உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி ஒருவரை அரசாங்கம் உருவாக்குகிறதா - Madawala News Number 1 Tamil website from Srilanka

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி ஒருவரை அரசாங்கம் உருவாக்குகிறதாஅரசாங்கத்தின் மீதான அழுத்தம் காரணமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான

சூத்திரதாரி ஒருவரை அரசாங்கம் உருவாக்குகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான 04ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.  அவர் மேலும் தெரிவித்ததாவது,  


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளில் பிரதான சூத்திரதாரியை கண்டறிய போதுமானளவு சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. தாக்குதல்களின் பின்னபுலத்தில் சர்வதேசமும் பிரதான சூத்திரதாரி ஒருவரும் உள்ளதாக அனைவரும் கூறினர். ஆனால், ஆணைக்குழுவின் விசாரணையில் அவ்வாறானதொரு நபர் பற்றி வெளிப்படுத்தப்படவில்லை என்பதுடன், பிரதான சூத்திரதாரியை கண்டறிவதற்கான சாட்சியங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை.ஆனால், சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர் பிரதான சூத்திரதாரி தொடர்பில் கூறுகின்றனர். பிரதான சூத்திரதாரி ஒருவர் இருந்திருந்தால் அதனை ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் ஏன் வெளிப்படுத்தவில்லை. நௌபர் மௌலவி என்பவர் 2019ஆம் ஏப்ரல் 24ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார். அவரிடம் ஒன்றரை வருடங்கள் சாட்சியங்கள் பெறப்பட்டிருந்தது. நௌபர் மௌலவியை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கும் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அவ்வாறெனின் அவரை எவ்வாறு பிரதான சூத்திரதாரியென கூற முடியும். எவருடையதும் உத்தரவில் இவ்வாறு அறிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நௌபர் மௌலவி என்பவர் ஒரு உருவாக்கப்பட்ட நபரா ?என்ற சந்தேகமும் எழுகிறது. அரசாங்கத்துக்கு உள்ள அழுத்தங்களில் இருந்து மீள பிரதான சூத்திரதாரியை அரசாங்கம் உருவாக்கியுள்ளதா?.


ஆணைக்குழுவின் விசாரணையை ஆய்வுக்கு உட்படுத்தும் போது பொலிஸாரும், சிஐடியினரும் போதியளவு சாட்சியங்களை வழங்கவில்லையென தெளிவாகிறது. சாரா இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெளிவான சாட்சியங்கள் உள்ளன. ஆனால், அதுகுறித்தும் எவ்வித சாட்சியங்களும் அறிக்கையில் முன்வைக்கப்படவில்லை. சாராவை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என்றார்.


ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி ஒருவரை அரசாங்கம் உருவாக்குகிறதா உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி ஒருவரை அரசாங்கம் உருவாக்குகிறதா Reviewed by Madawala News on April 08, 2021 Rating: 5