்லிம் அரசியல்வாதிகள் காலத்திற்குப் பொருத்தமான அரசியலைச் செய்வது மிக அவசியனதே!  ஆனால், காலத்திற்குப் பொருத்தமான நகர்வு என்பது மக்களை மனதிற் கொண்டு எடுக்கப்பட வேண்டுமே தவிர சொந்த அரசியல் நலனை முன்னிறுத்தி எடுக்கப்படக் கூடாது. தமது பதவி, அதன் இருப்பு, அதன்மூலமான வருமானங்களை கூட்டிக் கழித்துப் பார்த்து தீர்மானங்களை எடுத்து விட்டு, அதனை 'சமூகத்திற்காகவே செய்கி;ன்றோம்' என்று கூறுவதை காலத்திற்கேற்ற அரசியலாக வகைப்படுத்த முடியாது.

பெருந்தேசிய அரசியலில் சிங்கள மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக பாரிய திட்டங்கள் தேவையில்லை. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், சிங்கள மக்களின் நலனை மேவிச் செல்லும் ஒரு ஆட்சியை எந்த அரசாங்கமும் ஒருக்காலும் முன்னெடுக்காது என்பதே யதார்;த்தமாகும்.

அப்படி இருந்த போதிலும், சிங்கள அரசியல்வாதிகளும் சரி, செயற்பாட்டு அரசியலுக்கு வெளியில் இருந்து அழுத்தக் குழுக்களைப் போல செயற்படுகின்ற தரப்பினரும் சரி, பௌத்த தேசியவாத சிந்தனையின் வழித்தடத்தில் ஆட்சியாளர்கள் பயணிப்பதை உறுதிப்படுத்துகின்றனர். சிங்கள மக்களின் நலன்கள் எந்த தருணத்திலும் பாதிக்கப்படாத வகையில் தூரசிந்தனையுள்ள நகர்வுகளைச் செய்கின்றனர். அது சிறுபான்மையினருக்கு இனமேலாதி;க்கமாக தோன்றுவது வேறு விடயம். 

தமது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக ஆரட்சியை அமைப்பதற்கும், அதனை புறந்தள்ளி ஆட்சியாளர்கள் செயற்படுகின்ற போது அதற்கு எதிராக கிளர்ந்தெழுவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை. அண்மைக்காலத்திலும்; அவ்வாறான நகர்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதை இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

இதேவேளை, தமிழ் மக்களுக்கான அரசியல் நீண்டகால அடிப்படையில் திட்டமிட்டு நகர்த்தப்படுகின்றது. ஆயுதப் போராட்டம் ஒரு கட்டத்தில் வழிமாறிப் போனது என்பதையும், நடைமுறைச் சாத்தியமற்ற கோஷங்களுக்காக தமிழ் மக்கள் இழப்புக்களைச் சந்தித்தார்கள் என்பதையும் தவிர்த்துப் பார்த்தால், தமிழ்த் தேசிய அரசியலில்; கொள்கைப் பிடிப்பையும் திட்டமிடலும் உயர்ந்த மட்டத்தில் இருப்பதாகவே தெரிகின்றது. 

இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட தீர்வுத்திட்டம் பற்றிப் பேசுகின்றார்கள், அரசியலமைப்பின்ன 13ஆவது திருத்தம் அமுலுக்கு வரவேண்டுமென அழுத்தம் கொடுகின்றார்கள். தேர்தல் முறைமை பற்றி கலந்தாலோசிக்கின்றார்கள். அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்துமா? என்பதில் பலத்த சந்தேகம் நிலவுகின்ற சூழலிலும் கூட, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முதலமைச்சர் வேட்பாளர்கள் பற்றியெல்லாம் உரையாடல்களை ஆரம்பித்துள்ளார்கள். 

ஆனால், இது விடயத்தில் முஸ்லிம்களின் அரசியல் இன்னும் கற்றுக்குட்டித் தனமாக வாளாவிருக்கின்றது என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது. அபிவிருத்தி அரசியலுக்கு ஆசைப்பட்டு உரிமை அரசியலையும் இழந்து, இரண்டும்கெட்டான் நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் நிற்கின்றனர்;. நீண்டகால திட்டங்களும் இல்லை, காத்திரமான குறுங்கால நகர்வுகளும் இல்லை என்றாகிப்போனது. 

'தனக்கு எதுவும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு. ஆனால் தனக்கே எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருப்பவன் முழு மூடன் ஆவான்' - இது கௌதம புத்தரின் முழுமொழியாகும். அநேகமான முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமன்றி அவர்களை கண்மூடித்தனமாக ஆதரிப்போரும் இந்த இரண்டாம் ரகத்திற்குள் உள்ளடக்கவே தகுதியுடையவர்களாக இருக்கின்றனர்.

99 சதவீதமான அல்லது அதைவிட அதிகமான முஸ்லிம் அரசியல்வாதிகள் தமக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களது அல்லக்கைகள் மற்றும் தீவிர ஆதரவாளர்களும் அப்படித்தான் நம்ப வைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால், நிறைய முன்னாள், இந்நாள் அரசியல்வாதிகள், நிஜத்தில் அப்பேர்ப்பட்ட ஆளுமைகள் அல்லர். 

சமூக அக்கறையின்மை, சுயநலத்தை முன்னிலைப்படுத்தல் என்ற குற்றச்சாட்டுக்கள் எல்லாம் ஒருபுறமிருக்க, முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புபட்ட விவகாரங்கள், அடிப்படைப் பிரச்சினைகள், அதன் பின்னணி, வரலாறு என பல விடயங்கள் இவர்களுக்கு தெரிந்திருப்பதில்லை. பெருந்தேசிய அரசியலில் இடம்பெறும் நகர்வுகள் விடயத்தில் அநேகமானோர் கிணற்றுத் தவளையாகவே இருக்கின்றனர். 

நூறு வருடங்களுக்குப் பிறகு நாம் எப்படி இருக்கப் போகின்றோம், அதற்கு இப்போதிலிருந்தே எவ்வாறு நம்மை தயார்படுத்தி செயற்பட வேண்டும் என்று திட்டமிட்டு வாழ்கின்ற இனக் குழுமங்களும் மக்கள் பிரதிநிதிகளும் உலகில் உள்ளனர். ஆனால், இலங்கையில் பல நூற்றாண்டு கால தொன்மையைக் கொண்ட முஸ்லிம்களின் நிலைமை தலைகீழாக உள்ளது. இதற்கு அரசியல்வாதிகள் மட்டுமன்றி சமூகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் உள்ள தரப்பினரும் காரணமாவார்கள். 

கடந்த காலங்களில் பெரும் அரசியல் வியூகம், ஞானம், பேரம்பேசல், சாணக்கிய நகர்வுகள் என்று சொல்லிக் கொண்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் எடுத்த நகர்வுகளுக்கு என்ன நடந்தது? என்பதையும் அதனால் சம்பந்தப்பட்ட எம்.பி.க்களுக்கு அன்றி, முஸ்லிம் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க எந்த அனுகூலமும் கி;டைக்கவில்லை என்பதையும் மறக்க முடியாது. 

இனிவரும் காலங்களில் இலங்கையின் அரசியல் போக்குகள் வேறு விதமாக இருக்கும் சாத்தியங்கள் உள்ளன.  கொரோனாவுக்குப் பின்னரான புதிய இயல்பு ஒழுங்கில்  என்ன நடக்கும் என்பதை முன்கணித்துக் கூற முடியாதுள்ளது. ஆயினும் முஸ்லிம்கள் ஒரு சமூகமாக அரசியலில் மட்டுமன்றி எல்லா விடயங்களிலும் நீண்டகால மற்றும் குறுங்கால அடிப்படையில் திட்டமிட்டுச் செயற்பட வேண்டியுள்ளது. 

எனவே, வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களின் நீண்டகால அபிலாஷைகள் என்ன, தென்னிலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரச்சினை என்ன? என்பதை முதலில் முறையாக ஆவணப்படுதத வேண்டும். எல்லாத் தகவல்களும் விரல்நுனியில் இருக்க வேண்டும். அதனடிப்படையில், நீண்டகால அடிப்படையில் திட்டமிட்டு, தூரநோக்குடன் செயற்பட இனிமேலாவது முஸ்லிம் அரசியல்வாதிகள் பழகிக் கொள்ள வேண்டும். 

அதைவிடுத்து, அன்றன்றைக்கான அன்றாடக்காய்ச்சி அரசியலையே தொடர்ந்தும் செய்து கொண்டிருந்தால், இந்த அரசியல், இனவாத பருவப் புயல்களில் முஸ்லிம் சமூகம் அள்ளுண்டு போய்விடும். 

ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 13.06.2021)

நீண்:டகால திட்டமிடல் இல்லாத 'அன்றாடங்காய்ச்சி' அரசியல்.  நீண்:டகால திட்டமிடல் இல்லாத 'அன்றாடங்காய்ச்சி' அரசியல். Reviewed by Madawala News on June 16, 2021 Rating: 5